நூலறிவு

Standard

மொழியின் அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்களை — உயிர் மெய் உயிர்மெய் என — வைத்துக்கொண்டு அம்மொழியின் சொற்களை உருவாக்கலாம். அதே பழைய அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்களால் திடீரென ஒருநாள் அன்றுவரை அம்மொழியில் இல்லாத புதிய சொற்களையுமே உருவாக்கலாம். உச்சரிப்பிற்குத் தேவை எனக் கருதி இன்னொரு நாள் சொல்லாகவே கண்டெடுத்த ஓசைத்துண்டைப் பிரித்து மேய்ந்து புதிய அடிப்படை ஒலிக்குறி ஒன்றை அதுவரையில் அம்மொழியில் இல்லை என்றாலும் கண்டுகொண்டு சேர்த்துக் கொள்ளல்லாம். மொழியின் அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்களையே விருத்தி செய்கிறோம் என்றாகலாம். அம்மொழி ஆதரவாளர்களின் எதிர்ப்பும் அதற்கான சமாளிப்புகளும் தனி.

மொழி வளர்ச்சியில் மேற்படி முறைமை ஒருவாறு இயங்குவதால் கூடுதலாக ஒன்றையும் சொல்லலாம்: முயன்றால் அடிப்படை எழுத்துக்களை வைத்துக்கொண்டு ஒரு மொழியின் அனைத்துச் சொற்களையும் — அம்மொழி அகராதியை — உருவாக்கிவிடலாம். ஆனால் எதிர்போக்கில் ஒரு மொழியின் சொற்களில் சிலவற்றை மட்டும் வைத்துக்கொண்டு அம்மொழியின் அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்கள் அனைத்தையும் கண்டுகொள்ள இயலாது. அதாவது சொல்லகராதி எனும் புத்தகத்தைத் தவிர்த்துவிட்டு ஒரு மொழியில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை வாசித்த பின்னரும் அம்மொழியின் அனைத்துச் சொற்களையும் தெரிந்துகொண்டுவிட இயலாது.

மேற்படி வியர்த்தமான முயற்சியே அறிவியலில் — குறிப்பாக இயற்பியலில் — இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

மனிதனின் ஐம்புலன்களின் வழியே காண்பவை கற்பவை அனைத்தையும் புரிந்துகொள்வதற்காக அதே புலன்நிலைப் படிமத்தில் பல விதிகளை உருவாக்கிக்கொள்ளலாம். சரிவருகிறதா எனப் பரிசோதித்து ஏற்கலாம். ஆனால் அவையே அடிப்படைகளா என உறுதிபடுத்த அப்புலன்நிலை படிமத்திலேயே இருந்துகொண்டு அருதியிட இயலாது. இயலவில்லை.

நாம் காணும் உலகம் நிரையிலானது என்கிறோம். அந்நிரையினுள் என்ன. மூலக்கூறுகளின் கூட்டணியாம். அம்மூலக்கூறுகளினுள்… அவை அணுக்களினால் ஆனவை. அணுக்களினுள்… எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் போன்ற உட்துகள்களினாலானவை. மனிதப் புலன்களினால் நேரடியாகக் கண்டுகொள்ள முடியவில்லையே. கவலையில்லை. நுன்புலன் கருவிகள் கண்டுபிடித்துள்ளோம். அவற்றைக் கொண்டு பரிசோதித்து மேற்படி கூற்றைச் சரிபார்த்தும் விட்டோம். ஓகே. அணுக்கரு துகள்களினுள்… அதனினுஞ் சிறிய அடிப்படைத் துகள்களான குவார்க்குகள். குவார்க்குகளினுள்… பல்பரிமாண நூல்களினாலானவை குவார்க்குகள் என்று கருத்தாக்கம் முன்வைத்துள்ளோம். அண்டத்தின் அடிப்படை காரணி அந்நூல்களே என்கிறோம்.

இடைச்சிந்தை: மொழியினால் நூல்களா நூல்களால் மொழியா. நூல் எனும் சொல்லிற்கு இழை என்றும் புத்தகம் என்றும் பொருளுண்டே. இரண்டையும் வைத்து உதாரணங்களில் நான் தாவிப் பேசுவது குழப்பமாகிறது என்றால் அதுவும் இக்கட்டுரையின் உட்பொருளே. தொடர்ந்து வாசியுங்கள்.

இயற்பியல் நூலைத் தொடர்வோம். பரிசோதனையில் இவ்வண்டத்தில் மேற்படி நூல்களின் இருப்பு பற்றி ருசு… இல்லை இந்நூல்கள் நிஜத்தில் உள்ளதா என்றறியோம். இவை கணிதப் பொருள்கள் கணித மாதிரிகள். செங்கற்களாக இவற்றை வைத்துக் கட்டி எழுப்புகையில் கட்டடம் உருவாகும் என்பது உத்திரவாதம். அக்கட்டடமே அண்டம் எனலாம். மனிதன் உருவாக்கி வைத்துள்ள புலன்கருவிகளால் அக்கட்டடத்தையே ஓரளவு கண்டுகொள்ள முடியும். செங்கற்களை அல்ல. அதாவது மனிதனால் அவனது நுன்புலன் கருவிகளினாலும் சொற்களாகவே அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. மொழியின் அடிப்படை ஒலிக்குறிகளை அல்ல. இயற்பியல்படி மொழி உதாரணத்தில் பெரும் நூல்களையே ஓரளவேனும் வாசிக்கிறவனால் அம்மொழியின் அடிப்படையான ஒலிக்குறிகளை முழுவதுமாகப் பிரித்துப் புரிந்துகொள்ள இயலவில்லை.

குவார்க்குகள் வரை தேர்வான நுன்புலன் கருவிகள் வைத்துப் பரிசோதனைகள் வழியே நேரடியாகவோ சிவத்தைக் காண்கையில் சற்றே விலகி இரும் பிள்ளையாய் என்றவாறு மறைமுகமாகவோ கண்டுகொண்டிருக்கிறோம். கண்ணை மறைக்கும் நந்தியானதால் மூலக்கூறுகள் போன்றவற்றை மனிதப் புலன்களின் வழியாகவே நேரடியாக அறிந்துகொள்ள முடிகிறது. அணுக்களையும் அவற்றினுள்ளே எலக்ட்ரான் போன்றவற்றையும் நம்முடைய புலன்களைக் காட்டிலும் மேம்பட்ட நுண்ணோக்கிகள் போன்றவற்றினால் பார்க்க அறிய முடிகிறது.

வகைக்கொன்றாய் இரண்டு மூன்று குவார்க்குகளின் விதிக் கூட்டணிகளால் கட்டமைக்கப்பட்ட — பெர்மியான் போஸான் எனப் பிரித்து வகுக்கப்பட்டிருக்கும் — அணுக்கரு துகள்கள் அனைத்தையுமே நுண்-புலப் பரிசோதனைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இன்று நம்மால் அறிய முடிகிறது. ஸ்டாண்டர்ட் மாடல் எனப்படும் கட்டமைப்பிற்குள் சுமார் இருபத்தியந்து அணுக்கரு துகள்கள் உள்ளன. அனைத்தையுமே பரிசோதனைகளின் வழியே இனம் குணம் மனம் கண்டுகொண்டு அறிய முடியும். சமீபத்தில் — சில ஆண்டுகள் முன்னர் — கண்டது கடவுள் துகள் எனப்பட்ட கன்றாவித் துகளான ஹிக்ஸ் போஸான். பத்து பில்லியன் டாலர் செலவில் ‘வெற்றிகரமாக’ இயக்கப்பட்ட பெரிய ஹேட்ரான் மோதி-யைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகளின் வழியே கண்டுகொண்டோம்.

நிரையின் அடிப்படை கட்டமைப்பு அடிநாதம் என்று கருதப்படும் ‘நூல்களை’ இன்றளவும் எந்தப் பரிசோதனையிலும் கண்டுகொள்ள முடியவில்லை. சொல்லப்போனால் இவற்றை கண்டுகொள்ள அறிய எந்தவகைப் பரிசோதனை நிகழ்த்துவதென்றெ புரியவில்லை. பெ.ஹே.மோ. வின் பரிசோதனைகளில் ஏதாவது புரிபடும் என்று கருதினார்கள் பலனில்லை. பெ.ஹே.மோ. வின் பரிசோதனைகளில் எந்தப் புதிய துகள்களும் தென்படவில்லை. புதிய துகள்கள் பல இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றன. மேலும் புதிய கணித மாதிரிகள். நுண்துகள்களின் ‘மிருகக்காட்சிச்சாலை’யைச் சமாளிப்பதற்கென ‘சூப்பர் சிமெட்ரி’ எனும் கருதுகோளை முன்வைத்திருக்கிறார்கள். தென்பட்ட கண்டறியப்பட்ட ஒவ்வொரு அணுக்கரு துகளுக்கும் ஒரு எதிர்மறை துகள் இருக்கவேண்டும் என்பதே ஊகம். துகள் சட்டைக்கும் மேல் ‘டை’ கட்டிக்கொண்டால் எதிர்மறை துகள் ‘ஆண்டை’ கட்டிக்கொள்ளுமாம்.

அங்கங்களைத் தொட்டுத் தடவிப்பார்த்து எண்ணிக்கையில் கண்டபடி அதிகரித்துவிட்ட உதிரிப் பாகங்களை வைத்துக்கொண்டு அறையில் கண்ணெதிரே கடந்து போகும் யானையைக் கட்டமைக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். இன்னொரு வேடிக்கையும் உண்டு. அதே யானை ஒரு அறிவியலாளர் குழுவிற்கு இன்று பட்டை போட்டுச் சிவன் கோயிலில் உலாத்திவிட்டு நாளை இன்னொரு குழுவிற்கு நாமமிட்டுப் பெருமாள் கோயில் தூணில் கட்டுண்டு காலாட்டுகிறது. இன்றளவில் ஒரு புலன்நிலையில் துகள்-அலை இருண்மை கருத்தாக்கமே குவாண்டம் மெக்கானிக்சின் அடிப்படை புரிதல் என்றாகிவிட்டுள்ளது.

மொழி உதாரணத்தை ஒப்புமைக்கு மீண்டும் வம்பிற்கிழுத்தால் ‘சூப்பர் சிமெட்ரி’ என்பது மொழியின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரே எதிர்மறையான சொல் உண்டு என்பதா. இல்லை. அதைவிட மோசம். மொழியின் சொற்களை உருவாக்கவல்ல அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்கள் உள்ளதே அவ்வொலிக்குறி எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் எதிர்மறையான ஒலிக்குறி எழுத்து ஒன்று உண்டு என்கிறோம். (என் புரிதலில் கோளாறிருக்கலாம் தேவையெனில் இயற்பியலாளர்களிடம் பேசிச் சரிசெய்து சொல்கிறேன்) இது சரி என்றால் மேற்படி எதிர்மறை ஒலிக்குறிகள் அதாவது இயற்பியலின் எதிர்நிரைத் துகள்கள்… அவையும் நிரைதானே ஒலிக்குறிகள் தானே… இருக்கலாம். ஆனால் மொழி உதாரண விதிப்படி அவ்வொலிக்குறிகளால் உருவாகும் சொற்களை மனிதனால் பேச முடியாது. புரிகிறதா பாருங்கள்.

ஏற்கெனவே இன்றிருக்கும் மனித மொழியின் சிலபல சொற்களை வைத்துக்கொண்டு நான் பேசுகையிலேயே — இக்கட்டுரை போல — அடுத்தவருக்குப் பெரும்பாலும் புரியாமல் போய்விடுகிறது.

இருந்தாலென்ன. இதுவும் ஒருவகைத் தேர்ச்சியே.