இந்தியாவில் ஆய்வு வேலையை ஒரு பகுதியாகக் கொண்ட உயர்கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சேர்ந்த புதிதில் கூறும் டாப் ட்வென்டி பொய்கள் வருமாறு
1. ம்ஹுஹும்…என்னுடைய உண்மையான சாதிக்கும் திறன் மேற்கில்தான் நிதர்சனமாகும்.
2. ஆனால் என் மனைவிக்கு அந்த ஊர் தட்பவெப்பத்தில் அடிக்கடி சளி பிடிக்கிறது என்பதால் மேற்கில் இருக்கும் நிறுவனங்களில் நான் வேலைக்கு மனு போடுவதில்லை.
3. என் ஆராய்ச்சி மிகவும் புதிதானது. சொன்னால் சட்டென்று புரியாது. அதனாலேயே வெளியே தெரிந்து புகழடையாமல் இருக்கிறேன்.
4. உலகத்திலேயே மிக முக்கியமான ஒரு ஆராய்ச்சி மாநாட்டில் என் ஆராய்ச்சித் துறையில் உள்ள பெரிய விஞ்ஞானி கடந்து செல்கையில் என்னைப் பார்த்து சௌக்கியமா என்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்…
5. நான் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டுள்ள விஷயங்கள் தொடங்குவதற்கே சில கோடிகள் போல முதலீட்டு பணம் வேண்டும். கிடைத்ததும் கிளப்பிவிடுவேன்.
6. ஆனால் ஆராய்ச்சிக்கு பணம் தேவை என்று ப்ரம்ம இரகசியங்களை உள்ளடக்கி நான் எழுதி அனுப்பிய ஆராய்ச்சி பிரேரணையை (research proposal) இதெல்லாம் ரொம்ப ஓவர், காலனாவுக்கு பிரயோஜனம் இல்லாத நடைமுறைக்கு ஒத்துவராதவை என்று துறை வல்லுநர்கள் விமர்சித்து சப்ஜாடாய் தூக்கி அடித்துவிட்டார்கள். இதுக்குதான் சார் அமெரிக்காலேயே இருந்திருக்கனுங்கறது…
7. நான் வேலை செய்யும் நிறுவனத்தில் என் இலாகாவில் நான் ஆராய்ச்சிக்காகவும், அறிவிற்காகவும், வகுப்புகள் நடத்துவதற்கும், கேட்பதெல்லாம் கேட்டமாத்திரத்தில் கிடைக்கிறது.
8. என் வேலையிடத்தில் கிரம வரிசை (ஹியரார்கி) எல்லாம் கிடையாது. சமத்துவபுரி.
9. உப்புசப்பில்லாத எல்லா கமிட்டிகளிலும் என்னை உறுப்பினராக போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இதிலிருந்தே நிறுவனத்திற்கு நான் எவ்வளவு இன்றியமையாதவன் என்று நான் உள்பட அனைவருக்கும் புரிகிறதே.
10. நிறுவனத்தில் என்னைவிட சீனியர்களிடமிருந்து நான் கேட்காமலேயே இலவசமாய்க் கிடைக்கும் உபதேசங்கள் எனக்கு மிகவும் தேவை.
11. எனக்கு ஆய்வுகளில் உதவ முனைவர் பட்டம் பெறுவதற்கு வருபவர்களில், அறிவுஜீவிகளாக இல்லாமல் முட்டிபோடும் மாணவர்களுடந்தான் வேலை செய்யப் பிடிக்கும். அதுதானே சவாலே…
12. நான் என் வேலையை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மட்டுமே இப்படி விழுந்து விழுந்து வேலை செய்யவில்லை. எனக்கு இந்த வேலை ரொம்ப பிடிக்கும். அப்படியே சாப்பிடுவேன்…
13. நான் இந்த ஸெமஸ்டரில் நடத்தும் பாடம்தான் நான் விரும்பிக்கேட்டு கல்லூரி இலாகாவிடமிருந்து வாங்கிக்கொண்ட பாடம்.
14. எனக்கு சொல்லித் தருவது என்றால் கொள்ளை பிரியம்
15. …அதுவும், பி.டெக்., பி.ஈ. போன்ற என் ஆய்விற்கோ துறையில் முன்னேற்றத்திற்கோ ஒருவிதத்திலும் பயன்படாத இளங்கலை மாணவர்களுக்கென்றால், அல்வா கொடுப்பது, சாரி, சாப்பிடுவது மாதிரி.
16. (மாணவர்களே,) எந்நேரமும் உங்களுக்காக என் ஆபீஸ் கதவு திறந்தே இருக்கும்.
17. ஒரு நூறு கே டாலர் வேலையை விட்டுவிட்டுதான் இங்கு வந்து சேர்ந்தேன்.
18. ஆனாலும் இன்றுவரை அதற்காக இதோ இத்துனூண்டுகூட வருத்தப்பட்டதேயில்லை.
19. என்னுடன் எப்போதோ இளங்கலை கல்வி படித்த சுமார் படிப்பு அரைகுறை நண்பன் இப்போது என்னைவிட ஐந்து மடங்கு அதிகம் சம்பளம் வாங்குவதில் எனக்கு மனக்கசப்பு ஏதுமில்லை.
20. இது ஒரு உன்னதமான பணி.
சேர்ந்த புதிதில் மேலே உள்ளதில் நானும் பலவற்றை கூறியவன் என்ற முன் அனுபவத்தில் நகைச்சுவை கருதி சற்றே மிகையுடன் எழுதியவை இவை. ஏதேனும் விட்டுப்போயிருந்தால் தெரிவிக்கவும், சொல்லிப்பார்க்கிறேன்…