தமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்

Standard

அமெரிக்க தேசி நாவலை ஆய்வறிக்கை வழங்கி அறிமுகம் செய்த தமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியை ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். ஆய்வறிக்கை வாசித்த திருமதி உஷா சுப்பிரமணியன் நானூறு சிறுகதைகள் எழுதியுள்ளார். பல்கலைத் திறனாளியாகப் பல விருதுகள் பெற்றுள்ளார். ஆய்வு விமர்சனம் பாராட்டு என்று விரிவாக எழுதிக் கொண்டுவந்து வாசித்தார். நேரத்திற்குள் அனைத்தையும் இல்லையென்றாலும் அநேகத்தைச் சொல்லிவிட்டார் என்றே நினைக்கிறேன். புத்தகத்தை நிறைய பாராட்டினார். ஆசிரியருக்கு நிறைய தெரிந்திருப்பதால் அனைத்தையும் சொல்லிவிட நினைத்திருக்கிறார் அதுவே குறை என்றார். இது நாவலா… சம்பவங்களின் கோர்வையா டைரி குறிப்பு எனலாம் ஆனால் பிரமிக்க வைக்கும் எழுத்து… இப்படி சில கருத்துக்களையும் முன்வைத்தார். அவரது அனைத்து கருத்துகளுக்கும் கேள்விகளுக்கும் எனக்களிக்கப்பட்ட (பத்து நிமிட) நேரத்திற்குள் என்னால் விரிவாக பதிலளிக்க முடியவில்லை. ஓரிரண்டிற்கு இங்கே மேலதிக விளக்கமளித்து வைக்கிறேன். எதற்கு என்று தெரியவில்லை; Have blog, will write… ரீதியில் எனது திருப்திக்கு என்று வைத்துக்கொள்வோம்.

*

வழக்கமாக வரும் கேள்வி இந்த நாவல் உங்கள் சுய சரிதையா. திருமதி உஷாவும் முன்வைத்தார். நாம் இல்லை என்று மறுக்க மறுக்க அது ஆமாம் ஆமாம் அதுமட்டுமேதான் என்றே கேட்பவரின் காதுகளில் ஒலிக்கும். சைபிரியாவில் எத்தனை குளிர் என்றால் வாட்டர் என்று டைப் அடித்தால் ஐஸ் என்றுதான் திரையில் விழுமாம்.

உண்மையில் இந்த நாவலில் வழங்கப்பட்டிருக்கும் ஶ்ரீரங்கம் பகுதிகள்கூட என்னுடைய பள்ளிப்பருவ வாழ்க்கை கிடையாது. பள்ளி நண்பர்களுக்குத் தெரியும். நான் அரங்கத்தின் பிரசித்தமான வீதிகளில் வாழ்ந்தவன் இல்லை. காவிரிக்கரையோரம் ஒதுங்கியே வசித்தவன். நாவலின் நாயகன் போல குறும்பானவனோ துடுக்கானவனோ தன்னம்பிக்கையாளனோ காஸனோவாவோ இல்லை. அவை அனைத்துமே என் மனப்புருடனின் குணங்கள். நாவலின் அமெரிக்க பல்கலைக்கழகப் பகுதிகளும் சம்பவங்களும் இவ்வாறே. அங்குள்ள நண்பர்கள் தமிழில் வாசிக்க முடிந்தால் அறிவார்கள் நாவலின் சம்பவங்கள் நேரடியாக என்னுடைய அமெரிக்க வாழ்க்கை இல்லை என்பதை. பலருடைய அனுபவவெளியில் தோய்ந்து செய்த மாயக்கலவை.

இப்படிச் சொன்னதும் இரண்டு வருடங்கள் முன்னால் அவர் உழைத்த துறையில் கரைகண்டவர் (இது உண்மையே) மெத்த படித்தவர் மேதாவிலாசி என எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் என்னிடம் ‘அப்டின்னா இங்க ஒங்காந்தே அடிச்சுவுட்டதுன்னு சொல்லுங்க…’ என்றார். என்னே இலக்கிய வாசிப்பு முதிர்ச்சி. ஒன்று சுயசரிதை வரலாற்று அல்லது டைரி குறிப்பு அல்லது பார்த்ததை அப்படியே எழுதிவைக்கும் நிருபர் வேலையாக இருக்கவேண்டும் இல்லை அந்நாட்டிற்கே போகாமல் இங்கிருந்தே அடித்துவிட்டதாக இருக்க வேண்டுமாம். இவ்விரண்டிற்கும் வேறான புனைவுவெளி எனும் நிஜத்திற்கு அருகிலேயே இயங்கும் கற்பனைப் படைப்பூக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் (புனைவெழுது)கலை என்பதையே புரிந்துகொள்ளாதவர். இவர்கள் புனைவெழுத்தின் விமர்சகர்களாகத் தங்களைக் கருதிக்கொள்வதில் பிரச்சனையில்லை அக்கருத்துக்களை புனைவாசிரியர் கவனித்து கருத்தில் கொள்ள வேண்டும் என்று இவர்கள் கருதுவதே வேடிக்கை. நல்லவேளை திருமதி உஷா சுப்பிரமணியன் இவ்வாறான சங்கடங்களுக்கு என்னை ஆட்படுத்தவில்லை. இலக்கியம் அறிந்தவராகவே தன் கருத்துக்களை முன்வைத்தார்.

புனைவின் நிகழ்வுகள் நீட்சிகள் வாழ்க்கையின் அனுபவங்களில் தொடங்கப்பட்டுள்ளன அல்லது முடிக்கப்பட்டுள்ளன அல்லது பிரதிபலிக்கப்பட்டுள்ளன. கலையாக்கத்தில் கடத்தப்பட வேண்டிய உணர்வுகளை முன்வைத்து இவை ஆசிரியனால் விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டு கையாளப்படுகின்றன. இந்த அளவிற்கே நாவல்கள் ஆசிரியர்களுடைய வாழ்க்கை சுய சரிதை என்றாகும். மறுபக்கத்தில் முழுவதும் கற்பனையான கதை என்று ஒன்றுமில்லை இருந்தாலும் சுவைக்காது மனிதர்களுக்குப் பயன்படாது. ஒன்றுதான் சொல்லமுடியும். நான் அமெரிக்கா சென்றிருக்கவில்லை என்றால் இந்நாவலை எழுதியிருக்க முடியாது. அதற்கு மேல் புனைவையும் நிஜத்தையும் குழப்பிக்கொள்வது சிலருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு என்பதை ஒருவராலும் தடுக்க முடியாது.

ஆகவே திருமதி உஷா சுப்ரமணியன் கேட்ட இது சுயசரிதையா எனும் கேள்விக்கான எனது பதில்: இல்லை; சுயசரித்திரத்தையே புனைவாக வழங்குமளவு நான் அவ்வளவு திறனற்ற எழுத்தாளன் இல்லை. இன்னும் நான்கைந்து நாவல்கள் எழுதிய பிறகு வேண்டுமானால் நம்புங்கள்.

*

1dcc42c2-50c2-44ae-a75c-3eee4d6f6c24

இந்நாவல் அமெரிக்கா பற்றிய என்னுடைய மெமாயரா, நாட்குறிப்புகளா? கேட்டுவிட்டு டைரி ஆப் ஆனி பிராங்கை மேற்கோள் காட்டினார் திருமதி உஷா. டைரி ஆப் யெ நோபடி-யை விட்டுவிட்டார். வழக்கமாக நடப்பதுதான். எனது மெமாயரா? நிச்சயம் இல்லை. அப்படிச் செய்ய வேண்டுகையில் கட்டுரைகளாய் எழுதிவைத்துவிடுவேன். ஶ்ரீரங்கம் பற்றி அவ்வாறு இந்நாவலைத் தொடங்குவதற்கு முன்னரே எழுதியுள்ளேன். ஶ்ரீரங்கம் களை. எனது எழுத்தின் போதாமைகளையெல்லாம் பொறுத்துக்கொண்டு சொல்வனம் இணைய இதழில் கூட வெளியிட்டார்கள். இவ்வகைக் கட்டுரைகளிலேயே நிஜத்தை எழுத்தாளனாய் சுவையாய் நான் எழுத முயன்றது. இக்கட்டுரை புனைவல்ல. நேரில் கண்டதை அப்படியே எனது அறிவில் இருக்கும் விஷயங்களைச் சேர்த்து அவதானிப்புகளுடன் எனக்கு வாய்க்கும் எழுதுகலையின் சுவைகூட்டி வழங்கியது. அமெரிக்க தேசி நாவலில் வரும் அமெரிக்காவும் ஶ்ரீரங்கமும் இவ்வாறானவை இல்லை. சம்பவங்களும் அவ்வாறே. என் கற்பனை தீண்டிய நிஜங்கள். இப்புனைவு மெமாயர் இல்லை. அமெரிக்க வாழ் இந்தியர்கள் வரலாறு இல்லை. அமெரிக்கர்களின் சமூகவியல் இல்லை. ஐந்து நாடுகளில் ஐம்பது நாள் சுற்றுப்பயணம் என்கிற பயணக் குறிப்புகள் இல்லை. உங்கள் பயணத்தில் இந்நாவலில் வரும் ஒரு சம்பவமுமே உங்களுக்கு நிகழாமலும் போகலாம். சில பல சமூக அவதானிப்புகளும் தகவல்களும் விரவியிருக்கலாம். ஆனால் இவை நிஜங்களின் கற்பனை வடிகட்டல். ஏதோ சில பொது (யுனிவர்சல்) உணர்வுகளை வாசிப்பவரிடம் எழுப்ப முயல்வதற்கான என் பொய்’மை’யில் தோய்ந்த வாய்மை.

அந்தக்கால இங்கிலாந்தைப் பற்றித் தெரிந்துகொள்ள சார்ல்ஸ் டிக்கன்சையும் அந்தக்கால பிரான்சை தெரிந்துகொள்ள விக்டர் ஹியூகோவையும் வாசிப்பவர்களை தேர்ந்த இலக்கிய வாசிப்பாளர்கள் என்றே கருத இயலாது. நாடுகளைப் புத்தகங்கள் வாயிலாகத் தெரிந்துகொள்ள வல்லுநர்கள் எழுதிவைக்கும் வரலாற்று பூகோள ஆக்கங்களை வாசிக்கலாம். நாட்டு அல்லது இனத்து அல்லது ஒரு பகுதியின் மக்களைத் தொகுத்து தெரிந்துகொள்ளத் துறை வல்லுனர்கள் எழுதிவைத்திருக்கும் எத்னோகிராபி சமூகவியல் புத்தகங்கள் இப்படி. புனைவாசிரியன் சமூகவியளாலன் இல்லை (அவ்வாறு தங்களைத் தவறாகக் கருதிக்கொள்ளும் புனைவெழுத்தாளர்கள் உண்டு; இன்னும் டேஞ்சராகத் தங்களைப் புனைவாசிரியனாகக் கருதிக்கொள்ளும் சமூகவியலாளர்களும் உண்டு). புனைவாசிரியன் தத்துவ ஞானி இல்லை (தொல்ஸ்தோயை இவ்வாறு கருதினால் அவரது ஆக்கங்கள் நம்மைக் குழப்பியே விடும்). சைகாலஜிஸ்டும் இல்லை. சிங்கர் இதை மிகச்சுருக்கமாக ஆனால் மிகச் சரியாக தனது புத்தக முன்னுரையில் குறிப்பிட்டிருப்பார். நபகாவ் இதைப்பற்றி விரிவாக வகுப்பெடுத்திருக்கிறார், புத்தக வடிவிலும் உள்ளது. நமக்குதான் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமாகவே வகுப்பெடுப்பவர்களை அறவே பிடிக்காதே. ஜெயமோகன் விரிவாகத் தமிழில் எழுதிவைத்திருக்கிறார். மாமல்லன் சுருக்கமாக தனது வலைதளத்தில் எழுதிவைத்திருக்கிறார். இன்னும் எத்தனை எழுத்தாளர்கள் தங்கள் குரல்களில் அழுதிருக்கிறார்களோ… எழுத்தாளன் கட்டுரைகள் எழுதலாம். வரலாற்றுப் புத்தகமோ விஞ்ஞானப் புத்தகமோ எழுதலாம். ஆனால் புனைவாசிரியனாய்ச் செயல்படுகையில் அவன் கதைசொல்லியே. கதை எனும் சொல்லே சொல்வது நிஜமல்ல என்பதைக் குறிப்பிட உருவாக்கப்பட்டதுதானே. புனைவு எனும் கலை வழியே எழுத்தாளன் உணர்வுகளையே தன்னிடமிருந்து ஆக்கம் வழியாக வாசகனுக்குக் கடத்த முயல்கிறான். அதனால் ஒருவகையில் அப்புனைவுலகில் நிகழும் புறவயமான காட்சிகளுமே அகவயமான எழுச்சிகள் கொண்டவை. அகம் தீண்டிய புறமே புனைவின் இலக்கணம். கன்னி நாவலில் (கவிஞர் பிரான்சிஸ் கிருபா எழுதி தமிழினி வெளியிட்டது) முதல் சில பக்கங்களில் வரும் மழைக் காட்சியை வாசித்துப் பாருங்கள்; அகம் தீண்டிய புறம்.

திருமதி உஷா சுப்பிரமணியன் இந்நாவல் சம்பவங்களின் கோர்வை ஒரு டைரி குறிப்பு போல உள்ளதே என்றால் அதற்கான விளக்கம்:

நாவல் ஒரு இளம் வயதினன் அனைத்து விஷயங்களிலும் பருமவமெய்துவதைப் பற்றியது. கமிங் ஆப் ஏஜ் வகை நாவல். நாவலின் சம்பவங்கள் இதை கருத்தில்கொண்டே நாயகனின் பார்வைப் புலத்தில் இருந்தே விவரித்து வைக்கப்பட்டுள்ளன (இதனாலேயே பல பாத்திரங்களின் எண்ணங்களை எழுத இயலாது – பர்ஸ்ட் பர்சன் நரடிவ்). உதாரணமாக இரண்டு முறை கணவர்களை விட்டு மனைவியர் பிரிவார்கள். முதல் முறை நடக்கையில் அப்போதுதான் அமெரிக்கா வந்திருக்கும் தேசிகன் விசனப்படுவான் திகைப்பான் தன் பண்பாட்டில் அரிதாக நிகழும் விஷயம் என்பதால் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறுவான். நாவலின் இறுதியில் மீண்டும் அவனுக்கு மிகவும் பிடித்தமானவர்களே இவ்வாறு செய்வதாக வருகையில் முன்பு சேர்ந்திருந்தார்கள் இன்று தனித்தனியே இருந்தாலும் இருவரையும் எனக்குப் பிடிக்கும்தானே என்றாகியிருப்பான். இவ்வாறே பல சம்பவங்கள் மீண்டும் வேறு சட்டை பேண்டில் வந்து போகும். காதலிகள் கைக்கூடாமல் விலக காமம் மட்டும் மீண்டும் மீண்டும் பல உருவங்களில் வந்து மேல விழ… ஒரு குழந்தையின் தூய அன்பே (இன்னொசெண்ட் லவ்) நாயகனைக் காப்பாற்றுகிறது. குழந்தையும் தெய்வமும் குணத்தால்… நாயகன் அகமலர்கிறான் என்பதை விளக்குவதற்கே இப்புனைவுச்சம்பவங்கள். டைரி குறிப்புகள் இல்லை.

இன்னொரு வகை விளக்கம். இதைக் கானொளியில் உள்ள என் பேச்சின் பகுதிகளிலும் கேட்கலாம். நாவல் என்பது ஒரு தொடக்கம் ஒரு முடிவு ஒரு மையம் ஒரு முடிச்சு பிறகு அது களையப்படுதல்… இப்படி இருக்க வேண்டும் என்று வகுத்துக்கொண்டதும் நாம்தான். ஒற்றைக் கதை ஒரு கற்பனைச் சரடு என்றெல்லாம் நிர்ணயித்துக்கொள்ள முடியாத ஜப்பானிய ‘டேல் ஆப் ஜென்ஜி’ சீனத்து ‘தி ப்ளம் இன் தி கோல்டன் வாஸ்’ இவையெல்லாம் இன்று நாவல் என்றே வகுக்கப்பட்டுள்ளவை. நாவல் வாசகனுக்கான அனுபவவெளி. புனைவெழுத்து வெளியினுள் வா வாசி எழும் உணர்வுகளை அனுபவி இளைப்பாறு சங்கடப்படு செயல்படு சிந்தனையோட்டு… ஆசிரியன் வழங்கிய அனுபவங்களோ அவை எழுப்பும் உணர்வுகளோ தாளவில்லை ஒவ்வவில்லை பிடிக்கவில்லை என்றால் பாதியிலும் தூக்கிப்போடு. படுத்துறங்கு. பரிதவி. மனத்தைப் பத்தியம் போட்டுப் பயிற்சி செய். இன்று போய் பிறகு நாளை வா. எதிர்கொள். ஏனிப்படி என அஞ்சாதே அயராதே அசராதே ஆயசப்படாதே. ஏற்றுகொள் ஏற்றம்கொள். எண்ணும் எழுத்துமே கண்ணெனத் தக்கவை. ஏனைய கதையலங்காரங்கள் களையப்படவேண்டியவையே. கருத்தில் கொள்ளாதே.

டெவில் இஸ் இன் தி டீடெய்ல்ஸ் என்பார்கள். தகவல்களையும் தளை மீறிய எழுத்தையுமே உற்று நோக்கிக்கொண்டிருந்தால் காவியங்களிலும் சாத்தான் மட்டுமே தென்பட்டுக்கொண்டிருக்கும். நாவல் எனும் புனைகளம் வானத்தில் திருவிக்ரம கால் வரையும் தூரிகை வீச்சு. ஜெட் விமானப் புகை காட்டும் வான்வரைவு (ஸ்கை ரைட்டிங்). நாவல் புறத்திலிட்ட வானளாவிய வளைகோடே வாசகன் அகத்தில் பதியவேண்டிய மனக்கீறல். அதன் நிறங்களோ வர்ணக்குழைவுகளின் விகிதங்களோ வளைகோட்டின் அத்தியாய அங்கங்களோ முக்கியமில்லை. அனைத்துமே புகையாகி வாசக மனவெளியில் வீசும் காற்றில் சிலநாட்களுக்குள் கரைந்துபோயிருக்கும். புனைவை அதனருகில் இருந்து மட்டுமே கண்டு தோய்ந்து வாசித்து ரசித்து மறவாமல் விலகிக்கொள். பிறகான வாழ்க்கையில் அடிமனத்தில் தேங்கியிருக்கும் அதன் கசண்டே அந்நாவல் உனக்கு வழங்கிய உலகப்புரிதல். பண்பாடு என்பதே கற்றவை முழுவதும் மறந்தும் மனத்தில் மிஞ்சுவதுதானே.

*

cdeb3af7-5a5c-4b91-9e0e-7d143f1fa17a

அடுத்ததாக, ஒரு சமூகப் பிரிவினரின் பேச்சுவழக்குகளையே கையாள்வதால் தமிழ்நாட்டில் பலருக்கு இந்நாவல் சென்றடையாது என்றார் திருமதி உஷா சுப்பிரமணியன். இனம் என்றெல்லாம் சொற்பிரயோகங்கள். வைணவர்களைச் சொல்கிறார் ஆனால் அதை நேரடியாகக் குறிப்பிடுவதில் ஏன் அவருக்கு அவ்வளவு தங்கும் தயக்கமும் என்று புரியவில்லை. திருமதி உஷா முன்வைத்த இதே கருத்தை நண்பர் ஒருவர் வேறுவிதமாக வட்டாரச் சொற்தொகுப்பு ‘கிளாசரி’ ஒன்றையும் இந்நாவலின் ஒட்டாய் வழங்கியிருக்கலாமே என்றார்.

என் பதில்: திருநெல்வேலி தமிழ் தூத்துக்குடி தமிழ் கன்னியாகுமரி நாகர்கோயில் தமிழ் என்றெல்லாம் எழுதிவைத்தால் அது தமிழ் இலக்கியம் அதுவே காவிரிக்கரையோர வட்டார மொழியில் எழுதினால் அதை ஏதோ குற்ற உணர்வோடு வழங்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு புளியமரத்தின் கதையை அது எவ்வாறு கதை சொல்கிறதோ அப்படியேதான் வாசித்து மெச்சுகிறேன். கோபல்ல கிராமத்தை அதன் சொல்லாட்சிகளின் அழகு குலையாமலேயே ரசிக்கிறேன். வைணவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான் வைணவர்களை உரித்துவைக்காமல் வைக்குங்கள் பற்றியா எழுதமுடியும்? உள்ளிருந்து எழுதுபவனே அக்குலத்தின் குறை நிறைகளைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டிக் களைய வழிசெய்யமுடியும். இதற்குத் தயங்கினால் மற்றவர்கள் செய்வார்கள். ஏத்துமாத்தாகவும் இருக்கலாம். பொறுத்துக்கொள்ள வேண்டிவரும். தவிர எனக்கு அம்மாமிகள் பற்றியே எழுதவரும். அதை வாசிக்க வேண்டுமானால் நான் வழங்கும் வகையிலே வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கள்ளர், நாடார், முதலியார், நாயுடு, செட்டியார் தொடங்கி ‘நீயாநானா’ ஆண்டனி வரை எனது வாசகர்கள் யாரும் இதில் தயக்கம் காட்டியதாக என்னிடம் சொன்னதில்லை. குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் என்கிறவரையே வந்துள்ளோம். குலமே பாவம் என்று வரட்டும், பிறகு பார்ப்போம் புனைவையே பண்பாடு களைந்த மொண்ணையான தமிழில் எனக்கு எழுத வருகிறதா என்று. ஆனால் அன்றும் ஆங்கிலத்தில் எழுத மாட்டேன். எஸ்பரண்டொவில் புனைவேன்.

மேற்பத்தியின் இறுதி வாக்கியம் அடுத்து வரும் விளக்கத்தின் பீடிகை.

*

ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் இந்நாவல் பலர் வாசித்து வரவேற்பைப் பெற்று விருதுகளையும் பெற்றிருக்குமே என்கிற ஐயத்திற்கான பதில்: எனக்கு ஆங்கிலம் தமிழளவு எழுத வராது (தமிழே உபாத்தியார் குட்டுகளின் பிச்சை; அது வேறு விஷயம்). தவிரவும் மொழியை மாற்றினால் உரையாடல்களில் தென்படும் கிட்டத்தட்ட எழுபது எண்பது சதவிகிதப் பண்பாட்டுக் கூறுகளும் பணால். தவிரவும் திருமதி உஷாவே வேறு இடத்தில் தன் உரையில் இந்நாவலின் கவிதை நடையை மேற்கோள்கள் காட்டிப் புகழ்ந்தேற்றினார். நான் தமிழில் இந்நாவலை எழுதுகையில் எனக்கு வைத்துக் கொண்டே ஒரே சவால் மொழிமாற்றாளர்கள் முனைந்தாலும் இதை ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்துவிடமுடியக்கூடாது என்பதே.

*

கடினமாக நீண்ட வரிகளாய் சில இடங்களில் எழுதுவது வாசிப்பதற்குச் சிரமமாக இருப்பதாகச் சொன்னார். அதே போல, ஏற்கெனவே குறிப்பிட்டபடி மிக அதிகமான விஷயங்களைச் சொல்லிச் செல்வதால் வாசகர்களுக்குப் புரியாது அதனால் பலர் இந்நாவலை வாசிக்க மாட்டார்கள் என்றார் திருமதி உஷா.

வாசகனின் போதாமையை எழுத்தாளனின் குறையாகச் சொல்ல தமிழ் விமர்சகர்களால் மட்டுமே இயலும்.

மக்கு சமுதாயத்திற்குதான் விமர்சகர்கள் தேவை என்றார் தொல்ஸ்தோய்.

நான் என் அறிவையும் என் வாசகர்களையும் நம்புகிறவன். அவர்கள் வருங்காலத்தில் மட்டுமே இருப்பார்கள் என்றாலும்.

*

படுத்துக் கொண்டு படித்தால் எங்கே கனமான நாவல் மேலே விழுந்து அடிபட்டுவிடுமோ என்று பயந்து அமர்ந்தே வாசித்து ஆய்வறிக்கை வழங்கிய என்னின் வயதில் மூத்த எழுத்தாளர் திருமதி உஷா சுப்பிரமணியன் அவர்களுக்கு என் வணக்கங்கள். அடுத்த நாவலை கைக்கடக்கமாகச் சிறிதாகவே எழுதியுள்ளேன். மேலுள்ள என் விளக்கங்களில் மரியாதை குறைவிருப்பின் மன்னியுங்கள்.