வருடந்தோரும் இசை வாத்தியக்கருவிகளைச் செய்யும் கலைஞர்களை கௌரவித்து பரிவாதினி நடத்திவரும் விழாவில் நாகஸ்வரம் செய்கலைஞன் ரங்கநாத ஆசாரியின் நூற்றாண்டையொட்டி அவரது மகனுக்கு விருது வழங்கித் தங்களை கௌரப்படுத்திக்கொண்டார்கள்.
நவம்பர் 30, 2019 நடந்த அவ்விழாவில் ‘வெளி’ப்பார்வையாளனாய் சிற்றுரை வழங்கினேன். அதன் கானொளி பரிவாதினியின் யூ–டியூப் தளத்தில் உள்ளது. கீழேயும் கொடுத்துள்ளேன். அக்கானொளியில் என் பேச்சு ராம் அறிமுகம் செய்து பொன்னாடை வழங்கியபின்னர் சில நிமிடங்கள் வருகிறது.
கானொளி சுட்டி: https://www.youtube.com/watch?v=LxgatEHrJvE
என் உரையின் சாரம் பின்வறுமாறு.
நான் பிறந்த ஊர் குடவாசல். சுற்றி திருச்சேரை நாச்சியார்கோயில் திருநாகேஸ்வரம் ஆண்டாங்கோயில் அய்யம்பேட்டை வலங்கைமான் பாபநாசம் கொரடாச்சேரி இஞ்சிக்குடி மன்னார்குடி… இன்னும் கும்பகோணத்தையே சொல்லவில்லை… எங்கு கேட்டாலும் நாகஸ்வரம் ஒலித்துக்கொண்டிருந்த காலம். அது அந்தக் காலம்… என்கிறேன். ஏதோ நூற்றாண்டுகள் தள்ளிய மூதாதையர் காலம் போல. நான் சொல்வது எழுபது எண்பதுகளில். யார் பெயரையோ இனிஷியல்கள் மட்டும் பெரிதாகத் தைக்கப்பட்டிருக்கும் குஞ்சம் வைத்த வர்ண அழுக்கு ஜமக்காளங்கள் விரித்த தாத்தா வீட்டுத் திண்ணையில் சிறுவனாய் சிதறியிருக்கும் மஞ்சள் அரிசி சந்தனம் வெற்றிலை இவற்றில் முட்டி பதிய நாகஸ்வரத்தின் எச்சில் ஓடையாய் ஒழுகும் ஒலிவாய்க்கு அருகில் என் வலக்காது (எதிர் பக்கம் அமர பயம். தவில் குச்சி அடித்துவிடும்). பார்வை திரும்புகையில் அந்த ஒலிவாயே பெரிய லௌட்ஸ்பீக்கர் போல பதிந்துவிட்ட மனக்காட்சி. அந்தக் கேள்வி ரசனை மட்டுமே இன்று இங்கு மேடையேறிப் பேச முனைகிறது. எனக்குப் பாட வராது. பிழைத்தது இசை.
போதும் பூர்வ பீடிகை. இதற்கே ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டது…
நல்ல பந்தோ மட்டையோ இல்லையேல் கிரிக்கெட் இல்லை. நல்ல அடுப்பு இல்லையேல் நளன் இல்லை. சுவர் இல்லையேல் சித்திரம் இல்லை. நம்பகமாக வேலை செய்யும் நல்ல கடிகாரங்கள் வந்த பிறகே மாலுமிகளால் உலகம் உருண்டை என்கிற நிருபணத்தை உலகோர் ஏற்க வழங்க முடிந்தது. அதற்கு முன்னால் கொலம்பஸ் இந்தியர்களைக் காண விரும்பி சரியான கடிகாரங்களோ காந்த புலம் காட்டிகளோ இல்லாமல் தான் கண்டடைந்தவர்களை இந்தியர்கள் என்றார். கொலம்பஸ் அன்று சொன்னது இன்று சரியாக வரலாம். இன்று நிறைய புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருப்பதால் அமெரிக்கா இந்தியா போலத்தான்.
வாத்தியங்களைச் சிறப்பாகச் செய்யும் நிபுணர்கள் ஆசாரிகள் இல்லையேல் வாத்திய இசை வல்லுநர்கள் இல்லை.
இது விளம்பர யுகம் என்பார்கள். பட்டர்பிளை அடுப்புகள். மைக்ரோ வேவ் அடுப்புகள். குக்கர். பிரீதிக்கு நான் கியாரண்டி என்கிறார் ஓர் அம்மணி. நளன் இன்று குழம்பிவிடுவார் தன் சமையலுக்கு எக்கருவிகளை வாங்குவது என்று. மேற்கத்திய இசை வாத்தியங்களை மேற்கோள் காட்டலாம். விளம்பர யுகத்திற்கு முன்னாலேயே… செய்பவரை தெரியப்படுத்தியுள்ளது. கிட்டார் என்றால் fender stratocaster வயலின் Stradivarius பியானோ Steinway இவ்வளவு ஏன் electronic keyboard என்றால் Yamaha Casio. செய்பவர் பெயர்பெற்றுள்ளனர்.
நாகஸ்வரம் என்றால்?
பல காரணங்கள் இந்த கவனயீர்ப்பின்மைக்கு. உதாசீனம் ஓர் காரணம். நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் தூக்கியடிப்பதைச் சமுதாய குணமாகவே வளர்தெடுத்துள்ளோம். நான் மட்டும் அறச்சீற்றம்கொள்ளத் துடிப்பதும் இவ்வகை குணத்தின் மறுபக்கமே.
இன்னொரு வகையில் நமது சமுதாயத்தின் இசை பிராசீனமானது என்று கருதி பெயரிட ஆவணப்படுத்த கௌரவப்படுத்த முனைவதில்லை. மோகனம் கல்யாணி தோடி என்று யார் கண்டுபிடித்தார்கள் என்று ஆவணப்படுத்தவில்லை. அவசியமும் இருந்ததில்லை. சாம வேதாதி சங்கீதம் என்பார்கள். இன்று வேதமெல்லாம் போச்சு. எல்லாம் பேதம் தான்.
காங்கேயம் காளை மனப்பாறை மாடு கும்பகோணம் வெத்தலை… தனி ஆட்களை கவனப்படுத்தவில்லை. இந்தியப் பிரதேசம் இவ்வாறுதானே. பனாரஸ் பட்டு. பங்கனபள்ளி மாம்பழம். அரபு குதிரைகள்… குறிப்பாக ஆளுமைகளை அடையாளப்படுத்தாமல் ஊரையே முன்னிறுத்தியுள்ளோம். மற்ற கலைகளைப்போலவே தொழிலாகவே வாழ்வியலாகவே இசையும் வளர்ந்துள்ளது. நாயனம் என்றால் நாரசிங்கம்பேட்டை கடம் என்றால் மானாமதுரை… தனி ஆசாரிகளை அடையாளப்படுத்துவதில்லை.
தவறிவிட்டோமா?
ஒரு stradivarius வயலினை வீட்டில் வைத்திருப்பதை பெருமையாகக் கருதுவோர்கள் (இங்கிலாந்துலேந்து வரவழைச்சது… என்ன விலை தெரியுமா இது லட்ச ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது…) வீணையையோ நாயனத்தையோ அவ்வாறு போஷிக்கத் தவறியது அம்மனநிலை வளராது போனது ஒருவகை சமூக வீழ்ச்சியே.
செய்யவேண்டும். இசைப்பிரியர்கள் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஓர் இசைக் கருவியாவது வாங்கி வைக்க வேண்டும். நேரிடையாக இக்கருவிகளைச் செய்பவர்களிடம் சென்று வாங்கினால் நலம். இசை ஆசாரிகளை வாழவைப்பதில் சிறு பங்கு.
முடிவில் சுருக்கமாக ரங்கநாத ஆசாரி செய்த இரண்டரை கட்டை நாயனம் பற்றிய விளக்கம்.
ஆக்டேவ் = கட்டை, ஸ்ருதி. ஒரு ஸ்வரத்தின் ஒரு ஸ்தாயில் (பிட்சில்) தொடங்கி அதே ஸ்வரத்தின் இரட்டை ஒலியெண் (பிரீக்வென்சி) வரை இருக்கும் ஒலிப்பட்டை ஒரு ஆக்டேவ் எனலாம். ஒரு ஆக்டேவ் ஒலிப்பட்டையகலத்தை ஏழு ஸ்வரங்களாய்ப் பிரிக்கிறோம். அனைத்தும் ஒரே ஆக்டேவ் உள்ள ஏழு ஸ்வரங்கள். அடுத்த மேல் அல்லது கீழ் ஆக்டேவிலும் இதே ஏழு ஸ்வரங்கள் பிட்ச் / ஸ்தாயி ஏறியோ இறங்கியோ ஒலிக்கும். (இந்த இடத்தில் இந்த மிக எளிமைப்படுத்திய விளக்கம் போதும் எழுதியவற்றை விளக்கிக்கொள்ள).
வயலின் கிடார் வீணை போன்ற தந்தி வாத்தியங்களைச் செய்கையிலேயே நான்கு விதமாய் கட்டை ஆக்டேவ் மாற்றலாம். தந்தி எப்பொருளினால் செய்யப்படுகிறது ஒன்று. மற்றவை தந்தியின் நீளம் தடிமன் டென்ஷன். செய்யப்பட்டதைப் பிறகு வாசிக்கையில் ஒரே விதமாய் தான் ஸ்வரங்களையோ கட்டைகளையோ மாற்ற முடியும்.
ஒரு தந்தியின் மீட்டப்படும் நீளத்தைக் கூட்டியோ குறைத்தோ ஸ்வரங்களை மாற்றி வாசிக்க வேண்டும். தந்தி வாத்தியங்களில் மீட்டும் (பொதுவாக வலக்) கைக்கு அருகே (இடது கை விரல்களை நகர்த்தி) மீட்டப்படும் நீளத்தைக் குறைத்துக்கொண்டே செல்கையில் பிட்ச் எனப்படும் ஸ்ருதியின் அளவு உயரும். ஒலியின் அலையெண் (பிரீக்வென்சி) உயர அலையகலம் (வேவ்லெந்த்) குறையும்.
அல்லது ஒல்லி தடிமன் என வெவ்வேறு தந்திகளில் வாசிக்கையில் ஸ்ருதி / ஆக்டேவ் / கட்டை மாறுபடும். கிட்டாரில் ஓர் இடத்தில் கீழிருந்து மேலாகத் தந்திகளில் தவ்வினால் தடினம் படிப்படியாக அதிகமாகி ஆக்டேவ்களே மாறுபடும். மூன்று ஆக்டேவ்களை/கட்டைகளை இடமிருந்து வலமாகவோ கீழிருந்து மேலாகவோ இடக்கையைச் செலுத்தி வாசித்துவிட முடியும். அல்லது டென்ஷனை கூட்டியோ குறைத்தோ ஆக்டேவ் / ஸ்ருதி / கட்டைகளை மாற்றிக்கொள்ளலாம். நிர்வாணா சௌண்ட் கார்டன் போன்ற ராக் இசைக்குழுக்கள் இவ்வித ‘அண்டியூண்ட்’ கிடார்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் ஒருவரும் இன்றுவரை கிடாரைச் சரியாக வாசித்ததில்லை. அதாவது சரியாக வாசிப்பதாக பாவ்லாகூட செய்ததில்லை. உச்சஸ்தாயியில் வீணை இசையோ அதிரடியாக கிடார் இசையோ பின்னனியில் ஒலிக்கையில் இவர்கள் காட்சியில் இடக்கையை வீணை மீதி கிடார் மீதோ வேகமாக ஆட்டுவார்கள். அதுவும் இடப்புற முனைக்கருகே. வாத்தியத்தை உலுக்கியெடுப்பார்கள். ஷேக் வெல் வைல் இன் யூஸ்…
நிஜ வைனிகர்களை கவனித்தால் அல்லது ஒரு முறை வாத்தியத்தை ஒலித்துப் பார்த்தால் விவரம் புரியும்.
காற்று வாத்தியங்களில் நாகஸ்வரத்தில் வாயில் வைத்து ஊதப்படுவதால் அது வலக்கரம். விரலால் மூடப்படும் பொத்தல் (இடக்கை மீட்டு) ஊதுவாய்க்கு எவ்வளவு அருகில் செல்கிறதோ அதற்கேற்ப ஸ்ருதி உயரும். சிறிய திகிரி நாயனத்தில் கட்டை / ஸ்ருதி / ஆக்டேவ் அதிகமாக இருந்தது இதனாலேயே. இந்த நாகஸ்வரத்தைச் செய்கையில் மொத்த நீளத்தையே அதிகரித்தால் வாசிக்கமுடிந்த ஸ்ருதி / ஆக்டேவ்களையும் குறைத்துக்கொண்டே போக முடியும். ஐந்து கட்டையிலிருந்து இரண்டரை கட்டை ஆனது இவ்வகையிலேயே. நாயனம் செய்யும் ரங்கநாத ஆசாரியின் முயற்சியால்.
திருவாவடுதுறை ராஜரத்தினம் தொடங்கி (ரங்கநாத ஆசாரிகள் வீட்டோடு வைத்து ஆதரித்து போஷித்தவர்) நாகஸ்வரக் கலைஞனுக்குப் புதிய ஒலிகள் சாத்தியப்படுகிறது. பெண் குரலாய் (ஐந்து கட்டையில்) ஒலித்த வாத்தியம் சட்டென ஆண் குரலை (இரண்டரை கட்டை) வெளிப்படுத்த வல்லதாகியது. ஒரு சஹானாஆலாபனையை அதன் சௌக்கிய ஸ்வரக்கூட்டில் அமைத்துக்கொள்ள முடிகிறது. சுத்த மத்தியமத்திற்கும் பிரதி மத்யமத்திற்குமான ஒலி இடைவெளியை பஞ்சமத்திலிருந்து திருத்தமாக வேறுபடுத்திக் காட்டமுடிகிறது.
புதிய இசைக் கருவியொன்றை நம்மூரிலேயே விஞ்ஞானியின் நேர்த்தியுடன் வீட்டிலேயே செய்து முடித்துள்ளார் ரங்கநாத ஆசாரி. இவர்கள் நாம் கேட்காவிட்டால் பெயரைக்கூட வெளியில் சொல்லமாட்டார்கள். இதுவே கொடை. கலை அநாதியாவதும் அழியாதிருப்பதும் இவ்வகையினராலேயே.
வாழ்க கலைஞர்களை வாழவைக்கும் ஆசாரிகள். பரிவாதினி செய்யும் இந்தக் கைங்கர்யம் கர்நாக சங்கீதத்திற்கு அர்ப்பணம். பரிவாதினியால் விருது வழங்க முடிகிறது. என்னால் முடிந்தது இவ்வகை ஆவேச பேச்சு.
*