நேற்று ஸமாஜத்தில் கர்னாடக இசைக் கச்சேரி கேட்க விதிக்கப்பெற்றேன்.
ஸமாஜம் என்றால், தியாகராஜ ஸங்கீத வித்வத் ஸமாஜம். மைலாப்பூரில் உள்ளது. இதைச் சென்றடைவதே கலாச்சாரங்களின் தாக்கத்தில் அமையும் பயணம். என் வீட்டில் இருந்து ஐ.டி. நிறுவனங்களின் உறைவிடமான டைடெல் பார்க்கின் சமீபத்தால் எந்நேரமும் நெரிசலாக இருக்கும் சர்தார் பட்டேல் சாலயில் தொடங்கி, சென்ற நூற்றாண்டின் சிறந்த சீர்திருத்தவாதிகளில் ஒருவரான ஸ்ரீராமக்கிருஷ்ண பரமஹம்ஸரினால் நிர்மாணம் செய்யப்பட்ட மடத்திற்கு அழைத்துச்செல்வதால் பெயர்பெற்ற ஆர். கே. மட் ரோடில் திரும்பி, முகலாயர்களின் மறைமுகப் பதிவான மசூதிச்சாலையில் மந்தவெளி ஆஞ்சனேயரின் கோயிலைத் தாண்டி, ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அவர்களுக்குப் புரிகிறமாதிரி பெயரிடப்பெற்ற நார்ட்டன் சாலையைக் கடந்து, சுவரெல்லாம் சாணியடிக்கப்பட்ட, அச்சாணியின் மலாதாரமான மாடுகளுடன் கூடிய பெயர் தேவையற்ற குறுக்குச் சந்தினுள் எதிர்த்தரப்பில் எந்த வாகனமும் வந்து விடக்கூடாதே என்று பிராத்தனையுதன் மாதவப்பெருமாள் கோயிலின் பின்புறமாகத் திரும்பினால், எதிர்ப்படும் தெருவின் கோடியில் இருப்பதுதான் ஸமாஜம்.
இத்தெருவில் தவழ்ந்து வரும் பவழமல்லி வாசம், கயிற்றுக்கட்டில் தாத்தா, கையில் பனைஓலை விசிறி, பக்கத்தில் மாம்பழச்சொம்பில் கிணற்று ஜலம், வெள்ளித்தாம்பூலப்பெட்டி, எதிர்சாரியில் மடிசார் மாமிகள், பெரிய திரி விளக்குடன் மணல் பரப்பி இரும்பு இலுப்பைச்சட்டியில் கடலை வறுக்கும் கைவண்டிக்காரன், கரண்டியின் ணங் ணங், தெருவோர திறந்த சாக்கடை, திடுக்கிடும் நாய் இவற்றைக் கடந்து, “ரா ரா தேவாதி தேவா” என்று வரவேற்புப்பலகையில் அடானாவில் வரவேற்கும் ஸமாஜத்தை அடைந்து உள்ளே நுழையும் முன்…
…வரவேற்றது ஆறு கட்டை குரல்.
வெகுநாளைக்குப் பிறகு ஆறு கட்டையானாலும் நித்யஸ்ரீயின் க்ரீச்சிடல்கள் அற்ற, சபைத்தயக்கம் அற்ற, சிறுவயதில் வால்வ் ரேடியோவில் ஊஞ்சலில் காலை ஆட்டிக்கொண்டு கேட்ட பங்களூர் ரமணீயம்மாளை நினைவூட்டும், வெண்கலமணியொத்த கணீர் நாரீமணி குரல்.
அம்மையாரின் பெயர் Dr. பாகீரதி. நான் உள்ளே செல்கையில் ஹம்ஸநாதத்தை ஆலாபனை செய்துகொண்டிருந்தார்.
இசையில்தான் டாக்டர் பட்டம் என்று சொல்லத்தேவையில்லை.
ஆலாபனை முடிந்ததும் வந்தது எதிர்பார்ததைப்போலவே தியாகராஜரின் ஏகைகராக கீர்த்தனை “பண்டுரீதி கொலுவீயவைய ராமா”. இந்தப் பல்லவியை அப்படியே வார்த்தைகளை மாற்றி “தென்றல் வந்து…என்னைத் தொடும்…” என்று பாடிப்பாருங்கள்…தியாகராஜரும், இளையராஜரும் முன்னூறு வருட இடைவெளியின்றிப் பகிர்ந்து கொள்ளும் சங்கீதத்தின் அருமை புரியும்.
இவ்வகை ஏகைகராக கீர்ததனைகளுக்கு one hit wonder என்பது அடியேனின் செல்லப்பெயர். மேற்கத்திய ராக்/பாப் இசைவகைகளில் ஒரே பாட்டின் மூலம் பிரபலமாகி பிறகு எந்தப் பாட்டும் சோபிக்காமல், சடுதியில் நைட்க்ளப் பார்களில் அவை பின்பாட்டாக மறைந்துவிடும் பாடகர்கள் ஏராளம். இவர்களைச் சற்றே கிண்டலுடன் one hit wonders என்பார்கள். நம்ம ஊர் ஏகைக ராக கிருதிகள் பல இவ்வகை.
கவனிக்கவும்; கிருதிகளைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன். எழுதியவரையோ, பாடுபவரையோ அல்ல.
உதாரணத்திற்கு தியாகராஜரிலேயே கைகவசி, சிந்து கானடா, ஜயன்தசேனா, கோகிலவராளி, ஸ்ருதி ரஞ்சனி, மாருவ தன்யாஸி, போன்ற ராகங்களும் அவற்றின் கிருதிகளும் one hit wonders எனலாம். இன்னும் பல இருக்கிறது. சட்டென்று ஞாபகம் வந்தவற்றையே குறிப்பிடுகிறேன்.
இவ்வகை ஏகைகராக கிருதிகளில் சில பொது அம்ஸங்களைக் காணலாம். நிச்சயம் கிருதி விறு விறு என்று துரித காலப்பிரமாணத்தில் இருக்கும். பெரும்பாலும் ஆதி தாளத்தில் இருக்கும். சமத்தில் இருந்து ஒன்றறை இடமோ இரண்டு இடமோ தள்ளி எடுப்பு. கச்சேரியின் சப்மெயினுக்குப் பிறகு பிரதான உருப்படிக்கு முன்னார், சற்றே அயரும் ரசிகர்களைத் தட்டி எழுப்பும் வகையில் 2 நிமிடத்தில் விரட்டப்படும் துரதிருஷ்டத் துக்கடா. ஆரோஹனம் அவரோஹனத்தைத் தாண்டி பாடப்படும் ஏகைகராகத்தின் ஸ்வரூபம் இதுதான் என்று இந்த கிருதியில் இருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டிவரும். ஒரு வகையில் வித்வான்களுக்கு வசதி. பெரும்பாலும் ஆலாபனையோ, நிரவலோ, ஸ்வரகல்பனமோ செய்ய மாட்டார்கள். தியாகராஜரே ஒரு கிருதிதான் செய்து இருக்கிறார் பாருங்கோ, விஸ்த்தாரணம் செய்ய இடமில்லை, எல்லாம் பெரியவா விட்ட வழி என்று சால்ஜாப்பு செய்து கப்பரை ஏந்துவார்கள்.
இப்படிப்பட்ட ஒரு ஹம்ஸநாதத்தைத்தான் இந்த அம்மையார் ஆலாபனம் செய்து கொண்டிருந்தார். பிறகு ஸ்வரகல்பனம் வேறு. கேட்டு மகிழ்ந்தேன்.
துளசிதளத்தைப் பாடுகையில் சுற்றிலும் நோட்டம் விட்டேன். காக்கை எச்சம் காய்ந்த அழுக்கு ஜமக்காளம், காரைப்பெயர்ந்த சுவரின் ஒரு பகுதியில் கருப்புப் பெயிண்ட் அடிக்கப்பட்டு அதில் பரூர் சுந்தரம் ஐயர் முதலாக ஸமாஜத்தை ஸ்தாபித்தவர்களின் பெயர்கள், ஸமாஜத்தினுள்ளேயே இருக்கும் தியாகராஜர் உருகிய ராமர் கொலுவீற்றிருக்கும் சன்னதி, வாயிலில் தியாகராஜர் (சிலைதான்), பழுப்பு ஏறிய “அந்த காலத்து” சுவர்க் கடிகாரம், பழையகாலக் கருப்பு தடி ப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்த மாமாக்கள், மஞ்சள் பை தாத்தாக்கள், காவி உடை பாட்டிகள், இவற்றுடன், முன்பு குறிப்பிட்ட அதே சுவர்களில் பொருத்தியிருக்கும் bose ஸ்பீக்கர்கள், ப்ளாஸ்டிக் சேர்கள், ட்யூப் லைட்டுகள், சிமெண்ட் பெஞ்சைத்தாண்டி சில கைனடிக் ஹோண்டாக்கள், என் அழுக்கு ஜீன்ஸ் பேண்ட், அலைபேசி என்று எல்லோரும் நினைத்துவிடும் வாய்ஸ் ரெக்கார்டர்…
மாமி பாலே பாலேந்துவிற்கு வந்துவிட்டிருந்தார்.
நிரவல் வருமோ என்று நப்பாசை. நிராசை. வந்தது முகாரியில் காரு பாரு.
முகாரியின் மா (ஸ்வரம்) பேகடாவிலோ, பைரவியிலோ சங்கராபரணத்திலோ கேட்காத ஒரு ஸ்பெஷல் மா. என்னைப்பொருத்த வரையில் இதை நன்கு புரிந்துவைத்திருப்பவர் நேதனூரி கிருஷ்ணமூர்த்தி, செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், இப்போது கச்சேரி செய்பவர்களில் நான் கேட்டவரையில், டி. எம். கிருஷ்ணா, ரவிகிரண் போன்ற ஒரு சிலரே.
அம்மையாரும் புரிந்துவைத்திருக்கிறார் என்று புலப்பட்டது.
அடுத்து வந்தது சுண்டல். ஆமாம், சுண்டல்தான். செவிக்கு உணவிருக்கும்போதே சிறிது வயிற்றுக்கும் ஈயப்பட்டது. பூணுல் மார்பும், ஸ்ரீசூர்ணம் அணிந்த பரந்த நெற்றியும் கொண்ட ராமர் சன்னதி பட்டாச்சாரியாரின் கையிலாக. ஸ்டைரஃபோம் குமிழிகளில்.
சமாஜத்தில் ஸ்டைரஃபோமா? எங்கு சென்றன மந்தார இலை தொண்ணைகள்? யோசிக்கையில் ஆரம்பமானது கல்யாணி ஆலாபனை.
ஆலாபனை பற்றி சில கருத்துக்கள். ஸ ரி க, க ம ப, என்று மூன்று மூன்று ஸ்வரங்களாக, மேம்போக்காக பார்த்தாலே முப்பது ராகங்களுடன் குழப்பும் “ஸ்வர சுத்த” ஆலாபனைகள் ஒரு வகை. நிறைய கணக்கு வழக்குகள் இருப்பது போல் ஜோடனை செய்து காட்டலாம். முப்பது ராகங்களுக்கும் அதே கணக்குதான். ஒரே வழக்குதான். இவற்றை செய்ய ராக லக்ஷ்ணத்தை பற்றியோ, நுணுக்கங்களைப் பற்றியோ யோசனையற்ற, அப்பியாச அருகதை போதும். சீசனில் சரிகை தெறிக்க நிறைய கச்சேரி செய்யலாம். முடிந்த கையோடு நாப்பது ட்யூஷன் வைத்துக்கொள்ளலாம்.
இன்னொரு வகை சற்று கடினம். வேதவல்லி, விஜய் சிவா போன்றவர்கள் செய்வது. ஆலாபனை ஆரம்பித்ததுமே கண்டுபிடித்து விடலாம். ஒவ்வொரு சஞ்சாரமும் விரிவாக நீட்டி முழக்கி நுணுக்கமான பிடிகளுடன், ஜன்ய ராக குழப்பம் கூட இல்லாமல் வரும். வார்த்தை வார்த்தையாகப் பிய்த்துப் பாடாமல், முழு வாக்கியமாகப் பாடுவது. மைக் இல்லாத நன்மைக் காலத்தின் பாடும் முறை. பாகீரதி அம்மாள் கடைபிடித்த முறை.
ஆரவாரம் இல்லாத அபாரம்.
சமாஜத்தில் கச்சேரி கேட்கச் சென்றால் சில பக்க விளைவுகள் நிகழும். முதல் விளைவு என் சித்தப்பா. வங்கியில் சரியான தருணத்தில் வீ யாரெஸ் வாங்கிக்கொண்டு லஸ்ஸில் இருக்கும் சொந்தவீட்டில் பேரக்குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டு, அவ்வப்போது ஷேர் மார்க்கெட்டில் தன் பலத்திற்கேற்ப விளையாடிக்கொண்டு, சாயங்கால நேரங்களைக் கர்னாடக இசையில் கழிக்கும் மஹாராஜபுரத்துக்காரர். நாட்டையை பைரவி போல இருக்கே என்று வெளிப்படையாக யோசிக்கும் வெகுளி. இவரை நிச்சயம் ஸமாஜக் கச்சேரிகளில் சந்திப்பேன். சறிது நேரம் ‘அப்புறம் எப்போது பார்க்கலாம்’ என்று பேசிக்கொண்டிருந்துவிட்டுப் பிரிவோம். இவர் இன்று அம்மையாரின் கல்யாணியில், கல்யாணி என்று தெரிந்து, லயித்திருந்தார்.
அடுத்த பக்க விளைவு பக்கத்திலேயே அமர்ந்திருக்கும், நாம் திரும்பினால், “உன்னை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே” என்று பேச ஆரம்பித்துவிடும் ஜெனரிக் மாமா. நிச்சயமாக தாளம் தப்பாகப் போடுவார்.
மிருதங்கம் தனி வருகையில், வந்த இரண்டாவது சுண்டலைச் சாப்பிட்டபடி (இரண்டு உபயக்காரர்களாம் அன்று) திரும்பினேன். பக்கத்தில் தப்பு தப்பாகத் தாளம் போட்டபடி மாமா. உன்னை எங்கோ பார்த்திருக்கேனே என்றார். எங்கு வேலை என்றார். சொன்னவுடன் கையை காதுவரை உயர்த்தி எனக்கு அந்தக் காலத்தில் உன் நிறுவனத்தில் பல பேரை பழக்கம் என்று பேச ஆரம்பித்தார். ஐயகோ! என்று சுண்டலை வாயில் கொட்டிக்கொண்டு பேச முடியாமல் வேண்டுமெண்றே குழறினேன். தீவிரமாகத் தனிக்கு தாளம் போட ஆரம்பித்தேன். மாமா விடவில்லை. தனக்கு வராத தாளத்தை இவன் மட்டும் போடுவதா என்பது போல் நினைத்து எந்நிறுவனத்தில் முன்னூறு வருடம் முன் வேலை செய்த திருதராஷ்டிரனோ, தக்ஷிணாமூர்த்தியோ ஏதோ கேட்டார்.
நல்லவேளை அதற்குள் தனி முடிந்து, ஆர்கனைஸர் பேச ஆரம்பித்தார்.
இவ்வகையில் கச்சேரியின் நடுவே பாடகரை ஐந்து வயதிலிருந்தே எனக்குத் தெரியும், அவ அம்மாவை எனக்கு மூன்று வயதிலிருந்தே தெரியும் என்று ஆர்கனைஸர் பேசிப்படுத்துவது மதுரை மணி காலத்திலேயே இருந்திருக்கிறது.
தப்புத்தாளங்கள் மாமா ஆர்கனைஸர் பேச்சில் லயித்தார். நான் தற்காலிகமாக தப்பினேன்.
ஆனால் ஒன்று. பெயர் தெரியாத மாமா பக்கவிளைவுகள் அங்கேயே முடிந்துவிடாது. சில வேளைகளில். இரண்டு தினம் கழித்து அம்மாவிடம் ஃபோன் மூலம் பையனுக்கு வரன் பார்கரேளா என்று வளரும். லஸ்ஸில் சித்தப்பாவைப் பார்க்கச் சென்றால் தெருவில் எதிர்ப்பட்டு உனக்கு இங்கேதான் ஜாகையா என்று படுத்தும்.
ஆர்கனைஸர் பேச்சிற்குப் பிறகு தியாகராஜர் போட்டுள்ள ஒரு அபங் ஸ்டைல் பாட்டு என்று கூறி ஹரிதாஸதுவேடலே என்று யமுனாகல்யாணியில் பாடினார் Dr. பாகீரதி. அடுத்து ராம நாமம் பஜரே என்று மத்யமாவதியில் மங்களம். நிறைவு.
வெளியே வருகையில் Dr. பாகீரதி, ஸமாஜ ஸ்தாபகர் பரூர் சுந்தரேச ஐயரின் பேத்தி என்று கேள்விப்பட்டேன். நான் வருவதற்கு முன் அவர் பாடியதாக கலாவதி, ஹம்சத்வனி முதலியவற்றை விட்டுவிட்டோமே என்று வருந்தாமல், கிடைத்த உசத்தியான இசைக்கு நன்றி கூறி வாசலில் இருந்தபடி குணிந்து ராமருக்கு ஒரு நமஸ்காரம் செய்ய முற்படுகையில், சன்நிதி வாசலில் கண்ணில் பட்டது வாசகம்
எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகி வந்தனமுலு.
_______________________
ஆரம்ப வாக்கியத்தில் உள்ள “நேற்று” நிகழ்ந்த தினம் May 17, 2006.