மார்கழி இசை விழா 2025-2026 – வாரம் 4

Standard

கிருஷ்ணகான சபாவில் அஸ்வத் நாரயணன் விக்னேஷ் ஈஸ்வர் இருவரும் இணைந்து வழங்கிய மாலைக் கச்சேரி இறுதிவரை இணக்கமான நல்லிசையாகவே ஒலித்தது.

ஆரபி ராகத்தில் தியாகராஜரின் ‘ஸாதின்சனே’ கிருதியை விறுவிறுப்பான பிரமாணத்தில் இணைந்து தொடங்கிய நேர்த்தி, வராளி புன்னாகவாராளி ருத்திரப்பிரியா என அன்றைய ராகங்களில் ஆலாபனை நிரவல்கள் ஸ்வரகல்பனை என அனைத்தையும் சரிவிகிதத்தில் பிரித்துக்கொண்டது, எடுப்புகளில் தடுமாற்றங்கள் இன்றிக் கிருதிகளைச் சேர்ந்து பாடுவது, அதேசமயம் கார்வையோ வரிகளின் இறுதியோ என்கையில் ஒருவர் மட்டும் ஒலித்துக் கேள்வி ரசனையைக் கூட்டுவது என மேடையில் இருவரின் மனவொழுங்கும் நன்கு அமைந்துவிட்டுள்ளது.
Continue reading

மார்கழி இசை விழா 2025-2026 – வாரம் 3

Standard

[இதன் சுருக்கமான வடிவம் தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது.]

மைலாபூர் சுந்தரேசன் தெருவில் வி. வி. எஸ். முராரி தன் தந்தை பெயரில் நடத்திவரும் ‘விவிஎஸ் பௌண்டேஷன்’ அறக்கட்டளையின் ‘ஏகாந்த வரிசை’ ஒன்றரை மணிநேரக் கச்சேரிகள் காலை ஆறு மணிக்கே தொடங்கினாலும், சிறு ஆஞ்சநேயர் கோயில் வளாகம் அவ்வப்போது நிரம்பிக் களைகட்டுவது முடிவில் விநியோகிக்கப்படும் சுவையான பொங்கல் பிரசாதத்தால் அல்ல. தன் பங்கிற்கு முராரியே வழங்கிய வயலின் கச்சேரி (கமாஸ் ராக சுஜன ஜீவனா கிருதி, ஆனந்த பைரவி, வாசஸ்பதி ஆலாபனைகள்) சுநாத இதம் என்றால் அடுத்தொரு நாள் இளம் கலைஞர் சுருதி சாகர் வழங்கிய குழலிசை பிரமாதம்.

தோடி ராக வர்ணத்தில் தொடங்கி சாரங்கா யதுகுலகாம்போதி கரஹரபிரியா கானடா என எடுத்துக்கொண்ட ராகங்கள் அனைத்திலும் சிறு பெரு ஆலாபனைகளாகட்டும் சார்ந்த கிருதிகளின் சொல் பாங்கான வாசிப்புத் தன்மையாகட்டும், நிரவல் ஸ்வரகல்பனைகளில் வெளிப்படுத்தும் நிதானம் கற்பனை வளம் என சுருதி சாகர் நம் செவ்வியல் இசையின் வருங்கால குழல் வாத்திய நட்சத்திரம் என்பதை உறுதி செய்தார். அம்ருதவாஹினி (ஶ்ரீராமபாதமா கிருதி) ஸ்வரகல்பனையை மின்னல் தெறித்தார் போல பிருக்கா சங்கதிகளுடன் முடித்தது சிலிர்ப்பு.
Continue reading

மார்கழி இசை விழா 2025-2026 – வாரம் 2 – தினமலர் வடிவம்

Standard

மார்கழி இசை விழா 2025-2026 இரண்டாவது வாரத்திற்கான என்னுடைய விமர்சனங்கள் சிலவற்றின் தொகுப்பு இன்று சென்னை தினமலர் நாளிதழில் சுருக்கமான வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இணையத்திலும் வாசிக்கலாம்.

வாசிக்கும் அவகாசம் இருப்போருக்கான இத்தொகுப்பின் நீள்-வடிவம் தனிப்பதிவாக வழங்கப்பட்டுள்ளது.
*

சென்ற வாரம் நேர்ந்த கலந்தாலோசிக்காத கொந்தல் பிரசுரத்திற்கு தினமலர் ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு மன்னிப்புத் தெரிவித்து உறுதியளித்துத் தொடர்ந்து எழுதச் சொன்னார்கள்.

பிரசுர இட நெருக்கடிக் கட்டாயத்தில் (இது எழுத்தூடகங்களில் அன்றாட பாடு) அனுப்பிய நீள்-வடிவத்தை முதல் நாளே என்னுடன் ஆலோசித்துச் சுருக்கி, உள்ளடக்கத்திற்குப் பங்கம் வராமல் இன்று பிரசுரம் செய்திருக்கிறார்கள்.

பாராட்டுகள். நன்றி.

அருண் நரசிம்மன்.

மார்கழி இசை விழா 2025-2026 – வாரம் 2

Standard

[இதன் சுருக்கமான வடிவம் தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது.]

நிஷா ராஜகோபால் முதல் நாள் மாலை நான்கு மணிக்கு பார்த்தசாரதி ஸ்வாமி சபா கச்சேரியிலும் மறுநாள் காலை ஆறு மணிக்கு வியெஸ்யெஸ் பௌண்டேஷனுடைய மைலாபூர் கச்சேரியிலும் உருப்படிகளோ ராகங்களோ ஒன்றுகூட மறு ஒலிபரப்பாகாமல் பிரமாதமாகப் பாடினார்.

மாலைக் கச்சேரியில் தீக்ஷதர், கோபாலகிருஷ்ண பாரதி, மைசூர் வாசுதேவாச்சார், பொன்னையா பிள்ளை (நீலாம்பரி ராகத்தில் தெலுங்குக் கிருதி), பாபநாசம் சிவன், தியாகையர் என்று பல்வகை இசைக் கர்த்தாக்களின் (பல்வேறு ராகக்) கிருதிகளைக் கையாண்டு, அபங் வகையில் பிம்ப்ளாஸ் ராகத்தில் பானுதாஸரின் மராத்திப் பாடலுக்குப் பின்னர் துளசிதாசரின் ஹனுமான் சாலிஸாவில் முடித்துக்கொண்டார்.
Continue reading

2025-2026 Margazhi Music Season – Sumitra Vasudev at NI

Standard

Sumitra Vasudev gave a concert at Raga Sudha hall for Nada Inbam on 21st Dec, 2025 at 6:15 PM, accompanied on the violin by Padma Shankar and on the mridangam by Arun Prakash.

The famous vIribhOni varnam of Pachimiriam Adiappaiyer was rendered in single speed (one kalam) but she delivered the usually skipped third chittai swarams along with few more charanams.

A short sketch of the rAgA was followed by thulasidhalamulache SantOshamugha of tyAgarAjA. Of course, the elegant sangathi towards the end of the pallavi, the stamp of Vedavalli, was rendered with the same poise and melody. Neraval at the standard sarasiruga… line was well done embellished with tight brikkas throughout without making a show of the effort. Violin did a good suporting foil for both the neraval and the swarams that followed.
Continue reading

Enlightened in Eight-Annas

Standard

The English version of my first set of short stories, collected in the book titled Enlightened in Eight Annas, is now available in print form, published by Tamizhini. The Tamil version is already available for your reading pleasure.

As with my other Tamil books, this too would not be available in any of the book stores that you may frequent, be it in city space or cyber space. (Well, if the stars are aligned favourably for you, it could be ordered online from Udumalai Dot com.)

You could get a copy by contacting the publisher (Ph: +91-9344290920 | +91-8667255103 | Email: tamilinibooks AT gmail DOT com) or in Tamizhini stalls at the book fairs held throughout the year at various times in different districts of the state.

Else, send an email to me for getting your copy.

I welcome your thoughts and comments, after reading the book.

– Arunn Narasimhan
*
Continue reading

An apology

Standard

That they came home to place their request made me relent and I agreed to write three or four weekly essays for their Sunday edition.

Not to exceed 1000 words limit, I turned in my first essay of 980 words by Friday morning with an express rider to consult me for any editing, deletion and doubt before print. Had also shared few pictures.

Mum’s the word until the Sunday Dinamalar issue went to print.

Today morning after attending the 6 AM Ekantha Series by VSS foundation (Kudos VVS Murari!) chamber type concert at Mylapore Sundaresan Street, I checked. Both the internet version (without my name, thankfully) and the print version of the newspaper (with my name, unfortunately) had appeared carrying my essay.

Good lord!
Continue reading

தினமலர் கொத்து பரோட்டா வடிவத்திற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்

Standard

வீடு வரை வந்து விண்ணப்பித்தனரே என்று நிறைய தயக்கங்ககுளுக்குப் பிறகு எழுதிக்கொடுக்கச் சம்மதித்து நாள்தோறும் செய்யாமல் தொகுப்பாய் அளிக்கிறேன் என்று சொல்லி மூன்று நான்கு அரைப்பக்கக் கட்டுரைகளுக்குச் சம்மதித்திருந்தேன்.

ஆயிரம் சொற்களுக்கு மிகாமல் என்பதால் 980 சொற்களில் வெள்ளி காலையே அனுப்பிவிட்டுத் திருத்தங்களோ விளக்கங்களோ சுருக்கங்களோ தேவையென்றால் என்னிடம் கேளுங்கள் என்று சொல்லியிருந்தேன். மதிபேசியில் எடுத்திருந்த படங்களையும் (9) அனுப்பியிருந்தேன்.

ஞாயிறு இதழ் வெளிவரும்வரையிலும் வந்த பின்னரும் எவரும் தொடர்பு கொள்ளவில்லை.

இன்று காலை ஆறு மணி கச்சேரி கேட்டு முடித்து வந்ததும் இணையத்திலும் அச்சுப் பதிவிலும் கவனித்தேன். வந்துவிட்டிருக்கிறது கட்டுரை.

ஐயகோ.
Continue reading

மார்கழி இசை விழா 2025-2026 – முதல் வாரம்

Standard

[ இந்தக் கட்டுரையை எழுதிக்கொடுத்த என்னுடைய பெயரின்றி (நல்ல வேளையாக?) தினமலர் கொத்துபரோட்டா வடிவத்திலும் வாசிக்க நேரலாம்.

மன்னித்துக்கொள்ளுங்கள். ]
*

நாத இன்பத்தில் முனைவர் நந்திதா ரவி ரூபக தாளத்தில் வழங்கிய சாரங்கா ராக வர்ணத்தில் நமது மார்கழி இசை விழாவின் ரசிகானுபவம் தொடங்கியது. வேறு கச்சேரிகளில் பழகிய கல்யாணி (வனஜாக்ஷி) பைரவி (விரிபோணி) ராக வர்ணங்கள் கேட்டாலும் பார்த்தசாரதி ஸ்வாமி சபா பிற்பகல் கச்சேரியில் விவேக் மூழிக்குலம் வழங்கிய வீணை குப்பய்யரின் பெஹாக் ராக வர்ணம் இன்னொரு அரிதான தேர்வு.

வர்ணம் தவிர்த்து மாலா சந்திரசேகர் குழலிசையில் ‘ஶ்ரீமன்நாராயண’ என்று பௌளி ராகத்திலும், பந்துலராமா ‘யோசனா கமலலோசனா’ என்று தர்பார் ராகக் கிருதியிலும், திருமெஞ்ஞானம் ராமநாதன் (உடன் பாண்டமங்கலம் யுவராஜ்) நாகஸ்வரத்தில் கௌளையில் தீக்ஷதரின் ‘ஶ்ரீ மஹா கணபதி ரவதுமா’ என்றும் ஆதித்யநாராயணன் கௌளிபந்துவில் தியாகையரின் ‘தரதியகராதா’ என்றும் தங்கள் கச்சேரிகளைத் தொடங்கிக் கொண்டனர்.
Continue reading

எட்டணாவில் உலக ஞானம் – சேஷசாயி கருத்துகள்

Standard

ettanavil ulagta gnanam frontபோனமுறை, இல்புறம் முடிக்க 108 நாட்கள் எடுத்தும், என் வாழ்த்துக்களைச் சொல்ல மறந்த பாவத்திற்குப் பிராயச்சித்தமாய் சிறுகதை புத்தகத்தை ஒரே நாளில் படித்துமுடித்து, மீண்டு,  களைப்பாறி, இப்போது என் பிரமிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிக்கைகளின் 1100 வார்த்தைத் தலையணையில் திணிக்கும் கட்டாயம் இல்லாமல் சுதந்திரமாய், சாவகாசமாய் கதையைச் சொல்லியிருப்பது, உன்னுடைய எழுதும் பாணிக்கு வசதியாக இருக்கிறது. (எங்கள் தலைமுறைதான் முற்றத்தில் பாட்டியின் விசாலமான கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள் என்று நினைத்தேன்!)

உனக்கென்ற தனி பாணி நிச்சயமாய் ஏற்படுத்திக் கொண்டுவிட்டாய், (சுஜாதாவின் வாசனை முத்தம்மாவின் வாசனையைப்போல் பரவலாக வியாபித்திருந்த போதிலும்…) ‘வெந்த உருளைக்கிழங்கு’ ஶ்ரீரங்கத்துக் கதைகளில் படித்தால், இடைச் செருகல் என்ற உணர்வு, சுஜாதாவிற்குக்கூடத் தோன்ற வாய்ப்பில்லை.

ஒரு காட்சியின் முப்பரிமாணங்களையும் ஒரேவரியில் கொண்டுவரக்கூடிய அபாரத் திறமை, உப நதிகளும், கிளை நதிகளும் சேர்ந்து, பிரிந்து ஓடும் பெருநதியைப் போல், சிறுகதையைக்கூட நடாத்திச் செல்லும் சாகசம், சிந்திக்க வைக்கும் சிறப்பான கருத்துகள், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், தவறாமல் கஜுராஹோவிற்கு இடம் (சில சமயம் குத்தகை), ஆங்காங்கே வெளிப்படும், பரந்த அறிவின் ஒளிக்கீற்றுகள், இழையோடும் ஹாஸ்ய ஏளனம் – இவை எல்லாம் உன் தனித்துவமான பாணியின் அம்சங்கள்.

அழகான, நேர்த்தியான தமிழ். பட்டப்பா கல்யாணத் தளிகையில், பாயா கரி வாசனை போல் திடுக்கிட வைக்கும் சில சொற்றடர்கள். (மல்டிக்யுஸீன் அனுபவஸ்த்தர்களுக்கு நிச்சயமாக ரசிக்கும்.)

இந்த தொகுப்பின் சிறப்பு வெரெய்ட்டி. குறுநாவல், நாடகம், ப்ரெஞ்ச் மொழியிலிருந்து தமிழாக்கப்பட்ட சிறுகதை (தரிசனம் அப்படித்தான் தோன்றுகிறது- மசாலா பீட்ஸா மாதிரி),கொஞ்சம் தத்துவம், பேய்க்கதை- எல்லாமே தனிச்சுவை. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் படித்திருந்தால், சில பகுதிகளை இன்னும் ரசித்திருப்பேன். ரகசியமாக.

இலக்கிய அரங்கத்தில், மேடையில், உனக்கு நாற்காலி போடப்படுகிறது.
*

எட்டணாவில் உலக ஞானம் – வாசகி மங்கை கருத்துகளும் பதில்களும்

Standard

ettanavil ulagta gnanam frontஎட்டணாவில் உலக ஞானம்‘ என்கிற சிறுகதைகள் புத்தகத்தை வாசித்ததில் எழுந்த சில கருத்துகள்.

பிட்ரேயல் லெட் டௌன் சரியான தமிழ்ச்சொல் தெரியவில்லை. கைவிடப்படல்/கைவிடப்பட்ட நிலை என்று வைத்துக் கொள்வோம். அது செயலாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. ஒரு பார்வையில், உடல்மொழியில், சொல்லில்,  ஒரு பிரச்சனையை நேர்மையற்று எதிர்கொள்வதில் இருக்கும் சிறுமையில் வெளிப்படலாம். அதை செய்வது நாம் மிகவும் நம்பும், நம் ஆதர்சமாக நினைக்கும், வாழ்வில் இணைந்து வரும் ஒருவர் என்றால் அப்போது தொண்டையில் எஞ்சுமே ஒரு கசப்பு அதைத் துப்பிவிட்டு அப்படி எதுவும் நடவாதது போல் மேலே செல்வது எளிதல்ல.

வெகு இயல்பான அன்றாடங்களோடு எந்த ஒரு அபத்திரமான சூழலும் ஏற்பட வாய்ப்பில்லாத வாழ்க்கை. அதை வாழும் இயல்பான கதாபாத்திரங்கள். ஆனால் கைவிடப்படலின் கசப்பை விலகலை கேசவம்,  ஹம்சா, ராமா நீ சமான மெவரு கதை சொல்லி என்று அனைவரும் வேறு வேறு விதமாக எதிர்கொள்கிறார்கள். எதிர்கொள்ளும் நேரம் நிலைகுலைந்து பின் சில நியாயங்களைத் தர்க்கங்களைத் தங்களுக்குள்ளாகவே பேசி கடந்து செல்ல முயல்கிறார்கள். ஆனால் கசப்பின் வண்டல் முற்றிலும் போய்விடுமா என்பது உறுதியில்லை. நிஜ வாழ்க்கையில் அப்படி ஒரு  கசப்பு ஏற்படும் எனில், அது அளிப்பது நெருங்கியவர்கள் என்று நினைப்பவர்களிடமிருந்து கூட ஒரு விலகலை. அப்படியான அனுபவத்துக்குப் பின், சந்திக்கும் ஒவ்வொருவரையும் கவனமாக எடை போட தொடங்கி விடுவோம். அது பெருஞ்சுமை. அதன் பின்னர் அனைத்து உறவுகளும் ட்ரான்சாக்ஷனலாகப் போகும். ஆனால் சக மனிதர்களின் சிறுமைகளை கடந்து செல்ல முடிந்தவர்கள் உண்மையாகவே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.

Continue reading

எட்டணாவில் உலக ஞானம் – சிறுகதைகள்

Standard

ettanavil ulagta gnanam front‘எட்டணாவில் உலக ஞானம்’ என்கிற தலைப்பில் என்னுடைய சிறுகதைகள் சிலவற்றைப் புத்தகமாக தமிழினி வெளியிட்டுள்ளது. விலை 200 ரூபாய். தமிழினியிடம் தொடர்பு கொண்டால் பெறலாம். அல்லது உங்கள் ஊரில் புத்தக விழா நடக்கையில் – தற்சமயம் சென்னையில் நடந்துவருகிறது – அங்கு தமிழினி விரிக்கும் கடையில் (கடை எண்: 212) கிடைக்கும். புத்தகக் கடைகளிலோ நூல்நிலையங்களிலோ தென்படாது.

*

சென்னை அண்ணா நூல் நிலைய அரங்கில் சனவரி 9ஆம் தேதி மாலை 6 மணி அளவில் தமிழினி நூல் வெளியீட்டு நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளது. அதில் இப்புத்தகத்தையும் சேர்த்து மேலு சில சென்னை எழுத்தாள நண்பர்களின் புக்ககங்களும் வெளியிடப்படுகின்றன. ஆர்வமும் அவகாசமும் அமையும் சென்னை வாசகர்களை நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன்.

*
இப்புத்தகம் சார்ந்த சில தகவல்கள் பின்வருமாறு.
Continue reading

யார் நல்ல இலக்கிய வாசகர்?

Standard

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்துவரும் சென்னை இலக்கியத் திருவிழா 2024 இல் நேற்று (28/02/2024) பேசுவதற்கு அழைத்திருந்தார்கள். அதற்காகத் தயார் செய்த உரையை கீழே அளித்துள்ளேன். அவகாசம் கருதிக் கூட்டத்தில் ஓரளவே பேச முடிந்தது. பின்னர் கேள்வி பதில் நேரம் நன்றாகப் போனதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் திரளாகப் பங்கெடுத்துக்கொண்ட நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பும் செயல்பாடும் பிரமாதம். இன்முகத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்பட்டிருந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அனைத்துப் பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்.
*

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் அருண் நரசிம்மன். அருண்-தான் என் பெயர். நரசிம்மன் என் தந்தையார். குடவாசலில் பிறந்தேன். ஶ்ரீரங்கத்தில் வளர்ந்தேன். அமெரிக்காவில் படித்தேன் முனைவர் பட்டம் பெற்றேன். இன்று சென்னை மாநகரவாசி. பொறியியலில் முனைவர் பட்டதாரி. கடந்த இருபது ஆண்டுகளாக இதோ இங்கிருக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ஐஐடியில் இயந்திரவியல் துறையில் மெக்கானிக்கல் பேராசிரியனாக வேலை. அதனால் ஓரளவு வசதியுடன் வாழமுடிந்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் என என்னைக் கருதலாம். வேலையில் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசுகிறேன். பேசவேண்டும். தமிழில் இல்லை. இந்தியில் பேசுவதில்லை.

நானும் ஒரு புனைவெழுத்தாளன் என்பதற்கு அத்தாட்சியாகத் தமிழில் இதுவரை மூன்று நாவல்கள் வெளிவந்துள்ளன. சில அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளேன். தமிழினி வெளியிட்டுள்ளனர்.

கேள்வி: இந்த நாவல்களை வாசிக்கத் தேர்வு செய்கையில் அறிமுகத்திற்காக முன்னர் குறிப்பிட்ட என்னைப் பற்றிய சில தகவல்கள் உங்களுக்குப் பயன்படுமா? பயன்படுமா என்பதைவிட அவசியப்படுமா?
Continue reading

இல்புறம் — நாவல்

Standard

ilpuram novel frontஇல்புறம் என்னுடைய மூன்றாவது தமிழ் நாவல்.

தமிழினி வெளியிட்டுள்ளது. விலை 690 ரூபாய். நடந்துவரும் சென்னை புத்தக விழாவில் தமிழினி கடையில் கிடைக்கும். பிறகும் தமிழினியிடம் தொடர்பு கொண்டால் பெறலாம். அல்லது உங்கள் ஊரில் புத்தக விழா நடக்கையில் அங்கு தமிழினி விரிக்கும் கடையில் கிடைக்கும். புத்தகக் கடைகளிலோ நூல்நிலையங்களிலோ தென்படாது.

இல்புறம் நான் உருவாக்கிய சொல். இல்லறம் என்பதற்கு எதிர்ப்பதம் இல்லை. புறத்தே ஒரு இல் என்று சுருக்கிவிடவும் வேண்டாம். மனது ஒவ்விச் செய்ய விரும்புவது அறம். மனங்கள் ஒவ்விப் பழகுவது இல்லறம். ஒவ்வா மனங்கள் நாடுவது இல்புறம். இவ்வாறுதான் நாவலின் பின்னட்டையில் விளக்கமளித்துள்ளேன்.

கதை என்ன என்றால்… நூற்றாண்டுகளாக இலக்கிய மையப்பொருளாக இயங்கிவரும் ஆண்-பெண் உறவுச் சிக்கல் சார்ந்த புனைவிழையே. சமகாலச் சூழலில் தமிழ் பேசும் நகர்ப்புற மத்தியதரக் குடும்பங்களின் வாயிலாகப் பரிசீலிக்கப்பட்டுள்ளது. Continue reading

நிறமற்ற வானவில்

Standard

நிறமற்ற வானவில் என்கிற தலைப்பில் என்னுடைய அறிவியல் சார்ந்த சில கட்டுரைகளை தமிழினி நூலாக வெளியிட்டுள்ளது. விலை 200 ரூபாய்.

இது தமிழினி வெளியிடும் என்னுடைய நான்காவது அறிவியல் சார்ந்த நூல். முன்னர் பிரசுரமான மூன்று அறிவியல் நூல்களும் இந்த ஆண்டு மறுபதிப்பு கண்டிருக்கிறது. அனைத்தும் நடந்துவரும் 2024 சென்னை புத்தக விழாவில் தமிழினி கடையில் கிடைக்கும். பிறகும் தமிழினி-யிடம் தொடர்புகொண்டால் கிடைக்கும்.

நூலின் பின்னட்டை விளம்பர வரிகள்: பள்ளி கல்லூரிகளில் தேர்வு விழுக்காடு நல்ல வேலை என்று ஏதோ ஒரு முடிவை நோக்கி அவசரகதியில் பரிமாறிக்கொள்ளப்படும் அறிவியில் சார்ந்த விஷயங்களை பாடம் என்று தெரியாமல் சற்று நகைச்சுவையுடன் வரலாற்று விஸ்தாரத்தில் சாய்வு நாற்காலியில் இருந்து புரட்டினால் எப்படி இருக்கும் என்கிற உந்துதலின் வெளிப்பாடே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளின் நோக்கம்.
Continue reading

அமெரிக்க தேசி — வாசகர் கடிதம் — விக்னேஷ்வரன்

Standard

novel-tஅன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். என் பெயர் விக்னேஷ்வரன். சில ஆண்டுகளுக்கு முன்னால் நானும் என் மனைவி விஷ்ணுப்ரியாவும் UK-வில் வசித்துவந்த போது நாங்கள் இருவரும் சேர்ந்து வாசித்து மகிழ்ந்த ‘அமெரிக்க தேசி’யை அவள் வெகுவாய் ரசித்து தங்களுக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். லட்சியம், கனவு, கற்பனை, விருப்பம், தேடல் என்ற பல உந்துதல்களால் வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க வந்த நான், பல்வேறு சம்பவங்கள் மற்றும் அனுபவங்களின் வழியாக என் தேடலின் முடிவு நான் தொடங்கிய இடத்திலேயே உள்ளது என்று கண்டுகொண்ட நாட்களில் தான் நாங்கள் அமெரிக்க தேசியை வாசித்தோம். ஆகையால் தேசிகனின் வாழ்க்கையை மிகத் தெளிவாக என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

நான் இப்படி கனவுத்தேடலில் (பொறுப்புணர்ச்சியோடும் தான்) ஈடுபட்டுக்கொண்டிருந்த காலங்களில் என் பெற்றோர்களும் உற்றோர்களும் எங்கள் வருங்காலத்தைப் பற்றியும் என் நடவடிக்கைகளையும் எண்ணி எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள் என்று பின்னால் இப்போது தெளிவாகப் புரிந்தாலும் அப்போது அந்த அனுபவங்கள் எனக்குத் தேவை தான் என்றும் நம்புகிறேன். ஒருமுறை என் மனைவி என் அப்பாவிடம் அமெரிக்க தேசியைப் பரிந்துரைத்து புத்தகத்தை ஆர்டர் செய்து வரவழைத்தும் கொடுத்தாள். அப்பா நூலினை அவ்வப்போது ‘வாக்கிங்க்’ போகும்போது எடுத்துச் சென்று வாசித்தார் என்று எனக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் அது அவருக்குள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது டைரிக்குறிப்புகள் வழியாக அறிந்தேன். அதனைப் புகைப்படம் எடுத்து இத்துடன் இணைத்துள்ளதோடு அவரது எழுத்தினை சுலபமாகப் படிப்பதற்கு ஏதுவாக ஒரு வேர்டு டாக்குமெண்ட்டில் தட்டச்சு செய்து அதனையும் இணைத்துள்ளேன்.
Continue reading

மாநகர் (சு)வாசம்

Standard

மார்கழி தை முடிந்து இன்றும் குளிர்கிறதே காலையில் பத்து மணிக்கும் மாநகரில் பல இடங்களில் பனிப்புகை போலிருக்கிறதே. உலகில் பல மாநகரங்களில் மாசுக் காற்றினால் இன்றளவில் ஆண்டு முழுவதும் இவ்வாறான பனிப்புகைக்காலமே. முன்பனி பின்பனி என்றில்லை நடுபனி கெடுபனி. அனைத்துமே பகலில் வெளிர் மஞ்சள் நிறத்தில்.

மதிபேசிக்களில் ‘க்ளீன் யேர் இண்டக்ஸ்’ போன்ற ஆப்புக்களின் வழியே சுற்றுச்சூழலையும் அவற்றின் மாசுக்களையும் பொறுப்பான குடிமகனாக நாள்தோறும் கவனித்து காரேரி அலுவலகம் சென்றதும் ‘இந்த நாடு நேரே நாய்களிடம் சென்றுகொண்டிருக்கிறது’ என்று சக மதிபேசித் தலைமுறையினரிடம் கையாலாகாத அறச்சீற்ற முறையீட்டில் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடும் என்னைப்போன்ற மற்றுமொரு ‘வாட்ஸப் வாரியர்’ ஆக இருக்கும் உங்களுக்கும் இது தெரிந்ததே.

உலக நாடுகளின் சுவாசக் காற்றுத் தரத்தின் அளவீடு மணிநேர துல்லியத்தில் [https://waqi.info/] இணையதளத்தில் கிடைக்கிறது. கார்பன் சல்பர் நைட்ரஜன் இவற்றின் ஆக்சைடுகள் சுவாசிப்பதால் காலப்போக்கில் கேடு என்றால் சாலைப் போக்குவரத்தினால் காற்றில் உலவும் துகள் மாசுக்கள் நுரையீரலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்பவை.
Continue reading

நூலறிவு

Standard

மொழியின் அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்களை — உயிர் மெய் உயிர்மெய் என — வைத்துக்கொண்டு அம்மொழியின் சொற்களை உருவாக்கலாம். அதே பழைய அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்களால் திடீரென ஒருநாள் அன்றுவரை அம்மொழியில் இல்லாத புதிய சொற்களையுமே உருவாக்கலாம். உச்சரிப்பிற்குத் தேவை எனக் கருதி இன்னொரு நாள் சொல்லாகவே கண்டெடுத்த ஓசைத்துண்டைப் பிரித்து மேய்ந்து புதிய அடிப்படை ஒலிக்குறி ஒன்றை அதுவரையில் அம்மொழியில் இல்லை என்றாலும் கண்டுகொண்டு சேர்த்துக் கொள்ளல்லாம். மொழியின் அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்களையே விருத்தி செய்கிறோம் என்றாகலாம். அம்மொழி ஆதரவாளர்களின் எதிர்ப்பும் அதற்கான சமாளிப்புகளும் தனி.

மொழி வளர்ச்சியில் மேற்படி முறைமை ஒருவாறு இயங்குவதால் கூடுதலாக ஒன்றையும் சொல்லலாம்: முயன்றால் அடிப்படை எழுத்துக்களை வைத்துக்கொண்டு ஒரு மொழியின் அனைத்துச் சொற்களையும் — அம்மொழி அகராதியை — உருவாக்கிவிடலாம். ஆனால் எதிர்போக்கில் ஒரு மொழியின் சொற்களில் சிலவற்றை மட்டும் வைத்துக்கொண்டு அம்மொழியின் அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்கள் அனைத்தையும் கண்டுகொள்ள இயலாது. அதாவது சொல்லகராதி எனும் புத்தகத்தைத் தவிர்த்துவிட்டு ஒரு மொழியில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை வாசித்த பின்னரும் அம்மொழியின் அனைத்துச் சொற்களையும் தெரிந்துகொண்டுவிட இயலாது.

மேற்படி வியர்த்தமான முயற்சியே அறிவியலில் — குறிப்பாக இயற்பியலில் — இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
Continue reading

மெக்கானிக்கல் பொறியியல் துறையின் வருங்காலம்

Standard

அடுத்த பத்து வருடங்களில் நம் நாட்டில் ‘மெக்கானிக்கல் இஞ்சினியரிங்’ துறையின் வருங்காலத்தை அலசுவதற்கென ஒரு வருடம் முன்னால் அகில இந்திய தொழிற் கல்வி குழு (AICTE) இணையம் வழி கருத்தரங்கு ஒன்றை நடத்தினர். அக்கருத்தரங்கைத் தொடக்கிவைத்துச் சிற்றுரை வழங்கச் சொன்னார்கள்.

2021 AICTE FutureME Workshop at IISc கருத்தரங்கு சுட்டி: [https://mecheng.iisc.ac.in/mecheng75/workshop.html]

ஆங்கிலத்தில் சுமார் ஐந்து நிமிடங்கள் வரவேற்புரையைக் கானொளியாகச் செய்து அனுப்பியிருந்தேன். வரவேற்புரை வரவேற்பைப் பெற்றதாக அறிந்தேன். அக்கானொளியை கீழே கொடுத்துள்ளேன்.

தமிழில் சாரம் பின்வருமாறு. (வாசிக்க ஐந்து நிமிடத்திற்கு மேலாகலாம்)

அனைவருக்கும் வணக்கம். கருத்தரங்கின் மூன்று உட்பிரிவுகளில் விவாதங்களை வழிநடத்தும் நோக்கில் சுருக்கமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

கணினி நிரல்கள் எழுத முடிந்தவர்களுக்குக் கல்லூரிப் பட்டப்படிப்பு தேவையில்லை. இதுவே இன்றைய சிலிக்கன் பள்ளத்தாக்கின் வாதம். கணினி ஐடி துறையைப் பொறுத்தவரை சரியே — முன்னோடிகள் என்று அறியப்படும் அத்துறையின் தலைவர்கள் இவ்வகையினரே. கல்லூரிப் படிப்பை முடிக்காமல் கைவிட்டவர்கள். ஆனால் மிகக் கடுமையான உழைப்பாளிகள். இந்த விஷயம் கேலிப்பேச்சின் முனைப்பில் மறந்துவிடும். இது கேலிப்பேச்சல்லவே.

Continue reading

புத்தகம் பேசுது — நேர்காணல்

Standard

தமிழர்களுக்கு என் சிந்தனையும் எழுத்தும் இன்றளவிலும் பயனளிக்கும் என்று என்னைத் தவிர இன்னமும் மூன்று நான்கு பேர்கள் நம்பிவருகின்றனர். அவர்களில் ஒரு விடாப்பிடி அன்பர் பாரதி பதிப்பாலயம் நடத்திவரும் பாரதி டிவி-யில் எனது நேர்காணல் வரவேண்டும் என விரும்பினார். அந்நேர்காணலின் எழுத்து வடிவம் ஜூலை 2021 மாதம் புத்தகம் பேசுது இதழில் வெளிவந்துள்ளது — இணைய இதழின் சுட்டி.

நேர்காணலின் சாரத்தைத் தொகுத்து கீழேயும் அளிக்கிறேன். அனைத்து கேள்விகளும் உலகே உன் உருவம் என்ன எனும் என் கட்டுரைத் தொகுப்பு நூலை முன்வைத்து கேட்கப்பட்டுள்ளது.

Continue reading