அறிவியல் வாதம்

Image

அதைப் புரிந்துகொள்ளமுடியாத உங்கள் இயலாமையே அறிவியலுக்கு எதிரான செம்மையான வாதமாகிவிடாது.
அதைப் புரிந்துகொள்ளமுடியாத உங்கள் இயலாமையே அறிவியலுக்கு எதிரான செம்மையான வாதமாகிவிடாது.

[picture credit: Arunn, 2017 | Knots in a pillar of Melkot temple]

*

அறிவியல் சிந்தை என்பது பற்றி ஏற்கெனவே கற்க கசடற என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். முன்வைத்துச் சில கருத்துகள்.

உதாரணமாக, குரங்கிலிருந்து மனிதன் பிறக்கவில்லை அதனால் டார்வின் தவறு அதனால் பரிணாமம் பற்றிய கருத்துகளைப் பள்ளியில் போதிக்கத் தேவையில்லை என்று சமீபத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் அரசியல்வாதி ஒருவர் மேடையில் பேசினார். ஓரிரு தினங்களில் விபரம் புரிந்த அரசியல்வாதிகள் அவரை இவ்வாறு பேசுவதைத் தவிர்த்து அறிவியலை அறிவியலாளர்களிடம் விட்டுவிடுமாறு கருத்து தெரிவித்தனர்.

கமல்ஹாஸன் நடிகராக இருந்த அன்றே இதே போல் டார்வின் தியரி சந்தேகத்திற்குரியது என்றார். கேயாஸ் தியரியில் (எழுத்தாளார்) சுஜாதாவுடன் சேர்ந்து தானும் கரைகண்டதாய்க் கருத்து சொன்னார். அன்று அவர் கூறியதை மறுத்து கமல்ஹாஸன் வாயிலாக அறிவியல் என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். (தொடர்பான அடுத்த கட்டுரை கேயாஸ் தியரியும் வண்ணத்திப்பூச்சி விளைவும் )

இன்று அரசியல்வாதியாகி உள்ளார். அன்றே இப்படி எந்த நிரூபணமோ தரவுகளோ தரத்தேவையின்றி தன் கருத்துகளை அள்ளிவிடுகிறாரே இவர் பின்னாளில் அரசியலில்(தான்) வலம் வருவார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்திருந்தால் அந்தக் கட்டுரையை எழுதியிருக்க மாட்டேன். என்ன செய்வது அறிவியல்காரனுக்குப் புத்தி மட்டு.

குரங்கில் இருந்து மனிதன் பிறக்கவில்லை. டார்வின் அவ்வாறு சொல்லவில்லை. அதாவது, ஒரு அப்பா குரங்கு ஒரு அம்மா குரங்கு இருவருக்கும் உடலுறவிற்கு பின்னர் ஏற்படும் சந்தான ப்ராப்தியாக மனிதன் அவர்களுக்குக் குழந்தையாகப் பிறக்கவில்லை. டார்வினும் இப்படிச் சொல்லவில்லை. அவர் கூறும் — இன்றளவில் ஜெனடிக் சயன்ஸ் போன்ற ‘புதிய’ துறை வழங்கியவை சேர்த்தியாகப் பல நிரூபணங்களுடன் சரியான கூற்றே என்று ஏற்றுக்கொள்ளப்படும் — பரிணாம வாதமும் இவ்வாறு கூறவில்லை. அதனால் குரங்கிலிருந்து ‘நேரடியாக’ மனிதன் பிறக்கவில்லை என்பது சரியே. குரங்கு என்று ஏற்கத்தக்க அங்க அடையாளங்களுடன் இருக்கும் ஒரு உயிரினத்திடமிருந்து பிறக்கும் அடுத்த சந்ததி அதேவகைக் குரங்காக மட்டுமே இருக்க முடியும். அறிவியலும் இதையே சொல்கிறது. மறுக்கவில்லை. இதற்கு அரசியல்வாதிகளின் முட்டியடி வக்காலத்துகள் தேவையில்லை.

அதைப் புரிந்துகொள்ளமுடியாத உங்கள் இயலாமையே அறிவியலுக்கு எதிரான செம்மையான வாதமாகிவிடாது.

அறிவியல் அல்லது பரிணாம உயிரியல் கூறுவது இன்னும் நுண்மையானது. இன்று குரங்கு என்று நிறுவப்படும் உயிரின வம்சாவளிக்கும் இன்று மனிதன் என்று நிறுவப்படும் வம்சாவளிக்கும் என்றோ தொலைதூரப் (பல நூற்றாண்டுகள்) பின்னாளில் ஒரே பொதுவான மூதாதையர் (பொதுவாதையர்!) வம்சாவளி இருந்திருக்கவேண்டும் என்பதற்கான ருசு உள்ளது என்கிறது. ருசு, நிரூபணம் என்பவை மறைமுகமானவை. தொட்டால் சுடும் என்பது நேரடி நிரூபணம். இங்கு ஸ்விட்ச் போட்டால் அங்கு லைட் எரியும் (இடையே கண்ணுக்குத் தெரியாத கரெண்ட் போவதால்) என்பது மறைமுக நிரூபண வகை. பரிணாம வாதத்திற்கான ‘மறைமுக ருசுக்கள்’ பாஸில் எவிடென்ஸ். தொல்பொருள் ஆய்வு. எலும்புகளின் உருவங்களின் நகங்களின் பொதுத்தன்மை… இப்படி. அதனால் குரங்கிலிருந்து ‘நேரடியாக’ மனிதன் பிறக்கவில்லைதான். அது மனிதப் பெண்ணுடன் கொரில்லா உறவுகொள்ள முயல்வதாய் அமைக்கப்படும் சுஜாதா செக்ஸ் கதைகளிலுமே சாத்தியமில்லை. அறிவியல் கூறுவனவற்றிற்கு நிரூபணங்கள் உண்டு. அவற்றை வேண்டுமானால் கேள்வி கேட்டு தரம் பிரித்து வாதங்கள் புரிந்து நிராகரிக்கலாம் புதிய நிரூபணங்கள் கோரலாம் தேடலாம் பெறலாம். அதனால் சித்தாந்தங்கள் மாறலாம்… ஆனால் அரசியல் பேச்சிற்கு என்றுமே நிரூபணம் தேவையில்லை. அதனால் அது அறிவியலும் இல்லை. இவ்வாறு மனத்தளவிலேனும் பொதுவெளிக் கருத்துக்களையாவது தரம் பிரித்துக்கொள்ள முயலவேண்டும். இதுவே அறிவியல் சிந்தையின் — பகுத்தறிவு எனலாம், ஆனால் அந்தச் சொல்லையும் அரசியல் சாயம் பூசி வைத்துள்ளோம் — அடிநாதம்.

இதெல்லாம் சரி. அறிவியலை, அதன் சிந்தனை முறையை வளர்க்க நான் தினம் என்ன செய்யலாம் என்றால்… வீட்டில் பெருமாள் சேவிப்பதை நிறுத்தவேண்டும் என்பதில்லை. ஆன்மீக அரசியல் செய்வதாக இருந்தாலும் ஓகே. இரவு படுக்கப் போகும் முன்னர் மிளகு தட்டிப்போட்ட மஞ்சள்பொடி கலந்த பாலுக்கு பதிலாய் ஆர்லிக்சில் விபூதி கலக்கிக் குடித்தாலும் ஓகே. ஆனால் பொதுவெளியிலேனும் கருத்துகளையும் சம்பவங்களையும் எதிர்கொள்கையில் ‘ஏன், எதற்கு, எப்படி…’ என்று மனத்தளவிலேனும் கேள்விகள் எழுப்பிக்கொள்ளுங்கள். உங்கள் சமநிலை அறிவிற்குத் திருப்தியளிக்கும் ‘இதனால், இவ்வாறு…’ எனும் காரணகாரிய பதில்களைப் பெறாமல் செயலையோ ஆதரவையோ முடிவையோ செய்யாதீர்கள் வழங்காதீர்கள் முனையாதீர்கள். முகநூல் நண்பர்கள் மத்தியில் நடுநிலை நக்கிகள் என்று பேரெடுக்கும் பேரபாயம் இருந்தாலும் என்றும் இதைச் செய்யவே முயலுங்கள். ராசிபலன் பார்க்கமலேயே சுபிட்சமும் நிம்மதியும் பிறக்கும். மனது தெளிவாகும். தெளிவான மனத்திலிருந்தே தெளிவான சிந்தை எழ வாய்ப்புண்டு. ஆழமாக யோசிக்க வேண்டியதில்லை. தெளிவாக யோசித்தால் போதுமானது. அவசியமானதும் கூட. (வீட்டில் எதெற்கெடுத்தாலும் ஏன் என்று கேட்காதீர்கள். சாப்பாடு கிடைக்காது)

*