தலைப்பு: அச்சுவை பெறினும் வேண்டேன் அ(ரங்கமாநக)ரு(ளா)ணே
அன்பின் அருண்,
இதை எழுதத் துவங்கும் இன்று – ஜனவரி 24ந்தேதி – எனக்கு 35 வயது பூர்த்தியாகிறது. இந்த சுயபுராணத்தை முதல் வரியிலேயே பிரகடனப்படுத்தக் காரணம் உங்கள் அச்சுவை பெறினும் புதினத்தை 25 வயதில் கூட இவ்வளவு சுவாரசியமாகப் படித்திருப்பேனா என்று தெரியவில்லை. நாவலைப்பற்றிய எனது கவனிப்புகள்/குறிப்புகள் எதுவாயினும் சிலவற்றைக் குறிப்பிட்டிருக்கிறேன்.
* ஆரம்ப வசனத்தைச் சொல்லிவிட்டு (‘ஒவ்வொரு குடும்பத்தின் துக்கமும் தனித்துவமானவை’) இதுவுமே இங்கேயே முன்னரே இருக்கே (‘வீட்டுக்கு வீடு வாசப்படி’) என்று யோசிக்கத் துவங்கும்போதே என்னால் ரங்காவை அருணாகத்தான் பார்க்கமுடிந்தது. ஒவ்வொரு உரையாடல் நடக்கும்போதும் அருண் என்னவிதமான முகபாவங்களை கைகொண்டிருப்பாரு – உதாரணமாக ரங்கா மீதுள்ள கடுப்பில் ரேஷ்மா உடன்பணிபுரிபவனிடம் முத்தம் பெற்றதைச் சொல்லும்போது ரங்கா அட்டகாசமாகச் சிரிக்கும் இடம் – அதுவும் காரணம் தெரிந்து அவள் அழும்போது அவனிடம் வெளிப்படும் உணர்வு – ஆணவம்னு கூடச் சொல்லலாம் – ‘நான் எவ்வளவு நேர்மையானவன் தெரியுமா?’என்று உணர்த்துமிடம் – இந்த தருணத்திலெல்லாம் (ரங்கா) அருண் எப்படி முகத்தை, வாயை வெச்சுண்டிருப்பா(ன்)ர்னு கற்பனை பண்ணாமே படிக்கவே முடியலை.
* உண்மையில் ரேஷ்மா உங்களின் கற்பனைப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் – அல்லது நன்றாகவே செப்பனிடப்பட்ட ஒரு கதாபாத்திரம் – இதைச்சொல்வதற்குக் காரணம் – ரேஷ்மா போன்று சடுதியில் முடிவெடுக்கிற, ‘வெடுக்வெடுக்’னு பேசற பெண்ணை, திருமணத்திற்குப் பிறகும் இவ்வளவு நடைமுறை புத்திசாலித்தனம் நிறைந்த, பிள்ளை பெற்றபின்னும் அந்த ‘டேஸ்ட்’ மிச்சமுள்ள (நீலக்கலர் புடவை+ரவிக்கை, அந்த தினப்படி ரொட்டீன்லயும் ‘மெனிக்யூரிங்’), அந்த நக்கலையும், நமட்டுச்சிரிப்பையும் விட்டுவிடாத, காரோட்டத் தெரிந்த (அதுவும் 120கிமீ வேகம்!) – இவையனைத்து குணாதிசயங்களை ஒருங்கே அமைந்த 35+ பெண் – ‘நோ சான்ஸ்’. அப்படி இருந்து அவளை நீங்க டாவடிச்சு காதலிச்சிருந்தீங்கன்னா… நீங்க ரொம்ப ரொம்ப லக்கி!
* ரேஷ்மா ‘நான்-பிராமின்’னு காட்ட நீங்க ரொம்ப மெனக்கெட்ட மாதிரி ஒரு ஃபீலிங் – ரேஷ்மாவின் அம்மாவுடனான சம்பாஷணைகள், ஸ்ரீரங்கத்தில் ரங்கா வந்து இறங்கிய இரவு முறுக்கு மாமி வீட்டில் அவளுக்கு அம்மாவிடன் வரும் அழைப்பில் அவள் பேசும் விதம், அவள் அப்பா ரங்காவிடம் முற்பட்ட பிற்பட்ட சாதிகள் பற்றிப் பேசுதல்… இவையனத்தும் ‘எங்கே வாசகன் இந்த விஷயத்தை கவனிக்காம விட்டுவானோ’ங்கற சந்தேகத்தில் எழுதப்பட்டவை போல துருத்திக் கொண்டு நிற்கும் உணர்வு.
* ரங்காவின் கறார்த்தனம் – இது அவனுக்கும் உரைத்தே இருக்கிறது; அவனே உணர்கிறான். அந்த ‘ரீயூனியன்’ பற்றி அவன் நினைத்துக்கொள்ளும்போது தனது இரக்கமற்ற சுபாவத்தில் தனக்கு அதிகம் பேரிடம் நெருக்கமில்லாமல் போனதைப்பறி நினைத்துக் கொள்கிறான். ஆனால் ஆச்சரியமாக அவனது இந்த கறார்தனத்தின் பின்னிருக்கும் நினைவாற்றலால் அவனது ரசனை மிக் நுண்ணியதாக, பரந்துபட்டதாக இருக்கிறது – நித்யகல்யாணப்பூவை ரசிப்பதிலும் சரி, பாலியல் சங்கதிகளிலும் சரி – ‘ரசிகன்யா’ என்று ரசித்துச் சொல்லவைக்கிறது. அவன் வேதவல்லியின் பின்னழகை வர்ணிப்பதான இரு இடங்களிலும் ‘போடு! கொன்னுட்டான்டா’ என்று கிளர்ச்சியூட்டுகிறது.
ரங்கா ரேஷ்மாவிடம் உடலுறவு வேண்டாம் என்று முடிவெடுக்கும் காரணங்கள் … என் மரமண்டைக்கு எட்டியவரை சொல்கிறேன். அவன் அபிநந்தனக்குடிலுக்குப் போவதற்கு முன்னதான கார் சவாரியில் ரேஷ்மா தான் சொன்னதை உடனே மாற்றிச்சொல்லும் தருணம் – “நான் உங்க வீட்டிற்கு வந்துடட்டுமா” என்று கேட்டுவிட்டு உடனே ‘நான் உங்க வீட்டிற்கு வந்து தூங்கட்டுமா’ என்று மாற்றிகேட்கும்போது அவன் உணர்ந்து கொண்டது – “She’s in a very critical dilemma”. ஆரம்பம் முதலே அடுத்தவர்களுக்குப் பிடிக்காததை (வேளையும் சூழலும் எவ்வளவுதான் இசைந்து வந்தாலும்) ரங்கா செய்யாதவனாகவே காட்டப்படுகிறான். எனவே அவன் அவளிடமிருந்து விலகிவிடுகிறான். மேலும் அந்த ‘அபிநந்தனக்குடில்’ குறித்தான இரண்டு பத்திகள் அபியைப்பற்றியே என்று ஊகிக்கிறேன். இதெல்லாம்தான் அவன் அவளிடம் உடலாலொ ஒரளவுக்கு மேல் விலகியே இருக்கக் காரணங்கள் (அப்படித்தானே)
ரேஷ்மாவைப் போலவே ரங்காவின் அண்ணியும் – அவ்வளவு இயல்பான, புத்திசாலித்தனமான, துடுக்கான, ‘ரியல் லைஃப்’ மன்னி, Sorry! Quite impossible (இதைப் படிப்பவர்கள் என்னை MCP என்று அழைத்தாலும் இதை மாற்றிக்கொள்வதாயில்லை)
அவன் அம்மாவைப் பற்றிய ரங்காவின் விமர்சனப் பார்வை – முறுக்குமாமியை விட்டு வேவு பார்ப்பது, 4 லட்சத்திற்கு கிறுக்குத்தன்மாக விற்ற வீட்டை எந்த வித முரண்பாடுகளும் உரைக்காமல் 88 லட்சத்திற்கு வாங்கச்சொல்வது, தராசு எதிர்ப்பக்கம் சாயும்போது அழுது ஆகாத்தியம் பண்ணி நினைத்ததை சாதித்துக்கொள்வது, கூட்டுக்குடும்பத்தில் தன் அம்மாவை இன்னொரு பெண்ணின் மாமியாராகப் பார்ப்பதன் “realisation”, பச்சாதாபம் தேடியே சாதித்துக் கொள்ளும் பெண்குணம்.
* ரங்காவின் அண்ணன் குணமும் பொறாமைப்படக்கூடிய ஒன்றாகவே உள்ளது – தம்பியின் காதலை கவனமாய் வெளிப்படுத்தும் அவரது சாமர்த்தியம் (முக்கிய தபால்நிலையம் தவிர்த்து, இருட்டுத் தபால்நிலையத்திலிருந்து ரேஷ்மா பேர் போட்டு, ஹாஸ்டல் முகவரியிடப்பட்ட கவரில் வைத்து அனுப்புதல்), காதலியை பெற்றோர் சம்மததுடனேயே கைப்பிடிப்பது, தகராறு பண்ணும் அறிவியலை பத்தாவதுடன் மூட்டைகட்டிவைத்துவிட்டு காமர்ஸ் எடுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டமில்லாமல் அசால்ட்டாய் வேலை வாங்குவது, ரங்கா மாய்ந்து மாய்ந்து பெற்ற வெற்றிகளை Just like that இடதுகை ஆட்டத்தாலேயே ஜெயித்துவிடுவது மாதிரியான வாழ்க்கை.
* ரங்காவின் ரசனை வெளிப்படும் பல இடங்கள் ரொம்பவே சுவாரசியம் – முக்கியமாக பெண்களைப் பற்றிய அவனது வர்ணனைகள் (நானும் ஒரு ஆம்பளைதானே! இதெல்லாம் எப்படி தவறவிடுவது!). ரேஷ்மாவின் ரசனையும் அவ்வாறே – ஆனால் அவளே சொல்கிற மாதிரி அவள் அதை வெளிப்படுத்துவதில் ரொம்பவும் மெனக்கெடுவதில்லை (‘எனக்கு உன் அளவுக்கு வெளிப்படுத்தத் தெரியாது; எனக்கு Megabyte விட உன்னைத்தான் ரொம்பப் பிடிக்கும்’).
* அபி பற்றி யோசிக்கும்போது ‘மௌனராகம்’ மோகன் தான் நினைவுக்கு வருகிறார்.
* சொல்ல மறந்துட்டேன் – ரேஷ்மாவின் கதாபாத்திரம் பல இடங்களில் ஜெயஸ்ரீ கோவிந்தராஜனை நினைவிலிருத்தியது.
* நிகழ் என்கிற பதத்தில், அதன் பொருள் விஸ்தீரனங்களில், அதன் அசாதாரணமான பொறுமை, அநிச்சயங்களற்ற அதன் நிச்சயத்தன்மை, மகத்தான விஷயங்கள் (என்று நாம் நம்பக்கூடியவைகளை) கருணையற்று பின்னுக்கு தள்ளிவிடும் வசீகரத்தில் உங்களுக்கு ரொம்பவும் லயிப்பு உள்ளதாகவே நினைக்கிறேன்.
எழுத நினைத்தவற்றை ஓரளவு எழுதிட்டேன்னு நம்பறேன். உங்களுக்கு மிக்க நன்றி – பல விதங்களில் கல்லூரிக்காலங்களை நினைவிலிறுத்தியதற்கு. இன்னும் பகிர்ந்து கொள்ள நிறையவே உள்ளது. அவற்றில் சில விஷயங்கள் “strictly gents only” சமாச்சாரங்கள். நேரம் வாய்க்கும்போது பேசுவோம். [… இங்கு personal பாராட்டு/விசாரிப்பு வரி ஒன்று மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது…]
நல்லிரவு + நன்றிகளுடன்
வெங்கட்ரமணன்
இரவு 12:15 – 24.01.2017