மகுடி இசையும் பாம்புச் செவியும்

Standard

மகுடி இசைக்கு கட்டுண்டுதான் பாம்பு படம் எடுத்து ஆடுகிறதா? இந்த கேள்வி நம்மில் சிலருக்கு இருக்காது. ஏனெனில் பதில் ஆம் என்பதில் நம்பிக்கை. எனக்கு சிறுவயது முதல் இருந்தது. குடவாசல் பாம்பாட்டி மகுடி கொண்டு வர மறந்து ஒரு முறை பாம்புக்கூடையின் மூடியை திறந்து அதைவைத்து ஆட்டியே பாம்பை படமெடுக்கச் செய்தது முதல். இதனால் சிறுவயதிலேயே எனக்கு இதற்கு தீர்வு தெரிந்துவிட்டது என்று சொல்லமாட்டேன். இப்பொழுதும் ரேடியோவில் புன்னாகவராளி கேட்கையில் அப்படி இப்படி பார்த்துவிட்டு, காலை நாற்காலி மீது மடித்து வைத்துக்கொள்ளுவேன். சரி, அப்ப விடை என்ன? கட்டுரையினுள் செல்வோம்.

நம்மில் பலருக்கு மகுடி இசையை கேட்டுதான் பாம்பு படம் எடுக்கிறதா என்று சந்தேகம் இருக்கலாம். மகுடி இசை, புன்னாகவராளி என்று இருந்தாலும், இப்படி சந்தேகப்பட்டு வேறு விளக்கம் தேடுவதற்கு மற்றொரு காரணம் பாம்பிற்கு நமக்கு வெளிப்படையாக தெரிகிறார்போல் காது லேது.

india_snake-charmerஎப்படி சார் அப்புறம் அது மகுடி இசையெல்லாம் கேக்கும்?

அதுதாம்பா பாம்பு காதுங்கறது. நம்ம கண்ணுக்கு தெரியாது. ஆனா அதுக்கு கேக்கும். அண்ணே அண்ணே நாகராஜ் அண்ணேன்னு கூப்டாக்க ராமநாராயணன் படத்துலலாம் ஓடிவருதில்ல.

வேடிக்கை போதும். இதற்கு ‘ஓக்காமின் ஷவரக்கத்தி’ (Occam’s Razor) தத்துவதீர்வின்படி வேறு எளிய விளக்கமும் குடுக்கமுடியும். ஒருவேளை மகுடியை ஊதுவதால் இல்லாமல், அந்த சாக்கில் பாம்பாட்டி அப்படி இப்படி மகுடியை ஆட்டுவதை கண்ணால் பார்த்து பாம்பு ஆடுகிறதோ. ஒரு தற்காப்பிற்கு எதிரியை (மகுடிய) அப்படியே படம் எடுத்து பயம் காட்டுகிறது என்று வைத்துக்கொள்ளலாமே. அட ஆமா, குடவாசல் பாம்பாட்டி மூடியை ஆட்டியதும் இதுக்குதானா. சரியா வரமாதிரி தான் இருக்கு. அப்ப பாலநாகம்மா, நீயா, வெள்ளிகிழமை விரதம்னு மகுடி டான்ஸெல்லாம் உடான்ஸா?

சமீபத்திய ஆராய்ச்சி இவ்விஷயத்தில் என்ன சொல்கிறது?

மேலே சொன்ன அனைத்தையும் தூக்கியடிப்பது போல, பாம்பிற்கு செவி உண்டு என்கிறது [1].

அமேரிக்க பல்கலைகழக ஆராய்ச்சியாளார்கள் லியோ வான் ஹெம்மன், பால் ஃப்ரெய்டெல் மற்றும் புரூஸ் யங் தங்கள் ஆராய்ச்சி முடிவில் இரை நகர்வதை பாம்பு தன் காதால் கேட்டுதான் துரத்திப்பிடிக்கிறது என்று ருசுவுடன் நிருபிக்கிறார்கள்.

பாம்பிற்கு வெளியே தெரிகிறார்போல் காது மடல்தான் இல்லை. ஆனால் நம் உள்நாக்கு போல, அதற்கு உள்காது உண்டாம். இந்த உள்காதுடன் பாம்பின் தாடைக்கு எலும்புத்தொடர்பே இருக்கிறதாம், அருகில் படத்தில் காட்டியுள்ளபடி.

snake-ears

பாம்பின் தாடை நுண்ணியமாக அதிர்கையில், இந்த ஸ்டேப்ஸும் அதிரும். இந்த அதிர்ச்சியை அதன் மூளை ‘கேட்கிறது’. ஸ்டேப்ஸ் என்னும் எலும்பு நம் காதிலும் உண்டு (உடம்பிலேயே மிகச்சிறிய எலும்பு). நமக்கு அது காற்றின் அழுத்த மாற்றங்களை, அதிர்வுகளை உணர்கிறது (காது எப்படி இயங்குகிறது என்று வேறு தருணத்தில்).

பாம்பு நிலத்தில் ஊர்கையில் தூரத்தில் எலி ஓடினால் போதுமாம். அந்த நுண்ணிய அதிர்வுகளை கூட தாடை உணர்ந்து, தானும் ஆடி, தன்னுடன் ஸ்டேப்ஸையும் ஆட்டி, எலியை மாட்டி விடும்.

மண் தரையாக இருந்தால் இன்னுமே உத்தமம். எலிமுதல் எது நகர்ந்தாலும் அது குளத்தில் கல் போட்டால் பரவுவது போல நொடிக்கு 50 மீட்டர் வேகத்தில் அதிர்வுகளை மண்ணில் பரப்பும் (இந்த வேகம் மாறுபடும், ஒப்பிட்டுகொள்ள காற்றில் ஒலி அலைகளின் வேகம் நொடிக்கு 330 மீட்டர்). அந்த அதிர்வுகளின் வீச்சு (amplitude) மிகவும் கம்மி; ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பாகம். ஆனாலும் அது பாம்பிற்கு கேட்குமாம்.

பாம்புச்செவி என்று சரியாகத்தான் சொன்னார்கள்.

இதில் மற்றொரு பிரமிப்பு இருக்கிறது. நாம் காற்றில் ஒலி அதிர்வுகளை அரை நொடி, அரைக்கால் நொடி தாமதத்தில் ஒரு காதிலும் அடுத்த காதிலும் விழுவதை வைத்து சத்தம் வரும் திசையை உணர்ந்து திரும்பி, சரேல் என்று வந்த ஆட்டோவில் மோதாமல் தப்பி (வூட்ல சொல்லிகினுவன்டியா, கஸ்…ம்) விலகுவோம். மனித, மிருக, பறவை இனங்கள் அனைத்தும் இப்படி செய்வதையும் பாம்பு நிலத்தில் தாடை பதித்து, வீக்கான வீச்சிலிருந்தும் சத்தத்தின் திசையை, ஊற்றை, இரையை கண்டுபிடித்துவிடுமாம். இதை பயோமெக்கானிக்ஸ், நேவல் என்ஜினியரிங், நியூரோனல் சர்கிட் என்று பல நிபுணத்துவங்களை வைத்து கணித மாதிரி செய்து ஆராய்ச்சி கட்டுரையில் நிருபிக்கிறார்கள்.

சுருக்கமாக, பயோமெக்கானிக்ஸ் தாடையும் ஸ்டேப்ஸும் எப்படி இயங்குகிறது என்பதை அனுமானிக்க; நேவல் இன்ஜினியரிங் மண்ணை திரவமாக கருதி அதன் அலைகளை அனுமானிக்க; நியூரோனல் சர்கிட் நிபுணம் ஸ்டேப்ஸ் அதிர்கையில் அது எவ்வாறு மூளைக்கு சிக்னல் கொடுக்கிறது என்று அனுமானிக்க. இதுக்குமேல சொன்னா ஒருவேளை பாம்புக்கடியே தேவலாம்னு மூடிட்டு போயிடுவீங்க.

இப்ப நம்ம மகுடி மேட்டருக்கு வருவோம்.

மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சி முடிவுகளை பார்க்கையில், காது இருந்தாலும், ஊர்கையில் தான் பாம்பின் செவி நில அதிர்வுகளை உணர்கிறது என்று தெரிகிறது. தலையை நிலத்திலிருந்து தூக்கிவிட்டால், பாம்பிற்கு இந்த காது பயனற்றுபோய்விடுகிறது. [என்னய்யா படச்சவன் நம்மள இப்டி தல தூக்க வுடமாட்டேங்கறானே என்று பாம்பு(ம்) நொந்துகொள்ளுமோ?]

அதனால் காற்றில் வரும் மகுடி இசையை அதனால் கேட்கமுடியாது என்று கருதலாம்.

பாம்பாட்டியும் அப்படி குந்திகினு முதலில் காலால் தரையை தட்டி ஊறும் பாம்பின் காதில் விழுவார். சரேல் என்று நிமிர்ந்து பார்க்கையில் மகுடி ஊதி, ஆட்டுவார். பாம்பு படமெடுத்து தொடரும். அது படமெடுப்பது, தான் கண்ணால் கண்ட எதிரியை (மகுடியோ, மூடியோ, நாமோ) தற்காப்பிற்காக பயமுறுத்தி தன்னை நெருங்கவிடாமல் செய்வதற்கு.

ஆகையால், கட்டுரையின் முதலில் நாம் ஊகித்த காரணம் சரிதான் என்று நினைக்கத்தோன்றுகிறது.

என்னங்க, இவ்ளோ சொல்லிட்டு கேட்கமுடியாது என்று கருதலாம், நினைக்கத்தோன்றுகிறது இப்படி ஜகா வாங்கறிங்களே என்றால். கட்டுரையை வலையில் அல்லவா வைத்திருக்கிறேன். படிச்சுட்டு நாளைக்கு நான் சொன்னேன் என்பதற்காக வாசல்ல பாம்பாட்டி பொழப்ப கெடுத்துட்டீங்கன்னா.

சும்மா கிடந்த மகுடிய ஊதி கெடுத்தாமாதிரி ஆயிடுமே. அதுக்குதான்.

ஆலோசனைகள்

[1] Auditory localization of ground-borne vibrations in snakes. Physical Review Letters 100, 048701 (2008). DOI: 10.1103/PhysRevLett.100.048701

உருளைகிழங்கு வறுவல் வடிவியல்

Standard

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று தாடியுடன் மனச்சைக்கிள் ஏறி (ஏன் எப்போதும் ராஜா காலத்து மனக்குதிரை, அதனால் தான் சைக்கிள். இதுவும் இக்கால சேரனின் வாகனம் தானே…) நம் பள்ளிப்பருவத்திற்கு சென்றால், அங்கு வட்டம் என்று சிம்பிளான விஷயம் வடிவியலில் (geometry) படித்தது நினைவில் வரும். அதை தூசி தட்டும் இக்கால ஆராய்ச்சி விஷயம்தான் உருளைக்கிழங்கு வறுவல் வடிவியல். ஈக்குவேஷன்லாம் கிடையாது. வாங்க பார்ப்போம் இன்னாங்கறாங்கன்னு.

நமக்கு ஒரு வட்டத்தின் ஆரத்துடன், r, இரண்டு பை (pi ) ஐ பெருக்கினால் அதன் சுற்றளவு (பரிதி) கிடைக்கும் என்று தெரியும் (2pi r ). ஆரத்தை இரண்டு மடங்காக்கினால் சுற்றளவும் இரண்டு மடங்காகும். இதுவும் தெரியும்.

சரி. ஒரு வட்டத்தை (நினைவில்) எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் இப்போது அதன் ஆரத்தையும் அதன் சுற்றளவையும் வெவ்வேறு அளவாக வளரவிட்டால் எப்படி இருக்கும்? அதாவது, சுற்றளவை கண்டுபிடிக்க ஆரத்தை எப்போதும் போல இரண்டு ‘பை’யால் பெருக்காமல் இரண்டே முக்கால் ‘பை’யாலோ அல்லது ஒன்றறை ‘பை’யாலோ பெருக்கினால் என்ன ஆகும்?

கணக்கு தப்பாகி உபாத்தியாரின் மோதிர விரல் நம் தலையில் நங் என்று இறங்கும் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. இருந்தாலும், குட்டு வலியை பொறுத்துக்கொண்டு சற்று யோசித்து பாருங்கள்.

ruff_250வேண்டுமானால் வட்டத்தை ரொம்ப ரிஜிடான விஷயமாக மனதில் கொள்ளாமல், நாம் அடுக்களையில் ரகசியமாக இட்டுதரும், வட்டமான, அடுப்பில் இன்னமும் சுடப்படாத, சப்பாத்தி போல நினைத்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட ஒரு ‘கொழகொழ’ வட்டம் தன் ஆரத்தை இரண்டு மடங்காக அதிகரித்துக்கொண்டிருக்கையில், இதன் சுற்றளவு மட்டும் கிடுகிடுவென நான்கு மடங்கு வளர்ந்துவிட்டது என்றால் எப்படி இருக்கும்?

முதலில் இரு பரிமாணத்தில் தட்டையாக, வட்டமாக இருந்த சப்பாத்தி இப்போது சுற்றளவு மட்டும் வேகமாக வளர்வதால், பிதுங்கி, வழிந்து, மடிந்து, முப்பரிமாணமாகி, சட்டென்று பார்க்க ஒரு உருளைகிழங்கு வறுவல் போல ஆகிவிடும். உருளைகிழங்கு வறுவல் உடம்பிற்கு ஆகாதென்றால், குதிரை மீது அமர்வதற்கு வைக்கும் சேணத்தை (ஸாடில்) போல யோசித்துக்கொள்ளுங்கள்.

வளர்ச்சியை மனக்கண்ணில் யோசிக்கமுடியாவிட்டால், பாதகமில்லை. மேலே இருக்கும் படத்தை பாருங்கள், புரியும்.

மேலும் விளக்க கீழே இருக்கும் அரை நிமிட வீடியோவை பாருங்கள்.

[Video courtesy of Martin Michael Müller, École Normale Supérieure.]

சரி, சுற்றளவு ஆரத்தைவிட வேகமாக வளர்கையில் வட்டம் பிதுங்கும். இப்படியே செய்துகொண்டு போனால் ஒரு மடிப்பு தாண்டி பல மடிப்புகள் விழும் சாத்தியங்கள் இருக்கிறதல்லவா. இப்படி நேர்கையில், வட்டம் மடிந்து வழிந்து உருமாறி சுருள் சுருளாகி, மகாராணி எலிசபத் காலத்து ஃபாஷனான சுருள் காலர் [3] போன்று ஆகிவிடும்.

அதாவது, சுற்றளவு ஆரத்தை விட வேகமாக வளர்கையில், உருளைக்கிழங்கு வறுவலிலிருந்து ராணி எலிசபதின் சட்டை காலர் வரை வட்டம் உருமாறி தோன்றும் சாத்தியங்கள் இருக்கிறது.

eliz_250சரி, இப்படிப்பட்ட வளர்ச்சிக்கு பதிலாக ஆரம்பத்தில் வட்டமாக தொடங்கி ஆரம் வேகமாகவும், சுற்றளவு மெதுவாகவும் வளர்ந்தால் வட்டம் என்னவாகும்? அதாவது, சுற்றளவு ஆரத்துடன் இரண்டு ‘பை’யை பெருக்கினால் வரும் மதிப்பில்லாமல், சற்று குறைவாக வருமாயின் ($$ < 2pi r $$) என்னவாகும்?

வட்டம் கிழிந்துவிடும்.

யோசித்துப்பாருங்கள்.

மேலும், இப்படி ‘கிழிந்த’ வட்டத்தின் இரு ஓரங்களையும் சேர்த்தால் கிடைப்பது கூம்பு வடிவம்.

இப்படியெல்லாம் வடிவியலை வெட்டியும், வழியவிட்டும், யோசிப்பதால் என்ன பயன்?

சும்மா ஒரு ஜாலிக்குதான்.

என்றாலும், சில பயன்கள் தட்டுப்படுகிறதாக சில கணிதவியலார்கள் கூறுகின்றனர்.

பாரீஸிலுள்ள École Normale Supérieure (ENS) என்ற நிறுவனத்தில் உள்ள கணிதவியல் ஆராய்சியாளர்களான Julien Dervaux மற்றும் Martine Ben Amar இருவரும்தான் சமீபத்தில் [1] எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரையில் இப்படி கூறுகின்றனர். மேலும், École Normale Supérieure நிறுவனத்தின் மற்றொரு கணிதவியல் ஆராய்சியாளர் Martin Michael Müller, National Autonomous University of Mexico (UNAM) வின் Jemal Guven னுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் கூம்பு வடிவமாக மாறும் வட்டத்தின் தன்மைகளையும் சமீபத்தில் [2] விளக்கியுள்ளார்.

அஸிட்டாபுலேரியா அசிடாபுலம் (Acetabularia acetabulum) என்பது ஒரு பாசி, ஆல்கேயின் (algae) பெயர். இப்படிப்பட்ட உயிரினங்களின் வளர்ச்சி உருவ அமைப்பு பற்றி படிப்பது உருமாறுதோற்றவியல். ஆங்கிலத்தில் மார்ஃபோஜெனிசிஸ். இப்படிப்பட்ட பாசிகள் வளருகையில் முறையே கூம்பாகவும், தட்டையான வட்டமாகவும் வடிவங்கள் பெற்று வளர்கிறது. இது போன்ற மிருதுவான டிஷ்யூக்களின் (டிஷ்யூ தமிழ் சொல்: இழையம்) உருமாறுதோற்றவியலை மேற்கூறிய கோளாரான வடிவியலைக் கொண்டு விளக்க முடியும் என்று சமீபத்தில் [1] யூகித்துள்ளனர்.

மேலும் ஆராய்ச்சி வளர்ந்தால் செடிகளின் உருமாற்றங்களையும் இப்படிப்பட்ட வடிவியலைக்கொண்டு விளக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பார்ப்போம்.

ஒரு சுவையான ஒட்டு. சல்வடார் டாலி என்று ஒரு ஓவியர் இருந்தார். கேள்விப்பட்டிருக்கலாம். டாலியின் ஒரு பிரசித்தி பெற்ற ஓவியம் Persistence of Memory. மேற்கூறிய வடிவியல் விளக்கத்துடன் கடிகாரங்கள் (நினைவுகள்) வழிந்தோடும் இவ்வோவியத்தை (யோசித்துப்) பாருங்கள்.

the_persistence_of_memory(கலை) அழகிலிருந்தே (வடிவியல்) அறிவியல் தோன்றுவதற்கு இது ஒரு உதாரணம்.

முடிக்கும்முன், அறிவியல் சிந்தையை பற்றி கட்டுரையின் விஷயத்தை வைத்து ஒரு உப ஒட்டு.

இதில் வேறு ஒன்றும் இல்லை, இதைப்பற்றி அறிவியல் கணித விஷயங்கள் மொத்தமும் தெரிந்தாகிவிட்டது என்ற தோரணையில் வட்டத்தை பள்ளியில் பார்த்து, “இதுக்குமேல இதுனால என்ன யூஸ்?” என்று அதன் கூற்றுகளையும் கோணங்களையுமே பள்ளிப்பரிட்சையோடு மறக்க நான் எத்தனித்திருக்கிறேன். பலதை மறந்துமிருக்கிறேன். ஆனால் யோசித்துப்பாருங்கள், வடிவியல் ஆராய்ச்சி என்று இந்த கட்டுரையில் நாம் சந்தித்ததெல்லாம் பள்ளியிலிருந்தே நமக்கு நன்றாகத் தெரிந்த வட்டத்திலிருந்து தொடங்கியதுதான்.

அறிவியலில் எந்த விஷயத்தையும் சாறு பிழிந்தாகிவிட்டது என்று அவ்வளவு சுலபமாக சக்கையாக்கிவிடமுடியாது. ஆனால் பள்ளியில், கல்லூரியில் படிக்கையில் பலநேரங்களில் நாம் இவ்வாறு ‘மூடிய கல்வியாக’ பல விஷயங்களை சக்கையாக நினைத்துவிடுகிறோம். பரிட்சையிலும் சக்கை(யை)போடுவோம். பிறகு வேலைக்குபோய் ரிடையர் ஆகிவிடுவோம். இடையில் நம் மக்களை ‘நன்றாக’ படிக்கவைப்போம்.

இதைப்பற்றி நிறைய கேள்வி கேள், எந்த விதியையும், விஷயத்தையும் நான் கூறுவதால் மட்டும், நீ படித்ததால் மட்டும் ஏற்காதே. அறிவியல் மனைவி இல்லை. தாராளமாக சந்தேகப்படு. ஆரோக்கியமாக. அறிவியல் கற்றார் விஷயமும் இல்லை. கேள்வி கேள். சோம்பலிக்காமல் முடிந்தவரை பதிலுரைக்கவும் முற்படு. கறார் விஷயம் இல்லை. அதனுடன், அதனை வைத்து அதற்காகவே விளையாடு. மாற்றிக் கூறி அநேகர் பயங்காட்டினாலும் பயப்படாதே. பள்ளியில் படித்த வட்டம் இன்னமும் இளவட்டம்தான்.

இப்படியெல்லாம் எனக்கு கொட்டாவி வருகையில் நிறுத்திக்கொள்ளும் அளவிற்கு வசனம் பேசி, முதுகில் தட்டி, அதட்டி, வலிக்காமல் அடித்து, என்னையும் சற்று சிந்திக்கத் தூண்டியிருந்தால், வட்டம் அதன் விதிகள் பற்றி தெரிந்த நானும் ஒருவேளை இந்த வறுவல் வடிவியலை பள்ளியிலேயே யோசித்திருப்பேன்.

மாத்தனும் சார், எல்லாத்தயும் மாத்தனும்…

கட்டுரை சுட்டிகள்

  1. Morphogenesis of Growing Soft Tissues, Julien Dervaux and Martine Ben Amar, Phys. Rev. Lett. 101, 068101 (issue of 8 August 2008)
  2. Conical Defects in Growing Sheets, Martin Michael Müller, Martine Ben Amar, and Jemal Guven, Phys. Rev. Lett. 101, 156104 (issue of 10 October 2008)

எல் கிரக்கோ விடுகதை

Standard

அழகும் அறிவும் பற்றி அருள் பேசிக்கொண்டிருக்கார். சார்ந்ததாக அறிவியல் சிந்தை என்றால் என்ன என்பதை சுவையாக விளக்கும் ஒரு தோற்ற மாயையை இப்பதிவில் தருகிறேன்.

எல் கிரக்கோ (El Greco) பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலிய ரினைஸன்ஸ் காலத்து ஓவியர். இவர் வரைந்த கடைசி கால ஓவியங்களில் ஆண்கள், பெண்கள், குழத்தைகள், தேவதைகள் என்று பாரபட்சமின்றி அனைவரும், நீண்டு உழைக்கும் சுடர்மணி பனியன் போல, நிஜத்தைவிட நீண்டு இழுக்கப்பட்டு ஒல்லியாக இருந்தார்கள் (பார்க்க அருகில்: Adoration of the Shepherds).

327px-adoracion_de_los_reyes_magos1இவ்வோவியங்களை சென்ற நூற்றாண்டின் மத்தியில் பார்த்த இங்கிலாந்தை சேர்ந்த ஒரு கண் மருத்துவர் எல் கிரக்கோ இறுதி காலங்களில் கண் நோயால் அவதிப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு மக்களே இப்படித்தான் இழுக்கப்பட்டு தெரிந்திருக்கிறார்கள். அதனால் தான் இப்படி வரைந்துள்ளார் என்று காரணம் கூறினார்.

பூ, ஓவியம் இவற்றின் அழகை மட்டும் சிந்தனையொதுக்கி ரசித்து (அது எப்படியோ) நாம் ஒதுங்கிவிடாமல் சற்று உஷாரான பார்ட்டியாக விழிப்புடன் இருந்தால் கண் மருத்துவரின் அபத்தமான தர்கானுகூலத்தை கண்டுகொண்டுவிடலாம்.

அறிவியல் சிந்தையும் இதுதான்.

சர் பீட்டர் மெடவார் என்ற (கான்சர் பற்றிய ஆராய்ச்சிக்காக) நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து விஞ்ஞானி மேற்கூறிய விஷயத்தை எழுதி, இப்படி கூறுகிறார்: நமக்கு விஞ்ஞானி ஆவதற்கு போதிய சாமர்த்தியம் இருக்கிறதா என்று பலர் யோசிப்பீர்கள்; உங்களுக்கு மேலே கண் மருத்துவர் கூறும் காரணம், கலையழகை ரசிக்கும் ரசிகஞானத்திலிருந்து மட்டுமல்ல, தர்க்க ரீதியாகவும் அபத்தம் என்று படித்தவுடன் தெரிகிறது என்றால் நீர் அறிவியல் சிந்தையில் கெட்டி. ஏன் அபத்தம் என்று விளக்கிய பிறகும் புரியவில்லையெனின் நீர் மந்தம்.

கண் மருத்துவரது விளக்கத்தில் ஓட்டை என்ன என்று பார்ப்போம்.

தர்க்கத்திற்காக மருத்துவர் கூறுவது போல் ஒரு வியாதி இருக்கிறது என்றும், இதனால் பீடிக்கப்பட்டவர்களுக்கு பார்ப்பது எல்லாம் இரண்டாக தெரியும் என்றும் வைத்துக்கொள்ளுவோம். பார்ப்பதை வரையும் ஓவியர், ஒருவரை இருவராக பார்ப்பதால், இருவராகவே கான்வாசில் வரைகிறார் என்றும் வைத்துக்கொள்ளுவோம். சரி. வரைந்துமுடித்த பிறகு அவரே தன் ஓவியத்தை பார்க்கையில், ஒவியத்தில் இருக்கும் இருவர் நால்வராக தெரிவார்களே. ஓவியத்தின் கோளாறு ஓவியருக்கே விளங்கிவிடும்.

ஒருவரை இருவராய் ஓவியர் பார்த்த நிஜத்துடன் ஒத்துப்போவது போல ஓவியம் சரியாக வரவேண்டும் என்றால் வரைகையிலும் ஒரு ஆளைத்தான் ஓவியர் வரைய வேண்டும். அப்பொழுதுதான் கண் கோளாருடன் இருக்கும் ஓவியருக்கும் ஓவியம் சரியாக இருக்கும். அப்படி அவர் ‘சரியாக’ வரைந்த ஓவியம் பார்க்கும் மற்றவருக்கும் சரியாகத்தான் (ஒரு ஆளாகத்தான்) தெரியும்.

இதைப்போலத்தான் எல் கிரக்கோவின் ஓவியங்களும். அவ்வோவியங்களில் மனித தேவ நீழ்ச்சிகள் எல் கிரக்கோ வேண்டும் என்று செய்ததுதான். அப்படி  நீண்டுதான் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்று அவர் விரும்பியதால். கண் கோளாறு இருந்திருந்தாலும், அதனால் இல்லை.

இப்படி எழுதிவிட்டு எனக்கு கண் மருத்துவரின் அபத்த விளக்கம் உடனே தெளிந்துவிட்டது என்று சிலுப்பிக்கொள்ளமாட்டேன். சற்று யோசித்தபிறகுதான் புரிந்தது. சற்று யோசித்தபின் நாம் அனைவரும் அறிவியல் சிந்தையுள்ளவர்கள்தான். இப்படிப்பட்ட அறிவியல் சிந்தையை நம் கிராமத்து மூதாட்டியரிடம் நாம் நிறைய பார்த்திருக்கிறோம். வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள் நிச்சயம் அவர் சத்தியம் சாஃப்ட்வேர் ஷேர் வாங்கியிருக்க மாட்டார்.

இப்படி அறிவியல் சிந்தையை வளர்த்துக்கொள்வதற்கு அழகு, அறிவு, கலை, அறிவியல் என்றெல்லாம் பிரித்தெழுதி நம்மை நாமே வகுத்துக்கொண்டு நான் கலைஞன், நான் விஞ்ஞானி, நான் எல் கிரக்கோ, நான் கண் மருத்துவர், நான் கடவுள், அப்ப ஆர்யா? என்றெல்லாம் அலைபாயவேண்டியதில்லை.

அழகை, உலகை, அறிவியல் சிந்தையுடன் ரசித்தால் போதும்.

ஆலோசனைகள்

[1] Advice to a Young Scientist – P. B. Medawar

[2] Image Credit: http://en.wikipedia.org/wiki/The_Adoration_of_the_Shepherds_(El_Greco)

மேகத்தின் கனம் என்ன

Standard

காளிதாசரின் மேகதூதத்திலிருந்து முன்னொருகாலத்தில் காதலர்கள் தூதுவிட மேகத்தை உபயோகித்தாக தெரிகிறது. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இதே மேகம் காதலர்களால் பட்டபாட்டில் முத்துசாமி தீக்ஷதர் வர்ஷய வர்ஷய வர்ஷய என்று பாடியதும் கதறிக் கொண்டு மழையை பொழிந்ததாம், கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தற்காலங்களில் மேகத்திற்கும் நமக்கும் உறவுமுறை அவ்வளவு சுகிர்தமாக இல்லை. பல வேளைகளில் சுணங்கிக்கொண்டு நாம் விமானம்கொண்டு ஸில்வர் ஐயோடைட் பொடியை காட்டமாய் போட்ட பின்னரே தன்னுள் கொலாய்டாக (கூழ்மமாக) உள்ள நீராவியை ஒன்றுசேர்த்து மழையாக தும்முகிறது. சிலவேளைகளில் தீக்ஷதர் பாட்டு கேட்காமலேயே, பொடிபோட தேவையில்லாமல் கோபத்துடன் க்லோபல் வார்மிங் என்று காரணம் காட்டி சொடுக்கியவுடன் கொட்டித்தீர்த்து மும்பாயை ஒரு கை பார்க்கிறது.

இப்படியாக பல பெருமைகள் உடைய மேகத்தின் கனம் (எடை) என்ன? யாராவது அளந்திருக்கிறார்களா? செய்திருக்கிறார்கள்.

கனத்தை அளப்பதற்கு முன் மேகத்தை பற்றி சில விஷயங்கள். மேகம் உயரத்தில் பவனி வரும் பனி. மாற்றிச் சொன்னால் பனி நம் அருகில் கைபட இருக்கும் மேகம்.

மேகத்தில் பத்து பிரிவுகள். இவை அனைத்தும் க்யுமுலோ, ஸ்ட்ராடஸ், சிர்ரஸ் என்ற மூன்று ஆதார வகைகளின் கலவைகள். சிர்ரஸ் மிக உச்சியில் உள்ள மேகம். அதன் தொலைவை ஒப்பிடுகையில் க்யுமுலோ நம் தலைக்கு அருகில் சில கிலோமீட்டரில் இருப்பது. இதில் கவனிக்க வேண்டியது, ஒரு இடத்தில் ஒரு வகையாக உலவி வரும் மேகம் சிறிது நேரத்தில் (15 நிமிடம் போதுமாம்) வேறு வகையாக மாறிவிடலாம்.

[ஆஸ்திரேலியாவில் க்யூமுலஸ் மேகங்கள் — விக்கிபீடியாவில் இருந்து]

அனைத்து வகை மேகங்களும் ஒரளவிற்கு நீராலானது. உதாரணத்திற்கு நூறு மீட்டர் குறுக்களவு கொண்ட ஒரு மேகத்தை அப்படி ரெண்டு கை போட்டு பிழிந்தால் சுமார் பத்து பக்கெட் அல்லது ஒரு பாத் டப் அளவு தண்ணீர் கிடைக்கும்.

மேகம் எப்படி உருவாகிறது? சுருக்கமாக இதோ. சூரியன் பூமியை சூடாக்குகிறது. பூமி வாங்கிய வெப்பத்தை வைத்துக்கொள்ளாமல் பதிலுக்கு வேறு அலைஅகலத்தில் வெப்பத்தை திருப்பி அனுப்பி அதன் அருகே உள்ள காற்றை சூடாக்குகிறது. சூட்டினால் தன் அடர்த்தி குறைவதால், ஒரு மிதவை தன்மை (buoyancy) ஏற்பட்டு, புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் சூடான காற்று மேலெழும்பும். ஆங்கிலத்தில் பொதுவாக கன்வெக்ஷன் என்பர். தமிழில் வெப்ப நீரோட்டம் அல்லது வெப்ப சலனம் எனலாம்.

புல் தரை, கட்டாந்தரை, மணல்வெளி, நீர்நிலை இப்படி மாறுபடுவதால், பூமியின் மேற்பரப்பு ஒரே சூட்டில் இருப்பதில்லை. அதனால் காற்றும் வெவ்வேறு உஷ்ணத்தில் சூடாக்கப்பட்டு, பாயன்ஸி (மிதவை) விசை வேறுபடுவதால் ஒரு பெரிய பரப்பளவில் பார்த்தால், பல இடங்களில் வேகமாகவும் சில இடங்களில் மெதுவாகவும் மேலெழும்புகிறது. இப்படி வேகமாக மேலே செல்லும் காற்றுபகுதிக்கு தெர்மல்ஸ் (thermals) என்று பெயர். தமிழில் வெப்ப சலனம் என்றே சொல்லலாம்.

இப்படி மேலே குறைந்த அழுத்த மண்டலத்தினுள் செல்லும் காற்று விரிந்து குளிர்கிறது. இதனால் காற்றினுள் இருக்கும் நீராவியும் குளிர்ந்து அங்கங்கு துசியின் மீதோ துகள்களின் மீதோ மையம் கொண்டு திரண்டு, பரவி, திரவமாகவும் ஆவியாகவும் ஒரு மாதிரி கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கொலாய்டாய் (கூழ்மமாய்) மிதக்கிறது.

இப்படி நிறைய சிறிய நீர் துளிகள் சேர்ந்து உருவானதுதான் மேகம்.

தூசிகள் ஒத்துழைக்கவில்லையென்றால் மே-நாட்-கம்.

ஏன் மேகம் ஒரு உயரத்தில்தான் தோன்றுகிறது, ஒரு உயரத்திற்கு மேல் தோன்றுவதில்லை என்பதெற்கெல்லாம் பதில் இருக்கிறது. இதற்கு கன்டென்ஸேஷன் லெவல், ரேடியேஷன் ஈக்விலிப்ரியம் என்று மேலும் சில விஷயங்களை அலசவேண்டும். எனக்கும் குன்சாகத்தான் தெரியும். சொன்னால் அடிக்க வருவீர்கள்.

சரி இப்போது தலைப்பில் கேட்ட கேள்விக்கு வருவோம். கனத்தை அளப்பதற்கு முன் மேகத்தின் பரிமாணத்தை அளக்கவேண்டும். எப்படி அளப்பது? பூமியின் மீது விழும் மேகத்தின் நிழலின் பரிமாணத்தை அளக்கலாம். இப்படி அளந்தபிறகும் ஒரு சந்தேகம் இருக்கும். நிழலின் அளவு வானில் இருக்கும் நிஜ மேகத்தின் அளவுடன் எவ்வளவு ஒத்துபோகிறது என்று.

யோசித்து பார்த்தால் நிழலின் குறுக்களவு மேகத்தின் அளவுடன் நிச்சயம் ஒத்துபோகும். ஏனெனில் சூரியனில் இருந்து பூமிக்கு வரும் கதிர்கள் சமாந்தரமாக (parallel rays) வருபவை. இதனால் நிழலின் குறுக்களவாவது நிச்சயம் அதன் நிஜ மேகத்துடன் ஒத்துபோகும்.

இருங்கள், உச்சிவேளையில் இது சரி. மாலை நேரங்களில் சூரியன் அடிவானத்தில் இருக்குமே. அப்போது நிழல் குறுக்களவு கல்லில் சரியாக இடாத சப்பாத்தி போல ஒரு பக்கம் நீட்டிக்கொள்ளுமே.

மாலையில் இப்படி நீட்டி முழக்கிக்கொள்ளும் பகுதியில் இருந்து செங்கோணத்தில் உள்ள மற்றொறு குறுக்களவு சரியாகத்தானே இருக்கும். அதை வைத்துக்கொள்ளலாமே.

சரி. இப்படி நிழலின் குறுக்களவை நிர்ணயித்து, ஒரு மேகத்தின் பரப்பளவை அனுமானிக்க முடியும். கன அளவை அனுமானிப்பதற்கு மேகத்தின் உயரம் வேண்டுமே. எப்படி செய்வது? வேதாளம்போல் அந்தரத்தில் தொங்கி கொண்டா? ஆமாம். தொங்கிக்கொண்டுதான், பலூனில்.

மேற்கூறியதெல்லாம் நிஜம்தானா இல்லை படிக்கிறோம் என்பதற்காக பீலாவா என்கிறீர்களா. நிஜம்தான். மார்கரெட் லெமோன் (Margaret LeMone) என்ற அமெரிக்கர் கொலராடோவில் பௌல்டர் பகுதியின் மேலே தவழ்ந்து கொண்டிருந்த ஒரு குழந்தை க்யுமுலோவை பிடித்து இவ்வாறு படுத்தி மேற்கூறியபடி அளந்துள்ளார், நிறுத்துள்ளார்.

குழந்தை மேகத்தின் அளவு 0.6 மைல், கிட்டதட்ட 1 கிலோமீட்டர். அமெரிக்காவில் பௌல்டருக்கு அருகில் தரை பரப்பில் அனேகமாக ஒவ்வொரு மைல் இடைவெளியில் ரோடு போட்டிருந்தது இவருக்கு மேகத்தின் நிழலை அளக்க சாதகமாக அமைந்தது. இவர் அளந்த மேகத்திற்கு உயரமும் கிட்டதட்ட 1 கிலோமீட்டர்தான். இதனால் மேகத்தின் கன அளவு (இது வால்யூம்) 1 க்யூபிக் கிலோமீட்டர் ($$10^9$$ மீட்டர்).

மேலும், சராசரியாக ஒரு க்யூபிக் மீட்டரில் மேகத்தில் அரை கிராம் நீர் இருக்கும். கணக்கிட்டால், மார்கரெட்டின் மேகத்தில் தோராயமாக 500 டன் நீர் இருந்திருக்க வேண்டும். ஒரு யேர்பஸ் விமானத்தின் மேக்ஸிமம் டேக்ஆஃப் வெயிட்டைவிட சற்று கம்மி.

மேலே குறிப்பிட்ட முறையை உபயோகித்து மெகா ஸைஸ் மேகத்தைவிடுத்து, வேண்டிய இடத்தில் குளிப்பதற்கு ஒரு பெர்ஸனல் மழை தருவிக்கும் கருவியாக நம் தலைக்குமேல் மட்டும் மிதக்கும் 5 க்யூபிக்மீட்டர் கன அளவு கொண்ட ஒரு மேகத்தில் எவ்வளவு நீர் இருக்கும்? ஒரு முறை குளிக்க போதுமா? கணக்கிட்டு, சென்னைவாசியாக இருந்தால் ஒரு பக்கெட் தண்ணீருடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

ஜான் ஆடம்ஸ் எழுதியுள்ள மாதமாடிக்ஸ் இன் நேசர் (Mathematics in Nature) என்ற புத்தகத்தில் இயற்கையை பள்ளி கணக்கு பாடத்தை (மட்டும்) உபயோகித்து எவ்வளவு அறிந்து கொள்ளலாம் என்று அருமையாக விளக்கியுள்ளார். இதில் மேகத்தை அளப்பதை பற்றியும் எழுதியுள்ளார். படித்துப்பாருங்கள்.

வெப்ப சலனம்

Standard

சூடான காற்று மேலெழும்பும். அனுபவித்திருக்கிறோம்.

ஒரு பாத்திரத்தில் தேமேனென்று சும்மா இருக்கிற தண்ணீரை அடுப்பில் வைத்து மிதமாக (கவனிக்க: மிதமாக) சூடுபடுத்தும் பொழுது தன்னிச்சையாக அது பாத்திரத்தில் கீழிருந்து மேலாக சுழலுவதை கவனித்திருப்போம் (வீட்டில் சமயலறைவரை சென்றிருந்தால்). இதுவும் புவியீர்ப்பு திசையை எதிர்த்து மேலெழும்பும் விஷயம்தான்.

வெப்பமான திரவங்கள் எல்லாமே இந்த வகையான வெப்ப ஓட்டத்தை செயல்படுத்தும். அறிவியல் பாஷையில் இந்த வகையான வெப்பத்தினால் உந்தப்பட்ட தன்னிச்சையான திரவ ஓட்டத்தை நேசுரல் அல்லது ப்ரீ கன்வெக்ஷன் (natural or free convection) என்பர்.

காற்று, தண்ணீர் மற்றுமின்றி அநேக திரவங்கள் வெப்பமூட்டுகையில் இந்த புவியீர்ப்பு திசையை எதிர்த்து மேலெழும்பும் தன்மை இருக்கிறது [*]. சூடான திரவத்தின் அடர்த்தி அதனை சுற்றியுள்ள மற்ற பகுதிகளின் அடர்த்தியிலிருந்து குறைகிறது. இதனால் மற்ற பகுதிகளை காட்டிலும் அடர்த்தி குறைந்த திரவத்தின்மேல் புவியீர்ப்பு விசையின் ஆதிக்கம் கம்மியாகி, அதனை அடர்த்தி அதிகமுள்ள திரவபகுதிகளினூடே மேலெழும்பச்செய்கிறது. இதனை மிதவு விசை (buoyancy force) என்பர். மேலே சென்ற வாயு விட்டுச்சென்ற வெற்றிடத்தை பக்கத்தில் இருக்கும் அடர்த்தி அதிகமுள்ள வாயு நிரப்பிவிடும். அடுப்பில் மிதமாக சூடாக்கப்படும் தண்ணீர் பாத்திரத்தின் அடியிலிருந்து மேலாக தன்னிச்சையாக சுழலுவதற்கு இது ஒரு சுருக்கமான விளக்கம்.

கடல் காற்று தோன்றுவதன் காரணம் இவ்வகை வெப்ப சலனம்தான். மெழுகுவர்த்தி தன் அருகிலிருக்கும் தான் எரிவதற்கு உட்கொண்ட ஆக்ஸிஜன் அற்ற காற்றை தன்னிச்சையாக தன் சூட்டினால் மேலுழுப்பி புது காற்றை வரவழைத்து நீடித்து எரிவதும், வெயிலில் சூடான ரோட்டின் மேல் வெப்பக்காற்றலைகள் எழும்புவதும், சூரியனில் வெப்பம் மிகச்சூடான “நடுசென்டரி”லிருந்து அதன் விளிம்பிற்கு சுழற்சியாக தள்ளப்படுவதும் இந்த ”ப்ரீ கன்வெக்ஷன்” சமாசாரங்கள்தான். இவ்வளவு ஏன்; வீட்டில் ப்ரிட்ஜில் ஐஸ் உற்பத்தி செய்யும் ப்ரீஸர் (freezer cabinet) பகுதி ஏன் மேலே வைக்கப்பட்டிருக்கிறது என்று கவனித்திருக்கிரீர்களா? யோசித்து பாருங்கள்; வெப்ப சலனம்தான் காரணம்.

மேலே குறிப்பிட்ட தன்னிச்சையான வெப்பநீரோட்டம் வெப்ப சலனத்தில் ஒரு வகை. மற்றொருவகையில் வெப்பமான திரவத்தை புற உந்துதல் மூலம் வேகமாக நாமே ஓடவிடுவது.

அதாவது தண்ணீராக இருந்தால் ஒரு பம்ப் மூலமாக குழாய்களிலோ, காற்றாக இருந்தால் ஒரு விசிறிகொண்டு உந்தியோ அல்லது கம்ப்ரஸரிலிருந்து நேராகவோ குழாய்களில் செலுத்துவதும் புற உந்துதல் விஷயம். இதன்மூலம் வெப்பத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு திரவங்கள் மூலம் கடத்துவது எளிதாகிறது. இந்த வகை வெப்ப நீரோட்டத்திற்கு ஆங்கிலத்தில், போர்ஸ்டு கன்வெக்ஷன் (forced convection) என்று பெயர். தமிழில் உந்து வெப்ப சலனம் என்று குறிப்பிடுகிறேன்.

பம்ப்பையோ, கம்ப்ரசரையோ இயக்குவதற்கு மின்சாரம் தேவை. இதற்கு வாரியத்திற்கு காசு கொடுக்கவேண்டும் என்பதால், இந்தவகை கன்வெக்ஷனை, ப்ரீ கன்வெக்ஷனிலிருந்து வேறுபடுத்த பெய்ட் (paid) கன்வெக்ஷன் என்று வேண்டுமானால் சும்மா உம்மனாங்காட்டிக்கு சொல்லலாம். அறிவியல் பரிபாஷையில் ஊறியவர்கள் சற்று முகம் சுளிப்பார்கள்.

முடிக்கும் முன் மேலும் சில உதாரணங்கள்.

கரி, எண்ணை முதலியவற்றை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலை (power plant) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். எண்ணுரில் இருக்கிறதே. இவ்வகை ஆலைகளில் எரிபொருள் எரியும் பாய்லர் பர்னெஸ்சை சுற்றி தண்ணீர் செல்லும் குழாய்களை ஒன்றுசேர்த்து சுவர் எழுப்பியிருப்பார்கள். இதற்கு வாட்டர்வால் (water-wall) என்று இஞ்சினியர்களிடம் செல்லமாக ஒருபெயர் உண்டு.

தண்ணீரை இந்த குழாய்களில் செலுத்துகையில், அது நீராவியாகி சுய உந்துதலினால் வெப்பநீரோட்டமாகி, மேலெழும்பி, ஒரு தொட்டியில் நிரம்பும். தண்ணீர் குழாய்களில் நீராவி மேலெழும்பி விட்டுச்சென்ற வெற்றிடத்தை இந்த தொட்டியிலிருக்கும் அடர்த்தி மிகுந்த தண்ணீர் தன்னிச்சையாக கீழிறங்கி நிரப்பும். தன்னிச்சையாக தண்ணீர்-நீராவியாக சுழலும் இந்த பகுதி (natural circulation loop), மேலே குறிப்பிட்ட சுய வெப்ப சலனத்திற்கு நல்ல உதாரணம்.

தொட்டியில் வந்தடைந்த இந்த நீராவியை மீண்டும் ஸூப்பர்ஹீட்டர் எனப்படும் நிறைய குழாய்கள் அங்குமிங்கும் செல்லும் ஒரு வெப்ப பரிமாற்ற கருவியில் செலுத்தி மேலும் உஷ்ணத்தையும் வேகத்தையும் கூட்டுவார்கள். இங்கு விரைந்து செல்லும் நீராவியில் மேலும் உஷ்ணத்தை ஏற்றுவது உந்து வெப்ப சலன முறையில்.

மிகுந்த உஷ்ணத்துடன், வேகமாக வெளிப்படும் இந்த நீராவியை பெரிய டர்பைன் பிளேடுகள் வழியே செலுத்தி, அவை சுழலுகையில் உடன் சேர்த்திருக்கும் ஜெனரேட்டர்களிலிருந்து மின்சாரம் உற்பத்திசெய்யப்படும். டர்பைன் பிளேடுகளின்மேல் ஓடுகையில் அப்பிளேடுகளை சூடுபடுத்தி தன் உஷ்ணத்தை நீராவி இழப்பதும் ஒரு வகையான உந்து வெப்ப சலன வெப்ப பறிமாற்றமே. பின்னர் இந்த உந்துசக்தியிழந்த நீராவியை மறுபடியும் பாய்லர் உலையினுள் செலுத்தும்முன், கன்டென்ஸர் எனப்படும் மற்றொரு குழாய்களடங்கிய சமாசாரத்தில் குளிரவைத்து தண்ணீராக்குவதும் மற்றொரு உந்து வெப்ப சலன வெப்ப பறிமாற்ற உதாரணமே.

க்ரௌஸ் (Crouse) என்றொறு பட்சி ஆப்பிரிக்காவில் எங்கோ இருக்கிறதாம். நான் பார்த்ததில்லை. இது தன் பறக்க பழகாத குஞ்சுகளுக்கு நீர் கொண்டுவருவதற்காக பக்கத்தில் உள்ள நீர்நிலையில் சென்று ஜம்மென்று தன் இறக்கைகளெல்லாம் நனைய ஒரு கங்காஸ்நானம் செய்யும். பின்னர், நம்மூர் காக்கை போலெல்லாம் உடனேயே ரொம்பவும் சிலுப்பிக்கொள்ளாமல், குளித்தமேனியாக அப்படியே மடியாய் பறந்து கூட்டை வந்தடைந்து, குஞ்சுகளின் வாய் முன்னிலையில் சிலுப்பிக்கொள்ளும். அவைகளுக்கு தண்ணீர் தருவதற்காக.

இந்த அசாதாரண முயற்சியில் குறிப்பாக நீர்நிலை பறவையின் கூட்டிற்கு அருகிலிருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் பறந்துவருகையில் இறக்கையிலிருக்கும் தண்ணீர் மொத்தமும் கூட்டிற்கு வருமுன் உஷ்ணக்காற்றில் நீராவியாகிவிடும். இறக்கை உலர்ந்துவிடும். க்ரௌஸ் பட்சி தன் கூட்டை அதனால் நீர்நிலைகளுக்கு அருகாமையிலேயே அமைக்கும்.

பெரிய பாலைவன கண்டத்தில் வசிக்கும் ஆப்ரிக்கர்கள், இந்த க்ரௌஸ் பட்சியின் கூடு இருக்கும் இடம்வைத்து சற்றென்று கண்களுக்குத் தட்டுப்படாத நீர்நிலைகளின் அருகாமையை ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல் அறிந்துகொள்வதாக படித்திருக்கிறேன்.

இத்துடன் இப்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன். படித்தசூட்டில் மண்டை காய்ந்து என்னை நீங்கள் பிளக்கவருமுன்.

———–

[*] சூடாக்குகையில் சில திரவங்களின் அடர்த்தி (குறைவதற்கு பதில்) அதிகரிக்கும். அத்தகைய திரவங்கள் புவியீர்ப்பில் மேலெழும்பாமல், கீழிறங்கும். ஆனால் இந்த ஓட்டமும் வெப்ப சலனம்தான்.

வெளிமண்டலத்தில் காப்பி குடிப்பது எப்படி?

Standard

முதல் டிகாக்‌ஷனில் இறக்கி காய்ச்சிய பாலில் (அம்மா) கலந்த டிகிரி காப்பியை வீட்டில் தூக்க கலக்கத்துடன் பேப்பர் படித்துக்கொண்டே உறிஞ்சி குடிக்கையில் யோசித்திருக்கலாம். சந்திரயான் வெற்றிக்கு பிறகு இந்தியர்களை விரைவில் நிலவிலும் செவ்வாயிலும் அனுப்பமுடியும் என்று கூறுகிறார்களே. அங்கு சென்றால் நம் சிவசாமி இந்த காப்பியை எப்படி குடிப்பார் என்று.

குடிப்பது சற்று கடினம். ஏனெனில் திரவம் குவளையை சாய்க்கையில் உட்சுவரை பிடித்துகொண்டு வாயை நோக்கி தானாகவே ஓடி வருவதெல்லாம் பூமியில்தான். அதன் புவியீர்ப்பு சக்தியினால். அண்டவெளியில், புறவளியில், புவியீர்ப்பு மைக்ரோ லெவலில் இருக்கையில், காப்பி பங்கி அடித்தது போல (அனுபவித்தவர்கள் கூறியது) அப்படியே குவளையுடன் மிதந்து கொண்டிருக்கும்.

குடிப்பதற்கு ஓரு வழி குவளையில்லாமல் ஒரு பையில் போட்டு மூடி உறிஞ்சலாம். குவளை வேண்டும் என்றால் இப்படி செய்யலாம்.

[மேலும் படிப்பதற்கு முன் யூடியூபின் வேகத்திற்கேற்ப சற்று பொறுத்திருந்து இரண்டு நிமிட வீடியோவை பார்த்துவிடுங்கள்]

மேற்பரப்பு இழுவிசைகுடித்தாகிவிட்டதா? இப்போது இதன் அறிவியலை சுருக்கமாக விளக்குவோம்.

திரவத்தின் மேற்பரப்பு இழுவிசை (surface tension) உதவி கொண்டு இப்படி பருகுகிறார்கள். குவளையில் இருக்கும் திரவம் மாலிக்யூள்களாலானது. தெரியும். குவளை திரவத்தினுள்ளே ஒரு புள்ளியில் உள்ள மாலிக்யூளை சுற்றிலும் இருக்கும் மாலிக்யூள்கள் சமமாக எல்லா பக்கத்திலும் இழுக்கும். இதற்கு ஓரிண ஒட்டுதல் என்று கொள்ளலாம் (cohesion, cohesive forces).

ஆனால் மேற்பரப்பிற்கு அருகில் உள்ள திரவ மாலிக்யூள்கள் பரப்பிலுள்ள மாலிக்யூள்களை கீழ் நோக்கி தங்களுடன் இழுக்க, பரப்பிற்கு மேல் (திரவம்) ஒன்றுமில்லாமல் போக தோன்றும் பரப்பு இழுவிசை அதனால் கீழ்நோக்கி இயங்கியபடி இருக்கும். அருகில் உள்ள விளக்கப்படத்தை பாருங்கள்.

அடுத்த படத்தில் குவளையின் உட்சுவற்றுக்கருகில் பார்த்தால் திரவம் – சுவர் – திரவத்திற்குமேல் என்று மூன்று விஷயங்களின் விசைகள் எவ்வாறு சமனில் இருக்கிறது என்று புரியும். இதில் f என்று குறிக்கப்பட்டிருக்கும் விசைகள் அனைத்தும் பரப்பு இழுவிசையை சார்ந்தது, f_{l} ஒன்றை தவிர. இது குவளையுடன் திரவம் ஒட்டிக்கொள்ள உதவும் வேற்றிண ஒட்டுதல் விசை (adhesive force).

படத்திலுள்ள இடதுவல விசைகளின் சமன்பாட்டை எழுதினால்

f_{l} = f_{r} sin theta

மேல்-கீழ் விசைகளின் சமன்பாடு

f_{b} - f_{t} = - f_{r} cos theta

இதில் நமக்கு அண்டவெளியில் f_{t} கிடையாது. புவியீர்ப்பு இல்லாவிடினும், மாலிக்யூள்களின் விசைகளால் f_{b} இருக்கும். மேலும், பரப்பு இழுவிசை, ஒட்டுதல் பண்பு முதலியவையும் புவியீர்ப்பை சார்ந்திராமல் செயல்படுவதால், f_{l} , f_{r} உம் இருக்கும்.

மேலே உள்ள இரண்டாவது சமன்பாட்டில் f_{b} விசையை குறைத்து f_{r} cos theta விசையை அதிகப்படுத்தினால் திரவத்தை குவளையின் சுவரையொட்டி மேலே இழுக்க முடியும். இதை செய்வதற்கு (வெளி இயற்பியல்) விஞ்ஞானிகள் வீடியோவில் காட்டிய ஒரு ப்ளாஸ்டிக் குவளையை வடிவமைத்திருக்கிறார்கள்.

கையில் குடிப்பது போல பிடித்துக்கொண்டு மேலிருந்து பார்க்கையில் இது வட்டமாக இருக்காது. இருந்தால், பரப்பு இழுவிசை அனைத்து பக்கங்களிலும் ஒரே மாதிரி மதிப்புடன் இயங்கும். அருகில் இருக்கும் படத்தில் வலப்பக்கத்தில் உள்ளது போல ஒரு சைடில் தட்டி குறுக்கினால் அங்கு அதன் கோணத்திற்கேற்ப (alpha ) மேலே உள்ள சமன்பாட்டின் விசைகளை வேண்டியவிதம் மாற்றிப்போடலாம். கோணம் alpha < 180 - 2theta வாக இருக்கையில் திரவம் இந்த பகுதியில் தானாக மேலே ஏறும். (theta என்பது போன படத்தில் இழுவிசை திரவம்-குவளைசுவர் இடையே ஏற்படுத்தும் தொடுகோணம்).

ஆனால் ஒவ்வொறு திரவத்திற்கும் அதன் பரப்பு இழுவிசை மாறுவதால், அதன் தொடுகோணமும் மாறும். இதனால் குவளையின் இந்த குறுக்கமும் (alpha ) மாறுபடும். அதாவது வெளியில் வடிவமைத்த காப்பி குவளை காப்பிக்குதான். பீர் முழுவதுமாக மேலே வருமா தெரியாது.

உபரி விஷயம்: இப்படித்தான் மேலே செல்லும் ராக்கெட்டின் எரிபொருள் உறிச்சுருளையையும் (சக்ஷன் டாங்கையும்) புவியீர்ப்பு குறைந்த நிலையிலும் தானாக திரவ எரிபொருளை உறிஞ்சக்கூடியதாக வடிவமைத்திருப்பர்கள்.

இப்படி கஷ்டப்பட்டு சிவசாமி காப்பி குடிக்காவிட்டால் என்னவாம் என்கிறீர்களா. இன்னொரு வழி இருக்கிறது. குடிப்பதற்கு பதில், சாப்ஸ்டிக் கொண்டு காப்பியை வெளியில் சாப்பிடலாம். கீழே உள்ள வீடியோவில் உள்ளது போல:

***

சில கலைச்சொற்கள்

  • வெளி, புற வெளி – space, outer space
  • ஓரிண ஒட்டுதல் – cohesion
  • வேற்றிண ஒட்டுதல் – adhesion
  • மேற்பரப்பு இழுவிசை – surface tension

***

மேலும் படிக்க

2008 சங்கீத சீசனின் பெஸ்ட் – என் பட்டியல்

Standard

மெட்ராஸ் மியூசிக் சீசன் என்பது ஒரு மாதத்திற்கும் மேல் நடக்கும் விஷயம். இதை எழுதுகையில் முடிவை நோக்கி நிறைய தொண்டை செருமல்களுடன் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. பத்து பதினைந்து சபாக்கள் நாளைக்கு ஐந்து கச்சேரி விதம், பத்திலிருந்து இருபது நாள் வரை கூடி சென்னையின் பல இடங்களில் நடத்துகையில் சீசனில் மொத்தம் ஆயிரம் கச்சேரிகளுக்கு மேல் நடந்திருக்கும். அவற்றில் நான் கேட்டது முப்பத்தியைந்து; மொத்தத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான சொற்பமே. என் சிறிய இசை காதுகளை நம்பி நான் தரவிருக்கும் அவற்றில் ஒரு பெஸ்ட் பட்டியல், சத்தியம் சாப்ட்வேரின் லாப கணக்கைவிட நிச்சயம் துல்லியமாக இருக்காது. ஒரளவிற்கு அனுமானிக்கக்கூடியதாக இருக்கலாம். மாத்யூ ஹைடனின் ஓய்வை போல.

நான் கேட்டவையிலிருந்து இதோ ஒரு பெஸ்ட் பட்டியல்.

Continue reading

முடிந்தால் சிரியுங்கள்

Standard

ரெட்டை வால் ரெங்குடு என்ற சிறுவன் கார்டூணிஸ்ட் மதனின் முக்கிய ஹாஸ்ய படைப்புகளில் ஒன்று. தமிழ்நாட்டு கால்வின் என்று கொள்ளலாம். புது வருடத்தை முன்னிட்டு சொந்தமாக நிறைய படம் வரைவது என்று முடிவு செய்து, ரெங்குடுவின் தாக்கத்தில் நான் வரைந்த இரண்டு படங்கள் இதோ. ஜோக் என்னுடையதுதான். முடிந்தால் சிரியுங்கள்.

Continue reading

வசுந்த்ரா ராஜகோபால் கச்சேரிகள்

Standard

அவரது பூர்வீகம் ஸ்ரீரங்கமாக இருந்தாலும், இரண்டு வருடம் முன்பு மியூசிக் அகதெமியில் அவர் செய்த ஹுசேனி ஆலாபனையே எனக்கு வசுந்த்ரா ராஜகோபாலின் இசையின் மீது உடனடியாக மரியாதையை வரவழைத்தது. நிரந்தரமாக.

தேன்குழல் போலக் கரைகின்ற குரல், ஜிகினாத்தனம் இல்லாத பாரம்பர்ய இசை, கிருதிகளில் சொல் தெளிவு, ஆரவாரமில்லாத அழகிய நிரவல், மாங்காய் ஊறுகாய் போலத் தேவையான அளவு நறுக்கெனக் கணக்கு வழக்குகள் சேர்த்து மனோதர்மத்துடன் வரும் ஸ்வரப்ரஸ்தாரங்கள், வழுவற்ற விறுவிறுப்பு, வீணற்ற வகைகள், வசுந்த்ராவின் கச்சேரிகள் ஒரு அருமையான சங்கீத அனுபவம்.

சாருகேசி, மந்தாரி, ஹுசேனி, தேவகாந்தாரி, சாமா, சுத்தசாவேரி, வாசஸ்பதி என்று தற்காலக் கச்சேரி மூட்டைகளில் அடைபாடாத ராகங்களில் நன்றாக பிரஸ்தாபிக்கப்பட்ட ஆலாபனைகள், அருணாசல கவியின் ராமநாடகத்தில் இருந்தும், திவ்யபிரபந்த பாசுரங்களிலிருந்தும் சுயமாக இசையமைக்கப்பட்ட உருப்படிகள் என்று அவர் கச்சேரிகள் உத்திரவாதமாக வித்தியாசமாக இருக்கும். ஆனால் கர்நாடக இசை அடிப்படைகளில் இருந்து வழுவாத வித்தியாசங்கள்.

இருபது வருடங்களுக்கு மேல் அவர் கனடாவில் இருந்துவிட்டு 1995வாக்கிலேயே சென்னை திரும்பவந்ததை இதற்கு முக்கியமான காரணமாக என்னால் கருத முடிகிறது. மைலை கர்நாடக இசை மஃபியாவின் தாக்கத்திலிருந்தும் விளையும் தேக்கத்திலிருந்தும் இசையைக் காப்பாற்றிகொள்ள வளரும் காலங்களில் அவ்விடத்தில் இல்லாமல் இருப்பது ஒரு சிறந்த வழி.

மற்றொரு வழி விமர்சனங்களுக்கு ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல், தன் திறமையின் மீது கலையாத நம்பிக்கை வைத்து அடாவடியாக தான் செய்வதையே செய்து ஸ்தாபித்துக் கொள்வது. சஞ்சய் சுப்பிரமனியன், டி.எம்.கிருஷ்ணா செய்வதுபோல.

மணிரங்கு என்று ஒரு ராகம். சில பல வருடங்கள் முன்னர் கச்சேரிகளில் ப்ரதானமாக முழங்கிய விஷயம். சரியாகக் கற்று ஆலாபனையில் கரையேற்றாவிட்டால் மத்தியமாவதி போலவும் ஸ்ரீ போலவும் கேட்டு, கெட்டுத் தொலைக்கும். ஆலத்தூர் சகோதரர்கள் அருமையாக பாடுவார்கள். சங்கீதபிரியாவில் தேடிப்பார்த்தால் சில ஒலிக்கோப்புகள் கிடைக்கும். இந்த இசை சீசனின் தொடக்கத்தில் குறைபட்டுக்கொண்டிருந்தேன், எங்கு போயிற்று இந்த ராகமெல்லாம் என்று. இப்படியே பேசிப் பேசி நிகழை இகழ்ந்தும் பழையதைப் புகழ்ந்தும், பிறந்தேயிராத அந்த நாளும் வந்திடாதோ என்று ஏங்கி அங்கலாய்ப்பது அடியேன் குணம்.

டிசம்பர் 16 நாரத காண சபாவில் நடந்த மத்தியான கச்சேரியில் வசுந்த்ரா முக்கிய உருப்படியாக பாடியது மணிரங்கு. ஆஹா.

கீர்த்தனை என்னையும் வரச்சொன்னாரோ ரகுநாயகா. ராமநாடகத்தில் இருந்து விபீஷணன் அனுமனிடம் கேட்பதுபோல இருக்கும் கட்டத்தில் இருந்து வசுந்த்ரா அரியக்குடியாரோ KVNனோ இசைவடிவப்படுத்தி, வசுந்த்ரா பாடியது. (சென்னை வெங்கட்நாராயணா ரோடில் உள்ள) திருப்பதி தேவஸ்தானத்திலும் மற்ற இடங்களிலும் ஏற்கனவே அவர் பாடியதுதான். மணிரங்கு ஆலாபனை அருமையாக இருந்தது. ஆனால் பாலமுரளிகிருஷ்ணா நிதானமாகப் பாடும் மாமவ பட்டாபி ராம போல இல்லாமல் கீர்த்தனை மணிரங்குவின் அமைதியான அழகை ரசிக்கமுடியாத துரிதகதி காலபிரமாணத்தில் இருந்ததாக எனக்குத் தோன்றியது. இருந்தாலும் மணிரங்கு கேட்கக்கிடைத்தது மகிழ்ச்சியே.

வர்ணத்திற்கு பதிலாக கௌளையில் தீக்‌ஷதரின் ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் சேனாபதே, தியாகராஜரின் தெலியலேரு ராமா தேனுகாவில் ஸ்வரப்பிரஸ்தாரம் போன்றவை அக்கச்சேரியின் மற்ற சிறப்புகள். ஆனால் வசுந்த்ரா அன்று பாடிய வராளி ஆலாபனையை இரவு அகதெமியில் விஜய் சிவா தனது ஆலாபனையால் விஞ்சிவிட்டார். வசுந்த்ராவின் குரலுக்குப் பக்கவாத்தியமாக முகர்சிங் அவ்வளவு பொருத்தமாக இல்லை. சியாமா சாஸ்திரியின் சிந்தாமணி ராகக் கிருதி தேவி ப்ரோவ சமயமிதேவை அவர் அழுத்தமாகப் பாடுகையில் இந்தக் குரல்-முகர்சிங் உபாதை நன்றாகவே வெளிப்பட்டது.

ராகம் தானம் பல்லவி – சுருக்கமாக RTP – கச்சேரியின் பிரதான அங்கம். பெயருக்கேற்றவாறு இதில் முதலில் எடுத்துக்கொண்ட ராகத்தில் ஆலாபனை செய்யப்படும். அடுத்து தானம், ஆனந்தம் போன்ற வார்த்தைகளை வைத்துக்கொண்டு ராகத்தை விஸ்தரித்து பலவகை மீட்டர்களிலும் கதியிலும் பாடுவார்கள். பிறகு ஒரு பல்லவி. இதை ராகத்தில் மெட்டமைத்து, தாளம் அமைத்து பாடவேண்டும். இடையே நிரவல், ஸ்வர கோர்வைகள், கணக்குகள், அனுலோமம், பிரதிலோமம் (இதைபற்றி முன்னர் எழுதியுள்ளேன்) போன்ற ஸ்வர லய விற்பனங்களைக் கடந்து ராகமாலிகா என்ற நிறைவு பகுதியில் முன்கூறிய பல்லவியை பல ராகங்களிலும் தாளத்திற்கேற்பப் பாடி முடிக்கவேண்டும்.

வசுந்த்ரா திவ்யபிரபந்தப் பாசுரங்களையே RTPயின் பல்லவிகளாக எடுத்துக்கொள்கிறார். ஒரு பாசுரத்தின் முதல் இரண்டு மூன்று வரிகளைப் பல்லவியாகவும், பாசுரத்தின் நீளத்திற்கேற்ப, மிச்சமுள்ள வரிகளையோ அல்லது அவ்வாழ்வார் எழுதிய வேறு பாசுரங்களையோ ராகமாலிகையின் போது ஒவ்வொரு ராகத்தின் முடிவில் (புதுப்) பல்லவியாகவும் பாடுகிறார். அவரது நாரதகாண சபா கச்சேரியில் இவ்வகையில் மார்கழித்திங்கள் என்று தொடங்கும் திருப்பாவையை RTPயின் பல்லவிகளாக மாற்றிப் பாடினார். மெயின் ராகம் சுத்தசாவேரி. ராகமாலிகாவில் மதுவந்தி, கானடா, சுத்ததன்யாசி. திருப்பாவையை RTPயாகக் கேட்பது புதுமை. இவ்விடத்தில் கேட்டுமுடித்ததும் கரகோஷம் விண்ணைப் பிளந்தது என்று தேய்வழக்காக எழுத ஆசை. எழுதிவிட்டேன். நிஜத்தை மறுத்து.

டி. வி. சங்கரநாராயணனுக்கு குரல் சரியில்லை என்று அவசரகாலப் பாட்டாக டிசம்பர் 30 நடந்த அவரது மியூசிக் அகதெமி கச்சேரியிலும் RTPயில் மேற்கூறிய வடிவத்தை எதிர்பார்த்தேன். அன்று மெயின் ராகம் சாவேரி. ராகமாலிகையில் வலஜி, கானடா, ரேவதி. பல்லவியாக வந்தது திருப்பல்லாண்டு. (பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு என்று சாவேரியில்…)

ஹுசேனியில் தியாகராஜரின் ராமா நின்னே நம்மிநானுரா வும், அடானாவில் அனுபமகுணாம்புதியும் (கச்சேரியில் கேட்டு எத்தனை வருடங்கள் ஆகிறது) அகதெமி கச்சேரியில் வந்த அருமையான உருப்படிகள். பின்னல் சங்கதிகளுடன் வந்த ஹுசேனி கிருதி அருமை. அரியக்குடியின் கச்சேரிகளையும், ஆலிந்தியா ரேடியோவில் எப்போதோ வந்த புதுக்கோடு கிருஷ்ணமூர்த்தியின் ஹுசேனியையும் நினைவில். விளைவு, ஹுசேனி ராகத்தை சப்மெயினாக எடுத்து ஆலாபனையும் செய்திருக்கலாமே என்று மனம் குறைபட்டது.

ஆனால், சப்மெயினாகச் செய்யப்பட்ட வாசஸ்பதி ஆலாபனை நன்றாகவே இருந்தது. கிருதி என்னாதுனி க்ருபகல்குணா.

மெயின் உருப்படி தோடி. காதுகளில் விழுந்தாலும், மனம் கேட்கவில்லை. ஒரு மாதமாகப் பல கச்சேரிகள் கேட்டு சீசன் முடிவில் தோடி போன்ற ராகங்களுக்குக் காதும் மனமும் தானாக மூடிக்கொண்டு விடும். எப்படி அருமையாகப் பாடினாலும். ஒரே நாளில் நாலைந்து கச்சேரிகள் என்று ஒரு மாதம் சென்னை சபாக்களைச் சுற்றும் இசை சீசன் சுற்றுப்பயணிகள் என்னுடன் அனுதாபிப்பார்கள்.

இதைப்போல இச்சீசனில் பத்து தடவைக்கு பிறகு தானாக என் காது மூடிக்கொண்ட மற்றொரு ராகம் பூர்விகல்யாணி.

பலவருடங்களாக ஆழ்வார் பாசுரங்களை சுலோக சந்தத்திலேயே கேட்டுப் பழகியிருந்த எனக்கு (ஸ்ரீரங்கம் கோயிலில் கேட்கையில் சங்கத்தமிழ் புரியாவிட்டாலும் இந்தச் சந்தத்திற்கே ஒருவித தெய்வீக உட்கிளர்ச்சியைத் தூண்டும் சக்தி உண்டு என்பததை அறிய முடியும்), RTP போன்ற கர்நாடக இசை வடிவத்தில் அவற்றைக் கேட்பது வரவேற்கத்தக்க வித்தியாசமாகவே இருந்தது. உடனடியாக ஞாபகம் வருவது இளையராஜாவின் மேற்கத்திய ஓப்பரா போன்ற இசைவடிவம் கொடுக்கப்பட்ட திருவாசகம் முயற்சி. இவ்வகை முயற்சிகள் உடனடியாகப் பலரின் ரசனை அங்கீகாரத்திற்கு உட்படுவதில்லை. ஓதுவாரின் வாயில் கேட்ட திருவாசகத்தையும், அரையர் சேவையில் கேட்டுப் பழகிய பிரபந்தத்தையும் பழக்கமற்ற வேறு இசைவடிவத்தில் நம்மில் பலருக்குக் கேட்க முடிவதில்லை. கட்டாயமாக மாற்றிக்கொள்ளத் தேவையில்லை என்பதால், மனதுமில்லை. கேட்கவேப் பொறுமையுமில்லை.

ஆனால் வரையரைகளை விரிக்க வல்ல இவ்வகை இசை முயற்சிகள் – அவ்வப்போது சொதப்பினாலும் – நிச்சயம் தேவை. காட்டாறு போல வேண்டாம் என்றாலும் சிற்றாறு போலவாவது கலை இசை வடிவங்கள் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி. இல்லையெனில் தேத்தாங்குட்டையாகிவிடும்.

பல வருடங்கள் முன்பு நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் என்று அதே தோடி ராக ஆலாபனையையும் கீர்த்தனையயும் வரிசையாக மூன்று சபாக்களில் மெயின் உருப்படியாகப் பாடுவது (அடுத்த இரண்டு சபாவில் சப் மெயினாக), கற்பனைத் திறன் வெளிப்பாடு என்று நெட்ருபோட்ட பஞ்சரத்ன ஸ்வரகோர்வைகளை வைத்து ஒப்பேற்றுவது, கற்பனை ஓடாவிட்டால் மேல் ஸ்தாயியில் சுருதி சேர்த்துச் சற்று நேரம் நின்று விட்டுக் கைத்தட்டல் எதிர்பார்ப்பது (நிச்சயம் கிடைக்கும் — கல்கி காலந்தொட்டே இவ்வாறுதானே), தமிழில் பாடுகிறேன் என்று (மடிக்கணினியில்) எழுதிவைத்துக் கச்சேரியில் படிப்பது, தொட்டதிற்கெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கையை தூக்கி மோதிரம் மூடிய விரல்களைப் பல கோணங்களில் ரசிகர்களிடம் காட்டி இசைக் கச்சேரியில் அபிநயம் பிடிப்பது, விறுவிறுப்பு சுறுசுறுப்பு என்று தன் காதைத் தன் கையாலேயே மூடிக்கொண்டு தொண்டைக் கிழியக் கதறுவது போன்ற கர்நாடக இசைக் கச்சேரி வன்முறைகளை வசுந்த்ரா செய்வதில்லை.

நிச்சயம் அதிகப் பிரபலம் ஆகமாட்டார். கச்சேரியில் மேம்போக்குக் கூட்டம் சேராது.

நாலாயிரமும் நாமும் என்று அவர் பார்தசாரதி சுவாமி சபாவில் டிசம்பர் 28 காலை நடத்திய சொற்பொழிவு கலந்த இசை கச்சேரியில் கூட்டம் இருந்தது. ஆனால் இதற்கு காரணம் உடன் சொற்பொழிவு செய்த (பொதிகை டீவீ புகழ்?) வேளுக்குடி கிருஷ்ணனோ என்று நினைக்கத்தோன்றியது. ஏனெனில் டிசம்பர் 30 அன்று அகதெமியில் அவரது மெயின் கச்சேரியில் 28 பேர்களே இருந்தார்கள் (வாயில்காப்போன், பேருருளிகாப்போன் சேர்த்து).

வைரக்கடையில் கூட்டம் எதற்கு?

சந்திரயான்

Standard

சந்திரயான் ஒரு நினைவாகிக்கொண்டிருக்கும் இந்திய கனவு. சந்திரயான் நினைவுகளை மறக்க இந்தியா மிதந்துகொண்டிருக்கும் கனவு. இப்படி இரண்டுவிதமாகவும் இதை பற்றி விவாதிக்க முடியும். வேறு ஒரு சமயம் செய்வோம். எனெனில், அனைத்தும் சரியாக சென்றால், இன்னும் சில மணி நேரங்களில் PSLV -CII ராக்கெட் சீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தாவன் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து சந்திரயானுடன் இந்தியாவின் பெருமையையும் சேர்த்து உயரே சந்திரனை நோக்கி எடுத்து கிளம்பிவிடும். [Update Oct 22, 2008: சந்திரயான் வெற்றிகரமாக ஏவப்பட்டுவிட்டது | டைம்ஸ் ஆஃப் இந்தியா வீடியோ க்ளிப் ]

இப்போது அசந்தர்பமாக ஏதும் கூறாமல், சந்திரயானின் விஞ்ஞான நோக்கங்களை மட்டும் பார்ப்போம்.

Continue reading

Whale வேல்

Standard

குசினியறையில் வேலையாய் இருந்த மனைவிக்கு உபயோகமாய் அவளை உற்சாகப்படுத்திக்கொண்டு நான் சும்மா இருந்துகொண்டிருந்தேன். அப்பொழுதுதான் ஒரு வேல் ஷார்க் (Whale Shark திமிங்கலம்) படத்தை யங் வேர்ல்டிலிருந்து கனகாரியமாய் வெட்டி மகளின் நோட்டுப்புத்தகத்தில் ஒட்டியிருந்தோம்.

அவள்: நா கடலுக்கு அடீல போப்போறே(ன்), வேல் ஷார்க ஃபோட்டோ பிடிக்க; நீ கிடயாது…

நான்: (கடுப்பாகி) ஓகே; நா பழனிக்கு போறேன் முருகர பாக்க; அவர்கிட்ட கூட ஒரு வேல் இருக்கு; அத பாத்துக்கறேன்…
Continue reading

வஸந்தாவில் ட்விங்கில் ட்விங்கில்

Standard

இதை கேட்கையில் பல வருடம் முன்ப்பு கமல்ஹாஸன் டி.வி. பேட்டி ஒன்றில் பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற பாடல் வரியை மட்டும் முழு டியூனுக்கும் பாடிக்காட்டியது நினைவிற்கு வருகிறது.

(சுட்டி)

முதல் ராகம் வஸந்தா. இரண்டாவது, கேதார கௌளை. (மலையாளத்து சாயலில் உள்ள) மூன்றாவது சட்டென்று பிடிபட மறுக்கிறது.

பாடுபவர் ரேவதி ஷங்கரன்; சிறிது காலமே எடிட்டராக இருந்தாலும், மங்கையர் மலரின் உள்ளடக்கத்தையும், (அதன் மூலம்) பெண்களின் சுயகவுரவத்தையும் உயர்த்தியவர். இப்போது அது மீண்டும் புளிக்காய்ச்சல் செய்வது எப்படி போன்ற விஷயங்களை அலச ஆரம்பித்துவிட்டது.

நாகஸ்வரத்தில் நீலமணி

Standard

நாகஸ்வரத்தில் நீலமணி ராகம் கேட்டிருக்கிறீர்களா. இரண்டு வருடம் முன்பு மைலை கேசவ பெருமாள் கோயிலில், வாத்தியம் வாசிப்பவரின் சம்மதத்துடன், நான் செய்த ஒரு சிறிய ரெகார்டிங்கை கேட்டுப்பாருங்கள்:

[audio:http://www.nonoscience.info/wp-content/uploads/adyarbal_02_neelamani.mp3%5D

அதே வாத்தியத்தில், இன்னொரு சிறிய காபி ராகம் ஆலாபனை:

[audio:http://www.nonoscience.info/wp-content/uploads/adyarbal_01_kaapi.mp3%5D

சம்பந்தப்பட்ட அனுபவத்தை சௌம்யா கச்சேரியும் நீலமணி ஆலாபனையும் என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன்.

தசாவதாரமும் கெயாஸ் தியரியும்

Standard

தசவதாரத்தை பற்றி பக்கத்து ப்ளாகில் புழங்கும் நாய்குட்டிவரை அனைவரும் விமர்சித்தாகிவிட்டது. நூறாவது நாள் விழாவில் கமல் சொல்வதை பிரித்தெடுக்க தயாராகி வருகையில் சாவதானமாக இன்னொரு விமர்சனக் கட்டுரையா என்றால், படத்தை இப்பொதாங்க நான் பார்த்தேன். இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதே இந்த கமல் படத்தின் வெற்றி. பலர் தொடாமல் விட்ட சிலதைமட்டும் குறிப்பிடுகிறேன்.

முதலில் கெயாஸ் தியரி. Continue reading

இளம் பேராசிரியர்கள் கூறும் டாப் ட்வென்டி பொய்கள்

Standard

இந்தியாவில் ஆய்வு வேலையை ஒரு பகுதியாகக் கொண்ட உயர்கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சேர்ந்த புதிதில் கூறும் டாப் ட்வென்டி பொய்கள் வருமாறு

1. ம்ஹுஹும்…என்னுடைய உண்மையான சாதிக்கும் திறன் மேற்கில்தான் நிதர்சனமாகும்.
2. ஆனால் என் மனைவிக்கு அந்த ஊர் தட்பவெப்பத்தில் அடிக்கடி சளி பிடிக்கிறது என்பதால் மேற்கில் இருக்கும் நிறுவனங்களில் நான் வேலைக்கு மனு போடுவதில்லை.
3. என் ஆராய்ச்சி மிகவும் புதிதானது. சொன்னால் சட்டென்று புரியாது. அதனாலேயே வெளியே தெரிந்து புகழடையாமல் இருக்கிறேன்.
4. உலகத்திலேயே மிக முக்கியமான ஒரு ஆராய்ச்சி மாநாட்டில் என் ஆராய்ச்சித் துறையில் உள்ள பெரிய விஞ்ஞானி கடந்து செல்கையில் என்னைப் பார்த்து சௌக்கியமா என்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்…
5. நான் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டுள்ள விஷயங்கள் தொடங்குவதற்கே சில கோடிகள் போல முதலீட்டு பணம் வேண்டும். கிடைத்ததும் கிளப்பிவிடுவேன்.
6. ஆனால் ஆராய்ச்சிக்கு பணம் தேவை என்று ப்ரம்ம இரகசியங்களை உள்ளடக்கி நான் எழுதி அனுப்பிய ஆராய்ச்சி பிரேரணையை (research proposal) இதெல்லாம் ரொம்ப ஓவர், காலனாவுக்கு பிரயோஜனம் இல்லாத நடைமுறைக்கு ஒத்துவராதவை என்று துறை வல்லுநர்கள் விமர்சித்து சப்ஜாடாய் தூக்கி அடித்துவிட்டார்கள். இதுக்குதான் சார் அமெரிக்காலேயே இருந்திருக்கனுங்கறது…
7. நான் வேலை செய்யும் நிறுவனத்தில் என் இலாகாவில் நான் ஆராய்ச்சிக்காகவும், அறிவிற்காகவும், வகுப்புகள் நடத்துவதற்கும், கேட்பதெல்லாம் கேட்டமாத்திரத்தில் கிடைக்கிறது.
8. என் வேலையிடத்தில் கிரம வரிசை (ஹியரார்கி) எல்லாம் கிடையாது. சமத்துவபுரி.
9. உப்புசப்பில்லாத எல்லா கமிட்டிகளிலும் என்னை உறுப்பினராக போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இதிலிருந்தே நிறுவனத்திற்கு நான் எவ்வளவு இன்றியமையாதவன் என்று நான் உள்பட அனைவருக்கும் புரிகிறதே.
10. நிறுவனத்தில் என்னைவிட சீனியர்களிடமிருந்து நான் கேட்காமலேயே இலவசமாய்க் கிடைக்கும் உபதேசங்கள் எனக்கு மிகவும் தேவை.
11. எனக்கு ஆய்வுகளில் உதவ முனைவர் பட்டம் பெறுவதற்கு வருபவர்களில், அறிவுஜீவிகளாக இல்லாமல் முட்டிபோடும் மாணவர்களுடந்தான் வேலை செய்யப் பிடிக்கும். அதுதானே சவாலே…
12. நான் என் வேலையை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மட்டுமே இப்படி விழுந்து விழுந்து வேலை செய்யவில்லை. எனக்கு இந்த வேலை ரொம்ப பிடிக்கும். அப்படியே சாப்பிடுவேன்…
13. நான் இந்த ஸெமஸ்டரில் நடத்தும் பாடம்தான் நான் விரும்பிக்கேட்டு கல்லூரி இலாகாவிடமிருந்து வாங்கிக்கொண்ட பாடம்.
14. எனக்கு சொல்லித் தருவது என்றால் கொள்ளை பிரியம்
15. …அதுவும், பி.டெக்., பி.ஈ. போன்ற என் ஆய்விற்கோ துறையில் முன்னேற்றத்திற்கோ ஒருவிதத்திலும் பயன்படாத இளங்கலை மாணவர்களுக்கென்றால், அல்வா கொடுப்பது, சாரி, சாப்பிடுவது மாதிரி.
16. (மாணவர்களே,) எந்நேரமும் உங்களுக்காக என் ஆபீஸ் கதவு திறந்தே இருக்கும்.
17. ஒரு நூறு கே டாலர் வேலையை விட்டுவிட்டுதான் இங்கு வந்து சேர்ந்தேன்.
18. ஆனாலும் இன்றுவரை அதற்காக இதோ இத்துனூண்டுகூட வருத்தப்பட்டதேயில்லை.
19. என்னுடன் எப்போதோ இளங்கலை கல்வி படித்த சுமார் படிப்பு அரைகுறை நண்பன் இப்போது என்னைவிட ஐந்து மடங்கு அதிகம் சம்பளம் வாங்குவதில் எனக்கு மனக்கசப்பு ஏதுமில்லை.
20. இது ஒரு உன்னதமான பணி.

சேர்ந்த புதிதில் மேலே உள்ளதில் நானும் பலவற்றை கூறியவன் என்ற முன் அனுபவத்தில் நகைச்சுவை கருதி சற்றே மிகையுடன் எழுதியவை இவை. ஏதேனும் விட்டுப்போயிருந்தால் தெரிவிக்கவும், சொல்லிப்பார்க்கிறேன்…

சௌம்யா கச்சேரியும் நீலமணி ஆலாபனையும்

Standard

பஸ் பிடித்து பாரதீய வித்தியா பவனத்தை அடைகையில் உட்கார இடம் கிடைக்காதோ என்று மனதினுள் பதற்றம். அரங்கினுள் மெயின் கதவு வழியாக நுழையாமல் வலதுபுறம் திரும்பி ஸ்டேஜின் பக்கவாயில் வழியாக ஃபீட்பேக் ஸ்பீக்கர் இருக்கும் பகுதியில் கீழே உட்காரலாம் என்று நுழைந்தால் ஆச்சரியம். வழக்கமாக சௌம்யா கச்சேரிக்கு பவனத்தில் இருக்கும் கூட்டம் இன்று இல்லை.திரும்பி மெயின் கதவு வழியாக அரங்கினுள் நுழைந்து இடம் பார்த்து முன்வரிசையில் அமர்கையில் வீணை குப்பையரின் ராகமாலிகை வர்ணமான வலஜி வச்சியை ஆரம்பித்து இருந்தார். பக்கத்தில் பக்கல ராமதாஸ் பாடகி விட்ட இடங்களை கவனமாக பூர்த்திசெய்து பொறுப்பாக தொடர்ந்தார். தெரிந்த வர்ணம் போலும்.
Continue reading

மணக்கவைத்த மணக்கால்

Standard

கர்நாடிகாவும் ஸ்ருதி பத்திரிகையும் சேர்ந்து நடத்தும் “சமர்ப்பணம்” இசை விழா எல்டாம்ஸ் ரோடில் உள்ள தத்வலோகா அரங்கில் (கல்யாண மண்டபம்?) பெருத்த ஆரவாரம் ஏதுமின்றி மிகுந்த ஏஸி குளிரில் இன்று துவங்கியது.

சமர்ப்பணம் இசை விழாவின் சிறப்பு இன்றைய முப்பது நாளில் முப்பத்தேழுகச்சேரி அவசர கதி இசை சீசனால் ஒதுக்கப்பட்டுவிட்ட ஆனால் அதனால் தங்கள் கலையில் சற்றும் ஒடுக்கமில்லாத ஒரு சில சங்கீத மேதைகளின் இசையை மீண்டும் ரசிகர்களின் மத்தியில் முழங்கவிட்டிருப்பது. என்னைப்போன்ற அரை நிஜாரில் காரில் உலவி செருப்புடன் ஏஸி ஆடிட்டோரியம் செல்பவர்கள் mp3யில் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த மணக்கால் ரெங்கராஜனின், எழுவதிற்குமேல் சென்றுவிட்டாலும் வயது சற்றும் தெரியாத உயிர்துடிப்பான இசையை, பிருகாவும் சதையுமாக கேட்கப்பெற்றது கர்நாடிகாவின் ராமநாதன் சௌம்யா மற்றும் சசிகிரனின் புண்ணியம்.

ஹம்சத்வனியில்சிறு ராக ஆலாபனைக்குப் பிறகு வந்ததுகருணை செய்வாய் கஜராஜ முகா; பாபனாசம் சிவனின் பாடல் என்று ராமதாஸ முத்திரையில் இருந்துகண்டுகொள்ளமுடிந்தது. பின்வந்த ஸ்வரங்களும் தீர்மானமும் வரப்போகும்பொக்கிஷங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது.

ரீதிகௌளைஆலாபனை ரெங்கராஜனின் பேஸ் (bass) குரலின் மகத்துவத்தைஉணர்த்தியது. ஒருசில அபாரமான பிடிகளுடன் ஆனந்தபைரவியெல்லாம் துளியும்எட்டிப்பார்க்காத அழகான ஆலாபனை. சௌம்யா உட்பட எல்லோரிடமும் உடனே அப்ளாஸ்வாங்கியது. ஸ்வாதித்திருநாளின்பரிபாலயமாம்கீர்த்தனைக்குப்பின் சப்மெயினாகமோஹனகல்யாணிஆலாபனை துவங்கியது.

பாடகருக்கு அநாயாஸமாக வந்த ராக பிடிகளும் விரித்துரைப்பதற்கானஐடியாக்களும் பிடில்வித்துவானுக்கு இன்று இந்த ராகத்தில் வரவில்லைஎன்றுதான் சொல்லவேண்டும். சுருக்கமாக in search of the melody. அதனால்நிதிசால சுகமாவிலிருந்து (கல்யாணி) சேவே ஸ்ரீகாந்தம் வரை இருக்கும்மெலடியை எல்லாம் அழகாக வாசித்தார். நன்றாகவே இருந்தது.சிவம் விஷபாருண்டம்என்று கண்டசாபுவில் முத்தையாபாகவதர் கீர்த்தனை நான் கேட்டிராதது.கண்டசாபுவை கண்டு அஞ்சாத, ‘கண்டகதியில் குதிக்காத, கணக்கான நிரவல்.சாமவேதப்ரியம் என்று தொடங்கி சங்கீத சரமாக வந்தது. ராமபத்திரனின் கணகணகாலப்பிரமாணத்தில் கலகலவென்று கிளர்ந்தது. சிறுவயதில் இந்த சிம்மம் எப்படிமுழங்கியிருக்கும் என்று நம்மை சிலாகிக்கச் செய்தது. நிரவலில் நிழல்போல்தொடர்ந்த சந்திரசேகரன் பிறகு வாழ்த்திப்பேசுகையில் “சிறு வயதில் பொறிபறக்கும்” என்று எனக்கு பதிலளிப்பதுபோல் நினைவுகூர்ந்த்தார்.

அடுத்து வந்தது ஆரபியா என்று என் போன்ற கத்துகுட்டிகள் இன்றும் குழம்பும்தேவகாந்தாரிஆலாபனை. எதுவாக இருந்தால் என்ன இரண்டையுமே இப்போது சீசனில் வேறு இடத்தில் கேட்கமுடியுமா என்பது சந்தேகமே. கீர்த்தனைக்ஷீரஸாகரஸயனா. பாடியவிதம் வெகு அபாரம். பழைய நாட்களில் ஒரு கீர்த்தனையை ஏன் பலவருடகங்கள் பாடி பயின்ற பிறகே மேடையேற்றி இருக்கிறார்கள் என்று நிதர்ஸனமாகபுரிந்தது. பத்து மணிநேரத்தில் ஃபாஸ்ட் ஃபுட் பாட்டாக கீர்த்தனைகளைகத்திக்கொண்டு மேடையேருபவர்களும் கவனிப்பார்களாக.

இத்தனை சுகமாக சயனித்தபிறகு மனசு இனி எதை கேட்க முடியும் என்று எண்ணிக்கொண்டிருக்கையில் வந்தது ஒரு googly. ரகுவம்சசுதாம்புதிஎன்றுகதனகுதூஹலமாக. சற்று வேகமாக துவங்கியது மிதவேகம் பிடித்து ப்ருஹாக்களை அள்ளிவீசிக்கொண்டு பயணித்தது. ராமபத்திரனா கொக்கா. அருமையாக அனுமானித்தார்ப்ருஹாக்களை. எனினும் அடக்கியே வாசித்தார். பிறகு வாழ்த்திப்பேசுகையில்அறுபதுகளில் பயந்தது போலவே இன்றும் பயந்தே, பிரமித்தே, வாசித்தேன்பாடகரின் இந்த கீர்த்தனைக்கு என்றார். கேரளாவில் பாடகருடன் 1960ல் கச்சேரிசெய்த அனுபவங்களை நினைவுகூர்ந்த்தார்.

விட்டாரா மணக்கால். அடுத்து வந்ததுகுந்தலவராளிஆலாபனை. சந்திரசேகரன் அருமையாக சற்றே காவடிச்சிந்து பாணியில் பிடிலில் பதிலளித்தார்.சரசரசமரேஎன்றுஉற்சாகமாக விரட்டினார் எழுவதைத்தாண்டிய இளைஞர். நடுவில் ஆதியில் த்ரிஸ்ரநடையில் சிட்டை ஸ்வரம் வேறு. ஸ ஸ மா ம ஸ என்று இழுக்கையில் ராமரின்கோதண்டம் சமருக்கு நாணேருவது ஒலியில் கேட்டது. கண்முன் வந்தது.

அடுத்து வந்தது ரெங்கராஜனின் மாஸ்டர்பீஸ்.காம்போதி. மெயின் உருப்படி.

ஆலாபனை ஆரம்பித்ததுமே கண்டுபிடித்துவிடலாம். ஒவ்வொரு ஸஞ்சாரமும்விஸ்தாரமாக நீட்டி முழக்கி நுணுக்கமான பிடிகளுடன் வரும். ஸ ரி க, ரி க ம, என்று வார்த்தை வார்த்தையாக பிய்த்துப் பாடாமல், முழு வாக்கியமாக பாடுவது.மைக் இல்லாத நன்மைக்காலத்தின் பாடும் முறை. ரெங்கராஜனின் காம்போதியிலும் தெரிந்தமுறை.

சற்று காதை மூடிக்கொண்டு கேட்டால் மைக்கில் கேட்க்காத குரலின்ரம்மியமும் ஒரு சில சூக்ஷமங்களும் கேட்டது. அடுத்தமுறை கச்சேரியில் ட்ரைபண்ணுங்கள். வெறும் கணக்குகளாக இல்லாமல் எல்லா ராக ஆலாபனைஐடியாக்களுக்கும் வாக்கியத்தின் முடிவில் அழகாக ஒரு முத்தாய்ப்புவைக்கிறார் பாடகர். மனதினுள் ஒரு கண்டின்யூட்டி இருக்கிறது இவ்வகை இசையைகேட்கையில்.

சந்திரசேகரன் காம்போதியை அருமையாக வாசித்தார். பாடகரிடமிருந்து inspiration போலும்.

கீர்த்தனம் தீக்ஷதரின்ஸ்ரீ சுப்பிரமணியய நமஸ்தே. பாடகர்விரித்துரைத்ததும் மனதினுள் கேள்விகள். எங்கு சென்றன இந்தசங்கதிகளெல்லாம்? வாசவாதி சகல என்று தொடங்கி மீண்டும் ஒரு அநாயாச நிரவல்பகுதி. கமபாமகா ரிகஸாரிகா என்று பழகிய மெலடியை பிரித்து பிரித்துஉபயோகிப்பதும், பத பத ஸரிக.. வாசவாதி என்று அழகாக முடிப்பதுமாக பிளந்துகட்டினார் ஸ்வரங்களில். தீர்மானம் இல்லாமலே முடித்து தனி விட்டார்.

ஏழுநிமிடத்தில் தனியில் சொல்லமுடியாததை ஒரு போதும் சொல்ல முடியாதுஎன்பது ராமபத்திரனின் கருத்தாம். கச்சிதமாக நிரம்பிய தொப்பி சகிதம்வாசித்தார். பாடகர் மறக்காமல் சரணத்தைப் பாடி முடித்தார்.

அரங்கம் நிறைய அப்ளாஸ். என்னையும் சேர்த்து, இருந்த இருபது பேரிடமிருந்து.

இருந்தால் என்ன. சேஷகோபாலன் சொல்வதுபோல வைரக்கடையில் கூட்டம் எதற்கு?

மாண்டுவிலு்ம் (கார்திகை பாலனை) காப்பியிலும் (கந்தவேல் அவனை)அவர் அண்ணா மணக்கால் வரதராஜன் இயற்றிய இரண்டு பாடல்களை படிவிட்டுஸ்ரீராமசந்திரனுக்கு மத்தியமாவதியில் ஜெய மங்களம் பாடி முடித்தார்மணக்கால் ஸ்ரீ ரெங்கராஜன். மூன்று மணிநேரம் சென்றது தெரியவில்லை.

நடுவில் அவரை பாராட்டி கர்நாடிகா சார்ப்பில் ஒரு CD வெளியிட்டார்கள்.அதற்கான நன்றி ஏற்புரையை ரெங்கராஜனின் மகன் ஆனந்தபைரவியில் extempore பாட்டாக பாடி அசத்தினார். ரெங்கராஜன் அவர்கள் வீட்டில் பேச்சே கிடையாதுபோலும்.

பாராட்டிய ஸ்ரீ சுந்தரம் வார்த்தைகளில், மணக்கால் ரெங்கராஜனின் இசையைரசித்து பேஷ்என்று சொல்ல எனக்கு அருகதை கிடையாது. என்னால் முடிந்ததுஆஹா”.

கச்சேரி தொய்வை அளவை: 30

(மெயின் காம்போதியாக இருந்தாலும் அதை அமர்க்களமாகபாடியமையாலும், ஏனைய உருப்படிகளிலும் சாபு மற்றும் ரூபகத்தில் சற்றே மறந்துவிட்ட கீர்த்தனை பொக்கிஷங்களை பாடியமையாலும் தொய்வை குறைவாக கூறப்பட்டுள்ளது. என் மேல் பாய்வதற்கு முன் தொய்வை அளவை கட்டுரையைமுதலில் படித்துவிடுங்கள்)

———–
SAMARPANA Series organized by Carnatica at Tattvaloka auditorium, Eldams Road
Dec 1, 2006. 6:30 PM – 9:30 PM
Vocal – Manakkal Rengarajan
(support vocal – Padmavathi Rengarajan)
Violin – M. C. Chandrasekaran
Mridangam – Vellore Ramabadran
Kutchery Dullness Index: 30

முத்துக்குமார் கச்சேரி

Standard

எப்பொழுதும் சைக்கிளுக்கே டிரைவர் வைத்துக்கொள்ளும் நான், இன்று காரை கச்சேரி கேட்பதற்காக p. s. ஹைஸ்கூலுக்கு ஓட்டிச் சென்றேன்.

டிடிகே சாலைத் திருப்பத்தில் ஒரு வேன் டிரைவரும், பி.எஸ். பள்ளியில் திடலில் ஓடிக்கொண்டிருந்த அரைடிராயர் மாமாக்களும் நான் திருப்பிய வேகத்தில் கலவரப்பட்டார்கள். மற்றபடி காரும் கூட வந்த நண்பரும், லோகத்தில் ஏனையோரும் நலமே.
Continue reading

சமாஜத்தில் சங்கீதம்

Standard

நேற்று ஸமாஜத்தில் கர்னாடக இசைக் கச்சேரி கேட்க விதிக்கப்பெற்றேன்.

ஸமாஜம் என்றால், தியாகராஜ ஸங்கீத வித்வத் ஸமாஜம். மைலாப்பூரில் உள்ளது. இதைச் சென்றடைவதே கலாச்சாரங்களின் தாக்கத்தில் அமையும் பயணம். என் வீட்டில் இருந்து ஐ.டி. நிறுவனங்களின் உறைவிடமான டைடெல் பார்க்கின் சமீபத்தால் எந்நேரமும் நெரிசலாக இருக்கும் சர்தார் பட்டேல் சாலயில் தொடங்கி, சென்ற நூற்றாண்டின் சிறந்த சீர்திருத்தவாதிகளில் ஒருவரான ஸ்ரீராமக்கிருஷ்ண பரமஹம்ஸரினால் நிர்மாணம் செய்யப்பட்ட மடத்திற்கு அழைத்துச்செல்வதால் பெயர்பெற்ற ஆர். கே. மட் ரோடில் திரும்பி, முகலாயர்களின் மறைமுகப் பதிவான மசூதிச்சாலையில் மந்தவெளி ஆஞ்சனேயரின் கோயிலைத் தாண்டி, ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அவர்களுக்குப் புரிகிறமாதிரி பெயரிடப்பெற்ற நார்ட்டன் சாலையைக் கடந்து, சுவரெல்லாம் சாணியடிக்கப்பட்ட, அச்சாணியின் மலாதாரமான மாடுகளுடன் கூடிய பெயர் தேவையற்ற குறுக்குச் சந்தினுள் எதிர்த்தரப்பில் எந்த வாகனமும் வந்து விடக்கூடாதே என்று பிராத்தனையுதன் மாதவப்பெருமாள் கோயிலின் பின்புறமாகத் திரும்பினால், எதிர்ப்படும் தெருவின் கோடியில் இருப்பதுதான் ஸமாஜம்.

இத்தெருவில் தவழ்ந்து வரும் பவழமல்லி வாசம், கயிற்றுக்கட்டில் தாத்தா, கையில் பனைஓலை விசிறி, பக்கத்தில் மாம்பழச்சொம்பில் கிணற்று ஜலம், வெள்ளித்தாம்பூலப்பெட்டி, எதிர்சாரியில் மடிசார் மாமிகள், பெரிய திரி விளக்குடன் மணல் பரப்பி இரும்பு இலுப்பைச்சட்டியில் கடலை வறுக்கும் கைவண்டிக்காரன், கரண்டியின் ணங் ணங், தெருவோர திறந்த சாக்கடை, திடுக்கிடும் நாய் இவற்றைக் கடந்து, “ரா ரா தேவாதி தேவா” என்று வரவேற்புப்பலகையில் அடானாவில் வரவேற்கும் ஸமாஜத்தை அடைந்து உள்ளே நுழையும் முன்…

…வரவேற்றது ஆறு கட்டை குரல்.

வெகுநாளைக்குப் பிறகு ஆறு கட்டையானாலும் நித்யஸ்ரீயின் க்ரீச்சிடல்கள் அற்ற, சபைத்தயக்கம் அற்ற, சிறுவயதில் வால்வ் ரேடியோவில் ஊஞ்சலில் காலை ஆட்டிக்கொண்டு கேட்ட பங்களூர் ரமணீயம்மாளை நினைவூட்டும், வெண்கலமணியொத்த கணீர் நாரீமணி குரல்.

அம்மையாரின் பெயர் Dr. பாகீரதி. நான் உள்ளே செல்கையில் ஹம்ஸநாதத்தை ஆலாபனை செய்துகொண்டிருந்தார்.

இசையில்தான் டாக்டர் பட்டம் என்று சொல்லத்தேவையில்லை.

ஆலாபனை முடிந்ததும் வந்தது எதிர்பார்ததைப்போலவே தியாகராஜரின் ஏகைகராக கீர்த்தனை “பண்டுரீதி கொலுவீயவைய ராமா”. இந்தப் பல்லவியை அப்படியே வார்த்தைகளை மாற்றி “தென்றல் வந்து…என்னைத் தொடும்…” என்று பாடிப்பாருங்கள்…தியாகராஜரும், இளையராஜரும் முன்னூறு வருட இடைவெளியின்றிப் பகிர்ந்து கொள்ளும் சங்கீதத்தின் அருமை புரியும்.

இவ்வகை ஏகைகராக கீர்ததனைகளுக்கு one hit wonder என்பது அடியேனின் செல்லப்பெயர். மேற்கத்திய ராக்/பாப் இசைவகைகளில் ஒரே பாட்டின் மூலம் பிரபலமாகி பிறகு எந்தப் பாட்டும் சோபிக்காமல், சடுதியில் நைட்க்ளப் பார்களில் அவை பின்பாட்டாக மறைந்துவிடும் பாடகர்கள் ஏராளம். இவர்களைச் சற்றே கிண்டலுடன் one hit wonders என்பார்கள். நம்ம ஊர் ஏகைக ராக கிருதிகள் பல இவ்வகை.

கவனிக்கவும்; கிருதிகளைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன். எழுதியவரையோ, பாடுபவரையோ அல்ல.

உதாரணத்திற்கு தியாகராஜரிலேயே கைகவசி, சிந்து கானடா, ஜயன்தசேனா, கோகிலவராளி, ஸ்ருதி ரஞ்சனி, மாருவ தன்யாஸி, போன்ற ராகங்களும் அவற்றின் கிருதிகளும் one hit wonders எனலாம். இன்னும் பல இருக்கிறது. சட்டென்று ஞாபகம் வந்தவற்றையே குறிப்பிடுகிறேன்.

இவ்வகை ஏகைகராக கிருதிகளில் சில பொது அம்ஸங்களைக் காணலாம். நிச்சயம் கிருதி விறு விறு என்று துரித காலப்பிரமாணத்தில் இருக்கும். பெரும்பாலும் ஆதி தாளத்தில் இருக்கும். சமத்தில் இருந்து ஒன்றறை இடமோ இரண்டு இடமோ தள்ளி எடுப்பு. கச்சேரியின் சப்மெயினுக்குப் பிறகு பிரதான உருப்படிக்கு முன்னார், சற்றே அயரும் ரசிகர்களைத் தட்டி எழுப்பும் வகையில் 2 நிமிடத்தில் விரட்டப்படும் துரதிருஷ்டத் துக்கடா. ஆரோஹனம் அவரோஹனத்தைத் தாண்டி பாடப்படும் ஏகைகராகத்தின் ஸ்வரூபம் இதுதான் என்று இந்த கிருதியில் இருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டிவரும். ஒரு வகையில் வித்வான்களுக்கு வசதி. பெரும்பாலும் ஆலாபனையோ, நிரவலோ, ஸ்வரகல்பனமோ செய்ய மாட்டார்கள். தியாகராஜரே ஒரு கிருதிதான் செய்து இருக்கிறார் பாருங்கோ, விஸ்த்தாரணம் செய்ய இடமில்லை, எல்லாம் பெரியவா விட்ட வழி என்று சால்ஜாப்பு செய்து கப்பரை ஏந்துவார்கள்.

இப்படிப்பட்ட ஒரு ஹம்ஸநாதத்தைத்தான் இந்த அம்மையார் ஆலாபனம் செய்து கொண்டிருந்தார். பிறகு ஸ்வரகல்பனம் வேறு. கேட்டு மகிழ்ந்தேன்.

துளசிதளத்தைப் பாடுகையில் சுற்றிலும் நோட்டம் விட்டேன். காக்கை எச்சம் காய்ந்த அழுக்கு ஜமக்காளம், காரைப்பெயர்ந்த சுவரின் ஒரு பகுதியில் கருப்புப் பெயிண்ட் அடிக்கப்பட்டு அதில் பரூர் சுந்தரம் ஐயர் முதலாக ஸமாஜத்தை ஸ்தாபித்தவர்களின் பெயர்கள், ஸமாஜத்தினுள்ளேயே இருக்கும் தியாகராஜர் உருகிய ராமர் கொலுவீற்றிருக்கும் சன்னதி, வாயிலில் தியாகராஜர் (சிலைதான்), பழுப்பு ஏறிய “அந்த காலத்து” சுவர்க் கடிகாரம், பழையகாலக் கருப்பு தடி ப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்த மாமாக்கள், மஞ்சள் பை தாத்தாக்கள், காவி உடை பாட்டிகள், இவற்றுடன், முன்பு குறிப்பிட்ட அதே சுவர்களில் பொருத்தியிருக்கும் bose ஸ்பீக்கர்கள், ப்ளாஸ்டிக் சேர்கள், ட்யூப் லைட்டுகள், சிமெண்ட் பெஞ்சைத்தாண்டி சில கைனடிக் ஹோண்டாக்கள், என் அழுக்கு ஜீன்ஸ் பேண்ட், அலைபேசி என்று எல்லோரும் நினைத்துவிடும் வாய்ஸ் ரெக்கார்டர்…

மாமி பாலே பாலேந்துவிற்கு வந்துவிட்டிருந்தார்.

நிரவல் வருமோ என்று நப்பாசை. நிராசை. வந்தது முகாரியில் காரு பாரு.

முகாரியின் மா (ஸ்வரம்) பேகடாவிலோ, பைரவியிலோ சங்கராபரணத்திலோ கேட்காத ஒரு ஸ்பெஷல் மா. என்னைப்பொருத்த வரையில் இதை நன்கு புரிந்துவைத்திருப்பவர் நேதனூரி கிருஷ்ணமூர்த்தி, செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், இப்போது கச்சேரி செய்பவர்களில் நான் கேட்டவரையில், டி. எம். கிருஷ்ணா, ரவிகிரண் போன்ற ஒரு சிலரே.

அம்மையாரும் புரிந்துவைத்திருக்கிறார் என்று புலப்பட்டது.

அடுத்து வந்தது சுண்டல். ஆமாம், சுண்டல்தான். செவிக்கு உணவிருக்கும்போதே சிறிது வயிற்றுக்கும் ஈயப்பட்டது. பூணுல் மார்பும், ஸ்ரீசூர்ணம் அணிந்த பரந்த நெற்றியும் கொண்ட ராமர் சன்னதி பட்டாச்சாரியாரின் கையிலாக. ஸ்டைரஃபோம் குமிழிகளில்.

சமாஜத்தில் ஸ்டைரஃபோமா? எங்கு சென்றன மந்தார இலை தொண்ணைகள்? யோசிக்கையில் ஆரம்பமானது கல்யாணி ஆலாபனை.

ஆலாபனை பற்றி சில கருத்துக்கள். ஸ ரி க, க ம ப, என்று மூன்று மூன்று ஸ்வரங்களாக, மேம்போக்காக பார்த்தாலே முப்பது ராகங்களுடன் குழப்பும் “ஸ்வர சுத்த” ஆலாபனைகள் ஒரு வகை. நிறைய கணக்கு வழக்குகள் இருப்பது போல் ஜோடனை செய்து காட்டலாம். முப்பது ராகங்களுக்கும் அதே கணக்குதான். ஒரே வழக்குதான். இவற்றை செய்ய ராக லக்ஷ்ணத்தை பற்றியோ, நுணுக்கங்களைப் பற்றியோ யோசனையற்ற, அப்பியாச அருகதை போதும். சீசனில் சரிகை தெறிக்க நிறைய கச்சேரி செய்யலாம். முடிந்த கையோடு நாப்பது ட்யூஷன் வைத்துக்கொள்ளலாம்.

இன்னொரு வகை சற்று கடினம். வேதவல்லி, விஜய் சிவா போன்றவர்கள் செய்வது. ஆலாபனை ஆரம்பித்ததுமே கண்டுபிடித்து விடலாம். ஒவ்வொரு சஞ்சாரமும் விரிவாக நீட்டி முழக்கி நுணுக்கமான பிடிகளுடன், ஜன்ய ராக குழப்பம் கூட இல்லாமல் வரும். வார்த்தை வார்த்தையாகப் பிய்த்துப் பாடாமல், முழு வாக்கியமாகப் பாடுவது. மைக் இல்லாத நன்மைக் காலத்தின் பாடும் முறை. பாகீரதி அம்மாள் கடைபிடித்த முறை.

ஆரவாரம் இல்லாத அபாரம்.

சமாஜத்தில் கச்சேரி கேட்கச் சென்றால் சில பக்க விளைவுகள் நிகழும். முதல் விளைவு என் சித்தப்பா. வங்கியில் சரியான தருணத்தில் வீ யாரெஸ் வாங்கிக்கொண்டு லஸ்ஸில் இருக்கும் சொந்தவீட்டில் பேரக்குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டு, அவ்வப்போது ஷேர் மார்க்கெட்டில் தன் பலத்திற்கேற்ப விளையாடிக்கொண்டு, சாயங்கால நேரங்களைக் கர்னாடக இசையில் கழிக்கும் மஹாராஜபுரத்துக்காரர். நாட்டையை பைரவி போல இருக்கே என்று வெளிப்படையாக யோசிக்கும் வெகுளி. இவரை நிச்சயம் ஸமாஜக் கச்சேரிகளில் சந்திப்பேன். சறிது நேரம் ‘அப்புறம் எப்போது பார்க்கலாம்’ என்று பேசிக்கொண்டிருந்துவிட்டுப் பிரிவோம். இவர் இன்று அம்மையாரின் கல்யாணியில், கல்யாணி என்று தெரிந்து, லயித்திருந்தார்.

அடுத்த பக்க விளைவு பக்கத்திலேயே அமர்ந்திருக்கும், நாம் திரும்பினால், “உன்னை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே” என்று பேச ஆரம்பித்துவிடும் ஜெனரிக் மாமா. நிச்சயமாக தாளம் தப்பாகப் போடுவார்.

மிருதங்கம் தனி வருகையில், வந்த இரண்டாவது சுண்டலைச் சாப்பிட்டபடி (இரண்டு உபயக்காரர்களாம் அன்று) திரும்பினேன். பக்கத்தில் தப்பு தப்பாகத் தாளம் போட்டபடி மாமா. உன்னை எங்கோ பார்த்திருக்கேனே என்றார். எங்கு வேலை என்றார். சொன்னவுடன் கையை காதுவரை உயர்த்தி எனக்கு அந்தக் காலத்தில் உன் நிறுவனத்தில் பல பேரை பழக்கம் என்று பேச ஆரம்பித்தார். ஐயகோ! என்று சுண்டலை வாயில் கொட்டிக்கொண்டு பேச முடியாமல் வேண்டுமெண்றே குழறினேன். தீவிரமாகத் தனிக்கு தாளம் போட ஆரம்பித்தேன். மாமா விடவில்லை. தனக்கு வராத தாளத்தை இவன் மட்டும் போடுவதா என்பது போல் நினைத்து எந்நிறுவனத்தில் முன்னூறு வருடம் முன் வேலை செய்த திருதராஷ்டிரனோ, தக்ஷிணாமூர்த்தியோ ஏதோ கேட்டார்.

நல்லவேளை அதற்குள் தனி முடிந்து, ஆர்கனைஸர் பேச ஆரம்பித்தார்.

இவ்வகையில் கச்சேரியின் நடுவே பாடகரை ஐந்து வயதிலிருந்தே எனக்குத் தெரியும், அவ அம்மாவை எனக்கு மூன்று வயதிலிருந்தே தெரியும் என்று ஆர்கனைஸர் பேசிப்படுத்துவது மதுரை மணி காலத்திலேயே இருந்திருக்கிறது.

தப்புத்தாளங்கள் மாமா ஆர்கனைஸர் பேச்சில் லயித்தார். நான் தற்காலிகமாக தப்பினேன்.

ஆனால் ஒன்று. பெயர் தெரியாத மாமா பக்கவிளைவுகள் அங்கேயே முடிந்துவிடாது. சில வேளைகளில். இரண்டு தினம் கழித்து அம்மாவிடம் ஃபோன் மூலம் பையனுக்கு வரன் பார்கரேளா என்று வளரும். லஸ்ஸில் சித்தப்பாவைப் பார்க்கச் சென்றால் தெருவில் எதிர்ப்பட்டு உனக்கு இங்கேதான் ஜாகையா என்று படுத்தும்.

ஆர்கனைஸர் பேச்சிற்குப் பிறகு தியாகராஜர் போட்டுள்ள ஒரு அபங் ஸ்டைல் பாட்டு என்று கூறி ஹரிதாஸதுவேடலே என்று யமுனாகல்யாணியில் பாடினார் Dr. பாகீரதி. அடுத்து ராம நாமம் பஜரே என்று மத்யமாவதியில் மங்களம். நிறைவு.

வெளியே வருகையில் Dr. பாகீரதி, ஸமாஜ ஸ்தாபகர் பரூர் சுந்தரேச ஐயரின் பேத்தி என்று கேள்விப்பட்டேன். நான் வருவதற்கு முன் அவர் பாடியதாக கலாவதி, ஹம்சத்வனி முதலியவற்றை விட்டுவிட்டோமே என்று வருந்தாமல், கிடைத்த உசத்தியான இசைக்கு நன்றி கூறி வாசலில் இருந்தபடி குணிந்து ராமருக்கு ஒரு நமஸ்காரம் செய்ய முற்படுகையில், சன்நிதி வாசலில் கண்ணில் பட்டது வாசகம்

எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகி வந்தனமுலு.
_______________________

ஆரம்ப வாக்கியத்தில் உள்ள “நேற்று” நிகழ்ந்த தினம் May 17, 2006.