அமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து

Standard

அன்புள்ள அருண் நரசிம்மன்,

வணக்கம். தங்கள் ‘அமெரிக்க தேசி‘ வாசித்துக்கொண்டிருக்கும் நான் அடையாறு வாசி. நான் சும்மா டுபாக்கூர் டப்ஸாக் கதைகளையே கடந்த அறுபது ஆண்டுகளாகக் குப்பை கொட்டிவருகிறவன்; மக்கள் ஏற்பதால் . நான் எண்பதை எட்டிக்கொண்டிருந்தால் என்ன? சூத்திரனாய் இருந்தால் என்ன? என் ஸ்ரீ வைஷ்ணவ நேசத்தை , ஸ்ரீ ராமானுஜ பாசத்தை, யார் தூர நிற்கவைக்க முடியும்?

ஓங்கி உலகளக்கிற உங்கள் உத்தேச சுத்தி சித்தியை எட்டுவதைக் காணும்வரை சிந்தை அடக்கிச் சும்மா இருக்க மாட்டாமல் பக்கம் 215 ல் மாட்டிக்கொள்கிறேன். அனுபவங்களின் பிரபஞ்சப்பெருவெளியில் இப்படி சிறுசிறு வாக்கியங்களில் ஒரு மடக்கு, இடக்கு, ஒரு சொடக்கு ஒரு மிடுக்கு, வடக்கு தெற்கு என்று கலைவகைகளோடு அன்று உஷா சுப்பிரமணியம் சூட்சுமம் காட்டிய கா.சூ கலையிலும் உள்ள விதக்த வித்வத் வினோமயத்தை சுளீர் சுளீர் என்று மின்னல் வீச்சாய் வீசிக்காட்டிக்கொண்டு போனால் தமிழ் எப்படி ஸ்வாமி தாங்கும்? ஒற்றை வார்த்தையில் ஒரு சுத்தியடி முஸ்தீபு இடையிடையே.

வாசகர் வயசுக்கு வர இன்னும் ஐம்பதாண்டு செல்லும் ஸ்வாமி . நீங்கள் துரிதப்படுத்த முயல்கிறீர்கள். சுஜாதாவாவாது, ஜெயமோஹனாவது? ரோடு யாருடையதாக இருந்தால் என்ன? ஸ்பீடு முக்கியம். இந்த புல்லட் ரயில் ஸ்பீடில் அக்குள் முடியில் வீசும் பௌடர் வாசனை முதல் ஸ்ரீரங்கத்துச் சேட்டை வரை ஒரு டோடல் கவேரஜ். கூடவே கால்குலஸ், ஹாஜியா சோபியா , பசைலிகா,குடியாத்தத்திற்கு பிராட்கேஜ்ல் போனது, என கண்டதையெல்லாம் விண்டுவிடும் கரிசனத்தோடு (குடியாத்தத்திற்குஅருகிலுள்ள உத்தர ரங்கநாதஸ்வாமி உறையும் பள்ளிகொண்டாவில் எனக்கு ஏழு வருஷம் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியவேலை-ஒரு.சு.பு.குறிப்பு) கறி மாட்டச் சாப்டுண்டு கண்ணாடி ரூமுக்குள்ளே கருப்பியோடக்கட்டிப்பியோ, சேப்பியோடச் சேந்துப்பியோ என்ற ஆசிர்வாதங்களுக்குத் தப்பிப்பிழைத்து ஒழுங்காய் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் கெடாமல் தப்பிவந்த புருஷ லக்ஷணமாய் பேராசிரியப் பெருந்தகையாய் விளங்கும் உங்கள் ஏழுகுதிரை பூட்டிய சூரிய சாரத்தியத்தின் சமர்த்தை, இடையிடையே சந்துபொந்துபிளவுகளை, பிளவிடை முளைக்கமுயலும் விருட்சங்களை, அவற்றின் மினியேச்சர்களை கண்ணோட்டம் விட்டுச்செல்லும் பார்வை வீச்சை, மிகவும் ரசித்து, வியந்து அடிக்கடி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார், முக்கூர் லக்ஷ்மிநரசிம்ஹஆச்சார்யார் என்று மனசில் பிளாஷ் வந்து போவதை உதறி பனிரெண்டு ஆழ்வார்களுக்கும் பரமார்த்தமாயிருக்கிற ஸ்ரீமந்நாராயணனிடம் உங்களை ரக்ஷிக்கவேண்டும் ஓம் நமோ நாராயணா என்று பிரார்த்திக்கத்தோன்றுகிறது. தங்கள் தத்துவார்த்தப்போகிக்கிலிருந்து சற்றே விலகி. சரணம் என்பது ஞானத்தின் உச்சம் என்று சொல்லிக்கொள்ளவும் தோன்றுகிறது. அதை எய்தியபிறகு எதுவுமில்லை எச்சம். மோக்ஷமே கூட இல்லை.ப்ராஸம் இல்லை; சத்யம். தோன்றும்போது தோன்றட்டும். தோன்றாமல் போனால் போகட்டும். உச்சம் சர்வ மௌனம்.

மீண்டும் ஓம் நமோ நாராயணாய.

நல்வாழ்த்துக்களுடன்
வையவன்