[தொலைகாட்சி நிகழ்ச்சியில் வெளிவந்த வடிவம் இந்தச் சுட்டி வழங்கும் கானொளியில் உள்ளது https://www.hotstar.com/tv/neeya-naana/s-80/human-values-vs-business-profits/1100005324]
தர்ம சங்கடம் என்றிருக்கிறது. அறம் = தர்மம் சிக்கல் = சங்கடம் என்று கொண்டால், தர்ம சங்கடம் என்பதைத் தமிழில் அறச்சிக்கல் எனலாம். என்போம்.
தர்மத்தை அனுஷ்டிக்க நினைப்பவனுக்கே தர்ம சங்கடம் எழும். அறத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று கருதுபவனுக்கே அறச்சிக்கல்கள் எழும். அறம் செய்ய விரும்பு என்கிறாள் மூதாட்டி. அறம் செய் என்று கட்டளையிடவில்லை. அறம் செய்ய விரும்பு என்று கோருகிறாள். அறம் செய்வது அவரவர் விருப்பம். செய்ய விரும்பு. விரும்பாமல் வேறு செய்தாலும் ஒன்றுமில்லை. அது குற்றமும் இல்லை. அறத்திற்குப் புறம்பான செயல் எனலாம். அவ்வாறான வேலைகள் செய்வதில் குற்றமில்லை என்பதால் தண்டனைகளுமில்லை. இங்குதான் பாவம் என்று வருகிறது. குற்றம் செய்தால் தண்டனையோடு போயிற்று. அறத்தை வழுவினால் பாவம் சேர்கிறது என்று வைத்துள்ளோம். இது உண்மையா என்று தெரியாது. நம்பினால் நன்மை. நம்புவதற்கு நம் நாட்டின் நீதி ஞான நூல்களையும் அவை பரிந்துரைக்கும் சமூகத் தனிமனித நல்வாழ்விற்கான விழுமியங்களையுமே நாட வேண்டும். ஆனாலும் அறப்படி ஒழுகுவதைக் கட்டாயப்படுத்த முடியாது. அறம் அவரவர் விருப்பம்!
தொழிலறம். ஒரு தொழில் செய்வதில் அறம் பேண வேண்டுமா? இதுவே கேள்வி. அவசியம் பேணப்பட வேண்டும், அவசியமில்லை என்பவை இரண்டு பதில்கள்.
தொழில்கள் அல்லது பணிகள் பலவகை. ஒரு ஜனநாயக நாட்டின் சட்டதிட்டங்கள்படி இன்ன தொழிலைச் செய்வதே குற்றம் என்று இருந்தால் அத்தொழிலை அந்நாட்டில் செய்ய முடியாது. மீறிச் செய்பவரை அந்நாட்டுச் சட்டப்படி குற்றவாளியாக்கித் தண்டனை வழங்கித்தர முடியும். அதனால் அந்தத் தொழில் அந்த அந்நாட்டில் வளர்ந்திருக்காது. ஆக சட்டத்திற்குப் புறம்பான தொழில்களை மேற்கொள்வது தவறு தண்டனைக்குரியது என்றாகிறது. இங்கு கவனிக்க வேண்டியது சட்டத்திற்குப் புறம்பான என்பதை; அறத்திற்குப் புறம்பான என்று சொல்லவில்லை.
சட்டத்திற்குப் புறம்பில்லாத, சட்டதிட்டங்கள்படி குற்றம் என்று கருத முடியாதவையே தழைக்கும் தொழில்கள் அனைத்தும். பிழைப்பிற்கு என ஒரு ஜனநாயக நாட்டின் குடிமகன் அவை யாவற்றையும் செய்யலாம், பங்குபெறலாம், பொருளீட்டலாம், வாழ்வாதாரம் பெறலாம். ஆனால் அத்தொழில்கள் யாவற்றிலும் அறத்திற்குப் புறம்பான கூறுகள் இல்லை என்று சொல்வதற்கில்லை.
வகைக்கொன்றாய் ஓரிரு உதாரணங்கள் வழங்குவோம்.
சிகரெட் பிடிப்பது குற்றமில்லை. எச்சரிக்கைகளும் அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றே அறிவிக்கின்றன. இன்று(ம்) பலரும் சிகரெட் பிடிக்கிறோம். அது நம்மைப் பிடித்துக்கொள்ளும்வரை பிடிக்கிறோம். தொழிலாக அந்த சிகரெட்டைச் செய்வது அறம் சார்ந்த சிக்கலைச் சிலரிடத்தே எழுப்பலாம். இப்படி ஒரு தீய பழக்கத்தை வளர்தெடுப்பதற்குத் துணைபோகிறேனே என்று. இதுவே அறச்சிக்கல். சட்டப்படி சிகரெட் செய்யும் தொழில் குற்றம் என்றாகவில்லை. அதாவது புறச் சட்டப்படி. ஆனால் அகச் சட்டப்படி அறத்தின்படி ஏதோ தவறிருக்கிறதே என்று கருதுவோம் (மனசாட்சி உறுத்துகிறது என்போம்). எளிய தீர்வாக நான் சிகரெட் செய்தால் என்ன, நீ வாங்காமல் இரு… என்றும் வாதிடலாம். இது அறச்சிக்கலைத் தீர்க்கும் வழியில்லை. அடுத்தவனிடம் கடத்திவிடும் சாமர்த்தியமே. மசால் வடையை நான் வைத்தால் நீ ஏன் வந்து பொறியில் விழுகிறாய் மசால் வடையைச் சாப்பிடாமல் போயேன் எலியே… மனிதன் இச்சைகளின் அடிமை. அவற்றைத் தூண்டுவதற்கான வழிவகைகளை விருத்தி செய்துகொண்டே ஆனால் கட்டுப்பாடோடு இரு என்று சொல்வதில் நியாயமில்லை. அறச்சிக்கல். சரி, அறச்சிக்கலை ஏற்று சிகரெட் தயாரிக்கும் அவ்வேலையை விடலாமா? உங்கள் விருப்பம்… அறம் செய்ய விரும்பு. சிகரெட் செய்ய விரும்பாதே.
இதே வகை வாதங்களை மதுபானம் சார்ந்த தொழில்களுக்கும் வைக்கலாம். சாராயக் கடைகள் இருக்கலாமா கூடாதா? அரசாங்கமே குற்றமில்லை என்கையில் தனி மனித அக அறத்தினால் மட்டுமே அவற்றை இல்லாமல் செய்ய இயலுமா? சாராயக் கடையில் பிழைப்பிற்காக வேலை செய்யலாமா? நான் குடிப்பவனில்லை, ஆனால் பிழைப்பிற்காக அந்தக் கடையில் வேலைசெய்யவே அமைந்திருக்கிறது. என்ன செய்வது? அறச்சிக்கல்.
கொலையாயுதங்கள் முதல் கோகோகோலா தயாரிக்கும் கம்பெனிக்கள் வரை அனைத்திலும் இவ்வகை அறச்சிக்கல்கள் உண்டு. உற்று நோக்கினால் இன்றைய அனைத்துத் தொழில்களிலும் இவ்வகை அறச்சிக்கல்களைத் தேடியெடுத்துவிடலாம்.
ஐ-போன். மதிபேசி. அதனாலல்லவோ தற்படத் தாண்டவமாடுகிறேன். இந்த மதிபேசி செய்யும் தொழில் சட்டப்படி குற்றமில்லை. அறமா? உதாரணத்திற்கு, மதிபேசிகளின் உள்ளே லித்தியம் அயான் பேட்டரிக்கள் உள்ளன. அவை இயங்குவதற்கான அவசியமான கனிமம் கோபால்ட். காங்கோ நாட்டில் இருந்தே கிட்டதட்ட உலகின் 60 சதவிகிதம் கோபால்ட் உற்பத்தியாகி வருகிறது. கோபால்ட் சுரங்கங்களில் குழந்தைகள்/சிறுவர்கள் வேலை செய்கிறார்கள். பெண்கள் வேலை செய்கிறார்கள். கூலி வேலை. அவர்கள் பிழைப்பு. அந்நாட்டின் சட்டதிட்டம் இதைக் குற்றமென்றாக்கவில்லை. குறைந்தபட்சம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. ஆனால் யுனெஸ்கோ, ஹூ போன்ற உலகளாவிய கண்கானிப்பு இயக்கங்கள் அலறுகின்றன. மடிக்கணினி, மின்சாரக் கார்களிலும் இதே லித்தியம் அயான் பேட்டரிக்கள் உள்ளன. கட்டுரைகள் சுரங்கங்களில் நிகழும் அநியாயங்களை வெளிப்படுத்தி நிரூபணப் படங்களும் கானொளியும் தாங்கி நேஷனல் ஜியாகிரபிக் போன்றவற்றில் வெளிவருகின்றன. வாசித்த நான் மனத்தினுள் உருவாகும் எனது அறச்சிக்கலைத் தீர்க்க ஐ-போன் உபயோகிப்பதை நிறுத்திக்கொள்ளலாம். ஆனால் அவற்றை (அல்லது லித்தியம் அயான் பேட்டரிக்களைச்) செய்வதையே தடை செய்ய முடியுமா? இந்தத் தொழில்கள் செய்வது அவை செய்யப்படும் நாடுகளில் குற்றமில்லை. ஆனால் மேற்படி விதத்தில் செய்வது அறமுமில்லை. சொல்லப்போனால் கனிமச் சுரங்கங்கள் பலவும் இவ்வித அறச்சிக்கலை எழுப்புமிடங்கள் என்றாவதால் அவற்றைச் சார்ந்த தொழில்கள் யாவையுமே அறத்திற்குப் பார்பட்டவை எனக் கருதலாம்.
அதனால் அறச்சிக்கலுக்குத் தீர்வாக நான் ஆப்பிள் கம்பெனியில் வேலை செய்வதை விட்டுவிட வேண்டுமா?
உனக்கு மனத்தினுள் தவறு என்று தோன்றினால் ஆப்பிள் கம்பெனியில் வேலை செய்வதை — நீ கிளர்க், அக்கௌண்டண்ட் என்று ஐபோன் செய்வதில் பங்குகொள்ளாத வேலைவகையில் அங்கு இருந்தாலும் — விட்டுவிடு. இவ்வகைத் தொழில்துறைகளில் வேலை செய்வதே பாவமா என்றால் இவ்வாறான விஷயங்களைக் கேள்விப்பட்டதுமே உனக்குப் அது பாவமாகத் தோன்றுகிறது. கேள்விப்பட்டாலும் இன்னொருவருக்குப் பாவமாகத் தோன்றவில்லை. அல்லது பாவம் என்று தோன்றினாலும் செய்யலாம், தேவைக்காக, பிழைப்பிற்காக. சிறுவன் கோபால்ட் கனிமச் சுரங்கத்தில் வேலைசெய்வது அவன் (அவன் குடும்ப) வயிற்றுப்பிழைப்பிற்காக என்பதுபோல…
நான் இவ்வகை அறப்பிறழ்வுகளை ஆதரிக்கவில்லை. ஆனால் ஐ-போன் உபயோகிப்பதை நிறுத்துவதற்கு எனக்குள் அறச்சிக்கல் போதுமான வீரியத்துடன் இன்னமும் எழவில்லை. அவர்கள் ‘எதிக்கல் மைனிங்’ என்று சொல்லிவிட்டால் போதும் மீண்டும் ஆப்பிள் சாப்பிடத் தொடங்கிவிடுவேன்…
தொழிலறம். மனிதக் கூட்டு முயற்சியில் உருவாகும் அனைத்துப் பொருள்களுமே ஒருவிதத்தில் அநியாயமாக உருவாக்கப்பட்டவையே அறச்சிக்கலை எழுப்புபவையே எனலாம். தொழில்களை விரித்தால் கட்டடம் கட்டும் தொழில் அதன் சார்ந்த உப தொழில்கள்… எகிப்திய பிரமிடுகளை விட்டுவைக்கலாமா, அல்லது நமது கோயில்களையும் மகத்தான கட்டடங்களையும்? அவற்றின உருவாக்கத்தில் அடிமைகளும் குழந்தைகளும் பெண்களும் வேலை செய்யவில்லை என்பது உத்திரவாதமா? அவ்வாறு உருவான கட்டடங்களை உலக அதிசயம் என்றறிவிப்பது நியாயமா? மனித இனம் தன்னைத் தானே கேலிசெய்துகொள்ளும் ஸிக்-ஜோக் போலில்லையா? ஆனால் இக்கட்டடங்கள் குற்றமா என்றால், அந்நாட்டுச் சட்டதிட்டங்களில் குற்றமில்லை. அறமுமில்லையே…
என் வீட்டுப் பணியாள் என்னிடம் ஊதியம் பெறுகிறாள். பல வீடுகளில் இவ்வாறு செய்து தன் பிழைப்பை உருவாக்கி வைத்துள்ளாள். என் மேட்டிமையை மட்டும் நோக்கினால் இன்னொரு மனிதனை எனக்காக என் அத்தியாவசிய வேலைகளையுமே செய்ய வைக்கிறேன் என்பதால் அவ்வாறு நிகழாமல் இருக்கப் பணியாள் வைத்துக்கொள்ளக் கூடாது எனலாம். அவ்வாறு சொல்வது சட்டமில்லை. சங்கங்களின் பரிந்துரை. சரியாகத்தான் தோன்றுகிறது. என் வேலைகளை நானே செய்துகொள்ளவேண்டும்… என் பணியாள் மறுக்கிறாள். என் பொழப்ப கெடுத்துறாதீங்க… இல்லம்மா வேற வேல செஞ்சு பொழச்சுக்குங்க… எனக்கு வேற வேல தெரியாதே… ஏதாச்சும் படிச்சு நல்ல வேலையா… எனக்குப் படிக்கத் தெரியாதுங்க…
அறச்சிக்கல் அசாத்தியமானது.
எங்கு நிறுத்திக்கொள்வது? காரில்தான் வந்திறங்கினேன். கார்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவை. மறுப்பதற்கில்லை. நூறு வருடங்கள் முன்னர் பலர் குதிரைகள் வைத்திருந்தனர் பணக்காரர்கள் கார்கள் வைத்திருந்தனர். இன்று உல்டா. பலர் கார்கள் வைத்திருக்கிறோம் பணக்காரர்கள் குதிரைகள் வைத்திருக்கின்றனர். சரி, கார் வேண்டாம் குதிரை வண்டியில் முன்போல் வரலாம்… மிருகவதை… தவிர சிட்டிக்குள் குதிரை வண்டி இன்றில்லை… யார் செய்தது? சரி நடக்கலாமே… நடந்து வந்தால் இன்றைய நீயா நானாவில் பேசமுடியாது. அல்லது நேற்றே கிளம்பியிருக்க வேண்டும். சரி எதையுமே செய்யாமல் சும்மா வீட்டிலேயே இருக்கலாம், ஆதிமனிதன் குகைகளில் இருந்ததுபோல… சும்மா இருக்கையில் சுவாசித்தால் நுண்னுயிர்களை உள்ளிழுத்து அதில் பலவற்றைக் கொன்றுவிடுகிறோம்… மனிதப்பிறவி இருப்பதாலேயே அவனியில் மற்ற அனைவருக்கும் அவதியே… என் கடன் பணி செய்யாமல் கிடப்பதே…
இந்தப் பின்புலத்திலேயே தொழிலறம் செய்யும் வேலையில் பாவம் என்பதை நோக்க வேண்டும். சட்டப்படி குற்றமில்லை என்பதால் தானே ஒரு நாட்டில் ஒருவகை வேலை புழக்கத்தில் உள்ளது. பிறகு அவ்வேலையைச் செய்வதில் குற்றமில்லை. ஆனால் அறமா என்றால் அது தனிமனித மனத்தைச் சார்ந்தது எனலாம்.
மனத்திற்கு ஒவ்விப் பிடித்தால் செய் இல்லை விட்டுவிடு.
தீர்வுகள் உள்ளனவா என்றால், சொல்லலாம். பன்னாட்டு நிறுவனங்கள் பெரிய தொழில்துறைகள் போன்றவற்றில் பணியாற்றுகையில் இவ்வகை அறச்சிக்கல்களை எதிர்கொண்டால் அவற்றிற்கான தீர்வு ஒருவகை. தனிமனிதனால் அறத்தை அங்குள்ள அனைவருக்கும் போதிக்க இயலாது. தனக்கு உருவான அறச்சிக்கலை எவ்வாறு சட்ட சிக்கலாய் மாற்றலாம் என்றே நோக்க வேண்டும். லித்தியம்-அயான் பேட்டரிக்கள் உருவாவதில் எங்கோ கனிமச் சுரங்கங்களில் சீர்கேடுகள் உள்ளதாலேயே நம் மனத்தினுள் அறச்சிக்கல் எழுந்துள்ளது என்பதைக கண்டுகொள்ள வேண்டும். மதிபேசிகளை செய்வதையே நிறுத்தச் சொல்வதைவிட, அந்தத் தொழிலில் பணியாற்றுவதை உடனடியாக விட்டுவிடுவதைவிட, எவ்வாறு மதிபேசி செய்யும் கம்பெனியை அநியாயக் கனிமச் சுரங்கங்களில் இருந்து தாதுப் பொருட்களைப் பெறுவதை நிறுத்தச் சொல்லலாம் — அவ்வாறு பெறுவது பல நாடுகளில் சட்டப்படி குற்றம் என்று கருதப்படும் பால்யப் பணியாளர்கள் என்பதற்கு அந்தக் கம்பெனி மறைமுகமாக உடன்போவது சரியல்லை என்பதை கவனப்படுத்தி — என்று செயல்பட முனையலாம். அறச்சிக்கலைக் குறைக்கச் செயல்வடிவமாய் எதிர்ப்பை முன்வைத்தோம் என்றாகும். ஆப்பிள் கம்பெனி காங்கோவில் இருந்து கனிமங்களைப் பெறுவதை நிறுத்திவிட்டதாக தற்போது அறிவித்துள்ளது. அறச்சிக்கலை பெரிய அளவில் தீர்ப்பதற்கு அவற்றை ஏதோ வகையில் சட்ட சிக்கலாய் மாற்ற முனைய வேண்டும்.
இதெல்லாம் தனியா ஒண்டியாளா என்னால வேலைக்காவற மேட்டரா என்றால்… தொழிலில் தனி மனிதனுக்கான அறச்சிக்கலை தீர்க்க வழி அவனது அகவளர்ச்சியே. பிழைப்பிற்காகவே ஒரு பணியைச் செய்கிறோம் என்பதில் தெளிவு வேண்டும். மனத்தின் அழைப்பிற்காக அல்ல. நம் மனம் விரும்பும் அழைப்பு எனும் செயலைத் தொழிலாய்ச் செய்வதில் என்றுமே நமக்கு அறச்சிக்கல்கள் எழாது, யோசித்துப்பாருங்கள். அதனால் வாழ்க்கையின் ஏதோ நிலையில் நாம் செய்யும் தொழில் பிழைப்பிற்காகவே என்றும் அதில் இவ்வகை அறச்சிக்கல்கள் உள்ளன என்றுமாகிவிட்டால் நமக்கு அழைப்பு எனும் வகையில் விருப்பமான தொழில் எது என்பதையும் யோசித்துக்கொள்ள வேண்டும். இந்தப் புரிதலுக்குப் பின்னர் எத்தனை இயலுமோ அத்தனை அழைப்பு சார்ந்த அந்தத் தொழிலை அல்லது அத்தொழில்துறையில் பிழைப்பைத் தொடர்வதற்கான வழிவகைகளையே மேற்கொள்ள வேண்டும்.
அக/மன வளர்ச்சியே அறத்தை கற்றுக்கொடுக்கும். அக வளர்ச்சியே புரிதல்களைக் கூட்டும் குழப்பங்கள் சில நீங்கித் தெளிவுகள் பிறக்கும். சாராயக் கடையில் வேலை செய்பவர் அது தவறோ என்கிற அறச்சிக்கலுக்குள் விழுந்துவிட்டார் என்று கருதுவதைவிட அந்த அறச்சிக்கலை தன்னுள் எழுப்பிக்கொள்ளும் அகவளர்ச்சி நிலைக்கு தன்னை உயர்த்திக்கொண்டுவிட்டார் எனலாம். பார்க்கப்போனால் அவரே சாராயக் கடையில் வேலை செய்யத் தகுதியானவர் எனலாம். குடிக்க வருபவர்களை அறச்சிக்கலினூடே நோக்கி அவர்கள் சிறுவர்களாய் இருப்பின் கடிந்து துரத்தி விடுவார். பெண்களாய் இருப்பின் பேசித் திருப்பி அனுப்பலாம், மொடா குடியர்களையும் குறைவாகக் குடிக்க வழி செய்யலாம்…
தொழிலறம் தனிமனிதனின் தன்னறமே.
*
விஜய் டிவியின் நீயா நானா http://www.hotstar.com/tv/neeya-naana/1584 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒரு நாள் அவகாசம் கொடுத்து அழைத்திருந்தனர் (இதையே அனுபவப் பகிர்வாக எழுதி வைக்கலாம்). தொழில் செய்வதில் பாவம் உள்ளதா இல்லையா என்கிற தலைப்பில் நேற்று நிகழ்ச்சியின் ‘ஷூட்டில்’ நான் பேசியதன் எழுத்துவகை விரிவாக்கமே மேலே உள்ள கட்டுரை.
[தொலைகாட்சி நிகழ்ச்சியில் வெளிவந்த வடிவம் இந்தச் சுட்டி வழங்கும் கானொளியில் உள்ளது https://www.hotstar.com/tv/neeya-naana/s-80/human-values-vs-business-profits/1100005324]
*