மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ
மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார், என்முன்னே நின்றார்
மண்டை மண்டையான ஸ்பீக்கர்கள் கொண்ட ‘ஸோனி ஸ்டீரியோ’வில் ஹால் முழுதும் நிரப்பிய கணீர் குரல் தேசிகனை வரவேற்றது.
கதவைத் திறந்த வரதன் ஒத்தை விரலை உதட்டில் மீது குறுக்கிட்டு, தலையை ஆட்டி தேசிகனை உள்ளே வரும்படி சைகை செய்தான்.
இரண்டாவது வருடக் கோடை வெய்யில் வீணாகாமல் கார் ஓட்டிக் களைத்து வியர்த்து, அமெரிக்காவில் மிதவேகத்திலிருந்து அதிகரிக்கும் வேகங்களுடன் இயங்கும் அடுத்தடுத்த லேன்கள் கொண்ட ‘ஹைவே’க்களில் போக்குவரத்து, பாய்ம இயற்பியலின் ‘தகடொத்த ஓட்டத்திற்கு’ பொருந்தி வருவதைப் பற்றி யோசித்துக்கொண்டு வந்தவனை வரதன் வீட்டுப் பாடல் உடனடியாக ஸ்ரீரங்கம் இட்டுச்சென்றது.
“ஹா, திருநெடுந்தாண்டகம். யாருடா சொல்றது, வேங்கடாச்சாரி மாமாவா? ஸ்ரீரங்கத்துலயா?”
“எம்பார். எம்பார் விஜயராகவாச்சாரியார்.”
“இவ்ளோ இளமையா இருக்கு வாய்ஸ். எங்கேந்துரா புடிச்ச?”
சோபாவில் அமர்ந்தார்கள். டேப்பை நிறுத்திவிட்டு வரதன் தொடர்ந்தான். “மிருதங்க வாத்யார்ட்டேந்து. கல்கத்தால எப்பவோ சொன்னதுன்னு நெனைக்கிறேன். தியாகோபனிஷத். நீ என்ன சொன்ன திருநெடுந்தாண்டகமா?”
“ஆமாண்டா. அந்தப் பாட்டு அதுதான். பெரியாழ்வார்து. ஃபேமஸ் பாட்டுதான். வேங்கடாச்சாரி மாமா இத வெச்சு ஒரு குட்டி உபன்யாசமே பண்ணிருக்கார்.”
வேங்கடாச்சாரி மாமா எனப்படும் வேங்கடாச்சாரியார், தேசிகன் வயதில் பதினைந்து வருடங்கள் கூட்டிக்கழித்த முப்பது வருட அவகாசத்தில் ஸ்ரீரங்கம் உத்திரை வீதிகளில் ஆணாய்ப் பிறந்தவனைத் தீயாய் ஆட்கொண்ட த்ரிவிக்ரம ஆளுமை. சம்ஸ்க்ருத பண்டிதர். அஷ்டாவதானி. உபன்யாசம், கவிதை, கிரிக்கெட், காரம் போர்டு, சடுகுடு, கொள்ளிடத்தில் நீச்சல், கோயில் கைங்கர்யம், மடப்பள்ளி செல்வரப்பம் செயல்முறை, டேப்ரிகார்டர் ரிப்பேர்… இப்படி அவர் மனம் வைத்ததெல்லாம் மணக்கும். கைவைத்ததெல்லாம் கலகலக்கும்.
பெண்களுக்கு சாதா பேச்சில் அவர் சற்று அலர்ஜி. சிரிக்காமல் அசைவ ஜோக் அடிப்பதால். ஆனால், உபன்யாசம் என்று மேடையேறிவிட்டால் பிரமிக்கவைக்கும் தன் கதை சொல்லும் திறனால் வீதி மாமிகளை மிகநிச்சயமாய் பக்தியில் சிலிர்த்துக் கண்ணீர் உகுக்க வைத்துவிடுவார்.
எண்பதுகளில் மணந்த ‘செல்வம் காபி’ இருந்த தெற்குவாசல் முனையில் உத்திராதி மடம் உண்டு. வருடம் தவறாது அவர்கள்தான் வேங்கடாச்சாரியை உபன்யாசத்திற்கு அழைப்பார்கள். பன்னிரண்டு நாள் பாகவதம், பதினெட்டு நாள் பாரதம், பங்குனி உத்திரத்தில் பரதாழ்வான் ஏற்றம் என்று ஒற்றை ‘கோன் ஸ்பீக்கர்’ சகிதம் இரவுகளில் அமர்க்களப்படுத்திவிடுவார். சித்திரைவீதியில் கூட்டம் கரைபுரளும்.
வைணவ ஆச்சார்யர்கள் பற்றிய உரையில், அன்றிரவு மேடையில் வேங்கடாச்சாரியாரே கண்கலங்கிவிட்டார். கூட்டத்தில் இரண்டு நிமிடம் ஒருவரும் இருமக்கூட இல்லை. இராமகாதை எங்கு ஒலித்தாலும் அங்கு ஆஞ்சநேயர் வந்தமர்ந்து கேட்பார் என்பது ஐதீகம். வேங்கடாச்சாரி மாமா மேடையில் இல்லை, நூற்றாண்டுகள் பின்சென்று பராசரபட்டர் வீட்டில் அமர்ந்துள்ளார் என்பதைக் கூட்டத்தில் பாட்டியுடன் சென்றமர்ந்திருந்த தேசிகன் அன்று உணர்ந்து கொண்டான். கூடவே passion என்பதன் பொருள் உடல் சம்பந்தப்பட்டதல்ல என்பதையும்.
மறுநாள் காலை வீட்டின் வெளியே கட்டுக்குடுமியும் பஞ்சகச்சமுமாய் சிறிய கணக்குப்பிள்ளை மேஜையை சம்மணமிட்ட கால்களின் மேல் பொருத்தி முன்திண்ணையில் அமர்ந்து கீழிருந்து மேற்புறமாய்த் திறக்கும் நோட்டில் கருப்பு ஃபௌண்டென் பேனாவினால் அன்றைய இரவிற்கான குறிப்புகள் எடுப்பவரிடம் தேசிகன் ‘மாமா நேத்து தூள் கிளப்பிட்டீங்கோ’ என்றபடி பள்ளி செல்வான்.
அவனுக்குத் தெரியும், மாலையில் வீதியோர மண்ணைக் காலால் அளைந்தபடி வீடு திரும்புகையிலும் வேங்கடாச்சாரியார் அதே இடத்தில் அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பார். விசிறி மட்டை, வெற்றிலைப் பெட்டி, மாம்பழச் சொம்பு என்று துணைக்கு அருகில் சாமக்கிரியைகள் கூடியிருக்கும்.
“என்ன மாமா, ஸ்டம்ப் நட்டுடலாமோனோ?” என்றபடி அடுத்த அரைமணியில் தொடங்கிவிடுவார்கள், பின்னாளில் வேங்கடாச்சாரி தலைமையில் திருச்சி மாவட்டத்தின் ‘ஃபர்ஸ்ட் டிவிஷன்’ வரை சென்று கோலோச்சிய ‘டீமின்’ உத்திரை வீதிக் கிரிக்கெட்டை.
எழுத்துவேலைகளைத் திண்ணையில் ஒதுக்கிவைத்துவிட்டு, ‘ஒக்காழி அந்த கோரதமூலை ‘புட்டி’ வந்டானாடா? இல்லாட்டி ஸைடு கட்டாது’ என்றபடி வேங்கடாச்சாரியாரும் தெருவில் இறங்குவார். குனிந்து நிமிர்ந்து, தோள், முதுகு இத்தியாதிகளை முறுக்கிக்கொண்டு, கட்டுக்குடுமியை அவிழ்த்து மீண்டும் இறுக்கியபடி, திறந்த மார்பில் முப்புரிநூல் புரள, நெற்றியில் திருமண், காதில் பச்சைக் கடுக்கன் சகிதமாய், கால்களைப் பஞ்சகச்சத்தினுள் அகட்டி அகட்டி நடந்து, அவர் ‘வார்ம் அப்’ செய்துகொண்டுவருவதே வீதியில் பெருமாளின் ‘கோண வையாளி’ கணக்காய் அமர்க்களப்படும்.
காலில் செருப்பு, ஷூ அணியமாட்டார். இரண்டாவது மூன்றாவது ‘டௌன்’ இறங்குவார். முதல் பாலிலேயே தக்கிடியாய் ‘எல்பிடபிள்யூ’ என்று கையுயர்த்திவிட்டால் போச்சு, ‘அழுகுணி ஆட்டம்’ என்று மூன்று நாட்கள் பேசமாட்டார். அவருக்கென்று அவரறியாமல் தெருக்கிரிக்கெட் ‘ரூல்ஸ்’ சற்று தளர்த்தப்பட்டது. பௌராணிகம் என்று ஒரு மாதம் சேலம் காரைக்குடி மெட்ராஸ் என்று போய் நிறைய சம்பாதித்தாலும், திரும்புகையில் ஒரிஜினல் ‘பெய்ல்ஸ்’ விக்கெட் கீப்பர் ‘க்லௌஸ்’ என்று வாங்கிவந்து மே.உ.வீ. ‘டீமிற்கு’க் கொடுப்பார். திருகித் திருகி, பூணூல் பறக்கக் கைவீசி ‘ஆஃப் கட்டர்’ போல ‘ஸ்பின்’ போட்டு ஓரிரு விக்கெட்களை வீழ்த்திவிடுவார்.
முன்தினம் இரவு பௌராணிகம் கேட்டிருந்தவர் தெருவில் கடந்துபோகையில் மரியாதையாய் குனிந்து வணங்கும்போது, கையில் மட்டையைச் சுழற்றியபடி ‘கண்டாரஒழி, கப்பரய மூடேண்டா’ என்பதுபோல பசங்களுடன் பேசிக்கொண்டே தானும் ‘அடியேன்’ என்று தலைகுனிந்து பதில் மரியாதை செய்யும் லோகாயதமான ‘டிரான்ஸிஷனை’ வேங்கடாச்சாரியால் எந்தப் புறச் சங்கடமும், அகமுரண்களுமின்றிச் செய்யமுடிந்தது. கிட்டத்தட்ட அறுபது வயதுவரை கிரிக்கெட் ஆடினார். வீதி டீம் ஃபர்ஸ்ட் டிவிஷன் வரை சென்றது. இளங்கலை முடித்து முதுகலை சேர்ந்திருந்த தேசிகனும் கிரிக்கெட் விளையாடுவதை விட்டிருந்தான்.
வேங்கடாச்சாரியாரின் நிகரில்லாத இன்னொரு திறன், கேரம் விளையாட்டு. சிறுவர் செட்டுடன் விளையாடமாட்டார். ஆட்டத்தை அவர் தொடங்கினால், சிறுவர்களுக்கு போர்ட்டில் கைவைக்கவே சான்ஸ் வராது. அதனால் மடப்பள்ளி ராகவாச்சாரி, கோபாலாச்சாரி பட்டர் என்று அவர் வயதிற்கேற்ப செட் அமையும். சிறுவர்கள் அருகில் அமர்ந்து கவனிக்கலாம். போரிக் ஆஸிட் பௌடரை பாக்கெட் பாக்கெட்டாய் கிழித்துக் கொட்டி, முழங்கைவரை மாக்கோலம் போட்டதுபோல, பகல்வேஷக்காரன் கணக்காய் ஆட்டம் மூன்று நான்கு மணிநேரம் தொடரும்.
‘டேய் ராவாச்சாரி, மடப்பளில கீரசாதம் உருட்டறா மாதிரியே ஸ்ட்ரைக்கர உருட்றியே. அப்டியே அந்தக் குண்டிய தூக்கி பர்ர்…ருன்னு ஒண்ணு விட்டுண்டே இந்த ‘ரெட்’ட போடு பாப்பம்.’
‘என்னடா வேங்கடம், பசங்கள்லாம் இருக்காங்க… இப்டிப் பேசிண்டு.’
‘ஏண்டா, இவங்க விடமாட்டாங்களா. நாம இருக்கோமேன்னு மரியாதயா அந்தாண்ட போய் விட்டுட்டு வந்து ஒக்காருவாங்க.’
திண்ணைப் பேச்சு என்றால் திருநெடுந்தாண்டகத்தில் தொடங்கி தர்க்கம், நியாயம், மீமாம்ஸம், மீனாகுமாரி, வசுந்தரா (வைஜயந்திமாலாவின் அம்மா), வங்கி உத்தியோக டிவிடென்ட், வேர்க்கடலை சமைப்பது, தென்கலைச் சமையல், கிராஜுவிட்டி, டில்லி குளிர், பஞ்சாபி தாபா பதார்த்தங்கள், கயிற்றுக் கட்டில் ரகஸ்யத் த்ரையங்கள் என்று எவராலும் எட்டிவிடமுடியாத அம்ருதகலவையாய் ஆங்கிருப்போர் அனைவரையும் ஆகர்ஷிக்கும்.
நிஜமா பொய்யா, இப்படியும் நடந்திருக்குமா என்றெல்லாம் யோசித்து முடிவிற்கு வரமுடியாத நிறைய சிறு பெருங் கதைகளைத் தன்னை வைத்தே தினமும் கூறுவார். கொள்ளிடக்கரை திருமங்கை மன்னன் படித்துறையில் நள்ளிரவில் நரமாம்ஸம் சாப்பிடும் பேய் உலவியதை இவர் சுந்தாச்சுவுடன் பார்த்தது இப்படி ஒரு கதையே. கேட்டுவிட்டு ‘கத தான மாமா’ என்று அவரிடமே பலமுறை விண்ணப்பித்து அவர் ஆமோதிக்கும் வரை தேசிகனுக்குப் பல இரவுகள் தூக்கம் வரவில்லை. ஆனால், பின்னாளில் கோயில் பட்டாச்சாரியாரான மாமாவின் பால்ய சிநேகிதர் சுந்தாச்சுவை சிறுவயதில் குணசீலத்தில் வைத்து நான்கு வருடங்கள் சிகிச்சை செய்ததென்னவோ நிஜம்தான்.
வைணவ ஆச்சார்யர் நிகமாந்த மகாதேசிகனுக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதா. அவரைக் குறித்து ‘ஸ்ரீமாந் வேங்கட நாதார்யஹ, கவிதார்கிக கேஸரீ’ என்று தொடங்கும் தனியன், மேல உத்திரை வீதி வேங்கடாச்சாரியாருக்குச் சரியாகப் பொருந்திவருவதாய் தேசிகனுக்குத் தோன்றும். அவர் கவித்திறன் அவ்வகை. குரலும் சிம்மத்தினதே. இராவணன் தோற்று ‘நாளை வா’ என்று இராமனிடம் அவமானப்பட்டுத் திரும்பிய கம்பராமாயணப் பாடலை அநாயாசமாய் சாயங்கால தெருக்கிரிக்கெட் கமெண்ட்ரியில் உபயோகிப்பார். என்ன, கூடவே ‘நாரத முனிக்கேற்ப நயம்பட உரைத்த நாவும்…’ என்றிருக்கும் கம்பரை ‘கிராதக அணிக்கேற்ப பந்தடித்துக் குரைத்த நாயும்’ என்று அன்றைய ஆட்டத்திற்கேற்ப அவுட் ஆனவனைத் தூற்றி மாற்றியிருப்பார். பக்கத்துத் திண்ணையில் பாச்சாவின் அம்மா ‘ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’ என்று ரேடியோவை ஒலித்தால், ‘மருள்மொழி கூறும் கிழவிகள் ஒலி கேட்டேன்’ என்று அடுத்த வரியை சப்தமாய்ப் பாடுவார். மாமி பழித்துக் காட்டிவிட்டு சற்றுநேரம் அகல்வாள்.
விக்ரம் திரைப்படம் வந்த காலத்தில் (திருச்சி ஜங்ஷன் கலையரங்கம் தியேட்டரில் ரிலீஸ்) அதன் டைட்டில் பாடலில் கமல் ‘விக்ரோம்’ என்றதும் கணினி ரோபாட்டுகள் கர்ணகடூரமாய் தொண்டைக் கமறல்கள் செய்வது பிரபலம். அதே திண்ணை ரேடியோவில் ஒலித்த ‘விக்ரோம்…’ வரிக்கு அடுத்ததாய் மாலை கிரிக்கெட் ஆட்டத்தின்போது வேங்கடாச்சாரி வெற்றிலைக் கொதப்பல்களை ‘க்கா…. தூ…’ என்று ரோபோட்டாய்த் துப்பினார். ‘கெடக்கறான், சரியான ஸ்த்ரி பார்ட்டுக்காரன்டா’ இடக்கையால் ஒதுக்கிவிடுவார்.
அவருக்குப் பிடித்த ஒரே தமிழ் சினிமா கலைஞன் கண்ணதாசன்.
“அவங் கவிஞன்தான்டா. நம்மூர்லேந்தும்தான் போய்ருக்கே… ஒங்கிட்ட பேட் இருக்கு எங்கிட்ட பந்திருக்குன்னு…”
“பொறாம மாமா ஒங்குளுக்கு. ஒரு அய்யங்கார் நன்னாருந்துரப்டாதே. கமல பிடிக்காது, சுஜாதாவ ஆகாது, இப்ப… ஏதோ பொழப்புக்கு பாட்டெழுதறார். ஏன், நீங்க கூடத்தான் அன்னிக்கு டேச்சு பந்த மதிலத் தாண்டி அடிச்சுடான்னுட்டு வெய்யும்போது ரோட்ல போன மாமியக் காட்டிச் சொன்னேள்.”
இங்கு உத்திரை வீதி கிரிக்கெட் அதன் இடையூறுகள் பற்றியும் உங்களுக்குக் கொஞ்சம் தெரியவேணும். அரங்கன் கோயில் மதிலுக்கு அடுத்த சுற்றாய் இருப்பதே நான்கு உத்திரை வீதிகள். அதனால், அவ்வீதிகளில் ஒருபுறம்தான் வீடுகள். எதிர்ப்புறம் மதில். அதற்கேற்ற வகையில் வீதியில் போக்குவரத்தும் கூட்டமும் குறைவு. வேங்கடாச்சாரி மாமா வசித்த மேல உத்திரைவீதி வீட்டிலிருந்து சற்றுத் தள்ளி, வீதியின் குறுக்காய் வீட்டோர மணலில் ஸ்டம்ப் நட்டிருப்பார்கள். குறுக்காய் ஓடும் வீதியின் தார் சாலைதான் ‘மேட்’ போட்ட பிட்ச். மொட்டை கோபுரத்துக்கு வெளியே, பஸ் போகும் காந்தி சாலையில் இருந்த ‘ஸ்ரீரங்கம் க்ளப்பில்’ மாமா உபயத்தில் ரெண்டுரூபாய் ‘தள்ளி’ யாரோ வேம்புவிடம் உருட்டிக்கொண்டுவரும் டென்னிஸ் பந்து, அந்நாளில் ‘ஷைனிங் நியூ பால்’. டிராயரில் தேய்த்தெடுத்து வீசுகையில் சுருட்டிக்கொண்ட குட்டி மஞ்சள் பூனையாய் ‘டாப் ஸ்பின்’னில் துள்ளிக்குதித்து ரோமாஞ்சமாய் புஸுபுஸுக்கும்.
மட்டை பிடிப்பவர்கள் அடித்த பந்தை சில வேளைகளில் ரோட்டில் மாலையில் விளக்கு போட கோயிலுக்குப் போகும் மாமிகள், சைக்கிளில் வருபவர்கள் என்று அவர்கள் விருப்பமின்றித் தடுப்பதெல்லாம் ஆட்டத்திற்கு இடையூறில்லை. வேங்கடாச்சாரியாரே விளையாடுகையில் சைக்கிள் முனிகள் முணுமுணுப்பின்றி விலகிவிடுவார்கள். ஆனால் மட்டையாளன் இழுத்தடிக்கிறேன் பேர்வழி என்று பந்தைத் தூக்கி கோயில் மதில் மேல் அடிப்பது இடையூறு. அன்று டேச்சு அதைத்தான் செய்துவிட்டிருந்தான். புத்தம்புது டென்னிஸ் பால் மதில் மேல் தத்தித் தத்தி, பூனை கணக்காய் யோசித்து, ‘இந்தப் பக்கம், இந்தப் பக்கம்’ என்று தெருக்குழுவே மனத்தினுள் அலறியபடி நிற்க, அந்தப் பக்கம் கோயிலினுள் விழுந்துவிட்டது.
ஆட்டம் முடிய இரண்டே பந்துகள் இருக்கையில், மாமா டீம் மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி என்கையில், நிதானம் தேவை என்று மாமா ‘பொறுமை பொறுமை’ என்று ஓதிக்கொண்டிருக்கையில், நிகழ்ந்துவிட்டது. அடித்தவன் அவுட் தான். ஆனால், போன பந்து?
பிரமாதமில்லை. தெற்கு உத்திரை வீதி வழியாய் ‘ரெங்கா (3)’ கோபுரத்தினுள் நுழைந்து, ரங்கவிலாஸ் கடந்து இடதுபுறம் சக்கரத்து ஆழ்வார் சந்நிதிவரை ஓடி, வலப்புறம் அதனருகில் தோட்டத்தில் துழாவினால் பந்து கிடைத்துவிடும். அங்கிருந்தே மதிலுக்கு மேலாய் விட்டெறிந்தால், மேல உத்திரைவீதியில் இவர்கள் ஆடும் இடத்திற்கு அருகில் விழும். ஆட்டம் தொடரும்.
இங்கு உபரி விஷயம்: கோயிலுக்குள் போனவன் கணகாரியமாய் கண்டெடுத்தவுடனேயே வீசி விடவேண்டும். பந்தைக் கையில் கொண்டுவந்தால் மாத்துதான், அதுவரை ஆட்டத்தைத் தொடரமுடியாமல் செய்ததற்காக. மதில்சுவர் மேலவீதியின் நடுவில் பிளந்துகொண்டதும், அதன்வழியாக சோப்ளாங்கி ஒருவனை அனுப்பி ஆட்டம் முடியும்வரை நிரந்தரமாய் கோயில் தோட்டத்தில் உட்காரவைத்ததெல்லாம் பின்னாளில் நடந்த மாற்றங்கள்.
பந்து கோயிலுள்ளே போனதில் அன்றைய வெற்றி வாய்ப்பைக் கோட்டைவிட்டோம் என்பதில் வேங்கடாச்சாரி மாமாவிற்கு பயங்கரக் கடுப்பு. குழுவே அவரைச் சுற்றி மௌனத்தில். கோவத்தில் என்ன சொல்வாரோ. பந்தை எடுக்கப் போனவன் இன்னமும் வீசியெறியக்காணோம். வாகாய் ரவிகுலசோமன் வினவினான். “வேற பந்தில்லையா?”
அவன் எதிர்ப்புற ரன்னர். மிச்சம் ஒரு பால் தான் இருக்கு. ஆட்டத்தை முடித்துத்தொலைவோமே என்று ஆதங்கம்.
கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருந்த மாமா முறைத்தார். அந்நேரம் பார்த்துக் காண்பவர் கண்கள் வேறு எங்கேயுமே பார்த்துவிடமுடியாதவாறு தெருவில் வளமார் கொங்கைக்காரி ஒருத்தி கையில் எண்ணெய்ப் பாத்திரத்துடன் கடந்தாள்.
‘இன்னிக்கு ஆட்டத்துக்கு இனிமே பந்து வேணும்னா நீ அந்த மாமிகிட்ட இருக்கற ரெண்டுல ஒண்ணத்தான் கேக்கணும்.’
இந்நிகழ்வை நினைவூட்டித்தான் பசங்கள் ஊர்க் கவிஞரைப் பற்றி விமர்சித்ததற்கு ‘ஏத்திவிட்டார்கள்’ அவரை.
‘போடா முட்டாக் கம்னாட்டி. நா வேடிக்கை பண்றதும், அதையே ‘கவித்திறன்’னு அவன் எழுதறதும் ஒண்ணா? கண்ணதாசன் எழுதாத எரோடிஸமாடா? தொட்டுட முடியுமாடா ஒங்களால்லாம்? ‘எட்டடுக்கு மாளிகையில்னு’ சோகப் பாட்டா பாடிண்டிருப்பேள். புரிஞ்சுக்க வயஸு பத்தாது.’
‘எது எது? என்ன மாமா தாத்பர்யம்? அவுத்து விடுங்கோளேன். சீமாச்சுக்கு புரிலைங்கறான்.’
‘ஒடனே தூக்கிண்டு வந்துடுவியே…’ என்று தொடங்கி சின்னபசங்களுக்குத் ‘தோதான’ உதாரணம் கூறத் தொடங்கினார்.
‘சுசீலா பாடின ‘கைவண்ணம் அங்கே கண்டேன், கால் வண்ணம் இங்கே கண்டேன்’ பாட்டு கேட்ருக்கியா? அதுக்கு கண்ணதாசனுக்கு எங்கேந்து ‘இன்ஸ்பிரேஷன்’னு தெரியுமா?’
சுற்றி தேசிகனைவிடச் சீனியர் கோஷ்டியான ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் படிக்கும் காலேஜ் ‘கைஸ்’ நின்றிருந்தாலும், ஒருவரும் பதில் சொல்லமாட்டார்கள். மாமாவிடம் கதை கேட்பதற்கு வந்துவிட்டு, நாம் பேசுவதா?
‘அது கம்பர்ட்டேந்து எடுத்தாண்டது.
‘மைவண்ணத் தரக்கி போரில் மழை வண்ணத் தண்ணலே உன்
கைவண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்’
அகலிகை சாபவிமோசனம். புரியறதோன்னோ?’
தலையாட்டுவார்கள்.
‘கம்பர்க்கு யார் இன்ஸ்பிரேஷன்னு நெனக்கறே?’
‘கண்ணதாசனா மாமா’ ன்னு வேண்டுமென்றே அபத்தமாய் வரும் பதிலை ‘முட்டாக்கூ… தானிக்கு தீனியா, தராதரம் இல்ல?’ என்று சிலபல வார்த்தைப் பிரயோகங்களால் சாபமிட்டுக் கணீரென்று பாடத்தொடங்குவார்.
‘மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ
மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட’
பாடுகையிலேயே அவர் கைவிரல்கள் ‘அரையர் சேவை’ அபிநயங்களைத் தன் தலைமுடிக்கு மேலாய் நளினமாய் நர்த்தனமிடும். பக்கவாட்டில் வழுக்கித், தன்னிச்சையாய் பின்னல் ஜடை போடும். கழுத்தில் தொடங்கி, மார்பில் அங்கியாய்ப் புரளும்.
அடுத்த சில நிமிடங்களில் உத்திரைவீதி வீட்டுமுகப்புகளின் அந்தி மஞ்சள் மங்கல்களில் கேட்டுக்கொண்டிருப்பவர் கண்ணெதிரே அங்கே கயிற்றுக்கட்டிலின் மேல், இலக்குவன் ‘துணையாய்’ இந்திரநீல காந்தியில் ‘எய்வண்ண வெஞ்சிலையாய்’ இராமபிரான் எழுந்தருளியிருப்பார், வேங்கடாச்சாரி ‘இருவராய் வந்தார், என்முன்னே நின்றார்’ என்று முடிக்கையில்.
வெற்றிலைக் குதப்பலைத் துப்பிவிட்டு நிமிர்ந்து ‘பாத்தேளாடா பாக்குவெட்டிகளா, ஆழ்வார்ட்டேந்து கம்பன், அவன்டேந்து கண்ணதாசன். கவிஞனின் மரபுத்தரம் தன்னால தெரியணுண்டா. சொல்ல வந்ட்டான். பொழப்புன்னு என்னத்த வேணா பாட்டுன்னு கழியறவன்லாம் கவிஞனாய்டுவானாடா ப்ரமஹத்தி.’
இப்படியாப்பட்ட வேங்கடாச்சாரிக்கும் ஒரு அண்ணா உண்டு. ஸ்ரீமது பயவேதாந்த ஸ்ரீஸந்நிதி ஸ்ரீகார்யம் சதுர்வேத சதக்ரது பன்னிரண்டு திருமண் பரகால பாட்டராசாரி. ஒன்றாக வசிக்கும் வீட்டு வாசலில் விளக்கு வைக்கும் காவியடித்த பிறைக்கு மேல், ராமர் நீலத்தில் அவருக்குத்தான் போர்டு.
அவர்தான் உண்மையான சதுர்வேதவிது, நவவியாகர்ண பண்டிதர், ஷட்ஷாக்ருத வாரங்கதர் என்பது ஸ்ரீரங்கம் வீதிப் பெரியோர்கள் நிகமனம். தேசிகன் குழுவில் பெயரை ‘பாட்டர்’ ‘ஆச்சாரி’ என்று ரகஸ்யமாய் பிரித்தெழுதி அவரைப் பானைகள் செய்யும் குயவனாய் உருவகித்திருந்தனர். அவர் உபன்யாசங்கள் வீதி முனைகளில் நிகழாது. வைஷ்ணவ சபா போன்ற பண்டிதர்கள் நிரம்பிய சூழலில்தான் கேட்கும்; இல்லை எடுபடும். தேசிகன் போன்ற சிறுவர் முதற்கொண்டு யாரும் போய்க் கேட்கலாம்தான். ஆனால் கூட்டம் வேங்கடத்திற்குத்தான். என்ன, ‘வேங்கடத்தின்’ பருப்பு வீட்டில் பாட்டராசாரியாரிடம் வேகாது.
‘வேங்கடம் சும்மா அடிப்பான்டா. லாஸர் பத்திக் கேட்டாலும் உபன்யாசத்துல நாலு நிமிஷம் பேசுவான். வெங்காயப் புலமை. உரிச்சுப்பாத்தா ஒண்ணில்லாமப் போய்டும்.’
வியாஸரைச் சொல்கிறாரா என்றிருந்த தேசிகனுக்கு, பாட்டராசாரி ‘லாஸர்’ என்று விளித்தது ‘லேஸர்’ சாதனத்தை என்பதே ‘வேங்கடம்’ சொல்லித்தான் புரிந்தது.
அமெரிக்கா வருகையில் தேசிகன் ஞாபகமாய் அவரிடம் சொல்லிக்கொண்டுதான் புறப்பட்டான்.
விஷயத்தைக் கேள்விப்பட்டு ‘கற்க கசடற,’ ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான்,’ ‘செய்வன திருந்தச் செய்’ என்று மூன்றை மட்டும் சொல்லித்தான் தேசிகனை வாழ்த்தினார் வேங்கடாச்சாரியார்.
“தேசிகா, ஒருபக்கம் எச்சக்கலயா இருந்தாலும், ஒங்கிட்டயும் ஏதோ இருக்குடா மவனே. ஊர் மனுஷாள ஞாபகம் வெச்சுண்டிருக்கியே இன்னும்.” வரதன் எழுந்து சென்று சமையலறையில் காரட் சாலட் செய்துகொண்டே கேட்டான். “இருக்காறாடா இன்னும்?”
அவன் கீழ உத்திரைவீதி. அவனுக்கு வேங்கடாச்சாரியார் குழுமத்தில் தினப்படி புழங்குமளவு பரிச்சயம் வாய்க்கவில்லை.
“ஏன் இல்லாம, தாராளமா. நாம விட்டுட்டு வந்துட்டா, ஸ்ரீரங்கமே அங்க இல்லாமப் போய்டுமா? அது என்னிக்கும் இருக்கும்.”
*