சௌம்யா கச்சேரியும் நீலமணி ஆலாபனையும்

Standard

பஸ் பிடித்து பாரதீய வித்தியா பவனத்தை அடைகையில் உட்கார இடம் கிடைக்காதோ என்று மனதினுள் பதற்றம். அரங்கினுள் மெயின் கதவு வழியாக நுழையாமல் வலதுபுறம் திரும்பி ஸ்டேஜின் பக்கவாயில் வழியாக ஃபீட்பேக் ஸ்பீக்கர் இருக்கும் பகுதியில் கீழே உட்காரலாம் என்று நுழைந்தால் ஆச்சரியம். வழக்கமாக சௌம்யா கச்சேரிக்கு பவனத்தில் இருக்கும் கூட்டம் இன்று இல்லை.திரும்பி மெயின் கதவு வழியாக அரங்கினுள் நுழைந்து இடம் பார்த்து முன்வரிசையில் அமர்கையில் வீணை குப்பையரின் ராகமாலிகை வர்ணமான வலஜி வச்சியை ஆரம்பித்து இருந்தார். பக்கத்தில் பக்கல ராமதாஸ் பாடகி விட்ட இடங்களை கவனமாக பூர்த்திசெய்து பொறுப்பாக தொடர்ந்தார். தெரிந்த வர்ணம் போலும்.

அடுத்ததாக நளினகான்தியில் தியாகராஜர் கீர்த்தனை. இதை எல்லோரும் மனவ்யாலகிம் சரா தடே என்று ஆரம்பித்து பாடுகிறார்கள். பாலமுரளிகிருஷ்ணா மனவி ஆலகிம்பரா தகே என்று பிரிப்பார். எது சரி என்று பாலமுரளியின் குருவான பருபள்ளி ராமகிருஷ்ணய்ய பந்துலுவின் பேத்தியிடம் (நன்றாக வீணை வாசிப்பார்) ஒரு முறை கேட்டு இருக்கிறேன். தெலுங்கு தெரிந்த அவர் மனவி ஆலகிம்பரா என்பது ஒரிஜினல் என்றார்.

பிறகு ம க ரி ஸ ரி என்று ராக லக்ஷணத்துடன் சற்று ஒட்டாத வரிசையில் எடுத்து ஸ்வரம் பாடுகையில் ஏனோ அடிக்கடி ப நி ஸ கா, ப நி ஸ க ரி க போன்ற மா சேராத கல்பனைகளை நிறய செய்தார். ஹம்ஸத்வனியோடு நிறைய முட்டிக்கொண்டது. மொத்தமாக நளினகாந்தியாக இருந்தது என்று சொல்லமாட்டேன். ஆனால் தடையில்லாமல் பாடினார்.

பிடில் சுமார்தான். வேண்டாத இடங்களில் கற்பனை ஒடவில்லை என்பதால் ராகத்தோடு ஒட்டாத பிருஹாக்களை எல்லாம் போட்டு வாசித்தார். மிருதங்கம் நெய்வேலி நாராயணன். இவரை பற்றி வேறு ஒரு கச்சேரியில் பார்ப்போம்.

அடுத்ததாக ஆலாபனை ஆரம்பித்ததும் ஹிந்தோளம் என்று நினைத்தேன். சற்று நேரம் கழித்து சுத்த தன்யாஸியோ என்று சற்றே குழப்பம். வயலின் வேறு ஆலாபனயில் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் கன்டின்யுடி எல்லாம கொடுக்க முயலாமல் பாடகி முடித்த கடைசி ஸ்வரத்தை மட்டும் வாசித்து வெறுப்பேற்றினார். அவர் ஆலாபனை சமயம் வந்ததும் முக்கால்வாசி சுத்ததன்யாசி வாசித்தார். நடுவில் மைல் நீளத்திற்கு ஸ்வரங்களில ஏதேதோ செய்தார். முடித்ததும் அநேகம் பேர் கை தட்டினார்கள்.

முடித்துவிட்டதற்காகவும் இருக்கலாம்.

நீரஜாக்ஷி காமாக்ஷி என்று ரூபக தாளத்தில் ஆரம்பித்து ஹிந்தோளத்தில் அருமையாக பாடினார் சௌம்யா. வாரிசபதே வரதே தாரகமாம் தத்வபதே என்ற இடத்தில் குறை சொல்ல முடியாத அழகிய நிரவல் செய்தார். பிறகு ஸ்வரங்களும் நன்றாகவே இருந்தது. கால்வாசி கூட்டம் பாட்டு முடிந்ததும் எழுந்து சென்றது.

ஆனால் ஒன்று. மிடுக்குடன் பார்வையாலேயே பக்கவாத்தியகாரர்களை தன் பாட்டுடன் முடிந்தவரையில் சௌக்கியமாக ஒருங்கிணைப்பதும் பின் கண்ணை மூடிக்கொண்டு பாட்டில் ஐக்கியம் ஆக முயற்சிப்பதுமாக சௌம்யாவிற்கு ஒரு ஸ்டேஜ் ப்ரெஸன்ஸ் இருப்பது என்னவோ நிஜம்.

அப்பாடா சப்மெயின் பாடி கேட்டுப் பழகிய ராகத்தை பாடிவிட்டார். மெயின் நிச்சயம் எதோ ஒரு தூசிதட்டவேண்டிய ராகத்தை எடுத்து பிளக்கப்போகிறார் என்று நம்பிக்கை. சிவனின் குமரன்தாள் பணிந்தே துதியும் தீக்ஷதரின் சந்திரம் பஜவும் (சதுஷ்ர மட்டிய தாளம்) முடிந்தகையோடு மெயின் ஆலாபனை.

கல்யாணி!

எழுந்துவந்துவிட்டேன்.

அடக்கமுடியாமல் வந்த கோபத்தை குறைக்க மைலை கற்பகாம்பாளினுள் சென்று இரண்டு கீரை வடை சாப்பிட்டுப்பார்த்தேன். காப்பி குடிக்கையில் அங்கு ஒலிபெருக்கியில் மனவ்யாளகிம் சரா தடே என்று ஒரு ஆம்பிளை குரல்.

அட போங்கப்பா என்று கால்போன போக்கில் ஆதிகேசவப்பெருமாள் கோயிலினுள் சென்றேன். பெருமாளுக்கு வாரணமாயிரம் சூழ வலம் செய்து கொண்டிருந்தார்கள். மெயின் உருப்படியாக மூவாயிரம் தடவை கல்யாணி கேட்ட காதுகளுக்கு சற்று இதமாக இருந்தது. வெளியே செல்ல எத்தனிக்கையில்…

கோயிலினுள் எங்கேயோ இரட்டை நாகஸ்வரத்தில் காப்பி ஆலாபனை பிரவாளமாக வந்துகொண்டிருந்தது.

பிரதக்ஷணமாக வந்து ஆண்டாள் சந்நிதியில் திரும்பினால் கன்ஸ்ட்ரெக்ஷன் கம்பிகளும் மூங்கில் கம்பிகளும் தாறுமாறாக கிடக்கும் பிரதேசத்தில் கோடியில் திட்டின் மேல் சுருதிபெட்டியை இருத்தி தூணில் சாய்ந்தபடி இருவது வயதே மதிக்க தக்க ஐயப்பன் கருப்பு வேட்டி கட்டிய ஒருவர் சத்தம் நிறைய வெளியே கேட்டு கோயில் வருபவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதால் துணி அடைக்கப்பட்ட தன் நாகஸ்வரத்தில் காப்பியை பொழிந்து கொண்டிருந்தார். கூட இருந்த இளைஞர் அவரது மாணாக்கர் போலும். அவரும் இவர் விட்ட இடங்களில் தன் துணியடைக்கப்பட்ட வாத்தியத்திலிருந்து காப்பியை நிரப்பிக்கொண்டிருந்தார். சற்று தூரத்தில் இன்னொரு பெயர் தெரியாத நபர் மண்மூட்டையின் முன் உட்கார்ந்துகொண்டு அதில் இருபுறமும் ஒரு கையில குச்சியவைத்துக்கொண்டு சப்டியூடாக தவில் வாசித்துக்கொண்டிருந்தார்.

[audio:http://unrulednotebook.files.wordpress.com/2009/12/adyarbal_01_kaapi.mp3%5D

காப்பி ஆலாபனை கேட்ட சந்தோஷத்தில் ஆண்டாள் சந்நிதி தூணில் சாய்ந்துகொண்டேன். ஆலாபனைக்குப்பிறகு பாரதியார் பாட்டை அபாரமான சங்கதிகளுடன் உருக்கி உருக்கி பழக்கினார் கற்றுக்கொடுத்தவர். கற்றுக்கொண்டவரும் கூடியவரையில் முயற்சித்தார். பிறகு நான் நிற்பதை பார்த்தாரோ என்னவோ கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த இளைஞர கிளாசை முடித்துவிட்டு தனியாக கண்ணை மூடிக்கொண்டு தூணில் சாய்ந்தபடி அநாயாசமாக ஆரம்பித்தார் ஆலாபனையை.

நீலமணியில்!

நீலமணி, neelamaNi – S R2 M1 P D1 N3 S – S N3 D1 P M1 R2 S, 27 ஆவது மேலகர்தாவான சரஸாங்கியின் (S R2 G3 M1 P D1 N3 S – S N3 D1 P M1 G3 R2 S) ஜன்ய ராகம். “என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை” என்று ஒரு துக்கடா இருக்கிறது. “முருகா முருகா” என்று ஒரு முறை ஸ்ரீரங்கத்தில் எம்பார் ராகவஸிம்மன் ஒரு பாடலை இந்த ராகத்தில் பாடியதாக நினைவு.

வித்தியாபவனத்தின் பழகிய கல்யாணி ரீங்கரிக்கும் தூணிலிருந்து ஒரு இருநூறு அடி தொலைவில் இருக்கும் இந்த கேசவப்பபெருமாள் கோயில் தூணில் இருந்து உருக்கமாகவும் அநாயாசமாகவும் வரும் நீலமணியின் நாதத்தில் அதுவரை நடந்தவைகளிலிருந்து இன்னும் மீளாத இந்த முரண்பாடு சத்தியமாக புரியாத என் கண்ணில் எட்டிப்பார்த்தது ஜலம்.

[audio:http://unrulednotebook.files.wordpress.com/2009/12/adyarbal_02_neelamani.mp3%5D

அரைமணி நேரம் கழித்து முடித்துக்கொண்டார் அவருடைய எக்ஸ்டெம்போர் ஆலாபனைகள மட்டுமே அடங்கிய கச்சேரியை.யார் அவர் என்று தெரிந்து கொள்ள மெதுவாக கச்சேரியெல்லாம் வாசிப்பீர்களா செட் இருக்கிறதா என்று விசாரித்தேன். வாசிப்போம் சார். கல்யாணத்திற்கெல்லாம் வாசிப்போம். ஆனால் ரேட்டெல்லாம் என் குருவிடம்தான் கேட்க வேண்டும் என்றார் நீலமணியும் காப்பியும் ஜோராக ஆலாபனை செய்த இளைஞர். என்ன என்ன உனக்கு ஒரு குருவா? ஐயகோ. திருவிளையாடல் ஹேமநாத பாகவதரைப்போல் உணர்ந்தேன். மனதினுள் பாலையா ஸ்டைலில் “என்னடா இது இந்த அருணுக்கு வந்த சோதனை” என்று ஒருமுறை சொல்லிப்பார்த்துக்கொண்டேன்.

தமிழ்நாட்டில் நிஜமான கர்நாடக இசை எங்கு இருக்கிறது என்பது ஆண்டாள் முன்னிலையில் புரிந்துவிட இருபது முப்பது பழகிய அழகிய சொற்ப ராகங்களுக்குள் முடக்கப்பட்டுவிட்ட மியூசிக் ஸீசன் என்பதெல்லாம் ஒரு பெரிய வர்த்தக மாயையோ (commercial hoax) என்று மனதில் உளைச்சல் ஏற்பட்டது.

கூர்ஜரியும் பூர்ணசந்திரிகாவும் இன்ன பிற விவாதிகளையும் புரட்டிப்போட்டு ஆலாபனை செய்த கலாநிதி எஸ். ராமநாதனிடம் பயின்றவர் எல்லாம் ஊரே மெச்சி பாப்புலர் ஆன பிறகும் கூட ஹிந்தோளத்தையும் கல்யாணியையும் கச்சேரிக்கு அடுத்து கச்சேரியாக உருக்கி உருக்கி பாடி புகழ் வெளிச்சத்தில் எதையோ தேடிக்கொண்டிருக்கையில், எந்தவித தலைப்பாகையும் இன்றி முறையாக ஆச்சாரியர்களிடமெல்லாம் அப்பியாசம் செய்யாத செய்யமுடிந்திராத, வெறும் வழிவழியாக வந்து கொண்டிருக்கும் கேள்வி ஞானத்திலும் கை சமிக்ஞை குறியில் கூறப்படும் ஸ்வரங்களிலும் (நாகஸ்வரத்தில் கை விரல் ஓட்டையை மூடினால் ஒரு ஸ்வரம் திறந்தால் ஒரு ஸ்வரம் என்று அப்பியாசத்தில் நினைவில் கொள்வர்) மட்டும் இசையை கற்றுக்கொண்டு வயிற்றுப்பிழைப்பிற்காக தொழிலாக ஆனால் ஆனந்தமாக அதை வடித்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.

ரெக்கார்ட் செய்ததை அவருக்கு போட்டுக்காட்டினேன். கூட இருந்தவர்களுடன் ஆஹா என்று ரசித்தார். ஒரு சில இடங்களில் நாதம் சரியாக இல்லை என்று தன் வாசிப்பை குறை கூறிக்கொண்டார். கையெடுத்து மானசீகமாக அவர் காலில் விழ இருந்த என்னை எதற்காகவோ கும்பிட்டார்.

கலா நிதி மிளிரும் இந்த இளைஞர் பிரபலம் அடையாமல் இப்படியே புகழ் கட்டுப்பாடு இல்லாமல் இசை தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவேண்டும் என்று மனதினுள் நினைத்துக்கொண்டு, இரவாகிவிட்டமையால் பூட்டப்பட்டுவிட்ட கோவில் கதவை திறக்கச்சொல்லி, மனதில் பலவிதமான குழப்பங்களுடன், குறுக்குத்தெருவெல்லாம் எம். ஆர். ஸி. நகர் வரை நடந்தே கடந்து, பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். தூங்கும் முன் மனதில் அசை போடுகையில் ஒன்று புரிந்தது. இன்று பவனத்தில் வேறு யாரும் கேட்கக்கொடுத்துவைக்காத நீலமணியை நான் கேட்டது

சௌம்யா மெயின் உருப்படியாக பாடிய கல்யாணியால்.

———–
Bharathiya Vidya Bhavan
Dec 4, 2006. 6:30 PM – 9:30 PM
Vocal – Sowmya
Violin – Pakkala Ramdoss
Mridangam – Neyveli Narayanan