அவரது பூர்வீகம் ஸ்ரீரங்கமாக இருந்தாலும், இரண்டு வருடம் முன்பு மியூசிக் அகதெமியில் அவர் செய்த ஹுசேனி ஆலாபனையே எனக்கு வசுந்த்ரா ராஜகோபாலின் இசையின் மீது உடனடியாக மரியாதையை வரவழைத்தது. நிரந்தரமாக.
தேன்குழல் போலக் கரைகின்ற குரல், ஜிகினாத்தனம் இல்லாத பாரம்பர்ய இசை, கிருதிகளில் சொல் தெளிவு, ஆரவாரமில்லாத அழகிய நிரவல், மாங்காய் ஊறுகாய் போலத் தேவையான அளவு நறுக்கெனக் கணக்கு வழக்குகள் சேர்த்து மனோதர்மத்துடன் வரும் ஸ்வரப்ரஸ்தாரங்கள், வழுவற்ற விறுவிறுப்பு, வீணற்ற வகைகள், வசுந்த்ராவின் கச்சேரிகள் ஒரு அருமையான சங்கீத அனுபவம்.
சாருகேசி, மந்தாரி, ஹுசேனி, தேவகாந்தாரி, சாமா, சுத்தசாவேரி, வாசஸ்பதி என்று தற்காலக் கச்சேரி மூட்டைகளில் அடைபாடாத ராகங்களில் நன்றாக பிரஸ்தாபிக்கப்பட்ட ஆலாபனைகள், அருணாசல கவியின் ராமநாடகத்தில் இருந்தும், திவ்யபிரபந்த பாசுரங்களிலிருந்தும் சுயமாக இசையமைக்கப்பட்ட உருப்படிகள் என்று அவர் கச்சேரிகள் உத்திரவாதமாக வித்தியாசமாக இருக்கும். ஆனால் கர்நாடக இசை அடிப்படைகளில் இருந்து வழுவாத வித்தியாசங்கள்.
இருபது வருடங்களுக்கு மேல் அவர் கனடாவில் இருந்துவிட்டு 1995வாக்கிலேயே சென்னை திரும்பவந்ததை இதற்கு முக்கியமான காரணமாக என்னால் கருத முடிகிறது. மைலை கர்நாடக இசை மஃபியாவின் தாக்கத்திலிருந்தும் விளையும் தேக்கத்திலிருந்தும் இசையைக் காப்பாற்றிகொள்ள வளரும் காலங்களில் அவ்விடத்தில் இல்லாமல் இருப்பது ஒரு சிறந்த வழி.
மற்றொரு வழி விமர்சனங்களுக்கு ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல், தன் திறமையின் மீது கலையாத நம்பிக்கை வைத்து அடாவடியாக தான் செய்வதையே செய்து ஸ்தாபித்துக் கொள்வது. சஞ்சய் சுப்பிரமனியன், டி.எம்.கிருஷ்ணா செய்வதுபோல.
மணிரங்கு என்று ஒரு ராகம். சில பல வருடங்கள் முன்னர் கச்சேரிகளில் ப்ரதானமாக முழங்கிய விஷயம். சரியாகக் கற்று ஆலாபனையில் கரையேற்றாவிட்டால் மத்தியமாவதி போலவும் ஸ்ரீ போலவும் கேட்டு, கெட்டுத் தொலைக்கும். ஆலத்தூர் சகோதரர்கள் அருமையாக பாடுவார்கள். சங்கீதபிரியாவில் தேடிப்பார்த்தால் சில ஒலிக்கோப்புகள் கிடைக்கும். இந்த இசை சீசனின் தொடக்கத்தில் குறைபட்டுக்கொண்டிருந்தேன், எங்கு போயிற்று இந்த ராகமெல்லாம் என்று. இப்படியே பேசிப் பேசி நிகழை இகழ்ந்தும் பழையதைப் புகழ்ந்தும், பிறந்தேயிராத அந்த நாளும் வந்திடாதோ என்று ஏங்கி அங்கலாய்ப்பது அடியேன் குணம்.
டிசம்பர் 16 நாரத காண சபாவில் நடந்த மத்தியான கச்சேரியில் வசுந்த்ரா முக்கிய உருப்படியாக பாடியது மணிரங்கு. ஆஹா.
கீர்த்தனை என்னையும் வரச்சொன்னாரோ ரகுநாயகா. ராமநாடகத்தில் இருந்து விபீஷணன் அனுமனிடம் கேட்பதுபோல இருக்கும் கட்டத்தில் இருந்து வசுந்த்ரா அரியக்குடியாரோ KVNனோ இசைவடிவப்படுத்தி, வசுந்த்ரா பாடியது. (சென்னை வெங்கட்நாராயணா ரோடில் உள்ள) திருப்பதி தேவஸ்தானத்திலும் மற்ற இடங்களிலும் ஏற்கனவே அவர் பாடியதுதான். மணிரங்கு ஆலாபனை அருமையாக இருந்தது. ஆனால் பாலமுரளிகிருஷ்ணா நிதானமாகப் பாடும் மாமவ பட்டாபி ராம போல இல்லாமல் கீர்த்தனை மணிரங்குவின் அமைதியான அழகை ரசிக்கமுடியாத துரிதகதி காலபிரமாணத்தில் இருந்ததாக எனக்குத் தோன்றியது. இருந்தாலும் மணிரங்கு கேட்கக்கிடைத்தது மகிழ்ச்சியே.
வர்ணத்திற்கு பதிலாக கௌளையில் தீக்ஷதரின் ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் சேனாபதே, தியாகராஜரின் தெலியலேரு ராமா தேனுகாவில் ஸ்வரப்பிரஸ்தாரம் போன்றவை அக்கச்சேரியின் மற்ற சிறப்புகள். ஆனால் வசுந்த்ரா அன்று பாடிய வராளி ஆலாபனையை இரவு அகதெமியில் விஜய் சிவா தனது ஆலாபனையால் விஞ்சிவிட்டார். வசுந்த்ராவின் குரலுக்குப் பக்கவாத்தியமாக முகர்சிங் அவ்வளவு பொருத்தமாக இல்லை. சியாமா சாஸ்திரியின் சிந்தாமணி ராகக் கிருதி தேவி ப்ரோவ சமயமிதேவை அவர் அழுத்தமாகப் பாடுகையில் இந்தக் குரல்-முகர்சிங் உபாதை நன்றாகவே வெளிப்பட்டது.
ராகம் தானம் பல்லவி – சுருக்கமாக RTP – கச்சேரியின் பிரதான அங்கம். பெயருக்கேற்றவாறு இதில் முதலில் எடுத்துக்கொண்ட ராகத்தில் ஆலாபனை செய்யப்படும். அடுத்து தானம், ஆனந்தம் போன்ற வார்த்தைகளை வைத்துக்கொண்டு ராகத்தை விஸ்தரித்து பலவகை மீட்டர்களிலும் கதியிலும் பாடுவார்கள். பிறகு ஒரு பல்லவி. இதை ராகத்தில் மெட்டமைத்து, தாளம் அமைத்து பாடவேண்டும். இடையே நிரவல், ஸ்வர கோர்வைகள், கணக்குகள், அனுலோமம், பிரதிலோமம் (இதைபற்றி முன்னர் எழுதியுள்ளேன்) போன்ற ஸ்வர லய விற்பனங்களைக் கடந்து ராகமாலிகா என்ற நிறைவு பகுதியில் முன்கூறிய பல்லவியை பல ராகங்களிலும் தாளத்திற்கேற்பப் பாடி முடிக்கவேண்டும்.
வசுந்த்ரா திவ்யபிரபந்தப் பாசுரங்களையே RTPயின் பல்லவிகளாக எடுத்துக்கொள்கிறார். ஒரு பாசுரத்தின் முதல் இரண்டு மூன்று வரிகளைப் பல்லவியாகவும், பாசுரத்தின் நீளத்திற்கேற்ப, மிச்சமுள்ள வரிகளையோ அல்லது அவ்வாழ்வார் எழுதிய வேறு பாசுரங்களையோ ராகமாலிகையின் போது ஒவ்வொரு ராகத்தின் முடிவில் (புதுப்) பல்லவியாகவும் பாடுகிறார். அவரது நாரதகாண சபா கச்சேரியில் இவ்வகையில் மார்கழித்திங்கள் என்று தொடங்கும் திருப்பாவையை RTPயின் பல்லவிகளாக மாற்றிப் பாடினார். மெயின் ராகம் சுத்தசாவேரி. ராகமாலிகாவில் மதுவந்தி, கானடா, சுத்ததன்யாசி. திருப்பாவையை RTPயாகக் கேட்பது புதுமை. இவ்விடத்தில் கேட்டுமுடித்ததும் கரகோஷம் விண்ணைப் பிளந்தது என்று தேய்வழக்காக எழுத ஆசை. எழுதிவிட்டேன். நிஜத்தை மறுத்து.
டி. வி. சங்கரநாராயணனுக்கு குரல் சரியில்லை என்று அவசரகாலப் பாட்டாக டிசம்பர் 30 நடந்த அவரது மியூசிக் அகதெமி கச்சேரியிலும் RTPயில் மேற்கூறிய வடிவத்தை எதிர்பார்த்தேன். அன்று மெயின் ராகம் சாவேரி. ராகமாலிகையில் வலஜி, கானடா, ரேவதி. பல்லவியாக வந்தது திருப்பல்லாண்டு. (பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு என்று சாவேரியில்…)
ஹுசேனியில் தியாகராஜரின் ராமா நின்னே நம்மிநானுரா வும், அடானாவில் அனுபமகுணாம்புதியும் (கச்சேரியில் கேட்டு எத்தனை வருடங்கள் ஆகிறது) அகதெமி கச்சேரியில் வந்த அருமையான உருப்படிகள். பின்னல் சங்கதிகளுடன் வந்த ஹுசேனி கிருதி அருமை. அரியக்குடியின் கச்சேரிகளையும், ஆலிந்தியா ரேடியோவில் எப்போதோ வந்த புதுக்கோடு கிருஷ்ணமூர்த்தியின் ஹுசேனியையும் நினைவில். விளைவு, ஹுசேனி ராகத்தை சப்மெயினாக எடுத்து ஆலாபனையும் செய்திருக்கலாமே என்று மனம் குறைபட்டது.
ஆனால், சப்மெயினாகச் செய்யப்பட்ட வாசஸ்பதி ஆலாபனை நன்றாகவே இருந்தது. கிருதி என்னாதுனி க்ருபகல்குணா.
மெயின் உருப்படி தோடி. காதுகளில் விழுந்தாலும், மனம் கேட்கவில்லை. ஒரு மாதமாகப் பல கச்சேரிகள் கேட்டு சீசன் முடிவில் தோடி போன்ற ராகங்களுக்குக் காதும் மனமும் தானாக மூடிக்கொண்டு விடும். எப்படி அருமையாகப் பாடினாலும். ஒரே நாளில் நாலைந்து கச்சேரிகள் என்று ஒரு மாதம் சென்னை சபாக்களைச் சுற்றும் இசை சீசன் சுற்றுப்பயணிகள் என்னுடன் அனுதாபிப்பார்கள்.
இதைப்போல இச்சீசனில் பத்து தடவைக்கு பிறகு தானாக என் காது மூடிக்கொண்ட மற்றொரு ராகம் பூர்விகல்யாணி.
பலவருடங்களாக ஆழ்வார் பாசுரங்களை சுலோக சந்தத்திலேயே கேட்டுப் பழகியிருந்த எனக்கு (ஸ்ரீரங்கம் கோயிலில் கேட்கையில் சங்கத்தமிழ் புரியாவிட்டாலும் இந்தச் சந்தத்திற்கே ஒருவித தெய்வீக உட்கிளர்ச்சியைத் தூண்டும் சக்தி உண்டு என்பததை அறிய முடியும்), RTP போன்ற கர்நாடக இசை வடிவத்தில் அவற்றைக் கேட்பது வரவேற்கத்தக்க வித்தியாசமாகவே இருந்தது. உடனடியாக ஞாபகம் வருவது இளையராஜாவின் மேற்கத்திய ஓப்பரா போன்ற இசைவடிவம் கொடுக்கப்பட்ட திருவாசகம் முயற்சி. இவ்வகை முயற்சிகள் உடனடியாகப் பலரின் ரசனை அங்கீகாரத்திற்கு உட்படுவதில்லை. ஓதுவாரின் வாயில் கேட்ட திருவாசகத்தையும், அரையர் சேவையில் கேட்டுப் பழகிய பிரபந்தத்தையும் பழக்கமற்ற வேறு இசைவடிவத்தில் நம்மில் பலருக்குக் கேட்க முடிவதில்லை. கட்டாயமாக மாற்றிக்கொள்ளத் தேவையில்லை என்பதால், மனதுமில்லை. கேட்கவேப் பொறுமையுமில்லை.
ஆனால் வரையரைகளை விரிக்க வல்ல இவ்வகை இசை முயற்சிகள் – அவ்வப்போது சொதப்பினாலும் – நிச்சயம் தேவை. காட்டாறு போல வேண்டாம் என்றாலும் சிற்றாறு போலவாவது கலை இசை வடிவங்கள் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி. இல்லையெனில் தேத்தாங்குட்டையாகிவிடும்.
பல வருடங்கள் முன்பு நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் என்று அதே தோடி ராக ஆலாபனையையும் கீர்த்தனையயும் வரிசையாக மூன்று சபாக்களில் மெயின் உருப்படியாகப் பாடுவது (அடுத்த இரண்டு சபாவில் சப் மெயினாக), கற்பனைத் திறன் வெளிப்பாடு என்று நெட்ருபோட்ட பஞ்சரத்ன ஸ்வரகோர்வைகளை வைத்து ஒப்பேற்றுவது, கற்பனை ஓடாவிட்டால் மேல் ஸ்தாயியில் சுருதி சேர்த்துச் சற்று நேரம் நின்று விட்டுக் கைத்தட்டல் எதிர்பார்ப்பது (நிச்சயம் கிடைக்கும் — கல்கி காலந்தொட்டே இவ்வாறுதானே), தமிழில் பாடுகிறேன் என்று (மடிக்கணினியில்) எழுதிவைத்துக் கச்சேரியில் படிப்பது, தொட்டதிற்கெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கையை தூக்கி மோதிரம் மூடிய விரல்களைப் பல கோணங்களில் ரசிகர்களிடம் காட்டி இசைக் கச்சேரியில் அபிநயம் பிடிப்பது, விறுவிறுப்பு சுறுசுறுப்பு என்று தன் காதைத் தன் கையாலேயே மூடிக்கொண்டு தொண்டைக் கிழியக் கதறுவது போன்ற கர்நாடக இசைக் கச்சேரி வன்முறைகளை வசுந்த்ரா செய்வதில்லை.
நிச்சயம் அதிகப் பிரபலம் ஆகமாட்டார். கச்சேரியில் மேம்போக்குக் கூட்டம் சேராது.
நாலாயிரமும் நாமும் என்று அவர் பார்தசாரதி சுவாமி சபாவில் டிசம்பர் 28 காலை நடத்திய சொற்பொழிவு கலந்த இசை கச்சேரியில் கூட்டம் இருந்தது. ஆனால் இதற்கு காரணம் உடன் சொற்பொழிவு செய்த (பொதிகை டீவீ புகழ்?) வேளுக்குடி கிருஷ்ணனோ என்று நினைக்கத்தோன்றியது. ஏனெனில் டிசம்பர் 30 அன்று அகதெமியில் அவரது மெயின் கச்சேரியில் 28 பேர்களே இருந்தார்கள் (வாயில்காப்போன், பேருருளிகாப்போன் சேர்த்து).
வைரக்கடையில் கூட்டம் எதற்கு?