சந்திரயான்

Standard

சந்திரயான் ஒரு நினைவாகிக்கொண்டிருக்கும் இந்திய கனவு. சந்திரயான் நினைவுகளை மறக்க இந்தியா மிதந்துகொண்டிருக்கும் கனவு. இப்படி இரண்டுவிதமாகவும் இதை பற்றி விவாதிக்க முடியும். வேறு ஒரு சமயம் செய்வோம். எனெனில், அனைத்தும் சரியாக சென்றால், இன்னும் சில மணி நேரங்களில் PSLV -CII ராக்கெட் சீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தாவன் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து சந்திரயானுடன் இந்தியாவின் பெருமையையும் சேர்த்து உயரே சந்திரனை நோக்கி எடுத்து கிளம்பிவிடும். [Update Oct 22, 2008: சந்திரயான் வெற்றிகரமாக ஏவப்பட்டுவிட்டது | டைம்ஸ் ஆஃப் இந்தியா வீடியோ க்ளிப் ]

இப்போது அசந்தர்பமாக ஏதும் கூறாமல், சந்திரயானின் விஞ்ஞான நோக்கங்களை மட்டும் பார்ப்போம்.

PSLV CII housing Chandrayaan-1

PSLV CII housing Chandrayaan-1

சந்திரனை பற்றிதான் நமக்கு நிறைய தெரியுமே. 1969இல் இருந்து ஆம்ஸ்ட்ராங் முதல் பலர் கால் பதித்து 400 கிலோகிராமுக்கும் மேலாக மணலெல்லாம் பர்மிட் இல்லாமல் அங்கிருந்து எடுத்து வந்து ஆராம்ஸேயாக பல வருடங்கள் இங்கு ஆராய்ந்திருக்கிறார்களே. ருஷ்யர்கள், ஜப்பானியர்கள் உட்பட பலரும் வின்கலன்கள் அனுப்பியுள்ளனர். சமீபத்தில் 1994இல் க்ளெமன்டைனையும் (Clementine), 1998இல் லூனார் ப்ராஸ்பெக்டரையும் அமெரிக்கர்கள் அனுப்பி சந்திர மண்டலத்தையே பீராய்ந்துவிட்டார்களே. இப்படி பலர் பலமுறை வலம் வந்தும், இடம் வந்தும், சென்று கால் பதித்தும் வந்து விட்ட சந்திரனுக்கு இப்போது இந்தியா ஏன் வின்வெளிக்கலன் அனுப்பவேண்டும்?

காரணம், உண்மையில் சந்திரன் பற்றி நமக்கு பல அடிப்படை விஷயங்கள் இன்னமும் தெரியாது.

இந்தியாவின் இயற்பியல் ஆய்வுக்கூடத்தின் (Physical Research Laboratory) விஞ்ஞானி ஜெ. என். கோஸ்வாமி கூறுகையில், இரண்டு வருடம் 100 கிலோமீட்டர் அருகில் நிலவை சுற்றி வட்டமிடப்போகும் சந்திரயானின் தற்போதைய பயணம் நிலவின் பல ரகசியங்களை வெளிக்கொணரக்கூடிய விஷயங்களை நமக்கு நிச்சயம் அனுப்பப்போகிறது என்கிறார்.

பலமுறை ஆராய்ந்தும் இன்னமும் சந்திரனில் பல விஞ்ஞான புதிர்கள் இருக்கிறது. உதாரணமாக, சந்திரனில் நீர் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு திட்டவட்டமாக பதில் இன்னமும் கிடைக்கவில்லை.

நிலவில் நீர் இருக்கிறதா என்பது அங்கு எதிர்காலத்தில் நிலையாக மனிதன் இருப்பதற்கு வாசஸ்தலம் அமைப்பதற்கு முக்கியம். மற்ற கோள்களை காட்டிலும் சூரியனுக்கு பூமியை போல் சமீபமாக இருக்கும் சந்திரனில், பூமியில் இவ்வளவு இருக்கும் நீர், துளிக்கூட இல்லையா என்பது புதிராகவே இருக்கிறது. சரி, அதன் வீக்கான புவியீர்ப்பினால், காற்று/வாயு மண்டலம் சந்திரனை சுற்றி இல்லை; நிலவில் மழை சாத்தியங்கள் இல்லைதான். ஆனால், பல பில்லியன் வருடங்களாக வால் நட்சத்திரம் மற்றும் எரி கற்கள் மோதி, தங்களிடம் இருந்த நீர்மங்களை சந்திரனில் சிதறடித்திருக்கலாம். இவற்றில் முக்கால்வாசி நீர் மறுபடியும் சூரிய வெப்பத்தினால் நீராவியாகி வின்வெளியில் சென்றிருக்கலாம் என்றாலும், சூரிய வெளிச்சம் அதிகமாக சூடாக்காத நிலவின் துருவ பிரதேசங்களில் நீர் உறைந்து ஐஸ்கட்டியாக இருக்கலாமே என்று விஞ்ஞானிகளின் அனுமானிக்கிறார்கள்.

சந்திரயானில் மினியேச்சர் சிந்தெடிக் அபர்சர் ரேடர் என்ற அமெரிக்க கருவி இருக்கிறது. இந்த கருவி சந்திரயான் நிலவின் மேலே சுற்றிக்கொண்டிருக்கையில், ஒரு சில மீட்டர் ஆழத்திற்கு சந்திரனின் பரப்பில் நீர் அனுக்கள் இருக்கிறதா என்று கண்டு அனுப்பும் செய்தி மூலம் விஞ்ஞானிகளின் அனுமானத்தை சரிபார்க்க முடியும். மேலும், ஹை எனர்ஜி எக்ஸ் ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற கருவி மூலம் ரேடான் போன்ற கதிரியக்கம் உள்ள துகள்களில் இருந்து வெளிப்படும் மிக மெல்லிய காமா (gamma rays) கதிர்வீச்சையும் கண்டுகொள்ள முடியும்.

அடுத்ததாக, ஒரு வகையில் சந்திரன் சூரிய குடும்பத்தின் வளர்ச்சியின், 4.5 பில்லியன் வருடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் சாட்சி. அக்னி சாட்சி. சந்திரனை அருகில் சென்று ஆராய்வதன் மூலம், பூமியும், சூரிய குடும்பமும் (மற்ற கோள்களும்) எவ்வாறு உருவாகியது, எப்படி மாறியுள்ளது என்று அறிய முடியும். உதாரணாமாக, நிலவின் மேற்பரப்பில் இருந்து ஆழமாக உள்ளே பல படிமங்களில் என்ன என்ன கனிமங்களும் வேதியல் பொருட்களும் தட்டுப்படுகிறது என்று தெரிந்து கொண்டு, அவைகள் நிலவில் எப்போது வந்தது என்பதையும் அனுமானித்துக்கொண்டால், அதன் மூலம் அருகில் இருக்கும் பூமியின் வளர்ச்சியில் நிகழ்ந்துள்ள கணிம-வேதியல் மாற்றங்கள் எதனால் என்று யூகிக்க முடியும். பூமியில் மட்டும் உயிர் தோன்றிய காரணத்தையும் தொட்டுப் புரிந்துகொள்ள பார்க்கலாம்.

மேலும், பூமிக்கு ஏன் இவ்வளவு பெரிய துணைகோள் இருக்க வேண்டும் என்ற சுவாரசியமான கேள்விக்கும் விடை கிடைக்கலாம். இப்போதைய விஞ்ஞான கூற்று படி நிலவு என்பது, 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன் செவ்வாய் கிரகம் ஸைசில் ஒரு பெரிய வஸ்து (தெய்யா – Theia – என்று பெயரிட்டுள்ளார்கள்) பூமியில் சத்தமிட்டு முத்தமிட்டு உடைந்ததால் உண்டான சிதறல்களின் ஒன்றொடு ஒன்றும் பூமியினோடும் ஏற்பட்ட புவியீர்ப்பு காதல் உருண்டை.

உருவாகுகையில், பல மில்லியன் வருடங்களுக்கு சூடான எரிமலை மாக்மா போன்று மேற்பரப்பில் இரும்பு போன்ற தாதுக்களே நீரைப்போல ஓடிக்கொண்டிருந்திருக்கும். ஆனால் கொங்கலதார் சென்னி குளிர்வெண் குடை போல நம் காலங்களில் நிலவு குளிர்ந்துவிட்டது. இக்குளிர்சியின் செயற்பாட்டில் நிலவில் இருக்கும் லேசான தாதுக்கள் மேற்பரப்பில் வந்து உறைந்திருக்கலாம். இக்காலங்களில் கல்லாகிவிட்ட இந்தத் தாதுக்கடலின் ஆழம் எவ்வளவு என்று தெரியாது.

சந்திரயானில் இருக்கும் கருவிகள் மூலம் நிலவின் கனிமங்களை கணக்கெடுத்து, பூமியில் உள்ள அளவுடன் சரிபார்த்து இரண்டும் ஒரே சமயத்தில் தோன்றியவையா என்று தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, சூரிய பிழம்புகள் (solar flares) ஏற்படுகையில், தினத்தைக்காட்டிலும் அதிக சக்தியுள்ள எக்ஸ்ரே கதிர்கள் சூரியனில் இருந்து வெளிப்படும். இவ்வாறு நிகழ்கையில் நிலவில் உள்ள இரும்பு அடங்கிய தாதுக்களும் சிறப்பு அலைவரிசையில் எக்ஸ்ரேக்களை வெளிப்படுத்துமாம். இதை சந்திராயன் -1 இமேஜிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற கருவி கொண்டு துல்லியமாக கண்டுகொள்ளமுடியுமாம். இதன் மூலம் நிலவிலுள்ள இரும்புத்தாதுவின் அளவையும் கணக்கிடலாம். மேலும், நிலவின் தாதுக்கடலின் ஆழம் எவ்வளவு என்றும் அது எத்தனை படிமங்கள் கொண்டிருக்கிறது என்றும் கண்டுபிடிக்க முடியும். இவ்விஷயங்களை கொண்டு மேலே கூறிய நிலவின் தோற்ற ரகசியத்தையும் ஊர்ஜிதப்படுத்தலாம்.

இதைப்போல பல சோதனைகள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்காக மேலே சுற்றுவதோடு இல்லாமல் சந்திரயான் நிலவில் பல கருவிகளை தரையிரக்கவும் போகிறது. நிலவை எக்ஸ்ரே, காமா ரே, இன்ஃப்ரா ரெட், அல்ட்ரா வயலட், ரேடார் என்று பல அலைவரிசை கண் கொண்டு சந்திராயன் மூலம் இந்திய விஞ்ஞானிகள் பார்க்கப்போகிறார்கள். மற்றொரு சமயம் இவற்றை விரிவாக்குவோம்.

அப்துல் கலாமின் ஒரு கனவான சந்திரயான் பயணம் வெற்றி பெற்றால் அரிய பல ஆராய்ச்சி செய்திகள் கிடைப்பதுடன், நிலவில் புதிய விளைவுகள் கண்டுகொள்வதன் மூலம் புதிய ஆராய்ச்சி சாத்தியங்களும் நிச்சயம் நிகழப்போகிறது.

நிலா நிலா ஓடி வா…

சந்திரயான் பற்றிய சில வீடியோக்கள்

1)

2)

3)

4) Madhavan Nair சந்திரயான் மிஷன் பற்றி…

5) from NDTV report…

6) from hand-held video-cam

கட்டுரை சுட்டிகள்

1) மேலே உள்ள கட்டுரையில் உள்ள விஞ்ஞான விஷயங்கள் பலதும், ஆங்கிலத்தில் என். கோபால் ராஜ் எழுதி இன்று ஹிந்தூவில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. [http://www.hindu.com/2008/10/21/stories/2008102155330900.htm]

2) Chandrayaan Official ISRO Site

3) Unofficial Chandrayaan site http://www.chandrayaan-i.com/

4) http://en.wikipedia.org/wiki/Chandrayaan