தொல்ஸ்தோய் சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் ‘கலை என்றால் என்ன’ எனும் தலைப்பில் What is Art? ஒரு ஆக்கத்தை வழங்கினார். எவை நல்ல கலை எனச் சொல்ல முனைந்து பதினைந்து வருடங்கள் பல வடிவங்களில் எழுதி இறுதியிலும் முடிவான வடிவமென்று தனக்கு முழுவதும் திருப்தியில்லாத ஒன்றையே அளித்தார். அவ்வாக்கத்திற்கு இன்றளவில் இரண்டு ஆங்கில வடிவங்கள் உள்ளன. இவற்றை வாசித்ததும் புரிபடுவது எவை நல்ல கலை எனச் சொல்ல முனைந்து எவையெல்லாம் நல்ல கலைகளல்ல என்பதையே தொல்ஸ்தோய் தன் பார்வையில் நிறுவியுள்ளார் என்பதே.
‘கலை என்றால் என்ன’ எனும் தலைப்பின் கீழுள்ள புத்தக வடிவம் சில அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் சில நூறு பக்கங்களில் ஒரே பெரிய கட்டுரை. அதைச் சுருக்கிச் ‘சிறு கட்டுரை’யாக்குவது அபத்தம். சோம்பேறிகளின் வசதிற்கேற்ப மூலத்தைச் சுருக்கி முகநூல் பதிவாக்கும் செயல். அப்பணியையே இங்கு செய்ய முனைந்துள்ளேன். முன்பின் தொடர்பு துறந்து பிய்த்தெடுத்தாலும் பொதுவான பொருள் மாறுபடாதிருக்கும் என நான் கருதும் சிற்சில பகுதிகளை மட்டும் தொகுத்து இக்கட்டுரையில் வழங்கியுள்ளேன். முன்பசிக்கு என்றே கொள்ள வேண்டும். வாசித்ததும் கலை பற்றி தெளிவுகளைவிட மேலதிகச் சந்தேகங்களையே கிளப்பி விட்டிருக்குமானால் வெற்றியே. புத்தகத்தின் ஆங்கில வடிவையோ அல்லது தமிழில் வெளியாகும் முழு வடிவையோ நாடுவதற்கு இக்கட்டுரை உங்களுக்கு வழிகோலியிருக்கும்.
இது வரிக்கு வரி ருஷ்ய மொழியில் இருந்து தமிழுக்கு செய்யப்பட்ட மொழியாக்கம் அல்ல. அவ்வாறு செய்வதற்கான மொழி நிபுணத்துவமும் முனைப்பும் என்னிடம் இல்லை. மேற்சொன்ன இரண்டு ஆங்கில வடிவங்களையும் சில துணை நூல்களையும் வாசித்து தொல்ஸ்தோய் கலை பற்றி கொண்டிருந்த கருத்துகளின் சாரத்தையே இப்புத்தகத்தில் (சுருக்கி இக்கட்டுரையில்) வழங்கியுள்ளேன்.
வழக்கம் போல பூச்செண்டுகளை தொல்ஸ்தோயிடமும் செங்கற்களை என்னிடமும் அனுப்பிவையுங்கள்.
இனி தொல்ஸ்தோய்…