பௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை

Standard

கல்விச் சாலைகளுக்கான துறைசார் பாடப்புத்தகங்களை ஒருபுறம் இருத்திக்கொண்டால் வெகுஜன வாசகக் களத்தில் தற்கால தமிழ் அறிவியல் எழுத்தை இரண்டு வகையாகப் பார்க்கலாம். வாசகர்களை அவர்களின் அறிவு-வாசிப்பு நிலையிலேயே இருத்திவைத்து அறிவியலை அவர்களிடத்தே கொண்டுசெல்ல முயல்வது ஒரு வகை. அறிவியல் கருத்தாக்கங்களை அவற்றின் சிக்கல் சிடுக்குகளோடு விவரித்துச் சொல்ல முயல்வது இன்னொரு வகை. ஒன்றை சுஜாதா வகை என்றால் அடுத்ததை பெ. நா. அப்புசுவாமி வகை எனலாம். இரண்டிலும் சாதக பாதகங்கள் உள்ளன.

எளிமை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எழுதப்படும் சுஜாதா வகை அறிவியல் கட்டுரைகள் (உள்ளடங்கிய புத்தகங்கள்) அனைத்து வகையினரையும் ஆர்வத்துடன் வாசிக்கவைத்துவிடும். அனைவராலும் வாசிக்க இயலும் என்பதால் தினசரிகளில் வாராந்திரிகளில் வர்த்தகவெளியில் இவ்வகை எழுத்தே பிரபலம். ஆனால் பல சமயங்களில் அறிவியலை அறிமுக நிலையிலும் இவ்வகை எழுத்து நீர்க்கடித்தே அளித்துவிட்டிருக்கும். அடிப்படை கருத்தாக்கங்களையோ செயல்பாடுகளையோ பிரதானமான அறிவியல் நிகழ்வுகளையோ விவரித்து விளக்காமல் அல்லது சுருக்கிச் சொல்லிவிட்டு சார்ந்த தகவல்களையும் சுவாரசியமான செய்திகளையுமே முன்னிறுத்தி நீட்டிமுழக்குவது இவ்வகை எழுத்தின் அறிகுறி அதிகுறை. நேனோ டெக்னாலஜி பற்றிய சுஜாதாவின் சிறு புத்தகம் இவ்வகை எழுத்திற்கான சமீபத்திய உதாரணம்.

அடுத்ததாக எளிமையாகச் சொல்கிறேன் என்று சிக்கலான கருத்தாக்கங்களை அவற்றிற்கான மதிப்பளித்து விவரிக்காமல் மேம்போக்கான விளக்கங்களினால் இவ்வகை நுணிப்புல் அறிவியல் கட்டுரைகள் தவறான புரிதல்களுக்கு இட்டுச் சென்றிருக்கும். கெயாஸ் தியரி பற்றிய சுஜாதாவின் கட்டுரைகள் இவற்றிற்கு உதாரணங்கள். கெயாஸ் தியரி என்பதன்கீழ் விஞ்ஞானிகள் விவரிப்பவை விளைவுகளை எதிர்பார்க்கக்கூடிய ஆனால் முந்தைய நிலையின்மீது அதிநுண்மையாகச் சார்ந்திருக்கும் காலநிலைகளைக் கொண்ட ‘டைனமிக்கல் சிஸ்டம்ஸ்’ எனப்படுவனவற்றில் தோன்றும் விதிமீறல்களை. எங்கோ வண்ணத்துப்பூச்சி பறப்பதால் அன்றாட மனித வாழ்க்கைச் சம்பவங்களில் ஏற்படும் மாற்றங்களை ராசிபலன் போல கெயாஸ் தியரி எனும் அறிவியல் துறை ஊகிக்கவுமில்லை பேசவுமில்லை. சுஜாதாவின் கெயாஸ் தியரி கட்டுரைகள் அத்துறை பற்றிய ஆசிரியரின் தவறான புரிதல்களை எளிமையான எழுத்தில் அறிமுக நிலையிலேயே வாசகர்களுக்கும் கடத்திவிட்டிருப்பவை.

சுஜாதா பாணியிலேயே சொல்லவேண்டும் என்றால் எளிமையை மட்டுமே முன்னிறுத்தும் அறிவியல் எழுத்துவகைப் பெரும்பாலும் உட்டாலக்கடிகள் செய்து ஜல்லியடிப்பவை.

அறிவியல் மட்டுமல்ல எத்துறையிலுமே சில விஷயங்களை ஒருநிலைக்குமேல் (அல்லது கீழாக) எளிமைப்படுத்த இயலாது கூடாது. அவ்வாறு செய்கையில் விளக்கங்கள் பெரும்பாலும் குறையான சில நேரங்களில் தவறான புரிதல்களையே கொடுத்திருக்கும். அவையே சரி என்று கருதிவிடும் வாசக மனங்களை அத்தவறான கற்பிதங்களைக் களைந்து சரியான புரிதல்களுக்குக் கொண்டுவருவது இரட்டிப்புக் கடினம் வாழ்நாள் சாகசம். Everything should be made simple but not simpler என்றார் ஐன்ஸ்டைன். விளக்கங்கள் அனைத்தும் (சரியாக) எளிமையாக இருக்க வேண்டியது அவசியமே ஆனால் (தவறாகிக் குழப்புமளவு) மிக எளிமையாக இருக்கக்கூடாது. அறிவியல் விளக்கங்களில் தெளிவே அவசியம் எளிமை அல்ல.

பெ. நா. அப்புசுவாமி எழுதிய பல கட்டுரைகள் நீர்க்கடிக்காமல் எழுதப்பட்ட காத்திரமான அறிவியல் எழுத்திற்குச் சிறந்த உதாரணங்கள். இந்த இரண்டாம வகை அறிவியல் எழுத்து வாசகர்களின் அறிவை மதிப்பவை. சாய்ந்திருக்கும் நிலையில் வாயை மட்டும் திறந்தால் போதும் வாழைப்பழத்தை உரித்து ஊட்டுகிறேன் என்று உறுதியளிக்காதவை. தன்னைப் புரிந்துகொள்ள அவர்களிடத்தே உழைப்பைக் கோருபவை. இவ்வகை எழுத்தின் பலனைப் பெறுவதற்கு வாசகர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் களைந்துகொள்ள அடிப்படைகளை விளக்கும் பாடபுத்தகங்களை நாடவேண்டியிருக்கலாம். பல சமயங்கள் கட்டுரைகளின் பொருளை உணரத் தாங்களே யோசித்து நேரடியாகக் காணப்படாத முடிவுகளைக் கண்டடைய வேண்டியிருக்கலாம். தெளிவாக எழுதப்பட்டிருந்தாலும் விஷயங்கள் அனைத்துமே எளிமையாக இருக்காது. அனைத்துவகை வாசகர்களையும் இவ்வகை அறிவியல் எழுத்து ஈர்க்காதிருப்பதில் வியப்பேதுமில்லை. வர்த்தக வெற்றிகளை இவை ஈட்டுவதில்லை. என் சிதைக்குத் தீ மூட்டப் பொருளில்லை என்றால் வெளியாகாத என் எழுத்துக்கட்டுகள் ஏராளமாக உள்ளன… என்றிருக்கிறார் பெ. நா. அப்புசுவாமி.

இந்த இரண்டாம் வகை எழுத்தில் அறிவியலை (அல்லது எத்துறையையும்) விளக்குவதற்கு முதலில் துறைசார் வல்லமையும் பாண்டித்தியமும் வேண்டும். அடுத்ததாக ஒரே கருத்தாக்கத்தை எதிரில் இருப்பவரின் அறிவுநிலைக்கேற்ப நீர்க்கடிக்காமல் பல்வகை உதாரணங்களுடன் விளக்க முடிவதற்கான திறன் வேண்டும். பிரம்மசூத்திரத்தைப் பிஞ்சுக் குழந்தையின் அறிவுநிலையிலிருப்போருக்கு வழங்கிவிடுவேனாக்கும் என்று வீம்பினால் அது பிரம்மசூத்திரம் பாலகன் இரண்டிற்குமே நாம் செய்யும் துரோகம் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

நீங்கள் வாசிக்கப்போகும் கனி விமலநாதனின் இந்த பௌதிகப் புத்தகம் அறிவியல் எழுத்தின் இரண்டாம் வகை என உத்திரவாதமாய்க் கூறலாம். சொல்லப்போனால் இப்புத்தகம் விவரிக்கும் விஷயங்கள் பௌதிக உயர்கல்வி பாடப் புத்தகங்களிலேயே விளக்குவதற்குக் கடினமானவை. உயர் பௌதிகத்தைக் கற்பதற்கான அடிப்படைகளை புத்தகத்தின் முதல் பாகம் சிறு அத்தியாயங்களில் கொடுக்கிறது. அடுத்த மூன்று பாகங்களும் பௌதிகத்தின் ரகசியங்களாகக் காணப்படும் விஷயங்களை விளக்குகின்றன. இருபதாம் நூற்றாண்டின் பௌதிகப் புரிதல்களின் இருபெரும் தூண்கள் என்றாகிவிட்டுள்ள குவாண்டம் மெக்கானிக்ஸ் சார்பியல் இவற்றை அறிமுகம் செய்து இவற்றின் கண்டுபிடிப்புக்களையும் விவரிக்கின்றன. துறைவல்லுநர்களுக்குப் பரிச்சயமான மொழிநடையில் விவரிக்கப்படுகையில் சாதாரணர்களுக்கு ரகசியங்களாகவே தோற்றமளிக்கும் கருத்தாக்கங்களை அன்றாட உதாரணங்களுடன் தெளிவான மொழிநடையில் ஆர்வமிருப்பவர்களுக்காக இப்பாகங்களில் ஆசிரியர் வழங்க முற்பட்டிருக்கிறார்.

சார்பியலில் வழக்கமாகக் காணப்படும் சிறப்புச் சார்பியல் விளக்கங்களைக் கடந்து ஐன்ஸ்டைனின் சாதனைகளில் முக்கியமானதும் விளக்குவதற்குக் கடினமானதுமான பொதுச்சார்பியலையும் இப்புத்தகம் விளக்குகிறது. அதனடிப்படையில் நிரை நாற்பரிமாண கால-வெளியை மடக்குவதால் அதன் வெளிப்பாடாக நிரையீர்ப்பு எவ்வாறு உருபெருகிறது என்பதையும் விவரித்து கிராவிட்டான்கள் நிரையீர்ப்பலைகள் என்று சமகால முன்னேற்றங்கள் வரையில் தொட்டுக்காட்டியுள்ள கட்டுரைகள் இப்புத்தகத்தில் சிறப்பம்சம்.

எலக்ட்ரான் புரோட்டான் நியுட்ரான் போன்ற அணுக்கரு துகள்கள் கேள்விப்பட்டுள்ளோம். துகள் உலகில் இவை அன்றாடம் நம்மிடையே புழங்கும் நாய் பூனை மாடு போன்றவை. விநோத மிருகங்கள் பலவற்றைக் கொண்ட மிருகக்காட்சிசாலை போல விநோத குணங்களை வெளிப்படுத்தும் அணுவிற் சிறிய துகள்கள் நூற்றுக்கணக்கில் உள்ளதாக விஞ்ஞானிகள் பரிசோதனைகளில் கண்டுபிடித்துள்ளனர். இந்தத் துகள்காட்சிச்சாலையை விளக்குவதற்கே தனிப்புத்தகம் தேவை. ஆசிரியர் இவை உருவாவதன் அடிப்படைகளை நான்காம் பாகத்தில் சில கட்டுரைகளில் கொடுத்துள்ளார். இவற்றை மேல்நிலை பள்ளி இயற்பியல் பின்புலத்துடன் அணுகினால் வாசிப்பதற்குச் சுவாரசியமானவையாகும். மூன்றாம் பாகத்தில் அலைகளாய் உருவகிக்கும் அனைத்தையும் எவ்வாறு துகள்களாகவும் உருவகித்துப் புதிய விளக்கங்களைப் பெறலாம் எனும் விவாத விளக்கக் கட்டுரையில் தொடங்கி நான்காம் பாகத்தில் சமீபகாலத்தின் உலகின் மிகப்பெரும் பொருட்செலவில் பலநூறு விஞ்ஞானிகளால் ஒருங்கிணைந்து செய்யப்பட்ட லார்ஜ் ஹேட்ரான் கொலைடர் பரிசோதனையில் கடவுள் துகள்களைக் கண்டார்களா என்பதுவரை ஆசிரியர் தொட்டுக்காட்டுகிறார். பௌதிகத்தின் நூதன கருத்தாக்கங்களைக் கண்டுபிடிப்புகளைத் தேவையான தெளிவுடன் நீர்க்கடிக்காமல் தொகுத்தளித்திருப்பதே இப்புத்தகத்தின் சால்பு.

எம்மொழியிலும் அறிவுத்துறை புத்தகங்கள் குறைவாகவே இருக்கும். தமிழிலும் அறிவியல் எழுத்து சொற்பமே. ஆங்கிலத்தில் விளக்கப்பட்டுள்ள சமகால அறிவியல் முன்னேற்றங்களைத் தமிழில் நகலெடுத்து வைத்தாலும் வரவேற்கப்படவேண்டிய நிலையிலேயே இன்றும் இருக்கிறோம். கனி விமலநாதனின் புத்தகத்தில் விளக்கப்படும் விஷயங்களின் கனத்தையும் அடர்வையும் வைத்து நோக்குகையில் ஆங்காங்கே வீசும் பாடபுத்தக நெடியை — சிக்கலான சொற்றொடர்கள் விளக்கங்களின் இடைவெளிகள் சேர்த்தியாக — முழுவதுமாய் நீக்குவதற்கு வழியில்லை என்றே தோன்றுகிறது. புத்தகத்தின் பக்க அளவைக் குறைக்கும் நோக்கில் சில விஷயங்கள் மிகச் சுருக்கமாகவே விளக்கப்பட்டுள்ளன. சார்ந்த கணிதச் சமன்பாடுகளைப் புறக்கணித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் விளக்கப் படங்கள் ஒன்றுமே இல்லாதது களையப்பட்டிருக்கவேண்டிய குறை. வாசகர்கள் தங்கள் சந்தேகங்களை வேறு அடிப்படையான பௌதிகப் புத்தகங்களை கலந்தாலோசித்தோ துறை வல்லுநர்களிடம் விவாதித்தோ மட்டுமே இப்புத்தகத்தின் பயனை முழுவதுமாய்ப் பெற இயலும். அவ்வகை வாசகர்களைச் சென்றடைந்து ஆசிரியரின் அறிவியல் எழுத்தார்வம் குன்றாவகையில் இப்புத்தகம் வெற்றிபெற வாழ்த்துகள்.

அருண் நரசிம்மன்

1912இல் ராபர்ட் மில்லிகன் தனது பிரசித்திபெற்ற எண்ணெய்ச் சொட்டுப் பரிசோதனையில் முதல் சொட்டில் மின்னூட்டத்தை அளந்த தேதி, 2019

***

[ மணிமேகலை பிரசுரம் பதிப்பாசிரியர் நண்பர் திரு. ரவி தமிழ்வாணன் விண்ணப்பத்திற்கிசைந்து எழுதியளித்த அணிந்துரை. ]