ரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்

Standard

Riccardo Chailly என்பதை எவ்வாறு உச்சரிப்பது? முதல் பெயரில் நம்பும் உச்சரிப்புத் தர்க்கம் இறுதிப் பெயரில் கவிழ்த்துவிடுகிறது. Riccardo என்பதை அப்படியே வாசித்து ரிக்கார்டோ என்றால், உச்சரிப்பு சரியே. Chailly என்பதை அதே தருக்கப்படி சைலி என்றால் போச்சு. சாய்லீ-யும் இல்லை, ச்சைலி-யும் இல்லை. சில்லி-யும் இல்லை. வானொலி அறிவிப்பில் பிரெஞ்சுப் பெண்மணி Chailly என்பதை ஷாயி… என்கிறார், அதிகாலை மூன்றரை மணி கிரக்கமாய். நமக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. கிரக்கமான பிரெஞ்சுப் பெண்குரல் இனி அமையாது என்றாலும் மதிப்பான அமைதியான எழுச்சியான சமகால மேற்கத்திய செவ்வியலிசை நடத்துனரின் பெயரைச் சரியாக உச்சரித்துக் குறிப்பிடவேண்டும் என்பதே அவா. ஆனாலும்… அப்டினா Shaayee-ன்னே ஆங்கிலத்தில் எழுதி வெக்கலாம்ல, அப்டியே எழுத்துக்கூட்டி படிச்சு சரியாச் சொல்லுவோம்ல… என்றே அந்தப் பிரெஞ்சுப் பெண்மணியிடம் அந்த அதிகாலைக் குளிரிலும் கேட்கத் தோன்றுகிறது.

பெர்னாட்-ஷா என்றோ கேட்டிருக்கிறார். பெயர்களிலிருந்தும் சொற்கள்வரைப் பொதுப்படுத்தி fish=ghoti என்கிற சமனில் ஆங்கிலத்தையே வாரியிருக்கிறார் (எவ்வாறு என்று இணையத்திலேயே தேடிக்கொள்ளலாம்).

தமிழில் எழுதிவைப்பதை அப்படியே வாசித்தால் சரியான உச்சரிப்பு அநேகமாய் வந்துவிடும். ஆங்கிலத்தையும் இதுபோலவே என்று நம்பி ஏமாந்த ஆங்கிலேயர்களைப் போலவே நானும் ஏமாந்திருக்கிறேன். ஆனாலும் rendezvous என்பதை அப்படியே வாசித்து ரெண்டெஸ்வுஸ் என்று பள்ளியில் சொல்லிக்கொண்டிருந்தவன், ராந்தேவு என்று சரிசெய்துகொள்ளும் அவசியம் இளமையில் இருந்தது — ராந்தேவு வித் ராமா என்கிற ஆர்தர் கிளெர்க் புத்தகத்தலைப்பிலேயே அச்சொல்லை முதலில் ஓரளவு சரியாக உச்சரித்தேன். (ஆனால் Rama என்பது ராமா-வா ரமா-வா என்று இன்றுவரை குழப்பம் உள்ளது. அப்பெயருக்கான ஆளை நேரில் கண்டதுமே சில சமயம் தெளிவு கிடைக்கிறது. இந்தியர் சிலரை பெயரளவிலேனும் என்றுமே ஆங்கிலப்படுத்தக்கூடாது என்பேன்).

அன்று ஆங்கிலத்தை — ஒரு மொழியைச் — சரியாகப் பயிலவேணும் என்று கருதியதால், ஆங்கிலப் பெயர்களையும் முடிந்தவரை சரியாகவே உச்சரிக்கச் சிரத்தை எடுத்துக்கொண்டிருந்தேன். வயதேறிய இன்று அவ்வாறு இல்லை.

Poincare என் அபிமானத்திற்குரிய ‘முன்னோடி’ விஞ்ஞானிகளில் ஒருவர். ஆனாலும் இன்று தமிழில் எழுதிவைக்கையில் (அல்லது பேசுகையில்), Poincare என்பது பாயின்கேர்-ஆ பாய்ங்கர்-ஆ பிரெஞ்சு உச்சரிப்பான பாய்ங்கரே-ஆ (அதற்கென e மேல் தீற்றல் இட்டிருப்பர்; resume என்பதை ரெஸ்யூம் எனாமல் ரெஸ்யூமே என்று உச்சரிப்பதைப் போல்) என்று சிரத்தையுடன் அகராதி அகராதியாகத் தேடித் திரிவதாய் இல்லை. ஒரு காலத்தில் செய்திருப்பேன். பல வருடங்களாய்ப் ‘படித்த’ ஆங்கிலேயர்களைச் சந்தித்துப் பழகிய பிறகான இன்றைக்கு அவ்வாறு இனி பெயர்களின் உச்சரிப்பிற்கென மெனக்கெடுவதாய் இல்லை.

Poiseuille என்பவர் பாய்ஸியுல்லே இல்லே பாய்ஸூ என்றால் போகட்டும். Renoir என்பவர் ரெனாயர் இல்லை ரான்வா என்றால்… Euler என்பவர் யூலர் இல்லை ஆய்லர் என்றால்… அதை Ranwa, Oiler என்றே எழுதிவையுமே என்றே இன்று சொல்லத் தோன்றுகிறது (noir என்பது நுவார்-ஆம், நான் நம்ம நாயர் என்று நினைத்திருந்தேன்). எப்போதும் ஆங்கிலேய மாமியாரே அடித்துக்கொண்டிருந்தால் எப்படி? தமிழ் மருமகள் நான் மட்டும் ஆங்கிலேயருக்கு அறிவுரை கொடுக்கக்கூடாதா என்ன? இவர்களுக்காக நாராயணன் என்கிற தன் பெயரை நொரைய்ன் என்று உச்சரித்துப் பழகிக்கொள்ளும் கூட்டம் ஒன்று பிழைப்பிற்காக இன்று அங்கிருந்தாலும் இந்த என் அறிவுரையை ஆங்கிலேயரிடம் சொல்லிவிடவே தோன்றுகிறது. என்னத்தான் நான் இந்திய பூர்ஜியாஸி என்றாலும். ஆமாம் bourgeoise என்பதை இனி அப்படியே வாசிக்கப் போகிறேன், ‘பூஷ்வா மெண்டாலிட்டி’ என்று தில்லுமுல்லு இந்திரன் போல என்னை நீங்கள் வசைந்து டேபிளில் குத்தினாலும்.

பிரெஞ்சுக்காரனோட எப்பவுமே இந்தத் தொல்லைதான்யா என்றால் Wodehouse என்பதை ஆங்கிலேயர்களே வோட்ஹௌஸ் என்று ‘சரியாக’ வாசித்தாலும் ‘அது வுட்ஹௌஸ்’ என்று அந்தப்பெயருக்கான எழுத்தாளரே பலமுறை அங்கலாய்த்திருக்கிறார். அப்ப WoodHouseந்னே எழுதிவெக்கலாமுல்ல; எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்ற முட்டாள் சனமெல்லாம் துரைசாணி பேரைச் சரியாச் சொல்லுவோம்ல…

நான் மாற வேண்டுமென்றால் ஆங்கிலேயர் செய்யவேண்டியது ஒன்றுண்டு.

அருண் நரசிம்மன் எனும் என் பெயரை என்று ஆங்கிலேயர் சரியாக உச்சரிக்கிறாரோ, காந்தி என்பதை கேண்டி ஆக்காமல் காந்தி என்றே என்று ஆங்கிலேயருக்குச் சொல்லவருகிறதோ — சொல்லப்போனால், முதல் பத்தியிலுள்ள ‘ஷாயி’ பஜனை போலில்லாமல் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கும் என் பெயரை அப்படியே வாசித்தால் போதும், சரியான உச்சரிப்பு வந்துவிடும் — அன்றிலிருந்தே அவர்களின் பெயர்களை சரியாக உச்சரிக்க முனைவேன். அதுவரை ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை எனக்கு அப்போது தோன்றும் வகையிலேயே தமிழில் எழுதி வைப்பேன்.

Toucan என்பதை டௌகன் என்பேன். அடுத்த முறை டூகன் என்பேன். டூகேன் என்று அயல்வாழ் இந்தியர்கள் சரியாகச் சொல்லிக்கொள்ளட்டும். தமிழனாகிய நான் அவ்வாறு ‘சரியாகச்’ சொல்வதற்கு அதை tukane என்று ஆங்கிலேயர் எழுதிவைக்கட்டும். மேலும் தமிழில் அந்தப் பறவையை நான் சந்தித்ததேயில்லை. கவலைப்படுவதற்கு நான் என்ன இரண்டாம் உலகப் போர்முனையில் லொலபலூஸா சொல்ல வராத ஜப்பானியனா? லெமூரியாவிற்கு வடக்கே இந்தியாவின் தென்முனை மூலையில் முடங்கியிருக்கும் எனது உச்சரிப்பினால் கிண்டல் செய்துவிட்டேன் என்று தென்னமேரிக்க Toucanநால் எனக்கு பேராபத்து ஒன்றுமில்லை.

Einstein அவரது பூர்வ ஜென்மப் புன்னியத்தில் ஐன்ஸ்டைன் என்று எனது குருட்டாம்போக்குச் ‘சரியான’ உச்சரிப்பில் இன்றுவரை தப்பித்துவிட்டார். ஆனால் என் அபிமானத்திற்குரிய விஞ்ஞானிகள் பலரும் என் வாயில் இனி ‘புகுந்து புறப்படவே’ செய்வார்கள். Carl Sagan ஒருமுறை கார்ல் ஸேகன் என்றும் மறுமுறை கார்ல் சாகன் என்றும் என்னால் அழைக்கப்படுவார். திரும்பிப் பார்க்காவிட்டால் போகட்டும். சாஜன் என்று அழைக்காமல் விட்டேனே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளட்டும்.

இந்த லாஜிக்கை கேள்விப்பட்டதும், ‘நீயெல்லாம் படித்தவனா, ஒரு பேராசிரியரா…’ என்று வரிந்துகட்டிக்கொண்டு வந்து ‘ஒனக்கு இங்லீஷும் வரலை தமிழ்லயும் எழுத வரலை’ என்று அர்ச்சனை செய்வது பொதுவில் படித்த ஆங்கிலேயராக இருக்க மாட்டார். கட்டுரையின் மையக் கருத்துடன் விவாதிப்பதே சால்பு என்றும் அவர் தெரிந்து வைத்திருப்பார். என் பெயரை ஏரன் அரூஉண் ஹரௌன் என்றெல்லாம் சாகடித்தாலும்.

*