நாவிதர் மொட்டை அடித்துவிடத் தயங்குகிறார். சொற்ப வயதாங்கில் எதுக்கு சாரே… கொஞ்சந்தானே சாரே இருக்கட்டுமாகிலே… ரஜினி ஸ்டைலா இருக்கங்கில் யோஜிக்கறன் யாண்… அப்பிடியே நிமிட்டா செதுக்கி விட்டு வைக்கிறனே… ரெம்ப எடுக்காங்கில் லேடிஸுக்குலாம் பிடிக்காது சாரே… நீங்கள் எதுக்கும் உங்கன வீட்டில் மேடத்த ஒருடைம் கன்ஸல்ட் பண்ணி… பின்ன இந்த உன்னி ஒங்களப் பின்னி… ஏதேதோ சாக்குபோக்கு சொல்கிறாரே ஒழிய மழிக்க மறுக்கிறார்.
முழுவதும் மழித்துவிட்டால் கேசம் வளர்ந்து சிகை மீண்டும் இன்றிருக்கும் அதே நிலைக்கு வருவதற்கு ஒரு வருடமாகலாம். அதுவரை அவரை நாடத் தேவையில்லை. அவர் வரும்படிக்குப் பங்கம். ஆங்காங்கே நுணிப்புல் நறுக்கி கிருதா மட்டும் திருத்தி (சவரம் தனி) பின்மண்டையில் அடியே கோடு போட்டு உத்திரணியால் டெட்டால் நீர் தெளித்துப் பின்னழகு புரிய பெருமாளாக்கிக் கண்ணாடி காட்டி அனுப்பிவைத்தால் ஆயிற்று. மாதமொருமுறை சிகையலங்கார உற்சவத்திற்கு நாம் பரம பாகவதோத்தமரான அவரையே நாட வேண்டியிருக்கும். வருடம் முழுவதும் அவரது வருமானம் நம் முடிபோல வளரும்.
நாவிதரின் வியாபார உத்தி… ஒரே மொட்டைக்கு ஆயிரம் ரூபாய் தரமாட்டோம் ஆனால் பத்து முடி திருத்தத்திற்குத் தலைக்கு ஒருமுறை நூறு ரூபாய் தரத் தயங்கமாட்டோம். வருடம் முழுவதற்கும் ஆயிரம் ரூபாய் மட்டுமே என்பதால் நாவிதர் மொட்டை அடித்துவிடத் தயங்கும் வியாபாரத்தில் பெரும் அநியாயமில்லை என்றுமே கருதுவோம்.
மருத்துவமனைகளும் அவற்றைப் பராமரிப்பவர்களும் இன்று இதே உத்தியைக் கையாளத் தொடங்கிவிட்டனர்.
மூச்சுத் திணறல் என்று போனால் டேபிளுக்கு எதிராகக் கை நீட்டி ஸ்டெத் வைத்துப் பார்த்துவிட்டுக் கபமா சளியா என நம்மிடம் கேட்டுக்கொண்டு முதலில் மாத்திரைகள் வழங்குகின்றனர். ஆலோசனைக்கு ஒரு நியாயமான ஊதியம் பெற்றுக்கொள்கின்றனர். இரண்டு வாரங்கள் கழித்து இதே நிலையென்றால் மீண்டும் என்னிடம் வா. போகவே செய்கிறோம். ஊதியம் பெற்றுக்கொண்டு சின்ன வயசிலிருந்தே தூசி அலர்ஜியா என நம்மையும் சந்தேகிக்க வைத்து மாத்திரையை மாற்றுகின்றனர். மாத்திரைகள் டோஸேஜ் வீக் உங்களுக்குக் கேக்கலை… மருந்தை மாற்றியுள்ளதால் அடுத்த வாரம் என்னிடமே வந்து காட்டு. காட்டுகிறோம். இழுத்து விடு… மூச்சு இன்னமும் திணறுகிறதா? சர்வ நிச்சயமாய். இருமலுடன். இருமுகையில் அடிவயிற்றில் வலிக்கிறதா… வலிக்கிறது. அடாடா ரெண்டு வாரம் முன்னாடியே வந்திருக்கனும் சார் நீங்க இப்ப என்ன பன்றீங்க ஒரு ஆட்டோ புடிச்சு… ஊதியம் பெற்றுக்கொண்டு பஸ்-ஸ்டாண்ட் அருகே வேறு மருத்துவமனை பராமரிப்பாளருக்குச் சொந்தமான ஐசியு-விற்கு அனுப்பிவைக்கின்றனர்.
ஏங்க சாதா மூச்சுத் திணறலுக்கு அங்க போவனும்? அட அத்தனை கருவிகள் வாங்கிப்போட்டு அவற்றைச் சுற்றி அம்மாம் பெரிய கட்டடம் கட்டிவைத்திருக்கும் அவர் எவ்வாறு ஈஎம்ஐ கட்டுவதாம்? சரி அப்ப ஐசியு எதுக்கு… அங்குதான் சீராக மூச்சு விடுகிறாயா அதில் பிராணவாயு எத்தனை விகிதம் கரியமிலவாயு எத்தனை விகிதம் போன்ற திகிலான தகவல்களைச் சோதித்துச் சேகரிப்பதற்கான கருவிகள் சரியாக இயங்குமாம்.
இருதினங்களில் பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தில் இருமல்களுக்கிடையே வெளியே ஆட்டோ வெயிட்டிங்கில் இருப்பதை ஒருவாறு எடுத்துக் கூறியதும் நட்பு ரீதியாகக் கூட்டணியில் இருக்கும் பராமரிப்பாளரின் அதே மருத்துவமனையிலேயே வெளியே சாதா அறையில் வந்து மூச்சைத் திணறிக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. ஏசி இல்லாத கடுப்பிலோ என்னவோ மேற்படி சோதனைக் கருவிகள் வெளியே சாதா அறையில் மக்கர் செய்கின்றன. மூச்சுவிட்டாலும் விடாவிட்டாலும் கவனித்துச் சொல்வதற்கான கருவிகள் இல்லாததால் சிகிச்சை தடைபட்டுவிடுகிறது. எல்லாம் ஐசியு-விலிருந்து வெளியே எடுத்ததால்தான் சார்…
இண்டன்சிவ் கேர் என்பதற்கு எதிர்ப்பதம் நார்மல் கேர் இல்லை டோண்ட் கேர்.
ஆட்டோகாரரை வீட்டில் சொல்லிக்கொண்டு அப்புறமாக வரச்சொல்லிவிட்டு மீண்டும் ஐசியு புகலிடம். நகரத்து ஐசியுக்களை விட சிற்றூர்களில் ஐசியு தங்குவசதிகள் குறைவென்றாலும் கட்டணம் அதிகம். இதன் லாஜிக் நகரத்தில் பல ஐசியுக்கள் இருப்பதால் போட்டி அதிகம் அதனால் கட்டணத்தைக் குறைத்துக்கொண்டால்தான் வந்து தங்குகிறார்களாம். சிற்றூர்களில் ஐசியுக்களே ஒன்றிரண்டுதான் என்கையில் அவர்கள் வைத்ததுதான் நியாயமான கட்டணம். தங்குவது நம் (துர்)பாக்கியம். ஒரு சுற்று இருமி முடித்ததும் நியாயமென்றே தோன்றுகிறது.
வேறு சில கருவிகளை அவை இயங்குவதற்கான நியாயமான கட்டணங்களை நம்மிடம் பெற்றுப் பயன்படுத்தி வேறு சில பரிசோதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. சிக்குகுனியாவாக இருக்குமா மூச்சுக்குழாயில் கட்டியா இதயத்தில் கொழுப்பினால் அடைப்பா போன்றவற்றைக் கண்டுபிடிக்க. இடையே பத்தியச் சாப்பாடு பாதி அமர்ந்த இருக்கையிலேயே படுக்கை பாத்ரூம் போகத் துணை என்று முஸ்தீபுகள் பெருகுகின்றன. அடுத்த இரண்டு வாரங்களில் மூச்சுத் திணறல் சரியானது போலவே தோன்றுகிறது. பழகிவிடுகிறது என்று சொல்வதற்கில்லை.
அடுத்த வாரம் வந்து காட்ட சொல்லியிருக்கின்றனர். அதுவரை உத்திரவாதமாய் ஒன்றை மட்டுமே சொல்ல முடியும். அடுத்தமுறை போகையிலும் மருத்துவமனைப் பராமரிப்பாளர்கள் நியாயமான ஊதியத்தை மட்டுமே நம்மிடம் பெற்றுக்கொள்வார்கள்.
யோசித்துப்பார்த்தால் முழுக்கைச் சட்டையை மணிக்கட்டில் மடித்தவாறு மூச்சுத் திணறல் முச்சூடும் நீங்குவதற்கு ஐம்பது ரூபாய் செலவில் மாத்திரை எழுதிக்கொடுத்துவிட்டுச் சுழல் நாற்காலி இருக்கையின் மஞ்சள் டர்கி டவலில் தூசியைத் தட்டியவாறு கிட்டத்தட்ட எழுபத்தியைந்தாயிரம் ரூபாய் ஊதியமாகக் கேட்டால் கொடுத்துவிடுவோமா?
நாவிதரின் மொட்டை வருமான லாஜிக் மருத்துவமனைகளிலும் இன்று இயங்குகிறது.
இன்றளவில் கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளுள்ள அனைவருக்கும் தெரிந்த இன்னொரு ரகசியம் சொல்கிறேன். அநேகப் பொறியியல் கல்லூரிகளையும் மேற்படி மொட்டை வருமான லாஜிக் வகையே புழக்கத்தில் வைத்துள்ளது. எவ்வாறு என்று உங்கள் பிள்ளை வயதிற்கு வருவதற்குள் நீங்களே யோசித்துத் தெளிந்து அதற்கேற்ப நல்ல முடிவெடுத்துவீட்டீர்களென்று என்னிடம் நிருபித்தால்… உங்களுக்காக நாவிதரிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து மொட்டை போட்டுக்கொள்கிறேன்.