அறிவியலுக்குப் பேரணி நடந்தேறியது

Standard

அறிவியலுக்குப் பேரணி — March for science — இன்று காலை எலியட்ஸ் கடற்கரைச் சாலையில் நடந்தேறியது. இருபது முப்பது பேர்கள் வருவார்கள் என்று துணைக்குத் துணைவியாரையும் அழைத்துச் சென்றிருந்தேன். நூறு பேர்களுக்கும் அதிகமாகவே இருந்தனர்.

ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு அஞ்சலி அறிவியலுக்கான உலகெங்கிலுமான கடமைகள் யாவை யார் யார் என்ன பேசிப் பேரணியைத் தொடங்குவது என்று சற்று திக்கு தெரியாமல் திக்கிவிட்டுப் பேரணி ஓரளவு சரியான நேரத்திற்கே தொடங்கி வெற்றிகரமாகவே நடந்தேறியது. நடை முடிந்ததும் மீண்டும் பேசத் தொடங்கினார்கள். முக்கியமான சாரம் கூடியிருந்தோரின் கையெழுத்து ஆமோதிப்புடனான கோரிக்கைகளை கவர்னரிடம் கொடுக்கப்போகிறார்கள். பிறகு நாடு தழுவியப் பேரணிகள் முடிந்ததும் இக்கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் கொண்டுசேர்க்கப்போகிறார்கள். எப்படியும் காவிரியில் தண்ணீர் வருவதற்குள் இக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு சார்ந்த முடிவுகள் மத்திய பட்ஜெட்டில் அமலாக்கப்பட்டுவிடும் என்றே கருதுகிறேன்.

பேச்சுக்களில் போராட்டம் வார் பாத் (war path) என்பதுபோன்ற சொற்றொடர்களை பயன்படுத்தியிருக்கத் தேவையில்லை. அறிவியலாளன் அடிப்படையில் மனத்தளவிலும் வன்முறையற்றவன். அதேபோல் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைச் சொல்வதைத் தடைசெய்யவேண்டும் என்றார்கள். கருத்துக்களை தடைசெய்வது என்று பேசுவதே அறிவியல் சிந்தைக்குப் புறம்பான செயல். கருத்துக்களை எத்தகையதெனினும் தாராளமாக யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஜனநாயகத்தின் அடிப்படை. கருத்துகளுக்கான காரணகாரியத் தரவுகளையும் நிரூபணங்களையும் கேட்கையில் அளிப்பதற்கும் விளக்குவதற்கும் தயாராக இருக்கவேண்டும். ஆதாரமற்ற கருத்துக்களைத் துறைவல்லமை இன்றிப் பொழிகையில் அதே தீவிரத்துடனும் பரவும் திறனுடனும் அவை இன்னின்னவை இத்தகையவை என்று தரம் பிரித்து உடனடியாக அடையாளம் காட்டிப் பரப்புவதற்கு அறிவியலாளர்கள் வழிவகை செய்துகொண்டால் போதும். அதற்குப் பிறகும் மக்கள் மடமையான கருத்துக்களையே ஆதரிப்பர் என்றால் அவர்களே அதற்கான விளைவுகளையும் சந்திப்பார்கள். அறிவியல் சிந்தை அவரவரிடத்தேயே தொடங்கி வளர வேண்டும். இன்னொருவர் புகட்டுவது பாடமாக மட்டுமே செயல்படும். படிப்பினையாகாது.

IMG_2077

என் கையில் இருந்த ‘மார்ச் பார் சயன்ஸ்’ அட்டையை ப்ரெஸ்ஸிற்கு கொடுக்க வேண்டும் என்று பிடுங்காத குறையாய் வாங்கிப்போய் தன் வயதொத்த இன்னொரு பெரியவரிடம் கொடுத்தார் ஒரு ஒருங்கிணைப்பாளர். ஏற்கெனவே கடற்கரை வெய்யில் ஏறி ஏதுடா இதுதான் சயண்டிபிக் டெம்பரோ இத்தனை தகிக்கிறதே என்று நான் நிழலுக்குப் பிடித்திருந்த அட்டையையும் பிடுங்கிவிட்டாரே என்று நானும் காரேறி ஆனந்தபவனில் இட்லி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்துசேர்ந்தேன்.

மதிபேசியைத் தடவினால், வாட்ஸப்பில் வழக்கமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளும் அதை ஒட்டி இன்று தமிழர் புத்தாண்டு தொடங்கும் தினமில்லை என்கிற பதில் வாழ்த்துகளும் குவிந்தவண்ணம். தேடிப்பார்த்ததில் அறிவியலுக்குப் பேரணி நிகழ்ச்சியை ஒட்டி வாட்ஸப்பில் ஶ்ரீரங்கம் நண்பர்கள் ஓரிருவர் மஞ்சள் கட்டைவிரல்கள் உயர்த்தி எனக்கு ஈமோஜி போட்டிருந்தனர். அடுத்தமுறை ஶ்ரீரங்கம் செல்கையில் சென்னையில் இருந்து ஒரு பாட்டில் மினரல் வாட்டர் எடுத்துச் சென்று காவிரியில் கொட்டிவிட்டு வருவதாக உள்ளேன். ஏதோ என் அறிவியல் மனத்தின் மூட நம்பிக்கை.