தமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்

Standard

நான்கு வருடங்களாக மாதம் ஒருமுறை நடத்தப்படும் தமிழ் புத்தக நண்பர்கள் அமைப்பின் 51ஆவது நிகழ்ச்சி நேற்று (27/11/2018) மைலாப்பூர் திதிகே சாலையில் உள்ள டேக் (TAG) மைய அரங்கில் நடந்தது. எனது நாவல் அமெரிக்க தேசி பற்றி திருமதி உஷா சுப்பிரமணியன் விமர்சக ஆய்வை முன்வைத்துப் பேசினார். பிறகு என் ஏற்புரை, கேள்வி-பதில் நேரம். அதன் பகுதிகளை ஐந்து மதிபேசி கானொளிக் கோப்புகளாக இங்கே கொடுத்துள்ளேன் (அனுப்பிவைத்த வாசக அன்பருக்கு நன்றி). மொத்தம் சுமார் 15 நிமிடங்கள்.

பேச்சை மீண்டும் கவனிக்கையில், விசாலம் என்பதை விலாசம் என்றிருக்கிறேன். பேச்சிலேயே எழுத்துப்பிழைகள் எழுத்தாளர் ஆவதற்கான மற்றொரு தகுதியோ… :-)

அனைத்து கோப்புகளின் தொகுப்பு ஆல்பம் கீழே உள்ள சுட்டியின் பக்கத்தில் உள்ளது.

https://vimeo.com/album/5585745

*

எனக்கு வந்த மின்னஞ்சலில் ஒரு அன்பர் நிகழ்ச்சியை சற்றே தன் சிந்தனைகளையும் கலக்கித் தொகுத்திருந்தார். அதை இங்கு வழங்கியுள்ளேன். அடுத்த பதிவில் எனது ‘பத்து நிமிட’ ஏற்புரையில் விட்டுப்போனவற்றை எழுதிவைக்கிறேன்.

சரக்கு இருப்பவரிடம் செருக்கு இருக்கும். நேற்று வரை அப்படி இருந்தவர் ஜெயகாந்தன். இன்று புதிதாக புறப்பட்டிருக்கீறார் அருண் நரசிம்மன். இவர் எழுதிய முதல் நாவல் ‘ அமெரிக்க தேசி ‘ சுய சரிதை இல்லை என்று இவர் சொன்னாலும் அதன் வெளிப்பாடே என்று உஷா சுப்பிரமணியனின் ஆய்விலிருந்து தெரிந்தது. முக்கியமாக முழுதும் கற்பனையாக ஒரு நாவலை எழுத முடியாது என்று நினைக்கீறேன். எங்கேயாவது சுயம் தன் மூக்கை நீட்டும்.

பல பக்கங்கள் எழுதி வந்து, இடைச்செருகலாக எக்ஸ்டெம்போர் சங்கதிகளை சேர்த்து பேசினார் கொஞ்சம் தள்ளிய வயதில் இருந்த, தெளிவான உச்சரிப்பு கொண்ட உஷா.

ஒரு நாவலை, முக்கியமாக இது நாவலா என்கிற ஐயப்பாட்டோடு படித்தது இந்த நாவல் தான். சட்டென்று நூறு பக்கங்களைக் கடந்து போக முடியாத நாவல். 15ம் பக்கம் படிக்கும்போது எட்டாம் பக்கத்தில் சொன்ன விசயம் நினைவுக்கு வர அதை புரட்டும் கைகள். இப்படியாக பல இடங்களில் தோன்றும். அதோடு இது கனமான புத்தகம். வடிவில் மட்டுமல்ல உள்ளிருப்பிலும்.. சில இடங்களில் கதை, சிலதில் கட்டுரை, இன்னும் சில இடங்களில் கவிதை என்று இருக்கீறது அருணின் நடை. இவர் சுஜாதாவுக்கு மேல் என்கிறார் ஒரு வாசகர். அப்படியும் சில இடங்களில் தோன்றுகீறது. முடிச்சே போட்டு பார்க்க முடியாத பல விசயங்களை வர்ணனைகள் ஆக எழுதியிருப்பது அசாத்தியமாக இருக்கின்றது. அதோடு இசை நன்கு அறிந்தவராக இருக்கீறார் அருண். அதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. இதை ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் இன்னும் புகழ் பெற்றிருக்கும். பல விருதுகள் கிடைத்திருக்கும். ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மொழியில் சம்பாஷணைகள் இருக்கின்றன. அதை வெகு சன வாசகர் புரிந்து கொள்வது சிரமம்.

நேரம் தாமதமாகி உரை நீண்டு, சீட்டு வந்து சேரும் வரை பேசிய உஷா அடுத்த ஆய்வில் ‘உஷார்’ ஆக வேண்டுகோள்.

கிடைத்த பத்து நிமிடங்களில் அசால்டாக உரையை நிகழ்த்தினார் அருண் நரசிம்மன். ஆங்கிலத்தில் எழுத மாட்டேன் என்று உறுதியோடும், இன்னும் மூன்று பாகங்கள் வரும் எனும் எச்சரிக்கையோடும் அவர் உரை நிகழ்ந்தது.

“எல்லாரும் பயணம் போறாங்க.. ஏன் போறாங்க? போயிட்டு வந்தவுடனே அவங்க வீடே புதுசா தெரியும். அதே மாதிரி அமெரிக்கா போயிட்டு வந்தா இந்தியாவே புதுசா தெரியும். தமிழ்நாடே அற்புத பிரதேசமா தோணும்”

“என் எழுத்தில் சுஜாதா பாதிப்பு இருக்கும். ஏன்னா நான் சுஜாதா ரசிகன். அவரை மிஞ்சிட்டேன்னு சொல்ல முடியாது. ஏன்னா அவரோட சாக்லேட் எழுத்து எனக்கு வராது.”

“க்ரைம் & பனிஷ்மெண்ட் நாவல்.. இதை ஏன் எழுதனும்? ரெண்டு கொலைகளை பண்ணவன் கதையை எதுக்கு எழுதணும். அதை ஏன் மக்கள் படிக்கணும்? ஒரு தியாகியை பத்தி எழுதுங்க.. அவர் பிரபலமா இல்லாமல் இருக்கலாம்.. குடத்திலிட்ட விளக்கா இருக்கலாம்.. ஆனாலும் அவரைப் பத்திதான் எழுதணும்”

“எழுத்துக்கலை தெரியாதவன் கூட நல்ல நாவல் எழுதலாம். ஆனா நான் நல்ல ரைட்டர். மகத்தான் ரைட்டர்னு சொல்ல மாட்டேன். அது பின்னால வரும். இப்ப நல்ல ரைட்டர். ஆனால் நல்ல ரைட்டர் எழுதற எல்லா நாவல்களும் நல்ல நாவல்கள் இல்லை. அதே விதிதான் எனக்கும்.”

“ஏன் தமிழ்ல எழுதக்கூடாது. நமக்கு பின்னால எத்தனையோ இருக்கு. ஒவ்வொரு திருக்குறளையும் பிரிச்சு படிச்சு பார்க்கறதுக்கே ஆயுசு முடிஞ்சிரும். சின்ன செடி மாதிரி தெரியும். ஆனா தோண்டினா பாதாளம் வரைக்கு வேர் போகும். அது மாதிரிதான் தமிழ். நான் தமிழ்ல தான் எழுதுவேன்.”

“? தமிழ் வளர என்ன செய்ய வேண்டும்?

! தமிழ் படிங்க அது போதும்”

நச் பதில்களுடன் அசராமல் பதில் சொல்கீறார் அருண். கூடவே நையாண்டியும்…

“கிளாஸ் எடுக்கற புத்தி அதனால் நிறைய பேசத் தோணும்.. கேட்கறவங்களுக்கு கொஞ்சம் கமலஹாசன் பேசறது மாதிரி தெரியும்.. புரிஞ்சா மாதிரியும் இருக்கும்.. புரியாத மாதிரியும் இருக்கும். வீட்டுக்கு போய் கேட்டுப் பாத்தா சுத்தமா புரியாது. இப்படித்தான் இருக்கும் என் பேச்சு” (நையாண்டிக்கு ஒரு சாம்பிள்)

“மானசீககுருங்கற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ஒரு சொல் சொல்ல முடியுமா? ரெண்டு மூணு வார்த்தையில சொல்லலாம். ஆனால் ஒரே சொல்லா? முடியாது அதான் தமிழின் பெருமை. அப்புறம் ஏன் ஆங்கிலத்தில் நான் எழுத வேண்டும்? மாட்டேன்!”

அருண் நரசிம்மன் இந்த பதிவை மின்னஞ்சலில் பார்த்த பின் கெட்டுப் போகலாம். அவர் பார்க்காமலிருக்க ஸ்ரீரங்கன் அருளட்டும்!

*

சரியான நேரத்திற்குத் தொடங்கி அழைப்பில் குறிப்பிட்டிருந்த சரியான நேரத்திற்கு முடிக்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த வாசக அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.