அச்சுவை பெறினும்… நாவல்

Standard

arunn-achuvai-perinum-frontஅச்சுவை பெறினும்… என் இரண்டாவது நாவல். தமிழினி வெளியீடு.

ஜூன் 1 முதல் நடக்கவிருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் தமிழினி நிலையத்தில் கிடைக்கும்.

பிறகும், வழக்கம்போல, வாசிக்க மனமிருப்போருக்கு உலகின் மூலை முடுக்கிலெல்லாமும் கிடைக்கும். புத்தக வடிவில் வாசிப்பதற்கு ஓர் விலையை அளிக்கவேண்டியிருப்பதைத் தவிர்க்க இயலாது.

[தொடர்பு: தொ.பேசி எண் 9344290920]

*

தத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால்? இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா?

இதுதான் புத்தகப் பின் அட்டைக்கு எழுதிக் கொடுத்துள்ள சாரம்.

மேலும்… என்றால், இது காதல் கதை. காதலைப் பற்றிய கதை. காதலிப்பதும் காதலில் இருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. காதலில் இருப்பதும் காதலித்து இருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. காதலித்து இருப்பதும் காதலித்திருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. மண்ணில் இந்தக் காதல் இன்றி யாருக்கோ வாழ்தல் கூடலாம், அதில் யாருக்கே காதல் கணங்கள் கூடும்?

*

நாவலின் தலைப்பு, பாசுரத்தில் சுட்டது. அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே. உள்ளடக்கம் வாழ்க்கையில் சுட்டது.

*

இது நான் எழுதிய நான்காவது நாவல். புத்தக வடிவில் இரண்டாவதாய்ப் பிரசுரமாகிறது. அமெரிக்க தேசி எழுதிய பிறகு மேலும் இரண்டு நாவல்கள் சென்ற வருடம் எழுதினேன். சில வரைவுகளுக்குப் பின்னரும், இரண்டுமே எனக்குத் திருப்திகரமான வடிவில் இன்னமும் வளரவில்லை. இடையில், வெளிவரப்போகும் இந்த நாவல் தன்னால் தொடங்கி எழுதிக்கொண்டு போனது. முடிந்தும் விட்டது.

வாசகர்கள் வாசிப்பனுபவத்தை (வாசித்தபின்) வழங்கினால் மகிழ்வேன்.

*

முன் அட்டை ஓவியம் அடியேன் வரைந்ததே. பின் அட்டை ஓவியம், இல்லாள் + இவன் கூட்டு முயற்சி.

arunn_acchuvai perinum_novel