மெட்ராஸ் மியூசிக் சீசன் என்பது ஒரு மாதத்திற்கும் மேல் நடக்கும் விஷயம். இதை எழுதுகையில் முடிவை நோக்கி நிறைய தொண்டை செருமல்களுடன் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. பத்து பதினைந்து சபாக்கள் நாளைக்கு ஐந்து கச்சேரி விதம், பத்திலிருந்து இருபது நாள் வரை கூடி சென்னையின் பல இடங்களில் நடத்துகையில் சீசனில் மொத்தம் ஆயிரம் கச்சேரிகளுக்கு மேல் நடந்திருக்கும். அவற்றில் நான் கேட்டது முப்பத்தியைந்து; மொத்தத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான சொற்பமே. என் சிறிய இசை காதுகளை நம்பி நான் தரவிருக்கும் அவற்றில் ஒரு பெஸ்ட் பட்டியல், சத்தியம் சாப்ட்வேரின் லாப கணக்கைவிட நிச்சயம் துல்லியமாக இருக்காது. ஒரளவிற்கு அனுமானிக்கக்கூடியதாக இருக்கலாம். மாத்யூ ஹைடனின் ஓய்வை போல.
நான் கேட்டவையிலிருந்து இதோ ஒரு பெஸ்ட் பட்டியல்.
- ஆலாபனை
- பிரசன்னா வெங்கட்ராமன், சாஸ்திரி ஹால் Dec 23, 3pm கச்சேரி; ராகம் – முகாரி; கீர்த்தனை: முரிபெமுகலே (தியாகராஜர்)
வளரும் கலைஞர் பிரசன்னாவினுடைய முயற்சி அபாரம். அவர் கட்டுக்கோப்பாக ஆக்கத்துடன் செய்த ஆலாபனை இந்த ராகத்தில் முசிரியாரின் முத்திரை குத்திய ஆலாபனைகளை நினைவுபடுத்தியது. ஆலாபனையில் நடுவில் எங்கோ முகாரியற்ற சஞ்சரங்களில் அவ்வபோது சுற்றிக்கொண்டிருந்தது சுலபமாக மன்னிக்கக்கூடியதே. நண்பர் என்னிடம் “அருண், முன்பொருமுறை பாவம் (bhAvam, not sin) என்றால் என்ன என்று வகுக்கமுடியுமா என்று கேட்டு படுத்தினியே, பாவம் என்றால் இதுதான் (பிரசன்னாவின் ஆலாபனை, சங்கீதம்)” என்றார்.
பக்கவாத்தியமும் (வயலின் சாருமதி ரகுராமன், மிருதங்கம் வி. சங்கரநாராயணன்) அருமையாகவே இருந்தது.
எல்லாம் சரியாக சென்றால், நிச்சயம் விரைவில் கர்நாடக இசையுலகில் பிரசன்னாஒரு ஸ்டார். வாழ்த்துக்கள்.
- கீர்த்தனை பாடியதில்
- டி.எம். கிருஷ்ணா, மியூசிக் அகதெமியில்; நாஜீவாதாரா (தியாகராஜர்), ராகம் – பிலஹரி
பிலஹரி ஆலாபனை சுமார்தான் என்றாலும் கீர்த்தனை விவரித்தவிதம் அபாரம். பக்கவாத்தியகாரர்களும் தருணத்திற்கேற்ப தங்களையே ஜெயித்துக்கொண்டார்கள். அதுவும் பல்லவியை பலவித பிரமிக்கதக்க சங்கதிகளாக கூட்டாக இசையொருமித்து பொழிந்தது மெய்சிலிர்க்கும் மகோன்னதம்.
- நிரவல் பாடியதில்
- டி.எம். கிருஷ்ணா – பல கச்சேரிகள்
நிரவல் பாடுவது கடினம். பழையகால பெயர் வாங்கிய வித்வான்கள் கூட கீர்த்தனைகளை சங்கதிகள், ஸ்வரங்கள் என்று முடிந்தவரை மெருகேற்றிவிட்டு, நிரவல் என்ற ஆபரணத்தை அணிவிக்க முயன்று தோற்று பெயர் கெடாமல் தங்கள் இசை வாழ்க்கையையே வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ளனர். கச்சேரிகளில் கவனித்தீர்கள் என்றால் ஸ்வரகல்பனைகள் கூட சற்று இடக்காக அபூர்வமாக இருக்கும் ராகத்தில்கூட போட்டுவிடுவார்கள். ஆனால் நிரவல் அப்படி இல்லை. தெரிந்த ராகத்தில், குரு, டேப், எம்பீத்ரீ என்று சரிபார்த்து, பழகிய பாட்டையில்தான் செய்வார்கள்.
தற்கால கர்நாடக இசை கச்சேரிகளில் டி.எம்.கிருஷ்ணா நிரவல் செய்வதை தன் தனி முத்திரையாக எடுத்துக்கொண்டுள்ளாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது. அயராமல் முயற்சித்து ஒவ்வொரு கச்சேரியிலும் அப்பகுதியை சிறப்படைய செய்கிறார். மற்றவர்களைவிட வித்தியாசம் இவரின் நிரவல்களில் இறுதியில் ஒரு பலஆவர்தன க்ளைமாக்ஸ் வெகுஜோராக வருகிறது. சில வருடங்கள் முன் வரை இறுதி ஆவர்தனங்களில் கீர்த்தனை ஆரம்பித்த காலபிரமாணம் கூடி பாட்டு ஓடிவிடும். இப்போது அந்த கோளாரெல்லாம் சுத்தமாக குறைந்துவிட்டது. அருமையான ஸ்வரக்கோர்வைகளுடன் ஆரவாரத்துடன் நிரவல் முடிகையில் அரங்கில் சரியான கரகோஷம்.
- ஸ்வர கல்பனை
- ?
ஒருவருமில்லை. சுமாராக பலரும், நன்றாக சிலரும் ஸ்வரங்கள் பாடுகிறார்கள். மறுப்பதிற்கில்லை. ஆனால் அபாரமாக இந்த பகுதியை இந்த சீசனில் கேட்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இருவது இருவத்திஐந்து நிமிடம் தொடர்ந்து யோசனைகளும், கட்டுமானங்களும் திரும்பத் திரும்ப வராமல், விறுவிறுப்பு குறையாமல் சரளமாக பல பழங்கால வித்வான்கள் பாடுவார்கள். கேட்டிருக்கிறோம். நான் தேடுவது அப்படிப்பட்ட அலுப்பு தட்டாத ஒரு தருணத்தைதான். இதற்கேற்றவாரு கச்சேரிகளும் நாலைந்து மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாக குறைந்துவிட்டது. மெயின் உருப்படியில்கூட இருவதுநிமிடம் தம் கட்டி ஸ்வரம் போடுவதெல்லாம் தேவையில்லை. நெட்ருபோட்ட கோர்வைகளையும் ஸ்வர முன்மாதிரிகளையும் பாடி சீக்கிரம் முடித்துவிடலாம். எனக்கென்னவோ இப்போதுபாடும் இளம் வித்வான்கள் பலரை நாலைந்துமணிநேரம் கச்சேரி செய்யச்சொன்னால் நமக்கு அலுப்பு வந்து அவர்களின் ஸ்வரகல்பனை சாயம் வெளுத்துவிடும் என்று தோன்றுகிறது.
- தனி ஆவர்தனம் (மிருதங்கம் மற்றும் உபபக்கவாத்தியம்)
- நெய்வேலி வெங்கடேஷ் (மிருதங்கம்) மற்றும் பெங்களூர் ராஜசேகர் (முகர்சிங்); Dec 29 7 pm சஞ்சய் சுப்பிரமணியனின் மியூசிக் அகதெமி கச்சேரி.
இந்த தனி ஆவர்தனத்தின் தனித்தன்மை நான் இதுவரை கேட்டிராத பல (நல்ல சுஸ்வர) சத்தங்கள் முகர்சிங்கில் வந்ததுதான். அசாத்தியம். நெய்வேலி வெங்கடேஷை பாராட்டவேண்டும். சரியான அபிப்பிராயங்களும் கோர்வைகளும் வாசித்து, ராஜசேகரிடமிருந்து விஷயங்களை வெளிக்கொணர்ந்ததிற்கு.
- கச்சேரி (அனைவரும், அனைத்து விஷயங்களிலும்)
- டி.எம்.கிருஷ்ணா, ஆர்.கே.ஸ்ரீராம்குமார், அருண்பிரகாஷ், பி.எஸ்.புருஷோத்தமன்; Dec 27, 7 pm மியூசிக் அகதெமி கச்சேரி
மூச்சிற்கு மூன்று குறை சொல்லி தவறு புரிந்தாலும் வருந்தாதவர்களுக்கு, பாடகரை மட்டும் கவனித்துக்கொண்டு அதனால் மிருதங்கம் என்பது அடித்து தன் கவனத்தை திசைதிருப்பினால்தான் அது நன்றாக வாசிக்கப்படுவதாகவும், மிருதங்க தனி என்பது நடக்கும் கச்சேரியின் தன்மைக்கு அப்பாற்பட்டு எப்போதும் தறிகெட்டு வேகமாக இருக்கவேண்டும் என்றும் நினைப்பவர்களுக்கு, அருண்பிரகாஷை ஏன் பாடகர்கள் விரும்பி போட்டுக்கொள்கிறார்கள் என்பது பிடிபட ஒரு ஜென்மம் பிடிக்கும்.
இரண்டு வருடம் முன்பு மியூசிக் அகதெமியில் கிருஷ்ணாவிற்கு வாசிக்கையில் அருண்பிரகாஷ் ஒரு தருணத்தில் ஒன்றுமே வாசிக்காமல் சும்மா இருந்ததுபோல பலருக்கு பட்டது. வலையில் இசை விவாதங்களில் சுருக்காக அவர் குறுக்காக கிழிக்கப்பட்டார். கற்பனையே ஓடவில்லை அவருக்கு என்று. பலர் கவனிக்கத்தவறுவது அவர் இடதுகை மிருதங்கக்காரர். சாதாரணமாக வைக்கப்படும் மைக் இடம் அவர் தொப்பியில் செய்வதை ஒலிப்பெருக்கியெடுத்துக்காட்டாது. அன்றும் அவர் நன்றாகத்தான் வாசித்தார். அரங்கில் கேட்கவில்லை (மேடையில் பக்கத்தில் அமர்ந்திருந்தால் தெரிந்திருக்கும்).
இந்த வருடமும் தொப்பி விளையாடியது. மைக் இரண்டு பக்கதிலும் இருந்ததால் திவ்வியமாக இருந்தது. பட்ஞபாதம் இல்லாமல் கவனித்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள், அவரை ஏன் வித்வான்கள் விரும்புகிறார்கள் என்று. ஒவ்வொடு கீர்த்தனைக்கு ஏற்றவாறு பிரமாணத்தை மட்டுமின்றி, வாசிக்கும் தன்மையை பாங்காக மாற்றிக்கொள்வது மிருதங்க வாசிப்பில் ஒரு உப சிறப்பம்சம். இதை சரிவர செய்வதற்கு சாகித்தியத்தை பற்றி ஒரு நுண்ணிய உணர்வு வேண்டும். சிலருக்கே மனமும் கையும் அப்படி அமையும். அவர்கள் வாசிக்கையில் கச்சேரி தூக்கும்.
அதேபோல கண்ட ஜாதி அட தாளத்தில் (மெயின் உருப்படி விரிபோனி பைரவி வர்ணம். இதைபற்றி பிறகு.) அவர் புருஷோத்தமனுடன் பகிர்ந்து வாசித்த தனியும் அழகாக, கச்சிதமாக, அமைதியாக இருந்தது.
சொடுக்கினால் அடுத்தவர்களை குறைசொல்லும் நண்பர் இருக்கிறார். மிருதங்கம் கற்றுக்கொள்வதாக மூன்று வருடமாக கூறுகிறார். பல பெரிய வித்வான்களை நிஜமாகவே வெளிப்படையாக ரசிப்பார். இவருக்கு அருண்பிரகாஷின் வாசிப்பில் அப்படி ஒன்றும் இல்லை என்று எண்ணம். கர்நாடக இசை நுணுக்கங்கள் நிறைந்தது. புரிய பொறுமையும் பல வருடங்களும் வேண்டும். கிட்டியதும் நண்பரின் எண்ணம் மாறிவிடும் என்று நினைக்கிறேன். சொகஸுகா ம்ருதங்க தாளாமு…
- கச்சேரி பாடகர்
- சஞ்சய் சுப்பிரமணியன் – பல கச்சேரிகள்
அநேக இசை சம்பத்துகளும், நுணுக்கங்களும், அறிவும் இருந்தும் சஞ்சய் சுப்பிரமணியன் கர்நாடக இசையை சாமான்யர்களையும் திருப்திபடுத்துமாறு பாடுகிறார். ஆனால் பிரபலத்தினால் பல சபையில் பாடவேண்டிய நிர்பந்தங்கள் வரும். குரலும் மனமும் என்நேரமும் ஒத்துழைக்காமல், சீசனில் சில வேளைகளில் தன்னால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு சராசரிக்கும் மேலான இலக்கை விட குறைவான அளவையில் கச்சேரிகள் அமைந்துவிடும். ஸ்ரீகிருஷ்ணகான சபாவில் இந்த முறை அமைந்ததுபோல.
ஆனால் வித்தியாசத்திற்கும், சம்பிரதாயம் வழுவாத பலசரக்கிற்கும் சஞ்சய் கச்சேரியில் என்றும் பஞ்சமில்லை. புதிதாக, வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆர்வத்தின் உந்துதலில் சஞ்சய் குறுகிய இடைவேளையில் உன்னதத்திலிருந்து கேலிக்குரியவற்றிர்க்கு இல்லையெனிலும் தவிர்க்கக்கூடியவற்றிர்க்கு தாவி சஞ்சரிப்பார். மியூசிக் அகதெமியின் காம்போதி ஆலாபனையில் செய்ததைபோல. ஆனால் இதை பெரிதுபடுத்த எனக்கு மனமில்லை. வித்தியாச முயற்சிகளில், ஆர்வத்தில், சிலவை தோற்று நம்மை படுத்தும். ஜெயிக்கையில் நம்மையும் உன்னதத்தில் உலவவிடும். கலையை விரிவுபடுத்தும்.
- RTP (ராகம் தானம் பல்லவி)
- டி. என். சேஷகோபாலன் – MFACயில் – ராகங்கள்: கமகக்கிரியா, ஸ்ரீ, பாகேஸ்ரீ
சங்கீத கலாநிதி இருவது வருடமாக தொடர்ந்து நினைவைவிட்டு நீங்காத கச்சேரிகளை கொடுத்துவந்த இடம் மைலாபூர் ஃபைனார்ட்ஸ் கிளப். தற்காலத்தில் கேட்டாலும் ரசிகர்கள் எங்கள் மனதில் ஓடுவது அவர் பல வருடம் பாடிய அழியாத இசை. நம்பமுடியாதவை நிகழும் என்றும், சாத்தியப்படாதவை படும் என்றும் மீண்டும் ஒரு முறை சென்றோம். இந்தமுறையும் சேஷகோபாலன் ஏமாற்றவில்லை. ஏகாந்தம்.
- புதிய உருவாக்கம்
- வசுந்த்ரா ராஜகோபால் – சில கச்சேரிகள்
இவற்றை பற்றி முன்பே வசுந்த்ரா ராஜகோபால் கச்சேரிகள் என்று ஒரு கட்டுரை எழுதிவிட்டேன்.
- உருப்படிகள் மற்றும் சாஸ்திரீயம்
- பரசாலா பொன்னம்மாள் – பல கச்சேரிகள்
ஹரிகேசநல்லூர்முத்தையா பாகவதரின் நேரடி சிஷ்யையான பரசாலா பொன்னம்மாளை பல சபாக்கள் பாட அழைத்திருந்தது திருப்தியாக இருந்தது. மியூசிக் அகதெமியில் என்பதுவயதை தாண்டிய இவரின் கச்சேரியை கேட்டேன். அங்கு வந்திருந்த தற்கால வித்வான்களின் அணிவகுப்பு வெளிப்படையாக தெரியும் சிறப்பை கட்டியம் கட்டி ஊர்ஜிதப்படுத்தியது. நிதானமான ஆனால் அலுக்காத, முறையான ஒழுங்கான, ஒவ்வொரு கீர்த்தனைக்கும் ஆலாபனையுடன், முடிந்தால் நிரவலுடன் பாடப்படும் இவ்வகை சங்கீதம் என்கு சென்றது? நாம் இழந்துவிட்ட ஒரு உல்லாசமான, மெதுவான நாட்களடங்கிய கடந்தகாலத்தை நினைவூட்டும் இவ்வகை சங்கீதத்தை ரிங்டோனில் கர்நாடக இசையை கேட்கும் இக்காலத்தில் சீக்கிரம் கேட்டுவிடவேண்டும். மொத்தமாக இழந்துவிடுவதற்குமுன்…