தசாவதாரமும் கெயாஸ் தியரியும்

Standard

தசவதாரத்தை பற்றி பக்கத்து ப்ளாகில் புழங்கும் நாய்குட்டிவரை அனைவரும் விமர்சித்தாகிவிட்டது. நூறாவது நாள் விழாவில் கமல் சொல்வதை பிரித்தெடுக்க தயாராகி வருகையில் சாவதானமாக இன்னொரு விமர்சனக் கட்டுரையா என்றால், படத்தை இப்பொதாங்க நான் பார்த்தேன். இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதே இந்த கமல் படத்தின் வெற்றி. பலர் தொடாமல் விட்ட சிலதைமட்டும் குறிப்பிடுகிறேன்.

முதலில் கெயாஸ் தியரி.

சக நிகழ்வுகளின் கோர்வைதான் உலக சரித்திரமே. மேற்கத்திய சிந்தனைகளில் கெயாஸ் தியரி என்று ஒன்று உண்டு. இந்த விஞ்ஞான தத்துவப்படி உலக நிகழ்வுகள் யாவும் ஒன்றுக்கொண்டு சம்பந்தம் உடையவை. சக நிகழ்வுகள். ஒரு பட்டம்பூச்சியின் இறக்கை படபடப்பில் துவங்கும் அதிர்வுக்கும் பூகம்பத்திற்கும் கூட தொடர்பு உண்டு என்கிறது அந்தத்தத்துவம்.

மேலே உள்ளவை தசாவதாரத்தில் கமல் கோவிந்தசாமியாக – விஞ்ஞானியாக – படத்தின் ஆரம்ப கட்டங்களில் கூறும் வசனங்கள் (சரி பார்க்க வேண்டாம்; நான் செய்து விட்டேன்). கூடவே பட்டாம்பூச்சியும் க்ராஃபிக்ஸில் படத்தில் அவ்வப்போது பறந்து நமக்கு (கமல் சொல்லும்) கெயாஸ் தியரியை நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

உண்மையில் கெயாஸ் தியரியும், குறிப்பாக பட்டர்ஃப்ளை எஃபெக்டும் என்ன சொல்கிறது என்று சுருக்கமாக பார்ப்போம்.

கெயாஸ் தியரி மனித நிகழ்வுகளை பற்றியது அல்ல [1]. கணிதவியலில் வரும் காலத்திற்கேற்ப இயக்கமாறுதலுடைய தொகுதிகளை (டைனமிகல் ஸிஸ்டம்ஸ் [2]) பற்றியது.

உதாரணமாக, நியூட்டனின் விதிகளால் அனுமானிக்கமுடிந்த நிகழ்வுகளை கொண்ட விஷயங்கள் (தொகுதிகள்) டைனமிக்கல் ஸிஸ்டம்ஸ்தான். ஒரு நேரத்தில் விஷயம் ஒரு இடத்தில் இருக்கிறது என்று தெரிந்தால், விதியை வைத்துக்கொண்டு, எதிர்காலத்தில் விஷயம் எங்கே இருக்கும் என்று சொல்லமுடியும். இதில் கெயாஸ் தியரி எங்கு வருகிறது? இவ்வகை எதிர்கால அனுமானங்கள் சரியாக அமைய ஆரம்ப நிலை சரியாக தெரிந்திருக்க வேண்டும். ஆரம்ப நிலையில் சிறு மாற்றங்கள் நிகழ்கையில், இவ்வகை டைனமிக்கல் தொகுதிகள் சிலவற்றிர்க்கு, காலம் மாறுகையில் வளர்ச்சி மிகவும் வேறுபட்டதாக இருக்கும். இதை முன்னரே சரியாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் மொத்தமாக புரியாமல் அலையாது. இங்குதான் சிதம்பரத்தில்தான் எங்கோ இருக்கும், நிச்சயம் அங்கு பாண்டிச்சேரியில் இல்லை என்பது போன்ற குன்சாக சில விஷயங்கள் தொகுதியை பற்றி தெரிந்துகொள்ளலாம். இப்படி செய்கையில் தொகுதி, குழப்பமாக, கெயாடிக்காக வளர்கிறது என்று பொருள். ஆனால் டிடர்மினிஸ்டிக் கெயாஸ்.

கெயாஸ் தியரியில் பட்டம்பூச்சி விளைவு, பட்டர்ஃப்ளை எஃபெக்ட், என்று ஒன்று உண்டுதான் [3]. அது விளக்குவது, கமல்ஹாஸன் படத்தில் நமக்கு முன்வைப்பது போல, மனித சக நிகழ்வுகளையும் அதன் தொடர்புகளையும் பற்றி அல்ல. அது விளக்க முற்படுவது பின்னூட்டத்துடன் கூடிய ஒரு நிகழ்ச்சி எப்படி ஆரம்ப நிலையின் மீது நுண்ணியமாக சார்ந்திருக்கும் என்ற ஒரு கட்டுப்பாட்டை பற்றி. ஆங்கிலத்தில் சென்ஸிடிவ் டிபெண்டென்ஸ் ஆன் இனிஷியல் கண்டிஷன்ஸ் என்பார்கள். முக்கியமாக வானிலை மாற்றங்களை விளக்க முற்படுகையில் இவ்வகை தெளிசொற்றொடர்கள் தேவைப்படுகிறது.

இந்த பட்டாம்பூச்சி விளைவு பற்றி முதலில் கூறியவர் எட்வர்ட் லொரென்ஸ். வானிலை ஆராய்ச்சியில் கெயாஸ் தியரின் தந்தை என்று கூறலாம். பட்டாம்பூச்சி இறக்கை அதிர்வுகள் காற்றில் சலசலப்பை உண்டாக்கும். அதனால் அந்தப் பகுதியின் தொடர்புடைய உலகின் வானிலை மாற்றங்கள் சற்று வேறுமாதிரியாகலாம். ஏனெனில் வானிலை ஒரு டைனமிக்கல் சிஸ்டம். இவ்வகை சிறு மாறுதல்கள் பெருகி சேர்ந்து, பல நாள் கழித்து, வானிலையில் மேகங்கள் கலையலாம், இல்லை சேரலாம்; வருவதாக இருந்த மழை நிற்கலாம், எதிர்பாராமல் புயலிக்கலாம். இப்படி போகிறது கெயாஸ் தியரியும் வண்ணத்துப்பூச்சி விளைவும்.

மனிதர்களையும் அவர்களது செயல்களையும் ஒரு மிக எளிமையான டைனமிக்கல் சிஸ்டமாக பார்க்க முடியாது. கெயாஸ் தியரி அவ்வாறு கூற எத்தனிக்கவேயில்லை. இவ்வகை என்ணங்கள் பாப்புலர் சயின்ஸ் எனப்படும் வெகுஜன அறிவியல் புத்தகங்களின் பக்க(வாத) விளைவுகள். இவ்வகையில் குவாண்டம் மெக்கானிக்ஸும் த்வைதமும் ஒன்றே என்பது போன்ற கருத்துக்கள் நம்நாட்டில் பிரபலம். இப்படி சொல்பவர்களுக்கு இரண்டு பற்றியும் சரிவர தெரியாது என்பதே உண்மை.

கெயாஸ் தியரி பற்றி மேலும் ஒரு தனி கட்டுரையில் விளக்க முயலுகிறேன். சுவாரசியமான விஷயம் இது. தசாவதாரம், கமல், அசின் என்று யாரும் இட்டுகட்ட தேவையில்லை. இப்போது மிச்ச பட விமர்சனம்.

முதலில் பிரமிப்புக்கள்: கமலின் பத்து கதாபாத்திரங்கள். மேம்போக்காக பார்த்தால் நிச்சயம் மூன்று போதும் இந்த கதைக்கு. ஹீரோ, வில்லன், குணசித்திரம்/காமெடியன். ஆனால் கண்ணாடி போட்டுக்கொண்டால் ஒரு ரோல், கழட்டிவிட்டால் இன்னொரு ரோல் என்று உலவிவரும் தமிழ் நாயகர்களில் இவ்வகை வேற்றுமைகள் நிறைந்த பத்து கதாபாத்திரங்களை ஒருவரே ஒரே படத்தில் செய்வது நிச்சயம் எனக்கு பிரமிப்புதான். இன்னும் அடங்கவில்லை. தமிழ் நாட்டினுள்ளேயே வட்டார பிரிவுகள் ஏராளமாகக் கொண்ட தமிழை, தெலுங்கு தமிழ், பஞ்சாபி தமிழ், ஜப்பானிய தமிழ் (அப்டி பன்னமாட்டார்னு நினக்கரென்) ஆங்கில தமிழ் (மனி டிரு நடு) என்று இன்னமும் விரிவடைய வைத்ததும் ஒரு பிரமிப்பே.

54 வயதில் அவ்தார் சிங்கின் பஞ்சாபி நடனத்தின் நளினம், துள்ளல், பெரிய கண்களில் வாஞ்சை தெரிய ரன்சிதே என்று திணறி அழைப்பது, நரஹசியின் நடை, முகத்தை குனிந்து, புருவத்தை உயர்த்தி பார்க்கும் சிறிய கண்கள்எல்லாம் பிரமிப்புதான்.

சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனிடம் கர்வம் தவிர்க்கச் சொல் என்று தொடங்கி வரும் வசனத்தின் வைணவ ஸ்பஷ்டமான நம்பியின் உச்சரிப்பு, வொவொவொ (பல இடங்களில்), யூர் நாட்ட கோவிந் (ஐம் ஷுர் ஐம் நாட்), ஹூ ஈஸ் ஹீ, ய முவ்வீ ஸ்ட்ஆஆர் (அவ்தார் சிங்கை பார்த்ததும்), யூ… டாகினு(டு) மீ (க்ளைமாக்சில்) போன்ற சரியான அமெரிக்க உச்சரிப்புமட்டுமின்றி அமெரிக்கரின் செயல்பாட்டையும் தத்ரூபமாக ஃப்ளேட்சரிடம் வடித்திருப்பது (பெஸ்ட் ரோல்), பூவராகனின் நாகர்கோயில் வட்டார மொழி, உச்சரிப்பு (கேட்டுவிட்டு பல நாள் வீட்டில் விளிக்கையில், ”என்ன புள்ள” என்று கேட்டு வெறுப்பேற்றிக்கொண்டிருந்தேன்), உச்சமாக புஷ் மற்றும் தெலுங்கரின் ஆங்கிலம் மற்றும் தமிழ் என டப்பிங்கில் மட்டும் பத்து அவதாரங்களையும் வேறுபடுத்தியுள்ள கமலின் உழைப்பிற்கு, take a bow.

அதேபோல புஷ்ஷின் 1.6 பில்லியன் கிராண்டிற்கு வேண்டாவெறுப்பாக கைதட்டும் கோவிந்த் அதற்கு பிறகு அவர் பேசுபவை, அமெரிக்காவில் ஏன் வேலை செய்யகூடாது என்ற என் எண்ணத்தை சில வகையில் பிரதிபலித்ததுபோல எனக்கு.

யூ ஷட் அப், கெட் அவுட் (வெட்ட வெளியில எப்படிங்க கெட் அவுட்) என்று கூறும் ஆண்டாளின் இந்த அரைகுறை தற்குறி ஆங்கிலம் கிராமத்து வைணவ வீட்டில் வளர்ந்த எனக்கு புரிவதால் உடனே ரசிக்கமுடிந்தது.

மேலும், பெரியார்லாம் இல்லீங்க, ரொம்ப சிறியார்; ஆனா பெரிய கலைஞர்… இசைக் கலைஞர்ங்க…இதில் இருந்த சப்டெக்ஸ்டுக்கள், உள்ள உங்க வயல் இருக்கோல்யோ அதில் ஷாகுபடி பண்ணிடுவெர், ஷாகுபடி இல்லீங்க எல்லோரும் சாகும்படி ஆயிடுங்க; தீட்டு இல்லீங்க ஹீட்டு; அழகிய சிங்கர்னா, மடோனாவா, நீ என்ன பின் லேடரா, முதலில் odd peopleயலாம் question பண்ணுங்க, (ஆதங்வாதி என்கிற பல்ராமிடம்) ஏதங்வாதி என்று வினவும் கலிஃபுல்லா, கடவுள் இல்லைனு எங்கங்க சொன்னேன், (சுனாமியில் அடிபட்ட மக்களை திரும்பி பார்த்துவிட்டு) இருந்தா நல்லா இருக்குந்தாங்க சொல்றேன், கடவுளும் கந்தசாமியும் என்று பாடல் வரிகளில் புதுமைபித்தன், போன்ற எழுத்தின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு பிரமிப்பு.

Don’t spoil my weekend man என்று திங்கட்கிழமை சொல்லும் கூரியர் அட்டெண்டர் போன்றவற்றை பலர் வலையில் பீராய்ந்துவிட்டனர் என்பதால் தேடிப்பிடித்து இதோ இன்னொரு குறை: சீசூர்ணத்தை அழித்தவுடன் மூளி நெற்றியிலும் சின்னத்தை தினம் இட்டுக்கொள்ளும் வைணவராக இருந்தால் (நம்பி அப்படிதான் என்று ஒப்புக்கொள்வீர்கள்) சின்னத்தின் கோடு நெற்றியில் இருக்கும். வைணவர்களை பார்க்கையில் தெரியும். வேடத்திற்காக, படத்தில் 5 செகண்ட் வரும் ஷாட்டிற்காக சமாஷ்ரயணம் (தோளில் சங்கு சக்ரத்தை பொறித்துக்கொள்ளுதல்) செய்துகொண்டிருக்கும் கமல் இதை கவனிக்காமல் விட்டது…அதான் அப்போதே சென்னேனே, சிறு குறைதான்.

ஆனால் உப்பு என்று ஒருவரும் ஒருமுறை கூட குறிப்பிடாதது பெரிய குறை. அசினும் அவர் பாத்திரமும் சிறிய பெரிய குறை. இளையராஜா இசையமைக்காதது வெறும் வியாபார சூட்சுமம். படைப்பிற்கு குறையே. கமல்ஹாசனை இதற்கு மன்னிக்கவே முடியவில்லை. படத்தை பத்து முறை பார்ப்பதுடன் நிறுத்திக்கொண்டுவிட்டேன்.

ஃப்ளெட்சர் இந்திய கொடிமரத்தால் குத்தப்பட்டு இறப்பது பலருக்கு சீப்பாக படுகிறது. ரவிகுமார்தான் யோசித்திருப்பார் என்று அவரை வேறு காலைவாருகின்றனர். யார் யோசித்திருந்தாலும் இதில் ஒரு விஷயம் இருப்பதாக படுகிறது. கிருமியை உட்கொண்டவர் சுனாமி அலையால் கரைக்குள் அடித்துக்கொண்டு செல்லாமல் ஒரு இடத்தில் பொருத்தப்பட்டு, கிருமியின் வீரியத்தை NaCl கொண்டு கரைக்க இது ஏதுவாகிறது. சரியான லாஜிக்தான் என்று எனக்கு தோன்றுகிறது.

கடைசியாக பாத்திரங்களும் அவதாரங்களும். இதை பற்றி வலையில் சிலர் எழுதி பலர் காப்பி அடித்துவிட்டனர். என் மாணாக்கர்கள் இருவர் [4, 5] (இரண்டும் ஆங்கிலத்தில்) எழுதியுள்ளதை மட்டும் குறிப்பிடுகிறேன். மேலும் ஒரு வித்தியாசமான யோசனைக்கு இங்கு பார்க்கவும் [6].

கலிஃபுல்லா என்ற பெயரால் அவர்தான் கல்கி அவதாரம் – கலி fullலானா கல்கிதானே – என்றெல்லாம் சிம்பாலிசம் தேடுவது டூமச்சாக இருக்கிறது.

இதில் எனக்கு தோன்றிய, வேறு விமர்சனங்களில் விட்டுப்போயிருக்கும், சில விஷயங்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் கட்டவுட்டில் நிஜ புஷ் என்பதால் அதை விடுத்துப் பார்த்தால், அவதாரங்கள் அறிமுகமாவது வரிசைப்படியா? கோவிந்த் பேசுவதையும், மேடையில் இருக்கும் புஷ்ஷையும் லாங் ஷாட்டில் டீஃபோகஸ்ஸில் காட்டுவதால், நம்பிதான் முதலில் முகத்தை நமக்கு காட்டுகிறார். இவர் மத்ஸ்யாவதாரம் என்றால், இவர் கதை முடிந்ததும் அடுத்த ஷாட்டில் மேடையில் புஷ் முகம் சற்று தெரிகிறது. இப்போதும் கோவிந்த் பேசுவது ஒரு ரோலிங் ஷாட்டில் தூரவே இருக்கிறது. ஆனால் கெயாஸ் தியரி பற்றியெல்லாம் அவர் பேசிக்கொண்டிருக்கையில் படத்தில் சுனாமி பின் நிகழ்வுகள் வருகிறது. அதில் முதலில் வரும் கார், மற்றும் சிலையை படியில் இறக்கும் காட்சிகளை விடுத்தால் (இவற்றில் ஒருவருக்கும் முகம் தெரியாது), முகம் தெரியும் அவதாரம் பாட்டிதான். வராஹம்.

பிறகு தெரிவது நரஹசி, நரசிம்மம். பிறகு கலிஃபுல்லா, வாமனம். இதன் பிறகு ஒரு சிறு குழப்பம். மேலே ஹெலிகாப்டர் காட்டப்படுகிறது. இதில் கதைபடி பல்ராம் அமர்ந்திருப்பார். நாம் பரசுராமர் என்று நினைக்கும் ஃப்ளெட்சர் வரமாட்டார். ஆனால் இதன் அடுத்த ஷாட்டில் ராமாவதராம கருதப்படும் அவ்தார் சிங் பாத்திரத்திடம் டாக்டர் பேசிக்கொண்டிருப்பார். இதன் பிறகும் அம்பேல்தான். கதை அமெரிக்கா சென்று கூர்மாவதார புஷ்ஷிடம் துவங்கிவிடும்.

அவதார வரிசைப்படி கிட்டதட்ட வந்த இந்த ஷாட்டுகள் ஏன் முழுமையாகவில்லை? எடிட்டிங்கில் கோவிந்தசாமியா? இல்லை ரொம்ப யோசிக்கிறேனா?

புஷ்தான் கூர்மாவதார சிம்பாலிசம் என்பதில் பலர் பாற்கடலை கடைவதற்கு உதவிசெய்யும் ஆமைவரை வந்து ஆனால் அமுதம் கடைய புஷ் உதவுகிறார் என்று முடிக்கின்றனர். அவர் கடைந்தது ஆலகால விஷம் (படத்தில், கிருமி பாம் அல்லது வைரஸ்) என்பதுதான் பொருத்தம்.

முகுந்தா முகுந்தா பாடலில் பாட்டியை வராஹமூர்த்தியாக ஒரு ஃப்ரீஸ் ஷாட் காட்டப்படுகிறது. இதை பலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தொடர்ச்சியாக பாட்டி வையலை கோவிந்தராஜர் சிலையில் மறைப்பதை வராஹர் வேதத்தை மறைத்ததற்கு ஒப்பிட்டு ஒரு ஆதாரம் குடுக்கின்றனர். இது தவறு. வராஹர் வேதத்தை மறைத்ததாக புராணங்கள் கூறவில்லை. ஆனால் எனக்கு தோன்றிய வேறொரு காரணம் இது. அதே பாடலில், ”உன் திருவடி பட்டால் திருமணம் ஆகும் என்றே ஏங்குகிறேனே…” என்ற பாடல் வரிகளில் ஆண்டாள் கிருஷ்ணவேனியின் காலை தொட்டு வணங்குவது ஒரு குறி. வராஹமூர்த்தியை தொழுதால் திருமணம் கைகூடும் என்று நம்பிக்கை. திருவிடந்தை நித்தியகல்யாணப்பெருமாள் [7] கேள்விப்பட்டிடுப்பீர்களே, அவர் வராஹமூர்த்தி.

முகுந்தா பாட்டிலேயே பல்லவியில் முடிக்கையில் வரும் ”வரம் தா வரம் தா” வார்த்தைகளை தொடர்ச்சியாக கேட்கையில் தாவரம் என்று கேட்கிறதே. வராஹமூர்த்திக்கு உணவு தாவரம்தான். பாட்டை எழுதியவரிடம் கமல் ஏதாவது சொன்னாரா என்று விசாரிப்போமா?

பாட்டி ஆரம்பம் முதல் புலம்பிக்கொண்டு வரும் அவர் பிள்ளை (ஆராஅமுதன்) யாரின் சிம்பாலிசம்? ஒரு வேளை நரகாஸுரனா? நரகாஸுரன் வராஹர் மற்றும் பூமிதேவியின் பிள்ளை என்கிறது புராணம். பாட்டி (கிருஷ்ன அவதாரம் என்று நாம் நினைக்கும்) பூவராஹனை மடியில் கிடத்திக்கொண்டு அரட்டுகையில், உத்திரட்டாதி நட்சத்திரம், மீன லக்னம், ராத்திரி எட்டு மணிக்கு பிறந்த குழந்தையை பகவான் கலம்பர எட்டு மணிக்கு கூட்டுண்டுட்டாண்டா என்று கூறுகையில், நரகாஸுரனையா குறிப்பிடுகிறார்? எனக்கு சரிபார்த்துசொல்ல அந்த அளவு பாகவதம் தெரியாது. ஆனால் its intriguing. இது சரிதானென்றால், வராஹ அவதாரம் பாட்டிதான் என்பது ஊர்ஜிதம். கடைசியாக ஒரு லாங்ஷாட் சிம்பாலிசம்.

வின்செண்ட் பூவராகன்தான் கிருஷ்ணாவதாரம் என்பது ஐயம்திரிபட புரிவதற்கு பல சான்றுகள் உள்ளன (ஷியாமள நிறத்திலிருந்து, கிருஷ்ணர் அவதாரத்தை முடித்துக்கொண்டது ஜாரா என்ற வேட்டுவனின் அம்பின் வழியாக என்பது வரை). அவற்றை பலர் எழுதிவிட்டனர். இவ்விரு காரெக்டர்களும் முறையே வராஹ கிருஷ்ண அவதாரங்கள்தான் என்றால், எனக்கு யோஜனையாக இருப்பது, பூவராஹனையும் கிருஷ்ணவேனியையும் ஏன் பெயர் அளவில் கமல் படத்தில் மாற்றிப்போட்டுள்ளார் என்பதே.

இடையில் கொசுறாக வேறு சில குழப்பங்கள்.

எனக்கு தண்ணில கண்டம் என்று ஆண்டாள் குறிப்பிடுவது தான் பூமிதேவி என்பதை உணர்த்தவா? இது சரி என்று வைத்துக்கொண்டால், கோவிந்தசாமி கல்கியில்லையா, வராஹரா? ஏனெனில் இந்த சீனின் தொடர்ச்சியாக கோவிந்த் ஆண்டாளை வலது பக்கத்தில் கையில் தூக்கிக்கொண்டு கடற்கரையோரம் நிற்பதுபோல ஒரு ஷாட் வருகிறது. மாமல்லபுரம் பக்கத்தில் திருக்கடல்மாலையில்தான் வராஹமுர்த்தி அகிலவல்லித்தாயாரை (பூமிதேவியை) வலதுபக்கமாக ஏந்திக்கொண்டு இருக்கும் கோலம் இருக்கிறது. மற்ற அனைத்து இடங்களிலும் வராஹருக்கு இடப்பக்கம்தான் பூமிதேவி. படத்தில் இது ஒரு சிம்பாலிசமா? அல்லது டூமச்சாக யோசித்துவிட்டேனா?

பரத் என்கிற இன்ஸ்பெக்டர், ஹனு என்கிற குரங்கு இவர்களது ராமாயணப்பெயர்கள் ஏன்? புரியவில்லை.

இப்படி பல சுவாரசியமான (வெட்டி?) கேள்விகளுக்கு நூறாவது நாள் விழாவில் பதில்கிடைக்கும் என்று நினைக்கிறேன். பார்ப்போம்.

இந்த intrigue and subtletiesதான் என்னைப்போன்ற ரசிகரை படத்தை விரும்பச்செய்கிறது. அனர்தங்களை மன்னிக்க வைக்கிறது. மீண்டும் மீண்டும் பார்க்கச்செய்கிறது. இது கமலிற்கு நன்றாகத்தெரியும்.

தொலக்காட்சியில் கோட்டு சூட்டில் கால்மேல்கால் போட்டுக்கொண்டு விமர்சிப்பவர் சொல்வதுபோல:

மொத்தத்தில் தசாவதாரம் ஒரு கமல் நடித்த ரஜினி படம்.

முடிக்கும் முன் முக்கியமாக ஒரு விஷயம். ஜெயமோகன் சொல்வது போல [8] வலையில் கங்கனம் கட்டிக்கொண்டு கமலை கிழித்தெடுப்பது என்று வருகிறது பல கட்டுரைகள். பலவகையில் கண்ணியமற்ற இவ்வகை விமர்சனங்கள் பலது காப்பி-பேஸ்ட். பண்டம் அதேதான். பரிமாறுபவர் மட்டும் மாறுகிறார். காப்பி-வேஸ்ட்.

இவற்றுடன் ஒப்பிடுகையில், சிலகருத்துக்களை தப்பாக சொன்னாலும், சொந்தமாக எழுதுவதில் அவமானம் குறைவுதான் என்பதால் இதை எழுதியுள்ளேன். இக்கட்டுரையும் அவ்வகை விமர்சனங்களில் ஒன்றாகக் கருதப்படுமின் (கெயாஸ் தியரி நிமித்தம்), இதோ என் டிஸ்க்ளைமர். படத்தின் ஆரம்பத்தில் அவர் சொல்வார். முடிக்கும் முன் சற்று மாற்றி,

அடியேன், கமல்ஹாஸானு தாஸன்.

கட்டுரை சுட்டிகள்

[1] http://en.wikipedia.org/wiki/Chaos_theory
[2] http://en.wikipedia.org/wiki/Dynamical_system
[3] http://en.wikipedia.org/wiki/Butterfly_effect

[4] http://spelligmitsakes.blogspot.com/2008/07/dasavatharam-film-of-subtleties-and.html
[5] http://vgramanathan.wordpress.com/2008/07/10/dasavatharam-a-review/
(வீக்கெண்ட் வெட்டி வேலையில் ஆசிரியர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை இவர்களுக்கு உணர்த்தவே இந்த கட்டுரை)

[6] http://jayasreesaranathan.blogspot.com/2008/07/dasavatharam-kamals-12th-avathar.html
[7] http://en.wikipedia.org/wiki/Thiruvidandai
[8] http://jeyamohan.in/?p=517