மாநகர் (சு)வாசம்

Standard

மார்கழி தை முடிந்து இன்றும் குளிர்கிறதே காலையில் பத்து மணிக்கும் மாநகரில் பல இடங்களில் பனிப்புகை போலிருக்கிறதே. உலகில் பல மாநகரங்களில் மாசுக் காற்றினால் இன்றளவில் ஆண்டு முழுவதும் இவ்வாறான பனிப்புகைக்காலமே. முன்பனி பின்பனி என்றில்லை நடுபனி கெடுபனி. அனைத்துமே பகலில் வெளிர் மஞ்சள் நிறத்தில்.

மதிபேசிக்களில் ‘க்ளீன் யேர் இண்டக்ஸ்’ போன்ற ஆப்புக்களின் வழியே சுற்றுச்சூழலையும் அவற்றின் மாசுக்களையும் பொறுப்பான குடிமகனாக நாள்தோறும் கவனித்து காரேரி அலுவலகம் சென்றதும் ‘இந்த நாடு நேரே நாய்களிடம் சென்றுகொண்டிருக்கிறது’ என்று சக மதிபேசித் தலைமுறையினரிடம் கையாலாகாத அறச்சீற்ற முறையீட்டில் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடும் என்னைப்போன்ற மற்றுமொரு ‘வாட்ஸப் வாரியர்’ ஆக இருக்கும் உங்களுக்கும் இது தெரிந்ததே.

உலக நாடுகளின் சுவாசக் காற்றுத் தரத்தின் அளவீடு மணிநேர துல்லியத்தில் [https://waqi.info/] இணையதளத்தில் கிடைக்கிறது. கார்பன் சல்பர் நைட்ரஜன் இவற்றின் ஆக்சைடுகள் சுவாசிப்பதால் காலப்போக்கில் கேடு என்றால் சாலைப் போக்குவரத்தினால் காற்றில் உலவும் துகள் மாசுக்கள் நுரையீரலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்பவை.

நெஞ்சுக் கூட்டினுள் தலைகீழாக வேர்விட்டு வளர்ந்த மரம் போல நுரையீரல் தொண்டைக்குழாயில் சுவாசக்குழாய் அடிமரமெனத் தொடங்கிப் படிப்படியாகப் பல இரட்டைக் கிளைகளாகப் பிரிந்து ‘அல்வியொலர் ரீஜன்’ என்றழைக்கப்படும் பிரதேசமாக விரிகிறது. இதன் முடிவில் அதாவது பதினேழாம் கிளை முதல் இருபத்தியோராம் கிளைவரை மைக்ரோ- அளவில் (இங்குள்ள முற்றுப் புள்ளி ஒரு மில்லி மீட்டர் என்றால் அதைவிட ஆயிரத்தில் ஒரு பங்கு சிறிதான அளவு) பல்லாயிரக்கணக்கானப் பொத்தல்களாகி முடிகின்றன. நாம் ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கையிலும் மூக்கு தொண்டை எனத் தொடங்கி இந்த அல்வியொலைக்கள் வரை வந்துபோகும் சுவாசக்காற்று அங்கு (17 முதல் 21 வரையிலான கிளைகளைச்) சுற்றியுள்ள தசைச் சுவர்களில் பொதிந்திருக்கும் ரத்தநாளங்களினூடே பாய்ந்திருக்கும் ரத்தத்தோடு பிராணவாயு கரியமிலவாயு இவற்றைப் பரிமாறிக்கொள்கிறது. ஆக்சிஜன் செறிந்த ‘நல்ல ரத்தம்’ இருதயத்தின் உந்துவிசையோடு உடலுக்குள் பாய்கிறது. மேலே குறிப்பிட்ட அசுத்தக் காற்றின் மாசுத் துகள்களின் ஒரு சாரர் மைக்ரோ அளவினர் என்பதால் நகரவாசிகளின் நாசித்துவாரங்கள் வழியே நுரையீரல் உடல்மரத்தினுள் சுவாசத்தோடு புகுந்து முதல் பல கிளைகளையும் கடந்து எங்கு ரத்தத்துடன் ஆக்சிஜன் பரிமாற்றம் நிகழ்கிறதோ அந்த ‘அல்வியொலை’ காற்று ஓட்டைகளைச் சல்லடைக்கண்களில் உமித்துகள்களென அடைத்துக்கொள்கின்றன. நுரையீரல் காலப்போக்கில் செயலியக்கம் குன்றி ரத்தம் முழுவதுமாகத் தூய்மை பெறாமல் வெளியேறும்.

புழுதிக்காற்றின் தூசித் துகள்கள் எளிதில் நூரையீரல் வரை உட்புகாமல் தடுப்பதற்கே மூக்கினுள் மயிர்கற்றைகளும் இன்னபிற ‘போரஸ்’ சல்லடைகளும் உள்ளன. தும்மலை வரவழைத்து ஓரளவு பாதுகாக்கவும் செய்கின்றன. குறைந்த பட்சம் அருகிலிருப்போர் ‘தீர்க்காயுசு’ என்று வாழ்த்துவதினாலும் ஆயுள் கெட்டியாகலாம். ஆனால் காற்றில் மாசுத்துகள்கள் மைக்ரோ- அளவில். மூக்கின் முடிக்கற்றை சல்லடைக்கண்கள் சுமாராக 50 – 100 மைக்ரான்கள் என்றால் PM2.5 PM10 போன்று தரம் பிரிக்கப்படும் இந்த மாசுத் துகள்கள் பத்து மைக்ரான்களுக்கும் குறைவான அளவுடையவை. மணற்புழுதித் துகள்களைவிட அளவில் சிறுத்திருப்பதால் நாளடைவில் இவை சுவாசத்தோடு உள்சென்று ஓரளவேனும் நுரையீரல் ‘அல்வியொலை’ சுவாசப் பொத்தல்களைப் பதம் பார்த்துவிடுகின்றன.

இந்தியத் தலைநகரம் டில்லி மாசுச்சூழலினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநகரம். டில்லியில் காற்றில் நாள்தோறும் போக்குவரத்து உண்டாக்கும் மாசு சுவாசச் சுகாதாரத்தின் அபாயகட்டதிற்கு அருகிலேயே. இதைக் குறைப்பதற்கென மாநகராட்சி திட்டங்கள் சில வகுத்திருக்கிறார்களாம். அதில் ஒன்று ஒற்றைப் படையில் இரட்டைப் படையில் முடியும் எண்கள் கொண்ட வாகனங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாளே சாலையில் இயங்க அனுமதி. திட்டத் தாளின் எதிர்பார்ப்பு அன்றாடம் சாலையில் புழங்கும் வாகனங்கள் பாதியாகக் குறைந்துவிடும் என்பதே. சில ஆண்டுகள் முன்னர் அமலாக்கினார்கள் என்று அறிகிறேன். முதலாண்டு அமர்க்களமான வெற்றி. திட்டத்தின் நோக்கம் நிறைவேறி ஓரளவு காற்றில் மாசு குறைந்துள்ளதாகவே அளவீடுகள் சொல்லியதாம். அடுத்த ஆண்டிற்குள் கார்களில் ஊர்மேயும் தலைநகர மேல்நடுத்தர வர்க்கம் சுதாரித்துக்கொண்டது. கிட்டத்தட்ட அனைவருமே தங்களிடம் ஏற்கெனவே இல்லாத இலக்கத்தில் (ஒற்றைப் படையில் வைத்திருப்பவர் இரட்டைப் படையில் என்று) பழைய வாகனம் ஒன்றையும் வாங்கிக்கொண்டார்கள். தீர்ந்தது அவர்கள் பிரச்சினை. அனுமதிக்கப்பட்ட படையில் முடியும் எண் கொண்ட காரிலேயே அலுவலகம் அலுப்பகம் அனுதினமும் செல்லலாம். இந்த ஆண்டு அங்கு சாலைகளில் வழக்கத்தைவிட அதிக கார்கள்.

டில்லி காற்றில் மாசு ஏற்கெனவே இருந்ததைக் காட்டிலும் இந்த ஆண்டு மோசம். சென்னை மாநகரின் மையத்தில் சுவாசக் காற்று மோசம் என்றால் மும்பையில் படுமோசம். டில்லி அதையும் தாண்டி… தெருவில் நடப்பதற்கே இன்று மூச்சுவாங்குகிறார்களாம். கருத்தரங்கிற்காகத் தொட்டுவிட்டு வந்த சீனாவின் டாலியன் நகரம் மட்டுமே நான் பார்த்தவரையில் டில்லியைவிட மோசம். மாநகரங்களின் சுவாசக் காற்றை மாசுபடுத்துவதிலுமே சீனர்களை நம்மால் விஞ்ச முடியவில்லை என்று ஆறுதலடைந்துகொள்ளலாமோ. ஏற்கெனவே சீனாவின் ‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’ திட்டத்தின் வெற்றியால் அடுத்த பத்தாண்டிற்குள் இந்தியாவே உலகின் அதிக மக்கள்தொகைகொண்ட நாடாகப்போகிறது. சீனாவின் மீதான நம்முடைய இந்தப் பெருவெற்றியைக் கொண்டாட அதற்குள் தலைநகர டில்லிவாசிகளும் சீன இறக்குமதியான கொரோனா தொற்று இல்லாமலேயே சுவாசிப்பதற்குச் சுகாதார முகக்கவசங்களை மாநகராட்சி பரிந்துரைக்காமலேயே அணிந்திருப்பார்கள்.

இதுதான் நம்ம இந்தியா. இந்தச் சுவரில் எழுதாதே என்று அறிவிப்பு இருக்கட்டும் அதற்கடியில் ‘சரி’ னு எழுதிவைக்கும் அறிவுஜீவி இங்கு ஏராளம். சட்டம் போட்டு இங்கு எதையும் திருத்திவிட முடியாது.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று கண்ணதாசன் திரையிசைப் பாடல் ஒன்றில் எழுதிவைத்தார். இன்று நானும் அத்திருடர்களில் ஒருவனே என்றாகையில் அறச்சீற்றமெல்லாம் நமுத்த பட்டாசாகிவிடுகிறது.

இளமையில் இடதுசாரி ஆட்சிமுறையே இந்நாட்டிற்குத் தேவை என்று கருதியிருக்கிறேன். இன்று மென்சர்வாதிகாரமே செல்லுபடியாகலாம் என்று தோன்றுகிறது. கட்டற்றப் பேராசைப் பெருவளர்ச்சி என்றில்லாமல் மக்கள்தொகையில் தொடங்கி உணவு குடிநீர் மின்சாரம் இவற்றின் தன்னிறைவு எனப் பலமுனைகளிலும் திட்டமிட்ட வரையறைகள் நடைமுறையில் அமலாக்கப்படும் கட்டுப்பாடான வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல.

வயதாகிவிட்டது. வழிநடத்து அல்லது பின்தொடர் இல்லை குறுக்கிடாமல் ஒதுங்கு என்று லீ இயகோகா சொன்னது நினைவிற்கு வருகிறது. அடிக்கடி தும்மினாலும் சொச்ச ஆயுளில் உலக மாநகரங்களைத் துறந்து தூய காற்றைச் சுவாசித்திருக்க எங்கு ஒதுங்குவது என்று முடிவெடுப்பதிலேயே திணறல். மூச்சுத் திணறல் இல்லை.
*