தமிழர்களுக்கு என் சிந்தனையும் எழுத்தும் இன்றளவிலும் பயனளிக்கும் என்று என்னைத் தவிர இன்னமும் மூன்று நான்கு பேர்கள் நம்பிவருகின்றனர். அவர்களில் ஒரு விடாப்பிடி அன்பர் பாரதி பதிப்பாலயம் நடத்திவரும் பாரதி டிவி-யில் எனது நேர்காணல் வரவேண்டும் என விரும்பினார். அந்நேர்காணலின் எழுத்து வடிவம் ஜூலை 2021 மாதம் புத்தகம் பேசுது இதழில் வெளிவந்துள்ளது — இணைய இதழின் சுட்டி.
நேர்காணலின் சாரத்தைத் தொகுத்து கீழேயும் அளிக்கிறேன். அனைத்து கேள்விகளும் உலகே உன் உருவம் என்ன எனும் என் கட்டுரைத் தொகுப்பு நூலை முன்வைத்து கேட்கப்பட்டுள்ளது.
*
கே: பேராசிரியத்துவம் புது தத்துவமா?
இல்லை. கற்க கசடற கற்றது கைமண்ணளவு செய்வன திருந்தச் செய் போன்ற பழங்கூற்றுகளில் உள்ள சிந்தனை மரபின் பல்கலைக்கழக நீட்சியே. தத்துவம் என்றும் கூறுவதற்கில்லை. சிந்தனை முறை எனலாம்.
தொடக்கப் பள்ளிகளில் வகுப்பெடுப்பவரை ஆசிரியர் என்கிறோம். துறையின் எல்லைகளை வரையறைகளை தெளிந்து துறை சார்ந்த ஆசிரியத்துவத்தையும் ஆய்வாளத்துவத்தையும் ஒருங்கிணைத்து மேம்படுத்திச் செய்கையில் பேராசிரியத்துவம்.
பேராசிரியத்துவம் பழகுவதற்கு கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனப் பணியில் பேராசிரியராக இருத்தல் வேண்டும் என்பதில்லை. ஏகலைவன்களும் அருச்சுனர்களே. ஆனால் பணியில் பதவிப்பெயரளவில் அல்லது கௌரவப் பட்டப்பெயரளவில் ‘பேராசிரியர்கள்’ என்றிருத்தல் ‘பேராசிரியத்துவம்’ பழகவைத்துவிடும் என்பதற்கில்லை.
கே: பேராசிரியத்துவத்தைப் புரிந்துகொண்ட பேராசிரியர்கள் அதிகமாகும் போது என்ன விளைவுகள் வரும்?
பொதுவாகப் பல்கலைகழகங்களில் ஓசை குறையும்.
பேராசிரியத்வம் பழக துறைச் சிந்தனைகளையே எந்நேரமும் வளர்த்தெடுத்தல் அவசியம். துறையின் நோக்கம் செயல்பாடு வளர்ச்சி போன்றவை தெளிவாகையில் அதைப் பழகும் அறிவுசார் திறனாளிகளின் படைப்பூக்கச் செயல்பாடு சீர்மை பெறும். உடனடி கைதட்டல்கள் கோரி தோன்றிய திசைகளிலெல்லாம் (ஆய்வுகள் என்கிற பெயரில்) படைப்பூக்கப் பாய்ச்சல்களை நிகழ்த்தாமல் அவசியமான திசைகளில் குவிக்கும் முனைப்பு கூடும். நம்மைவிட அகண்டமான ஒன்றின் வளர்ச்சியில் புரிதலிலேயே நம் படைதிறன் சிறுபங்களிக்க முயல்கிறது என்கிற அறிதல் மனத்தினுள் அலம்பல்களை குறைத்து அமைதியளிக்கும். விரக்தியும் கூடலாம்.
கே: சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பாரத ரத்னா சி என் ராவ் – அவர்களின் பிரமாண்டமான அறிவியல் பங்களிப்பை பேசும்போது அவரின் சில சரிவையும் பதிவு செய்திருப்பதின் நோக்கம் என்ன?
சாதனையாளர்கள் சரிவுகளில் எவ்வளவு சரிந்தனர் என்பது அவர்கள் எந்தளவு (ஏனைய சாதிக்காத) மனிதர்களாகச் செயல்பட்டிருந்தார்கள் என்பதை மட்டுமே சொல்லும். உயர்வுகளில் எவ்வளவு உயர்ந்து ஓங்கி அடித்தனர் என்பதே அவர்களின் சாதனைகளாக அறியப்படுகிறது. இருவகைப் புற வெளிப்பாடுகளும் ஒரே மனித அகத்தினின்றே என்பதும் ஒரு அவசியமான கற்பிதமே.
மனிதர்களே விஞ்ஞானிகளாகின்றனர். அதன் பிறகும் மனிதர்களாகவே வாழ்கின்றனர்.
கே: அறிவியல் சிந்தையின் மூலதனமே கேள்விகள் நிரம்பிய பதில்களின் நிரந்தரத்தைச் சந்தேகிக்கும் மனதே – என எழுதிருக்கீங்க. அதை விளக்க முடியுமா
நிச்சயமின்மையே நிதர்சனம். அறிவியல் என்றதும் இயற்பியலோ கணிதமோ உயிரியலோ சமன்பாடுகளும் தேற்றங்களும் சீர்மையுடன் வகுக்கப்பட்ட சிந்தனை முறைகளும் என்றாகிவிடுவதால் அத்துறையே மாற்ற முடியாத தவறென்றாகாதவற்றையே திட்டவட்டமாகச் சொல்லிவைக்கும் என்றே பலரும் புரிந்துகொள்கின்றனர். அதனால் அறிவியலின் தவறுகளைக் கேள்விப்படுகையில் ஏளனம் செய்கின்றனர்.
சொல்லப்போனால் தன் தவறுகளை சுட்டிக்கொண்டு திருத்திக்கொண்டு முற்செல்ல முனையும் ஒரே மனித சிந்தனை முறை அறிவியல் சிந்தனை முறை மட்டுமே.
ஒவ்வொரு அறிவியல் துறையின் பல புரிதல்களும் தற்காலிக முன்னெடுப்புகளே. இன்றைக்கான புரிதல்கள். இதுவரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கான இன்று நாம் பெற்றிருக்கும் சரியான தகவல்களையும் அவற்றின் தொடர்புகளையும் உள்வாங்கிய திருப்தியளிக்கும் பதில்கள். ஒன்றே ஒன்று என்றாலும் நாளை தோன்றும் புதிய ஒவ்வாத தகவல் புள்ளி இதுநாள் வரையிலான திருப்தியளிக்கும் புரிதலைத் தவறென்றோ பற்றாக்குறையானதென்றோ புரட்டிப்போட்டுவிடலாம். அல்லது புதிய கேள்விகளைக் கேட்கவைக்கலாம். அவற்றிற்கான பதில்கள் உடனடியாகக் கிடைக்காதும் போகலாம்.
மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டுமென்பதில்லை. இருக்கும் புரிதலைச் சற்றே மாற்றிப்போடலாமா என்று பார்க்க வேண்டும். புதிய தகவல்களையும் திருப்திகரமாக விளக்கிக்கொள்வதற்கு. விளக்கத்திலிருந்து புதிய சரியான அனுமாங்களை முயல்வதற்கு.
அதனால் அறிவியலின் இன்றைய நிலை நேற்றிலிருந்து (பல நூற்றாண்டுகளை உள்ளடக்கிய நேற்று) மேம்பட்டதெனத் தோன்றலாம். ஆனால் இன்றைய பதில்களை புரிதல்களை சந்தேகித்தலே அறிவியல் வளர்ச்சிக்கான நாளை. ஒருவகையில் வெங்காயத்தை உரிப்பது போலவே. மேம்பட்ட இறுதி நிலை என ஒன்றுமில்லை என்றாகிவிடலாம். இறுதி நிலை என்று உண்டா இல்லை தொடர் உரித்தலே நிரந்தரமா என்பதே தெரியாமல் கண்களில் நீர் பெருகத் தொடர்ந்து உரிக்கும் செயல்பாடே அறிவியல் முறை. ஒப்பிட்டுப் பார்த்தீர்களென்றால் மற்ற புரிதல் முறைகளில் பலவும் வெளித் தோலியை உரிக்க முயல்கையிலேயே கண்ணெரிச்சலில் கழன்று கொள்ளும். அல்லது அங்கிருந்தே இறுதி நிலையை நிச்சயப்படுத்தி அருதியிடும். வாழ்நாள் பிடிமானத்திற்கென பாதுகாப்பிற்கென அக்கூற்றுகளையே கேள்விகேட்காமல் கட்டாயமாக ஏற்கவைக்கும்.
ஆக இன்றைய அறிவியல் புரிதல் என்பது ஓரளவு நம்பகரமான நிச்சயமின்மை என்பதே. ஆனால் இருக்கும் தகவல்களை ஓரிரு தொடரிழைகளுக்குள் ஒருங்கிணைக்க முடியாத மற்றவகை அபத்த விளக்கங்களைவிட மேம்பட்ட பதில்களை வழங்கியிருக்கும் நிச்சயமின்மை. இந்த நிச்சயமின்மையை நம்பியே வாழ்க்கையை முன்னெடுக்க முயல வேண்டும். அன்றாட நிச்சயமின்மையில் பழகும் நிம்மதி நிரந்தரமானது.
‘உண்மை’ என்பதுடன் வாழ நினைப்பவர்கள் நிச்சயமின்மை என்பதை ஏற்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
கே: அறிவியலை எளிமையாக கற்பித்திடும்போது – சமத்துபிள்ளைகள் – கேள்வி கேட்கும் பிள்ளைகளாக வளர்வார்களா. அவர்களைப் பெற்றோர்களால் / சமூகத்தால் தங்க முடியுமா
உங்கள் கேள்வியே ஒவ்வாத சமன்பாடுகளைச் செய்துகொள்கிறது. சமர்த்துப் பிள்ளைகள் என்பவர்கள் கேள்விகள் கேட்காதவார்களே என்றாகிறது. கேள்விகள் கேட்பவர்களைப் பெற்றோரும் சமூகமும் தாங்கமாட்டார்கள் என்றாகிறது.
ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு ஏற்புடையதான தனிமனித சமூக நிலைகள் என்பவையே கேள்வி கேட்பதை நிறுத்திக்கொண்ட சுகமந்த நிலைகளே. comfortably numb. தற்காலிக அமைதிக்கும் சுகத்திற்கும் வழிகோலும் நிலையாகலாம். ஆனால் பகுத்தறிவான நிலை என்று சொல்வதற்கில்லை. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நிரந்தர ஆனந்தத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் நிலை என்றும் சொல்வதற்கில்லை.
எக்காலகட்டத்திலும் ‘மக்கள் கருத்து’ என்பது பெரும்பாலும் மூடநம்பிக்கைகள் தவறான தகவல்கள் ஓரவஞ்சனைகள் இவற்றின் குழப்பமான கலவையின் வெளிப்பாடே. அவற்றை எதிர்த்து ஏன்… என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை. அக்கேள்விகளை எழுப்புவோர் சமர்த்தராகவும் இருக்கலாம். சமுதாய அக்கறையுடயோராகவும் இருக்கலாம். அவர்களைப் போன்றோரைப் பொறுக்கும் அடுத்த நிலைக்கு மனிதகுலத்தை இட்டுச்செல்பவர்களாகவும் இருக்கலாம்.
கே: அறிவியலை பரபரப்புக்காக சந்தை படுத்துவது யார் ? என்? சந்தை அறிவியலை – சிந்தை அறிவியல் கொண்டு எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
அறிவியலை விற்பனைப்பொருளாக பாவிக்க முனைபவர்களே பெரும்பாலும் சந்தைபடுத்துகின்றனர். பரபரப்பான செய்திகளாக்க முனைகின்றனர். தகவலறிவையே தெள்ளிய சிந்தனா அறிவாக ஊடகங்களில் வழங்கி வருகின்றனர். தலைப்பைத் தவிர உள்ளடக்கம் அனைத்துமே கோர்வையற்ற தனித்தனி ‘பரபரப்பான’ தகவல் துணுக்குகளான இவை அறிவியலை என்றும் சரியாகச் சொல்வதுமில்லை கற்றுத் தருவதுமில்லை.
உலகில் கடந்த இரண்டு வருடங்களாக நிலவும் கொரோனா நுண்ணுயிர் ‘பேண்டெமிக்’ சார்ந்த ஊடகச் செய்திகளை கவனித்தால் உங்களுக்கே சந்தை அறிவியல் செயல்பாடு புரிந்துவிடும். பரபரப்பை மட்டுமே முன்வைத்து வெளியிடப்படும் ‘அறிவியல் செய்திகள்’ எவை எவ்வாறானவை அவற்றின் கருத்தாழம் எதுமட்டும் என்பவையும் புரிந்துபோகுமே.
அறிவுத்துறை புரிதல்களை விளக்கங்களை நுனிப்புல் மேய்ச்சல் செய்திகளாக (மட்டுமே) பெறுவதை நாம் மறுத்துக்கொள்வது சந்தை அறிவியலை ஒடுக்க ஒரு வழி. தலைப்பை வாசித்த பின்னர் நமக்கு எழும் நியாயமான சில கேள்விகளுக்கான ஆதாரப்பூர்வ பதில்களை வழங்க முடியாத தகவல் தோரண உள்ளடக்கக் கட்டுரைகளை நம்பக்கூடாது. அறிவியலாளர்கள் முன்வைக்கும் தக்க ஆதாரங்கள் சிந்தனைகள் இவற்றை சுட்டிக்காட்டாத செய்திகளை வாசிப்பதையே தாட்சண்யமின்றி புறக்கணிக்க வேண்டும். கொஞ்சமேனும் ஆதாரங்களை தரவுகளை சுட்டிகளை வழங்குவதற்கான ‘இடமில்லை’ என்கிற ஊடகங்களின் வாயிலாக அறிவியலைப் பெறாமல் இருப்பதே நன்று. கூடவே சரியான விளக்கங்களையும் ஓரளவேனும் மேம்பட்டப் புரிதல்களை வழங்க முனையும் கட்டுரைகளையும் புத்தகங்களையும் ஆதரிக்க வேண்டும். மெனக்கெட்டுத் தேடினால் அவ்வப்போது ஊடகங்களில் ஓரிரண்டாவது கட்டாயம் வெளிவந்துகொண்டிருக்கும். இவற்றை ஆதரித்துப் பணம் கொடுக்கலாம் பாராட்டலாம் குறைந்தபட்சம் அக்கட்டுரைகளை (மட்டுமே) முகநூலில் பகிரலாம்.
என் பங்கிற்கு ‘முந்நூறு சொற்களில் முழுவதையும் சொல்ல வேண்டும்’ ‘விளம்பர இடம் போக மிச்சமிருக்கும் மூன்று பத்தியில் உன் கட்டுரையை எழுதிவிடு’ போன்ற நிபந்தனைகளோடு ஊடகங்களில் எழுத வரும் அழைப்புகளை மறுத்துவிடுகிறேன்.
கே: whatsapp அறிவியல் & youtube அறிவியல் – சாதகம் பாதகம் கூறுங்களேன்
வாட்ஸாப் யு-டியூப் இவை மென்பொருள் தொடர்புச் செயலீகள். சாதனையாளன் சாமான்யன் என அனைவரின் கருத்துக்களையும் ஒரே ‘திண்ணைப் பேச்சுத்’ தாழ்நிலையில் சமன்படுத்திவிடும் சமூகவலைச் சாதனங்கள். இவற்றைப் பயன்படுத்தி அறிவியல் என்ன அனைத்து வேண்டாத விஷயங்களையுமே பகிரலாம். முற்செலுத்தலாம். செய்துவருகிறோம்.
வீட்டிலிருந்தபடியே கையளவு மதிபேசி போன்ற கருவிகொண்டே இப்பகிரலை பெறுதலை அன்றாடம் நிகழ்த்தலாம் என்பது இவற்றின் சாதகம். எதை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் அவ்வாறே அனைவரிடித்திலும் செய்யலாம் என்பது பாதகம்.
கே: பூமியின் துருவ பகுதி பூமத்திய ரேகை பகுதியை காட்டிலும் நசுங்கியுள்ளதை விளக்கும் அதே சிரத்தையோடு காபியில் பிஸ்கட் முக்குவதை சமன்பாடு கொண்டு விளக்கியுள்ளீர்களே
அறிவியலின் நிறமாலை வீச்சை பல்படிமப் புரிதல்களை அச்சிந்தையின் அசாத்தியத்தை அன்றாடத்தை புரிந்துகொள்ள இவ்வகைக் கட்டுரைகள் உதவலாமே.
கே: காப்பில்லரி விசை , போரோஸ் structure , சமன்பாடு என அறிவியலை – coffee with biscuit என எளிமையாக்கி விட்டீர்களே . இது போல் இன்னும் நீங்கள் எழுதவேண்டும் – எதிர்பார்க்கலாமா?
இப்ப என்ன ‘அதெல்லாம் கூடாது எதிர்பாக்காதீங்க…’ என்றா சொல்லப்போகிறேன்.
சில நூறு கட்டுரைகள் எழுதி வைத்திருக்கிறேன். ஆயிரம் இலக்கு. சிலவற்றை இணையதளத்திலும் வெளியிட்டிருக்கிறேன். புத்தகங்களாகக் கொண்டு வரவே முயல்கிறேன். ஏமாளிப் பதிப்பாசிரியர்கள் அமைகையில் தொடர்ந்து செய்வேன்.
கே: உலக அளவில் பலதரப்பட்ட ஆராய்ச்சியாளர்களோடு இயங்கி வரும் நீங்கள் /எளிய மனிதர்களின் வழக்கு மொழியில் உள்ள வார்த்தைகளை பரவலாக பயன்படுத்தி உள்ளீர்கள். இது படிப்பவரோடு நெருக்கத்தை உருவாக்க திட்டமிட்ட உழைப்பா /இயல்பானதா.
திட்டமிடா உழைப்பு. இயல்பின் திட்டமிட்ட வெளிப்பாடு.
அறிவியல் விளக்கங்களை எளிமைப்படுத்த முயல்வதில்லை. எவ்வளவு தீவிரமாகச் சொன்னால் சரியாக வரும் என்பதை கவனத்தில்கொண்டே எழுத முயல்கிறேன். இந்தத் திட்டமிடல் மட்டும் செய்கிறேன். ஆனால் தமிழில் எச்சொற்களை நீக்கி எவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டதில்லை. எழுதுகையில் ஆங்கிலத்தில் தோன்றுவதை எளிய பேச்சுத் தமிழில் சொல்லவே முனைகிறேன். தொடர் உழைப்பு உள்ளது. ஸ்மார்ட் போன் என்றால் எனக்குச் சட்டெனப் பயனான மொழியாக்கம் எனத் தோன்றும் ‘மதிபேசி’ என்று பயன்படுத்துகிறேன். புனைவெழுதுகையில் ‘ஹோம் மேக்கர்’ என்றால் ‘அகமாக்கி’ என்று தோன்றுகிறது எழுதிவைக்கிறேன். இல்லறம் என்பதற்கு எதிர்நிலையாக ‘இல்புறம்’ என்று தோன்றுகிறது. என் மூன்றாவது நாவலின் தலைப்பு. கலைச்சொல்லாக்கம் புதுச் சொல்லாக்கம் எழுத்தாளர்களுக்கு இயல்பாக அமைவது. அமைய வேண்டும். மெனக்கெடக்கூடாது. வலிந்து செய்பவன் மொழியின் இலக்கண ஆசிரியன். எழுத்தாளனாவதற்கு நானும் முயல்கிறேன். அவ்வளவே.
பலமுறை அறிவுத்துறைசார் ஆங்கிலக் கலைச் சொற்களை அப்படியே வைத்துக்கொண்டு விளக்கங்களை மட்டும் தமிழ்ச் சொற்களில் வழங்க முயல்கிறேன். பண்டிதர்கள் சிலருக்கு இதில் என்றும் சம்மதமிருக்காது. அதேபோல என் வளர் சூழல் சார் வட்டார வழக்குகள் பலவற்றையும் தொடர்ந்து அறிவியல் எழுத்திலும் பயன்படுத்தியே வருகிறேன். இதுவும் சிலருக்கு முகச்சுளிப்பாகலாம். ஆனால் அவர்கள் அதிருஷ்டம் நான் தமிழில் பண்டிதர்களுக்கு எழுதவில்லை. என் போன்ற பாமரர்களுக்கே எழுத முயல்கிறேன். நானும் பாமரனே என்று வாசகர்களிடம் கட்டுரை வாயிலாகவே அவ்வப்போது கவனப்படுத்த இவ்வகைப் பண்பாடு களையா மொழிப்புலம் உதவலாம் என்றே கருதுகிறேன்.
ஆனால் இவற்றையும் மெனக்கெட்டுச் செய்வதில்லை. பேசுமொழியின் இன்றைய சமகால புழங்கு நிலையிலிருந்தே எழுத முயல்கிறேன். எழுத்து வடிவம் என்பதால் சில மேலதிகக் கட்டமைப்புகள் வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் இயல்பானதுமில்லை. உழைப்பும் இயல்பும் ‘செம்புலப்பெயல்நீரெனவே…’ கலந்த முயற்சி. இதை எழுதுகையில் இப்படி சொல்வது புரியாமல் போய்விடுமோ என்றாகையில் உடனே ‘கடவுள் பாதி மிருகம் பாதி எனக் கலந்து செய்த கலவையென…’ என்றும் சொல்ல முனைகிறேன். இது என் இயல்பு.
அறிவுத்துறைசார் பிற மொழிச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச்சொற்களை ரூம்-போட்டு சிந்திக்கும் பண்டிதர்கள் அனுமதி வழங்கும்வரைக் காத்திருப்பதில்லை. அவர்கள் ‘ஸ்மார்ட் போனி’ற்குப் பிற்காலத்தில் தேர்வான இன்னொரு சொல்லைக் கொண்டுவந்தால் அதை என் எழுத்தில் பயன்படுத்துவதிலும் எனக்குத் தயக்கங்களில்லை. சரியான கலைச்சொற்கள் தமிழில் இல்லை என்றோ எழுதுகையில் அமையவில்லை என்பதாலோ தமிழில் அறிவுசார் சிந்தனைகளை நடப்புகளை எழுதுவதையே ஒத்திப்போடுவதும் கைவிடுவதும் சால்பன்று. ஆனால் இவ்வாறான காரணங்களில் வாளாவிருக்கும் பல ‘தமிழார்வல’ ஆங்கிலோறிவாளிகளைச் சந்திக்கிறேன். நீ எழுதுவது சரியான தமிழில்லை சரியான எழுத்தில்லை சரியான விளக்கமுமில்லை தமிழர்களுக்கு இவற்றால் எவ்விதப் பயனுமில்லை என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
கே: உழைக்கும் மக்களை நானோ கார் வாங்க வைக்கும் தொழில் நுட்ப வளர்ச்சி தேவையானதா இல்லையா.
மக்களை கார் வாங்க வைப்பது கார் விற்பவர்களே. தொழில் நுட்ப வளர்ச்சியன்று.
பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் தனிக் கார் வாங்குவது உரிமையாக இருக்கலாம். தேவையானதில்லை. அந்தக் கார்(களும் இன்னபிற தொழில்நுட்ப வர்த்தக வெளிப்பாடுகளும்) பெட்ரோல் போன்ற விரைவில் தீர்ந்துவிடப்போகும் கனிவளங்களைப் பயன்படுத்தி மாயும் என்கையில் சர்வ நிச்சயமாகத் தேவையில்லை.
அடுத்த கட்டமாகத் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு பொதுப் போக்குவரத்து வாகனங்களின் வடிவங்களை மாற்ற முனையலாம். அவற்றைச் சூழல் மாசாகாமல் எண்ணிக்கையில் பெருக்கவும் பார்க்கலாம். ஒரு தொடக்கம் எனக் கருதியாவது ஒரு தெருவில் உள்ளவர்கள் தங்கள் கார்களைக் கொடுத்துவிட்டால் அவர்களுக்கு ஒரு கூட்டுப்-பேருந்து இலவசமாக வழங்கலாம். ஆனால் அப்பேருந்தில் பயன்படுத்தவேண்டிய எரிவாயு வாரத்திற்கோ மாதத்திற்கோ நிர்ணயமான ஓர் உச்சப் பயன் வரம்பைக் கடக்கையில் விலையேற்றம் எனவும் திட்டங்களை யோசிக்கலாம்.
விரைவில் குடிநீருக்கும் மின்சாரத்திற்கும் இவ்வாறான உச்சப் பயன் வரம்புகள் நம் சமுதாயத்தில் வந்தே தீரும்.
கே: கலை படைப்புக்களை அறிவியல் சிந்தையுடன் அணுகும் போது வரும் சிக்கல் என்ன?
ஒன்றுமில்லை. ஒரு ஓவியத்தையோ சிற்பத்தையோ கலைப் படைப்பு என்று அணுகுகையில் அவற்றிலிருந்து உணர்வுகளையே பெறவேண்டும். கலையாக்கம் உணர்வுகளைக் கடத்தவல்ல கருவி. அக்கலையாக்கம் எவ்வாறு நம்மில் உணர்வுகளை எழுப்பி விடுகிறது என்கிற காரணங்களை ஆராயவே அறிவியல் முனைகிறது. அவையெழுப்பும் உணர்வுகளை கெடுப்பதற்காகவோ குறைப்பதற்காகவோ இல்லை.
கலையம்சம் என்பதில் அழகியலை வைத்துக் குழப்பிக்கொள்வதாலும் கோளாறுகள் வருகின்றன. கலைக்கு அழகு ஓர் குணாம்சமாக அவசியமில்லை. கலையம்சம் உணர்வுகளை எழுப்பமுடிகிற வல்லமை பெற்றிருந்தால் போதும். கலைக்கு அழகியல் தேவை என்கையில் அறிவியல் விளக்கங்கள் அந்த அழகியலை ஏதோ வகையில் குறைத்து விடுவதாகக் கருதிக்கொள்கிறோம்.
கலைமான் நமைக் கண்டதும் நின்ற இடத்திலேயே சட்டெனத் துள்ளிப் பாய்ந்தோடுவதைக் காண்கையில் அழகு என்கிறோம். நம் மனத்தில் ஒரு துள்ளல் உணர்வை பரவசத்தை ஏற்படுதுகிறது என்றும் கருதுவோம். ஏன் கலைமான் துள்ளி ஓடுகிறது என்று உயிரியலும் இயற்பியலும் ‘பயோமெக்கானிக்ஸ்’ என அறிவுத்துறை உருவாக்கி விளக்கங்கள் கொடுப்பதால் நான் ரசிப்பதை நீ ஏன் விளக்கங்கள் கொடுத்துக் கெடுக்கிறாய் என்று கருதலாமா. விளக்கங்கள் ரசனையைக் கெடுக்க முனையவில்லை. காரணங்களை அளிக்க முயல்கிறது. அதன் பிறகும் தொடர்ந்து நாம் கலைமானின் துள்ளலை வழக்கம்போல உணர்வளவிலேயே ரசித்துக்கொண்டிருக்கலாம்.
மேற்கத்திய செவ்வியல் இசையில் யோஹான் செபாஸ்டியன் பா(ஹ்)க் ஒரு மேதை. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆஸ்திரிய நாட்டினர். அவரின் இசையை ரசிப்பதற்கு சங்கீத ஞானம் அவசியமில்லை. பாமர நற்செவி வாய்த்தால் போதும். ரசிக்கிறோம். ஏன் அவர் இசையை மட்டும் அநேகராலும் உடனடியாக ரசிக்க முடிகிறது என்று கேள்வி வருகிறது. உடன் கௌண்டர்பாயிண்டுகள் வெல் டெம்பர்ட் ஸ்கேல் மியூசிக்கல் சிமெட்ரி எனத் தொடங்கி இசையறிவியல் காரண விளக்கங்களை விரிக்கின்றது. அவ்வாறான விளக்கங்களினால் பா(ஹ்)க் இசை மீது பாமரரின் ரசனை குறைந்து விடும் எனக் கருதுவது பேதமை. கலாரசனையில் ஓர் அடிப்படை கட்டுமானமும் புரிதலும் இருக்கலாம் எனத் தெரிய வருவதில் ரசனையின் வீரியமோ அதன் மூலம் நாம் பெறும் சிலிர்ப்போ மனமகிழ்வோ குறையாது. சொல்லப்போனால் மேம்பட்ட விளக்கப் புரிதல்களோடு கலைகளை ரசிக்கையில் மனமகிழ்வு வளரவே செய்யும். இளையராஜா இசையும் அவ்வாறே. அதை நேரடியாக உடனடியாக ரசிப்பதற்கு அதன் ராகங்களையும் இடையிசையின் இசைக்கட்டுமானங்களையும் வடிவங்களையும் பிரித்தாய வேண்டும் என்கிற அவசியமில்லை. அவ்வாறு செய்வதால் ரசிப்புத்தன்மை குறைந்துவிடும் என்பதுமில்லை. நேரடி உடனடியாகக் கைவரப்பெறுவதிலேயே அவ்வளவு இசை விஷயங்கள் உள்ளடங்கி இருப்பதை வெளிக்கொணர்ந்துகொள்வதில் மெச்சிடல் கூடவே செய்யும்.
கே: அமெரிக்க டாலர் சிம்பல் $ , கீழடி அகழாய்வு எழுத்துக்களில் காணப்பட நேர்ந்தால் – தமிழர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்தார்கள் என விளக்கம் கூறலாமா / அது சரியா?
விளக்கம் கூறலாம்தான். அது சரி இல்லை. தவறு கூட இல்லை (not even wrong). அதையும் தாண்டி…
அமெரிக்கப் பணத்திற்கான டாலர் சின்னம் $ யுனைட்டட் ஸ்டேட்ஸ் என்பதை குறிக்கும் U மற்றும் S ஆங்கில எழுத்துக்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்தால் தோன்றும் வடிவம். இன்று ‘அமெரிக்கர்கள்’ எனக் குறிப்பிடப்படும் USA நாட்டினோர் தாங்கள் (விரட்டிவிடப்பட்ட பிரிட்டிஷ் நாட்டினரிடமிருந்து) விடுதலை பெற்றதாக 1776 ஜூலை 4 முதல் கருதிக்கொள்கின்றனர். அதன் பிறகே மேற்சொன்ன வடிவத்திய $ டாலர் குறி அவர்களின் ‘சுதந்திரப் பணத்தை’ குறிப்பிட உருவாக்கப்பட்டது. (நினைவிலிருந்து கூறுகிறேன். சரியான தேதிகள் வரலாறு விக்கிபிடியாவிலும் இருக்கும்.)
தமிழ்நாட்டில் செய்யப்படும் அகழாய்வுகளில் கிடைக்கும் ‘பலநூற்றாண்டுகளுக்கு முன்னரான தொல்பொருள்களில்’ இவ்வாறான $ இலச்சினைகளோ வடிவங்களோ துல்லியமாகத் தென்பட்டால் அநேகமாக ஒன்று அத்தொல்பொருள்கள் உட்டாலக்கடி. அல்லது அந்த அகழாய்வே அவ்வகை. உறுதியாக ‘அன்றே தமிழன் அமெரிக்கனுடன் வர்த்தகம் செய்தான்’ என்று சொல்லிக்கொள்ள வழி செய்யாது.
இன்னொரு கேள்வியில் யூ-டியூப் அறிவியல் என்று கேட்டிருக்கிறீர்கள். இங்கு தொடர்பான ஒன்றைச் சொல்கிறேன். யு-டியூப் கானொளியில் ஒருவர் விளக்கிக்கொண்டிருந்தார். அசுரன் ஒளித்துவிட்ட பூமாதேவியை வராக மூர்த்தி (விஷ்ணுவின் தசாவதாரத்தில் மூன்றாவது அவதாரம்) அகழ்ந்து வெளிக்கொணர்ந்து மூக்கின் மீது உலக உருண்டையாக வைத்துக்கொண்டிருந்த காலண்டர் படத்தைக் காட்டி யு-டியூபில் விளக்கம் கூறியிருந்தவர் இது புராணக் கதை மட்டுமில்லை இதில் அறிவியல் கூற்று உள்ளது என்றார். வராக மூர்த்தி படத்தை பாருங்கோ… அன்னிக்கே நாமதான் முதலில் உலகம் உருண்டைனு சொல்லி வெச்சுருக்கோம் பாருங்கோ… டாலமி மாலுமிலாம் இன்னிக்கி வந்தவா…
இதுதான் நம் யு-டியூப் அறிவியல். not even wrong.
*