அடுத்த பத்து வருடங்களில் நம் நாட்டில் ‘மெக்கானிக்கல் இஞ்சினியரிங்’ துறையின் வருங்காலத்தை அலசுவதற்கென ஒரு வருடம் முன்னால் அகில இந்திய தொழிற் கல்வி குழு (AICTE) இணையம் வழி கருத்தரங்கு ஒன்றை நடத்தினர். அக்கருத்தரங்கைத் தொடக்கிவைத்துச் சிற்றுரை வழங்கச் சொன்னார்கள்.
2021 AICTE FutureME Workshop at IISc கருத்தரங்கு சுட்டி: [https://mecheng.iisc.ac.in/mecheng75/workshop.html]
ஆங்கிலத்தில் சுமார் ஐந்து நிமிடங்கள் வரவேற்புரையைக் கானொளியாகச் செய்து அனுப்பியிருந்தேன். வரவேற்புரை வரவேற்பைப் பெற்றதாக அறிந்தேன். அக்கானொளியை கீழே கொடுத்துள்ளேன்.
தமிழில் சாரம் பின்வருமாறு. (வாசிக்க ஐந்து நிமிடத்திற்கு மேலாகலாம்)
அனைவருக்கும் வணக்கம். கருத்தரங்கின் மூன்று உட்பிரிவுகளில் விவாதங்களை வழிநடத்தும் நோக்கில் சுருக்கமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.
கணினி நிரல்கள் எழுத முடிந்தவர்களுக்குக் கல்லூரிப் பட்டப்படிப்பு தேவையில்லை. இதுவே இன்றைய சிலிக்கன் பள்ளத்தாக்கின் வாதம். கணினி ஐடி துறையைப் பொறுத்தவரை சரியே — முன்னோடிகள் என்று அறியப்படும் அத்துறையின் தலைவர்கள் இவ்வகையினரே. கல்லூரிப் படிப்பை முடிக்காமல் கைவிட்டவர்கள். ஆனால் மிகக் கடுமையான உழைப்பாளிகள். இந்த விஷயம் கேலிப்பேச்சின் முனைப்பில் மறந்துவிடும். இது கேலிப்பேச்சல்லவே.
சார்ந்த கொழிக்கும் தொழில்துறை ஒன்று பட்டப்படிப்பு இல்லாமலேயே செல்வச் செழிப்பிற்கு உறுதியளிக்கையில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் என்ன செய்யலாம்? அத்துறையும் இதே போல விளம்பரம் செய்து கொள்வதா செய்யத்தான் முடியுமா. அல்லது மாற்று வழியாக இதுநாள் வரை பட்டப்படிப்பு என்று எவற்றை போதித்தோம் என்பதை மறுபரிசீலனை செய்துகொள்வதா.
இதுவே இந்தக் கருத்தரங்கின் குறிக்கோள். இரண்டு பிரிவின் கீழ். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் உணர்வு என்று எதை மாணவர்களிடம் கடத்துவது. எவ்வாறு அந்தக் கல்விமுறை அடுத்த பத்தாண்டுகளில் வழங்கப்பட வேண்டும்.
இன்றைய பள்ளி மாணவர் இன்றைய சமுதாயம் இரண்டையும் கருதுகையில் இரு விஷயங்கள் புலனாகின்றது. எனது வாழ்கையிலிருந்தே விளக்குகிறேன்.
பொறியியலாளன் எனும் பேர்வழி மெத்தப் படித்தவன் இல்லை அறிவியலாளன் ஆவதற்கு கைத்திறன் மிக வாய்த்தவனில்லை செயல்திறனாளி ஆவதற்கு சாமர்த்தியசாலியுமல்ல மேலாளர் என்றாவதற்கு. ஆனால் அறிவியல் வழிமுறைகளின் பற்றாக்குறைகளுக்கும் தொல்பழக்கச் செயல்பாடுகளின் போதாமைகளுக்கும் உடன் வேலை செய்பவர்களின் ஏனோதானோ போக்கிற்கும் பழிசுமப்பதற்கு ஒவ்வொரு நிறுவனத்திலும் அப்பேர்வழி அவசியம் தேவை. அப்பேர்வழி அனைவரையும் இறைவன் இரட்சிக்கட்டும். இது ஆர். எப். டூஸ்கி சொன்னது.
டூஸ்கி ஒரு செக்கஸ்லோவாக்கியப் பொறியியலாளர். பொறியியல் துறை நிறுவனங்களின் செயல் நேர மேலான்மை கருத்தாக்கங்கள் சிலவற்றை உருவாக்கியவர். அவருடைய மேற்படி கருத்து என் தந்தையின் கையெழுத்து நோட்டுப்புத்தகத்தில் இருந்து எடுத்தது. அந்தக் கருத்தே எனக்கு நான் எவ்வாறான பொறியியளாலன் என்பதை உணர வைத்தது. பொறியியலை போதிப்பதையும் தெளிவு படுத்தியது.
என் தந்தை திருச்சியில் பாரத மிகுமின் நிறுவனத்தின் கிளை — செக்கஸ்லோவாக்கியா பொறியியல் துறை உதவியோடு — தொடங்கப்பட்ட தினத்திலிருந்து அங்கு வேலை செய்தவர். அதனாலேயே மெக்கானிக்கல் எஞ்சினியரும் ஆனார். இந்தியாவின் முதன்மையான மிகுமின் பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக அது வளர்கையிலேயே என் தந்தையும் பொறியியலாளராக வளர்ந்தார். ஆனால் வருமானப் பணியின் இறுதிப் பத்தாண்டுகளில் அவர் கணினித் துறைக்கு மாறிக்கொண்டார்.
நானோ அப்போதே அவருடைய நோட்டுப்புத்தகத்தை வாசித்து மெக்கானிக்கல் எஞ்சினியரானேன்.
இன்று என் தந்தை இல்லை. இறந்தகாலத்தவர். பள்ளிப் படிப்பை முடித்துவிட்ட என் குழந்தையை என்னால் மெக்கானிக்கல் என்ன பொறியியல் துறைக்கே இட்டுச் செல்ல இயலவில்லை.
மிகவும் அழுத்தினால் அவள் கணினித் துறைய வேண்டுமானால் எடுத்துக்கொள்கிறேன் என்கிறாள். ஏன் என்றால் அத்துறையே வருமானப்பணியில் வெற்றிபெறுவதற்கு ஒரு பட்டப்படிப்பை முடிக்கவேண்டிய கட்டாயத்தைக் கோரவில்லை என்கிறாள்.
அதைவிட முக்கியமாக கணினி (ஐடி) துறையே அவளுக்கு அவள் கைப்பட எதையாவது செய்வதற்கான வழிவகுக்கிறதாம். பள்ளி நாட்களிலேயே கணினியில் நேரடியாக நிரல்களை எழுதிவருகிறாளே. அதன் கல்லூரிக் கல்வியிலும் அவளால் திறம்படச் செயல்பட முடியும் என்று நம்புகிறாள். நேரடியாக அவளின் பங்கும் அதன் முக்கியத்துவமும் அவளுக்குப் புரிபடுகிறது என்கிறாள். மற்ற பொறியியல் துறைகள் போல அவளுக்குத் தெரியாத ஏதோ பெரிய பல விஷயங்களோ அடுத்தவர் யாரோ சொல்லிக்கொடுத்தாலே புரியலாம் என்றோ கணினித்துறையில் அடிப்படைகள் இல்லையே என்கிறாள். ஒரு ‘பைதான்’ கணினி மொழியில் இன்றே பள்ளிப் படிப்பிலேயே நிரல்களை எழுதுகிறேன் அதன் பயன்களை உடனடியாகப் பார்க்கிறேன் மேலும் என்ன செய்ய முடியும் என்றும் இணையம் வழியே தெரிகிறது புரிகிறது. என்னுடைய திறமையினால் அதை வளர்த்துக்கொண்டால் நான் கல்லூரிக்குப் பின்னர் வருமானப் பணியில் என்னென்ன செய்ய முடியும் என்பது இன்றே எனக்குத் தெரிகிறது தனித்து இயங்கலாம் ஒரு பெரிய பல்சக்கரத்தின் ஒற்றைப் பல்லாக மட்டுமே இயங்க வேண்டிய அவசியமில்லையே… அவளின் வாதங்கள்.
மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கிலும் கைப்பட செய்துபார்க்க கற்க (லேத்து) பட்டறை உண்டு. ஆனால் நம்மில் பலருக்கும் அது பெரும்பாலும் அதிகபட்சமாக சகிப்பையும் ஒழுங்கையுமே கொடுத்தது (பெரும்பாலும் அப்பாடத்தில் சொதப்பியதால்).
இதனால் போதனையாளனாக ஒரு கேள்வி: மெக்கானிக்கல் சிவில் எலக்ட்ரிக்கல் என்றெல்லாம் பாகுபடுத்தி ஒரு பொறியியல் கல்வித் திட்டத்தை உருவாக்கி வைத்துள்ளோமே இன்றளவிலும் இந்தத் திட்டமே மாணவர்களுக்குப் பயன்பொருளுடையதா?
மாற்றாக ஒரு கல்வித் திட்டம் அதில் பொதுவான ஒரே பொறியியல் பட்டப்படிப்பு மட்டுமே. பேச்சிலர் இன் ஜெனரல் எஞ்சினியரிங். அனைத்து அடிப்படைகளும் தெரிவிக்கப்படும் பயில்விக்கப்படும். தேறி வெளிவருபவர்களை எந்த (வகைப் பொறியியல்) நிறுவனமும் பணிக்கென வரவேற்கலாம். அந்நிறுவனம் சார்ந்த பொறியியல் உபதுறையில் அங்கு மேலும் பயிற்சி பெற்று தொடர்ந்து பணி செய்திருக்கட்டும்.
இந்த வடிவம் வழக்கத்திற்கு மிகவும் புறம்பானது ஒத்துவராது என்றால் அடுத்த கட்டச் சமரசமாக இன்றிருக்கும் ஒவ்வொரு பொறியியல் துறையும் நெகிழ்வான எல்லைகளை உருவாக்கிக்கொண்டு அடுத்த சார்ந்த துறைகளோடு இணைவதற்கும் அதனால் வேலை வாய்ப்புகளை வளர்த்துக்கொள்ளவும் வழிசெய்து கொள்ளலாம். தேறி வெளிவருபவர் பெயரளவில் மெக்கானிக்கல் இஞ்சினியர் என்றாகட்டும் ஆனால் நிறுவனத்தில் அவரது பணியோ பல இஞ்சினியரிங் துறைகளில் இருக்கலாம். சொல்லப் போனால் மெக்கானிக்கல் சார்ந்த நிறுவனமே இல்லை என்றாலும் அங்கு இவரால் வெற்றிகரமான பொறியியலாளராக இயங்க முடிய வேண்டும். கல்வி வகை செய்ய வேண்டும்.
பல்கலைக்கழகம் என்று யோசித்தால் அனைத்து அறிசார் கருத்துகளையும் சார்ந்த துறைகளையும் ஒருங்கிணைப்பதையே செயல்படுத்தத் தோன்றும். உதாரணமாக பல்கலைக்கழகத்தில் மூன்றே பிரிவுகள் — நியூட்டன் பிரிவு மேக்ஸ்வெல் பிரிவு டார்வின் பிரிவு. கிட்டத்தட்ட அனைத்து அறிவியல்சார் பயன்கல்விகளும் இவற்றுள் அடக்கிவிடலாம். ஆனால் இன்றைய மாணாக்கர்களிடையே இன்றைய சமூகச் சூழலில் மேற்படி ஒருங்கிணைந்த பிரிவுகளைப் புரியவைப்பதே பெரும்பாடாகிவிடலாம். பிறகே அவற்றின் வழியே ஒரு வருமானவழிப் பாதை.
இதனால் புரியும் கேள்வி: மெக்கானிக்கல் எஞ்சினியரிங் துறை இன்றளவில் எவ்வளவு நெகிழவேண்டும்.
அவ்வாறான நெகிழ்வான பொறியியல் துறையை இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு பயில்விப்பது போதிப்பது. கோவிட் தொற்று வந்துபோன இந்த இரண்டு ஆண்டில் இதை மண்டியிட்டுக் கற்றுக்கொண்டுள்ளோம் அல்லவா. கல்விச்சாலை என்றுமே பலரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசிப் பழகிப் பகிர்ந்து… இவ்வாறுதானே இயங்கி வந்துள்ளது. பிளாட்டோவும் அவர் சீடர் அரிஸ்டாடிலும் அகெடமஸ் என்பரின் தோட்டத்தில் காலார நடந்தவாறு பலவற்றைப் பேசிப் போனதினால் அன்றோ அகெடெமியா எனும் சொல்லே கல்விச்சாலைகளைக் குறிப்பிட உருவாகி வந்துள்ளது. பேண்டமிக் எனும் தொற்று வந்துபோனதில் நேரில் சந்திக்காமலே எவ்வாறு கல்வியை வழங்கலாம் என்று சிந்திக்க வேண்டிய நிர்பந்தமாகிவிட்டது.
இதனால் அடுத்ததாக முழுவதுமாகவே இணையம் வழியே — நேரில் கைப்பட என்றில்லாமல் — மெக்கானிக்கல் எஞ்சினியரிங் துறையை போதித்தால் அதன் விளைவுகள் என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும். இணையம் வழியே பட்டப் படிப்பு என்பது இன்றைய காலகட்டத்தின் அவசியமாகி இருக்கலாம் ஆனால் கல்வி போதனை இவற்றிற்குப் பொருள்படுமா சரிவருமா. பல வருடங்கள் தொடர்ந்து இவ்வாறே இயங்க முடியுமா.
நிறுத்திக்கொள்கிறேன். சிந்தனைக்குச் சூல் புள்ளிகள் சிலவற்றை வழங்கியிருக்கிறேன். ஏற்கலாம் மறுக்கலாம் நிராகரிக்கலாம். விவாதத்திற்கு வழிவகுக்கும் என்றே கருதுகிறேன்.
மெக்கானிக்கல் எஞ்சினியரிங் துறையின் எதிர்காலத்தை விவாதிக்க தத்தமது கருத்துக்களோடு இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். வணக்கம். நன்றி.
*