42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா

Standard

“நாற்பத்தியிரண்டு,” என்றது ஆழ்ந்த சிந்தை; முடிவில்லா கம்பீரத்துடனும் பேரமைதியுடனும். (டக்லஸ் ஆடம்ஸ்-ஸின் “ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைடு டு தி காலக்ஸி, பக்கம் 120)

டூக் ‘உலகின் முதல் மனிதன்’ ஆடம்-மின் வாசகர்களை 1986 முதல் நச்சரிக்கும் கேள்விக்கான பதிலை, அதாவது அவரது பதிலுக்கான சரியான கேள்வியை, இக்கட்டுரையில் பெறப்போகிறோம். கொஞ்சம் அறிவியல். கொஞ்சம் புனைவு. நிறைய ஊகித்த கருத்தாக்கம். மொத்தத்தில், ஓரளவு எண்ணித் துணிந்த கருமமாக.

டக்ளஸ் ஆடம்சின் ‘ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைடு டு தி காலக்ஸி’ புத்தகத்தை இதுவரை வாசித்திராதவர்களுக்கு — அனுதாபங்களுடனும் — சிறு விளக்கத்துடனும் தொடங்குவோம்.

அப்புத்தகம் அளிக்கும் புனைவின் கிளைக்கதையாக ‘ஆழ்ந்த சிந்தை’ (Deep Thought) எனும் பிரபஞ்சத்தின் ஆகச்சிறந்த கணினியை ஏலியன் சமுதாயம் உருவாக்கும். பிரபஞ்சத்தின் காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பதற்காக. அக்கணினியும் வெகுநாள் செயல்பட்டு கண்டுபிடித்துவிடும். நிர்ணயித்த நாளன்று, அறிஞர்கள் கூடி ஆழ்ந்த சிந்தையிடம் என்னப்பா விடை என்றதும், அது, ’42’ என்று பதிலுரைக்கும். புரியாமல் விழிக்கும் அறிஞர்களிடம், இதுதான் பிரபஞ்சத்தின் காரணத்திற்கான விடை. இதற்கான சரியான வினாவை நீங்கள் கண்டடைந்தால், ‘பிரபஞ்சம் ஏன் இருக்கிறது, ஏன் இயங்குகிறது’ போன்ற அசாத்தியமான வினாக்களுக்கெல்லாம் விடைகள் தெளிந்துவிடும் என்று சொல்லி முடித்துவிடும்.

பிறகு பல நகைச்சுவையாக கேள்விகளை முன்வைத்து அவற்றில் எக்கேள்விக்குப் பதில் 42 ஆக இருந்தால் அசாத்தியமான சிந்தை உருபெருகிறது எனக் கதாபாத்திரங்கள் சோதிப்பதாக அப்புனைவு நகரும். உதாரணமாக, இலக்கிய நோபல் வென்ற பாப் டிலனின் (1960களின்) பிரபலமான பாடல் (இசைக்கவிதை?) ஒன்று ‘ஒரு மனிதன் எவ்வளவு முறை (நம் முன்னால்) நடந்து செல்ல வேண்டும் அவனை மனிதன் என்று ஏற்றுக்கொள்ள’ (‘How many times must a man walk down before you call him a Man’) என்று தொடங்கும். உலகின் பேச்சற்றப் பெரும்பான்மை மனிதர்களின் நிலையை சித்தரிக்கும் பாடல்வரி எனலாம். புரட்சி இயக்கங்கள் ஹிப்பி இயக்கங்கள் என்று சகட்டுமேனிக்கு இப்பாடலைச் சுவீகரித்துக்கொண்டுள்ளனர். ஆடம்சின் புத்தகத்தில், கிண்டலாய் ஒருவேளை 42 என்பதுதான் அப்பாடல் வரியின் அணித்தலான (rhetorical) கேள்விக்கான பதிலோ, அதனால் அப்பாடல் வரியே நாம் தேடிக்கொண்டிருக்கும் வினாவோ என்பர்.

ஆடம்சின் கதையில் ஏலிய அறிபெருமகனார் தொடர்ந்து யோசித்து பதிலை வழங்கிவிட்ட ‘ஆழ்ந்த சிந்தை’யை விட உயர்வான கணினியை வடிவமைப்பார்கள் அவ்விடைக்கான வினாவைக் கண்டுபிடிக்க. அக்கணினி… நம் உலகம். உயிரிக்கணினி. ஆர்கேனிக் கம்ப்யூட்டர். நாமெல்லாம் அக்கணினியின் அங்கங்கள். நமது வாழ்க்கை அதன் செயல்பாடுகள். அக்கேள்வியைக் கண்டடையவே உலகக்கணினியின் அங்கமாய் வாழ்ந்து மாள்கிறோம்.

இப்புத்தகம் வெளிவந்த பிறகு 1980களில் ‘கீக்குகள்’ என்றறியப்படும் ஞானப்பழங்களாலும் ‘ஸைஃபி’ அப்பாடக்கர் வாசகர்களாலும் ஆடம்சின் (42 எனும்) ‘விடை’ இணையத்திலும் அச்சு ஊடகங்களிலும் வளர்த்தெடுக்கப்பட்டுப் பிரபலமாகிப் பல ‘வினா’க் கட்டுரைகளை வழங்கியது. டக்ளஸ் ஆடம்ஸ் 2001இல் இறக்கும்வரை வினா (அதாவது, 42 எனும் விடைக்கான கேள்வி) என்று எதை ஊகித்துவைத்திருந்தார் என்பதை விளக்கவேயில்லை. இன்றும் இவ்வினா அறிபுனை ஆர்வலர்களுக்கு வசீகரமான மர்மம்.

உதாரணமாக சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கணித ஆர்வல விளக்கம்: ரெமன் ஸீடா தொடர்பின் மூன்றாவது மொமெண்ட் என்ன? என்பதே கேள்வியாம். விடை சரியாக 42. ரெமென் ஹைபாதெசிஸ் (Reimann Hypothesis) கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தக் கேள்வி எவ்வாறு உருவானது எனும் விளக்கத்தை Prime Numbers Get Hitched by Prof. Marcus du Sautoy (Seed Mag., Mar 2006) எனும் கட்டுரையில் வாசித்துக்கொள்ளலாம்.

1986இல் ஆடம்சின் இப்புத்தகத்தை வாசித்து உள்வாங்கியது முதல் நானும் 42 எனும் விடைக்கான வினா எது என்பதை எனக்குள் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

நாமெல்லாம் ஏன் வந்தோம் இருக்கிறோம் போகிறோம் என்பவற்றையெல்லாம் விளக்கிவிடும் 42 எனும் விடையின் ஆகச்சிறந்த வினா என்னவாக இருக்கலாம் என்று நானும் இக்கட்டுரையில் ஒரு கருத்தாக்கம் அளிக்கிறேன் சரியாக வருகிறதா என்று பாருங்களேன்.

புனைவின் கற்பனையே என்றாலும் நாமெல்லாம் டக்ளஸ் ஆடம்ஸ் உருவகித்த உலகக்கணினியின் அங்கங்கள். எனவே, இவ்வளவு நிலவியல் ஆண்டுகள் நம்மிடம் நிச்சயம் இக்கேள்வி முழுதாகவோ அல்லது பகுதிகளாகவோ இருந்துகொண்டிருக்க வேண்டும். தற்கால நம்மில் தொடங்கி டார்வின் கண்டறிந்த பரிணாம தத்துவத்தை காலத்தால் முன்நகர்த்தி வளர்த்தாமல் பின்னோக்கித் தேய்த்துக்கொண்டே சென்றால் நம் மூதாதையர்களின் பரிணாமக் கதை விரியும். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைக் காலத்தில் பின்னோக்கிச் சொல்லும் இக்கதையை ரிச்சர்ட் டாவ்கின்ஸ் ‘மூதாதையர்களின் கதை’ (The Ancestor’s Tale) என்கிற புத்தகத்தில் விவரித்துள்ளார். அவரும் ‘உலகக் கணினியின்’ அங்கம்தானே. போறாக்குறைக்கு டக்ளஸ் ஆடம்ஸ் அவர் நண்பரும் கூட.

மூதாதையர்களின் கதை. முடிவிலிருந்து தொடக்கத்திற்கு செல்லும் ‘மெமண்டோ’ திரைப்பட வடிவம் போல (உலகத்திரை மட்டுமே பார்ப்பவர் என்றால் கலையகக் குப்பை — art-house crap — ‘இர்ரிவர்ஸிபிள்’ திரைப்பட வடிவம் போல) காலத்தால் பின்னகர்வதாலும் ஏகப்பட்ட உயிர்-இனம்-மனம்-குணம் என்று தினம் பல நிகழ்கால கிளைகளில் தொடங்கி அனைத்துமே ஒரே ஆதி-உயிர் ஜனன-முடிவை நோக்கிச் செல்வதாலும் உயிரினங்களின் வாழ்க்கை வரலாறான இக்கதையே உலகின் ஆகச்சிறந்த ஆதி பின்நவீனத்துவ இலக்கியம் என்றறிக.

செத்த மரங்களினால் உருவான நாற்பது பக்கம் நோட்டுப்புத்தகத்தில் ‘குடும்ப-மரம்’ வளர்ப்பது மனித இனத்தின் ஒரு பொழுதுபோக்கு. இன்றும் மரங்களை ஏதோ வகையில் எரித்து இணையத்தை மின்னுயிரூட்டி முகநூலில் குடும்ப-மரம் செய்கிறோம். என் நேரடி கொள்ளு எள்ளு தாத்தாக்கள் எனப் பின்னகர்ந்து நீங்களும் அவ்வகையிலேயே செய்து உருவாகும் குடும்ப-மரத்தின் அடிவேரை ஒப்பிடுகையில் நம்மிருவரது முன்னோர்களும் கலியுகத்தில் எங்கோ ‘சந்தித்து’ க்கொள்வார்களில்லையா. இப்படி தமிழ்நாடு, அண்டைய பிரதேசங்கள் எனத் தொடங்கி மனிதகுலத்தைக் காலத்தால் பின்னோக்கி நீட்டிக்கொண்டே சென்றால் ஆசியா ஐரோப்பா எல்லாம் மீண்டும் மனிதனற்றப் பிரதேசங்களாகி ஆதாம்-ஏவாள் யிங்-யாங் சிவசக்தி என ஏதேதோ குறியீடுகளில் நினைவில் வைத்திருக்கும் நம் இன்றைய இனத்தின் முன்னோர்களான ஆப்பிரிக்கத் தாத்தா பாட்டி ஆதிமனிதர்களிடம் சென்றடைந்து ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனக் கைகுலுக்கிக்கொள்வோம் என்கிறது அறிவியல்.

மனிதன் எனும் உயிரினத்தைக் கடந்து மற்றவற்றையும் இக்கதையில் சேர்த்துக்கொள்ளலாம். இரண்டு உயிரினங்களின் நிகழ்காலத்தில் தொடங்கி காலத்தால் பின்னோக்கி நகர்ந்தால், ஏதோ ஒரு காலகட்டத்தில் அவர்களது பொதுவான மூதாதையர்களை அவை சந்திக்கும். மனிதன் என்று அறியப்படும் உயிரினம் ‘பிறந்த’ பின்னர் பிறப்பதற்கு முன்னால் எனும் காலகட்டங்களை ம.பி. ம.மு. என்று குறித்துக்கொண்டால் முந்தைய வரியில் குறிப்பிடப்பட்டுள்ள உயிரினப் பொது மூதாதையர் சந்திப்புகள் அநேகமாய் ம.மு. காலகட்டத்திலேயே நடைபெற்றுள்ளது. மனிதன் இனத்திலும் இன்றளவும் இளையவனே இளமையானவனே.

தற்காலத்தில் வாழும் எந்த இரண்டு உயிரினங்களை எடுத்துக்கொண்டு அவற்றின் முன்னோர்களுக்கு முன்னோர்கள் என்று காலத்தால் படிப்படியாகப் பின்னோக்கிச் சென்றால் ஏதோ ஒரு முந்தைய நிலவியல் தருணத்தில் அவர்களின் பொதுவான மூதாதையர்களிடம் சென்று சேர்வார்கள். அவ்விரண்டு உயிரனங்களுக்கும் இறுதியான மூதாதையர் அவர்களைத் தோற்றுவித்த ஒரு பொதுவான உயிரினமாய் இருக்கும். இந்தப் பொதுவான மூதாதையரைப் பொதுவாதையர் எனலாம் (common ancestor = concestor). தற்காலத்தில் வாழும் இரண்டு உயிரினங்களும் இந்தப் பொதுவாதையருக்கும் முந்தைய காலகட்டத்தில் தனித்த இரு உயிரினங்களாக இருந்திருக்கவில்லை என்றாகிறது. ஏனெனில் அந்தப் பொதுவாதையர் எனும் உயிரினத்தின் வழித்தோன்றலாகவே இரண்டும் சூழ்நிலைக்கேற்ப வாழ்வதற்கான சிறுசிறு மாற்றங்களை ஏற்றுக்கொண்ட தனித்தனியான உயிரினப் பாதை வழியாகப் பிரிந்து வேறுபட்ட உயிரினங்களாய்த் தற்காலம் வரை வளர்ந்துள்ளன.

மேல் பத்தியில் விளக்கிய முறையைப்போலவே தற்காலத்தின் வேறு எந்த இரண்டு உயிரினத்தை எடுத்துக்கொண்டு இதே வகைப் பின்னோக்கிய நீட்சியை நிகழ்த்தினாலும் அவ்வுயிரினங்களும் தங்களுக்கான ஒரு பொதுவாதையரை ஏதோ காலகட்டத்தில் கண்டு சென்றடைவார்கள். நிலவியல் காலத்தில் பின்னோக்கிச் சென்றால் வெவ்வேறு காலகட்டங்களில் இவ்வாறான பல பொதுவாதையர்கள் தோன்றுவர்கள். இந்தப் பொதுவாதையர்களும் உயிரினங்களே என்பதால் இவர்களில் ஏதோ இருவரை இவ்வாறே மீண்டும் அவர்களுக்கும் முந்தைய காலத்திற்கு மூதாதையர்களைத் தேடி அழைத்துச் சென்றால் பொதுவாதையர்களுக்கும் தொடர்புடைய ஒரு மூத்தப் பொதுவாதையர் கிடைப்பார். பல காலங்களுக்கு முன்னால்.

உதாரணமாக இன்றைய மனித ‘ஹோமோசேப்பியன்கள்’ இனத்தில் தொடங்கிக்கொண்டால் உடனடியான மூதாதையர் ஐந்து மில்லியன் வருடங்களுக்கு முன்னால் ஆப்பிரக் காடுகளில் வாழ்ந்த மனித ‘சிம்பன்சி-வகைக்’ குரங்குகள். இந்த சிம்பன்சிகளும் போனோபோ வகைக் குரங்குகளும் நிலவியல் காலத்தில் ஏற்கெனவே சந்தித்திருக்கும். இங்கு ‘ஏற்கெனவே’ என்பது வரலாற்று காலத்தில் நாம் மனிதக் குரங்குகளைச் சந்தித்த காலத்தைவிட சமீபத்தில் என்பதை நினைவில் கொள்க.

குடும்பத்தின் அடுத்த சமகாலக் கிளையான கொரில்லாக்கள். இவர்களுடைய மூதாதையர்களைத் தொடர்ந்தால் நமக்கும் சிம்பன்சிக்களுக்கும் பொதுவான மூதாதையரும் இந்த கொரில்லாக்களின் ஒரு இறுதி மூதாதையரும் என்றோ சந்தித்துக்கொண்டிருப்பார்கள். ஆப்பிரிக்கக் காட்டிலா என்பது உத்திரவாதமில்லை. இன்னொரு குடும்ப உறுப்பினர் கிளையில் கிப்பன் வகைக் குரங்குகள் உள்ளன. இவர்களையும் மூதாதையர் பயணத்தை மேற்கொள்ளச் செய்து ஹோமோசேப்பியன் + சிம்பன்சி + கொரில்லா ஆகிய உயிரினங்களுக்கான பொதுவாதையரின் மூதாதையர் பயணத்துடன் தொடர்பிட்டால் இந்தப் புதிய (மிகப் பழைய) பொதுவாதையர் மரங்களில் இருந்திருப்பாரா என்பதை விடுங்கள் நிலத்தில்தான் இருப்பாரா என்பதே சந்தேகம். இந்தப் பொதுவாதையர் கடல் உயிரினமாக இருக்கலாம்.

உதாரணத்தின் பொதுவதையர் பயணத்தைக் குழப்பமின்றி விளக்கிக்கொள்ள எண்கள் வழங்குவோம். இன்றைய ஹோமோசேப்பியன்களில் தொடங்கி அவர்களின் தாத்தா கொள்ளு தாத்தா எள்ளு தாத்தா என்று போய் அனைத்து மனித இனங்களின் இறுதி மூதாதையரைக் கண்டதும் அவரைப் பொதுவாதையர் 0 எனலாம். அதாவது, காலத்தால் பின்நகரும் பொதுவாதையர் பயணத்தில் மிகச் சமீபத்தில் தோன்றியவர் பொதுவாதையர் 0. இவரே ஆதாம் (உலகின் முதல் மனிதன்) என்றும் கதை செய்து உவகிக்கலாம். ஆதாரங்களுடனான அறிவியல் புரிதலில் மாற்றமில்லை.

பொதுவாதையர் 0 (கொன்செஸ்டர் 0) மனித இனத்திற்கெல்லாம் பொதுத் தகப்பன்சாமியான மிகச் சமீபத்திய ஆதி மனிதன்.

அடுத்ததாக நமது ஹோமோசேப்பியன்களுக்கும் சிம்பன்சிகளுக்கும் இடையேயான பொது மூதாதையர். மனித இனங்களின் பொதுவாதையரும் சிம்பன்சி வகை மனிதக் குரங்கு இனங்களின் இறுதி மூதாதையரும் ஐந்து மில்லியன் வருடங்களுக்கு முன்னால் சந்திக்கையில் இருந்திருக்க வேண்டிய பொதுவாதையர் உயிரினத்தைப் பொதுவாதையர் 1 என்போம்.

இப்போது அடுத்தகட்டப் பயணம் தெளிவாகியிருக்கும். ஒரு கால வழியில் கொரில்லாக்களும் இன்னொரு கால வழியில் மனிதன் + மனிதக் குரங்குகள் + போனொபோ வகை குரங்குகள் ஆகியவற்றின் பொது மூதாதையர். இவ்விரண்டு உயிரினங்களும் தங்கள் இறுதி மூதாதையரைக் கண்டடைகையில் அவரே பொதுவாதையர் 2 என்றாகிறது.

இதே விளக்கத்தை உபயோகித்தால் பொதுவாதையர் 3 எனப்படுபவர் ஒரங்கூடான் எனப்படும் குரங்குவகையின் மூதாதையருக்கும் (மனிதன் + மனிதக்குரங்குகள் + போனோபோ குரங்குகள் + கொரில்லாக்கள்) ஆகியவற்றின் பொதுவாதையர்களின் மூதாதையர்களுக்கும் இடையேயான ஒரே இறுதிப் பொது மூதாதையர் என்றாகிறது.

இப்படியே அனைத்துப் பொதுவாதையர்களையும் அவர்களுக்குள்ளேயே பொதுவான தொடர்புடைய இறுதி மூதாதையரிடம் இட்டுச் சென்றால் கல் தோன்றி மண் தோன்றா காலங்களும் முந்தைய ஒரே மூத்தப் பொதுவாதையர் உயிரினத்திடம் சென்றடைவோம் என்றாகிறது. இவரே அறிவியல் புரிதலின் ஆதி உயிரினம். உலக உயிரினங்களின் ஆதிப் பொதுவாதையர்.

சுமார் மூன்று பில்லியன் உலக வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்திருக்கும் உலக உயிரினங்களினின் ஆதிப் பொதுவாதையர். உயிரினங்களின் இந்தப் பொதுவாதையர் பயணத்தையே டாவ்கின்ஸ் ‘மூதாதையர் கதை’ புத்தகத்தில் திறம்பட விளக்கியுள்ளார்.

டக்ளஸ் ஆடம்ஸ் படைப்பூக்கத்தில் உருவான 42 எனும் விடை உணர்த்தும் வினாவிற்கும் உயிரினங்களின் இந்த ஆதிப் பொதுவாதையருக்கும் தொடர்புள்ளதா?

நாம் அனைவரும் உலகக் கணினியின் உறுப்புகள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் காலத்தை முழுவதுமாகக் கருத்தில் கொண்டால் — சுமார் மூன்று பில்லியன் வருடங்கள் — தற்கால மனிதர்களுக்கு நாற்பது பொதுவாதையர்கள் தேவைப்படுகிறார்களாம் உயிரினங்களுகெல்லாம் மூத்த ஒரே ஆதிப் பொதுவாரையர் உயிரினத்தைச் சென்றடைய. பொதுவாதையர் 0 என்பவர் நிலவியல் காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்து பொதுவாதையர் 1, 2 எனத் தாண்டித் தாண்டி ஆதி உயிரினத்தைச் சென்றடைய 40 சந்திப்புப் புள்ளிகளே தேவைப்படுகிறதாம். இதற்கும் முன்னால் உலகில் உயிர் என்பதே இருக்கவில்லையாம். இதுவே இன்றளவிளான உயிரியல் புரிதல்.

நிலவியல் காலத்தில் மூன்று பில்லியன் வருடங்களுக்கும் முன்னால் உலகில் உயிர் இருந்திருக்கவில்லை. ஆனால் உலகம் இருந்துள்ளதே. உலகம் சுமார் 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் இந்தச் சூரிய குடும்பத்தில் தோன்றியது என்கிறது அறிவியல். அன்றிலிருந்து முதல் உயிர் தோன்றும் காலம்வரையில் அவ்வுயிர் (நுன்னுயிர்) தோன்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வதில் இவ்வுலகம் முனைந்திருந்திருக்கிறது. உலகமே முதல் உயிரைத் தோற்றுவிக்கக்கூடிய பரிணாம வளர்ச்சிக்கு ஆட்பட்டிருந்தது என்கிறேன். என் விளக்கத்திற்கு தோதாக வருகிறது என்பதால். இவ்வுலகமே உயிரினமாகச் செயல்படுகையில் அதற்கான முன்னோர் இருக்க வேண்டுமே. நாம் உட்பட இவ்வுலகம் யாவையும் நட்சத்திரப் புழுதியே (இக்கூற்றை என்றும் நினைவில் கொள்வதற்கே ஸ்டார்-டஸ்ட் தேநீர் பானம் உண்டானது). அதனால் இப்பிரபஞ்சமே இவ்வுலகின் அந்தப் பொதுவாதையர் என்றாகிறது.

ஆகவே மனிதனின் பொதுவாதையர் பயணத்தில் 41 ஆவது சந்திப்புப் புள்ளி இப்பிரபஞ்சத்திலிருந்து உருவான ‘குழந்தை’ நிலையில் இருந்த இவ்வுலகம்.

அடுத்த சந்திப்புப்புள்ளி என்றும் மாறிக்கொண்டே இருக்கும் இப்பிரபஞ்சமே உருவாவதற்கான தோற்றுப்புள்ளி. காலப்பின்நகர்வில் எப்பொழுதோ இப்பிபரஞ்சம் உருவாகியிருக்க வேண்டுமே. அத்தோற்றுப்புள்ளியே 42 ஆவது சந்திப்புப் புள்ளி. யார் யாருடன் சந்தித்த தோற்றுப்புள்ளி? பிரபஞ்சத்தை இறைவனே தோற்றுவித்தார் எனக் கொண்டால் மனிதன் அவனது ஒரே மூத்தப் பொதுவாதையரான இறைவனைச் சந்தித்த தோற்றுப்புள்ளியின் எண்ணிக்கையே 42.

இப்போது விளங்கியிருக்குமே நாமெல்லாம் ஏன் வந்தோம் இருக்கிறோம் போகிறோம் என்பவற்றையெல்லாம் விளக்கிவிடும் டக்ளஸ் ஆடம்சின் ‘ஆழ்ந்த சிந்தை’ கணினி வழங்கிய 42 எனும் விடையின் ஆகச்சிறந்த வினா என்னவென்று. வினா: மனிதன் இறைவனைச் சென்றடைய வேண்டிய பொதுவாதையர் புள்ளிகள் எத்தனை? விடை: 42.