அமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்

Standard

novel-tஅன்புள்ள ஆசிரியருக்கு,

சமீபத்தில் உங்களுடைய அமெரிக்க தேசி நாவலை வாசித்த பாதிப்பில் என்னுரையை முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பதிவை உங்களுக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று வெகுநேரம் யோசித்து இப்போது அனுப்புகிறேன். புத்தகத்தை எழுதியதற்கு நன்றி. அருமையான அனுபவத்தைக் கொடுத்தது.

இப்படிக்கு,
விஷ்ணுப்ரியா
__

அமெரிக்க தேசி — நான் முழுவதுமாய் வாசித்த முதல் தமிழ் நாவல். அருமையான படைப்பு. எனது வாசிப்பனுபவத்தை பகிர நினைக்கிறேன்.

அதற்குமுன், தாய்மொழி தமிழ் என்றாலும் பள்ளியிலோ கல்லூரியிலோ தமிழே படிக்காமல் வளர்ந்தவள் நான். வீட்டில் அம்மா பயிற்றுவித்தது தான். அதுவும் வியாழந்தோறும் காலை ‘துக்லக்’ படிப்பதற்க்காகக் கற்றுக்கொண்டேன். நாவலை பற்றி பேசுவதற்கு முன் இந்த பேச்சுத் தேவைதானா என்றால் – இரண்டு காரணங்கள். முதலாவது, எச்சரிக்கை – சொல்பிழை, எழுத்துப்பிழை இருக்கலாம். இல்லை, நிச்சயமாக இருக்கும் என்றே நினைக்கிறேன். மற்றோன்று பிறகு சொல்கிறேன்[**].

அமெரிக்க தேசி — இது ஸ்ரீரங்கத்து தேசிகனின் கதை. தேசிகன் என்கிற “தேசி” 25 வயது ஸ்ரீரங்கத்து இளைஞன். பிறந்தது முதல் முதுகலை படிப்பு முடித்து வேலை வரை அனைத்துமே ஸ்ரீரங்கத்தில் தான். அதி புத்திசாலி. (உலக)இலக்கியம், (உலக) இசை, இதிகாசம், புராணம், அறிவியல், பொருளாதாரம், தத்துவம், ஆழ்வார் பாசுரங்கள் என பன்முக அறிவு. தகவல் வெள்ளத்தை அறிவெனக்கருதாத தெளிவு வேறு. வசீகரன். பெண்களை கரெக்ட் செய்வதெல்லாம் தேவையே இல்லை. தானாகவே விழுந்துவிடுவார்கள்.

முதுகலை இயற்பியல் படிப்பு முடித்து அங்கேயே நல்ல வேலையும் கிடைத்துவிட்டது. நல்ல காதலும் அமைந்திருந்தது. ஆனாலும் போதவில்லை. சாதிக்கவேண்டி பி.எச்.டி படிப்பிற்காக வீட்டையும் காதலையும் துறந்து சுயத்தைத் தேடி அமெரிக்கா செல்கிறான்.

இந்த நாவலில் பிடித்தவை என்றால் ஏராளம். அதில் ஒன்று கதாநாயகநின் அகப்போராட்டங்களை பற்றிய நுண்ணிய சித்திரம். புறத்தை மட்டும் கண்டால் — இவனுக்கெல்லாம் என்னடா கேடு என்பது போலத்தான் இருக்கும் தேசிகனின் வாழ்க்கை. உள்ளூரிலும் சரி. அமெரிக்காவிலும் சரி. அவனுக்கு வெற்றிக்குமேல் வெற்றி என்று தெரிந்தாலும் அவனது மனத்தில் ஏற்படும் சஞ்சலங்களை தடைகளை ஏமாற்றங்களை அவன் எப்படி ஹேண்டில் செய்து தன்னை தானே அறிந்து கொள்கிறான் என்பதை அட்டகாசமாய் விவரித்துள்ளார் ஆசிரியர். நகைச்சுவைக்கு குறைவேயில்லை. சிரித்து கொண்டே இருக்கலாம். கடைசீ சாப்டர்ஸில் தான் கொஞ்சம் வளவள கருத்துக்கள் என தோன்றுகிறது.

மேலும், அமெரிக்கா சென்றாலும் அவன் ஸ்ரீரங்கத்து தேசிகன் என தேசிகனின் சொந்தவூர் நினைவுகளையும் அது அவனுக்கு கற்றுக்கொடுத்த பாடங்களையும் 80-90 களின் ஸ்ரீரங்கத்தை நம் கண்முன்னே கொண்டு நிறுத்திவிடுகிறார் ஆசிரியர்.

வர்ணனைகளில் உவமைகள் மிக யதார்த்தமாகவும் நகைச்சுவை ரசத்துடன் சேர்ந்து இனிப்பதால் எப்பொழுதும் என் மனதிலேயே “பிரேஷ்”ஆக இருக்கும் — ஜீன்ஸ் பேண்ட்டில டால்கம் பவுடர் தூவினாப்புல மேகங்கள், அல்வாவை ஆணியில் மாட்டும் செயல் என அநேகம். சிலேடை — கேட்க்கவே வேண்டாம். படித்து என்ஜாய் பண்ணவேண்டியது.

அமெரிக்காவைப் பற்றிய சின்ன சின்ன அவதானிப்புகள், இந்தியாவை காட்டிலும் உள்ள வேறுபாடுகள் ப்ளஸ் அண்ட் மைனஸ் — வெளிநாட்டில் வாழும் இந்தியர்களால் நன்றாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தவை என நினைக்கிறேன். அவ்விஷயங்களை இக்கதையில் ஆசிரியர் கையாண்டிருக்கும் விதம் பல இடங்களில் நறுக்கென்று தலையில் குட்டி ஞாபகப்படுத்துவது பொல் இருந்தன.

தேசிகனுடைய தேடலில் காதலும் உண்டு. காமமும் உண்டு. புத்தகம் முழுக்க இவையிரண்டுக்குமான தொடர்பை புரிந்து கொள்ளவே தேசிகன் முயல்கிறான். இறுதியில் கண்டும் கொள்கிறான். காமத்தை வர்ணிக்கயில் ஆசிரியர் அதோடு தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் ஒன்றிணைத்துள்ளார். மிகவும் பிடித்தது. சிந்திக்கவைத்தது.

இந்த புத்தகம் ஸ்ரீரங்கத்திலிருந்து தேசிகனுடன் நானும் அமெரிக்கா சென்று அவன் கண்டதை அடைந்ததை நானும் பார்த்து பெற்று தெளிவடைந்து உரிய இடத்திற்கு திரும்பியது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னைப்போலவே அயல்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு அருமையான அனுபவத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறன்.

நிச்சயம் வாசித்து பார்க்கவும்.

[**] என்னாலேயே சுலபமாக இரண்டு வாரத்துக்குள் இந்த நாவலை வாசிக்க முடிந்தது என்றால், யார் வேண்டுமானாலும் ட்ரை செய்யலாம்.