அவதார ஆளுமை, அவனவனுக்கோர் பொழிப்பறை.
தினமொரு பேச்சு, தேங்கினால் போச்சு.
ஒட்டியோர் விருப்புரை, வெட்டி ஓர் வெறுப்புரை
அடுத்தவன் வைரலானால் அவனுக்கோர் அநாதியுரை.
பொதுவெளிப் பொய்மை, பொறுப்பற்ற புலமை.
சுயவீக்கச் சிந்தை, சாதிமதச் சந்தை.
அநித்திய ஆலாபனை, ஆளுக்காள் நாட்டாமை.
ஆள்பவன் அரற்றினால் அவனுக்கோர் அன்லைக்கு.
சுயமோகச் சுவர், அஜந்தா குகை.
சுப்பனின் சிகை. அவன் மிஸஸின் நகை.
எல்லோரா சென்றதே எல்லோர்க்கும் சொல்லவே.
என்துறை வல்லமை எக்கேடோ போட்டமே.
தற்படத் தாண்டவம், தாவிவரும் தனிவேடம்.
துகிலுரியச் சம்மதம், துணிந்தபின் எண்ணுவம்.
மந்தை மனநிலை, மாயவலைக் கொடை.
மறுநாள் கேட்கையில் மறந்தே போயிந்தே.
சிந்தனை சாத்தியம், நிந்தனை நிச்சயம்.
நேற்று நீ இன்று நான் சினிமா நித்தியம்.
சந்ததி சறுக்கல் சீர்மைச் சரிவு
சாதிமதங் கடந்த சன்னி லியோன் சிரிப்பு.
அகப்பேய் அலைய அம்மண அலைவெளி.
இலக்கிலா எத்தனிப்பு, இணைய ஆட்சி.
மனோதிடக் குலைவு, மதிநல மயக்கம்
போர்-ஜீ புரட்சி, மதிபேசி மாட்சி.
நூதனப் பாய்ச்சல், நுனிப்புல் மேய்ச்சல்.
பொழுது கரைத்தல், பிறவிப் பயன் நீத்தல்.
சிகாகோ சித்தரும் சிறுபிள்ளையாகலாம்.
சேர்ந்துகொள்ளுங்கள் சமூக வலை.