நேனோ ஓர் அறிமுகம் கட்டுரை வரிசையில் சென்ற வாரம் வெளியான தங்கத்தின் நிறம் நீலம் கட்டுரையை வாசித்துக்கொள்ளுங்கள்.
இப்போது, “நேனோ வரலாறு” கட்டுரையின் பிற்பகுதியில் ஏற்கெனவே குறிப்பிட்ட ரோமானியர்கள் நான்காம் நூற்றாண்டில் வடிவமைத்த லைஸர்கஸ் கோப்பையை (Lycurgus Cup) எண்ணிப்பாருங்கள். அதில் நிகழ்ந்தது மேலே விளக்கியுள்ள தங்க நிறமாற்ற விளைவுதான். வெளியிலிருந்து பார்க்கையில் ஒரு நிறத்திலும், உள்ளே விளக்கேற்றி ஒளிரூட்டினால் வேறு நிறத்திலும் தெரிந்தது பரப்பினில் இருந்த நேனோ தங்கத்தினால்.
செயல்வடிவமாய் கோப்பையை ரோமானியர்களால் அன்றே வடிவமைக்க முடிந்துள்ளது. ஆனால், நேனோ-அறிவியல் விளைவுகளை அறிந்து செய்திருக்கவில்லை. உதாரணமாக, சார்பியல் கோட்பாடு 1905இல் ஐன்ஸ்டைனால் முதன்முறையாக முன்வைக்கப்பட்டது. குவாண்டம் இயற்பியல் அதன்பிறகுதான், 1981இல் அதிநுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டபிறகே, நேனோ-அளவுகளில் தங்க அணுக்களின் கூட்டணியை அருகில் பார்ப்பதற்கு முடிந்தது. ஏன் தங்கத்தின் நிறம் நேனோ-அளவுகளில் மாறுகிறது என்பதை விளக்குவதற்கு மேற்படி அறிவியல் புரிதல்கள் இன்றியமையாதவை.
இதேபோலத்தான் கண்-மையில் நேனோ-கரி-குழாய்கள் தென்படுவதும். கரி-குழாய்கள் நேனோ-மீட்டர்களில் உருவாக்கமுடிந்த மற்றொரு நேனோ-அறிவியல் விந்தைப் பொருள். தனிக் கட்டுரையில் அறிமுகப்படுத்துவோம். ஆனால், இக் கரி-குழாய்கள் கண் மையில் இருப்பதை சமீபத்தில் கண்டறிந்தனர். இதனால், பழங்காலத்தில் மை தயாரிப்பதே நேனோ கரி-குழாய்கள் செய்வதற்குதான் என்றோ, நேனோ கரி-குழாய்களை மை தயாரிப்பவர்கள் அறிந்திருந்தனர் என்றோ ஏற்றுக்கொள்ள இயலாது. மரபான வழியில் தரமான மை செய்வதெப்படி என்பதையே நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர். அதில் நேனோ அளவுகளில் பொருட்கள் இருந்ததை இன்றுதான் அதிநுண்ணோக்கி வழியே கண்டறிந்துள்ளோம். அறிவியல் அறிதலுடன் இன்று நேனோ கரி-குழாய்களை மை தயாரிப்பு இல்லாமல், தனிச் செயல்முறையில் கட்டமைக்கமுடியும்.
மீண்டும் வலியுறுத்துகிறேன். இன்றைய அறிவியல் புரிதலைக் கடந்த, ‘மேம்பட்ட அறிதல்’ பழங்காலத்தில் நம் முன்னோர்களிடையே இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. கலை, தொழில் தேர்ச்சிகள் இவ்வாறு செய்வதால் அறிவியல்-சரியாக இவ்வாறு நிகழும் என்பதற்கொப்பான ‘செயல்-விளைவு’ (cause and effect) வகையில் தருக்க சிந்தனைகளுடன் விளைந்தவை இல்லை. பலமுறை திருத்திச் செய்துபார்த்து வேண்டியவகையில் அமைவதையே மரபானதொரு தொழில்நுட்பமாய், கலையாய் வளர்த்தெடுத்துள்ளோம்.
இதில் இழுக்கொன்றுமில்லை. உதாரணமாக, கட்டடக்கலையின் அறிவியலை அறிந்திராது வடிக்கப்பட்ட இணையற்ற கோயில்கள் நாம் பெருமைகொள்ளவேண்டிய பாரம்பரிய அபாரங்களே. மிகையுணர்வுடன் அவற்றை அணுகி, இன்றைய அறிதல்களை அவைமீது ஏற்றிச்சொல்வது தகாது.
இணையத்தில் எழுத்தாளர்களில் தொடங்கி பலரும் தங்கள் வலைப்பூக்கள் தரும் பரிசீலனையற்ற சுதந்திரத்தில் இவ்வகையில் உணர்ச்சிக்குவியலாய் எழுதிக்குவிப்பர். இவையெல்லாம் அறிவியல் இல்லை. ஆய்ந்தறியும் நிலையை இழந்த, சந்தை அறிவியலைக் கடந்த மந்தை அறிவியல்.