நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 9 – இயற்கையில் நேனோ: சிலந்திப் பட்டின் மகிமை

Standard

சிலந்தி வலையை கவனித்திருக்கிறீர்களா? வீட்டில் ஒட்டடையைச் சொல்லவில்லை. காட்டில், மரங்களிடையே, அல்லது கிளைகளிடையே மரச்சிலந்தி நெய்திருக்கும் வலையை.

பொதுவில் இவ்வலையில் சிலந்தி தலைகீழாய், கிட்டத்தட்ட வலையின் நடுப்பகுதியில் இருக்கும். ஓவியர்களுக்கு ‘போஸ்’ கொடுப்பதற்காக இல்லை. மேலிருந்து கீழ்பக்கமாய் வலையில் வழுக்கிவந்து பூச்சியைக் கவ்வுவது சிலந்திக்கு எளிதாம், வாகாய்த் தன்னை தலைகீழாய்ப் பொருத்திகொண்டுள்ளது. வலையை கவனித்தால் நடுவிலிருந்து கீழ்பாதி வட்டப்பரப்பில் வலைப் பின்னல்கள் ஏராளமாய் நெருக்கமாய் இருக்கும். மேல்பாதி சற்று நெகிழ்ந்தே பின்னப்பட்டிருக்கும். பெரும்பாலும் வலையின் கீழ்பகுதியிலேயே பூச்சிகள் ‘மாட்டிக்கொள்வதற்கு’ இவ்வலை வடிவ ஏற்பாடு. தன் பரிணாம மூளையில் சிலந்தி யுகாந்திரமாய் தன்னிச்சையாகச் செயல்படுத்தும் வலைவடிவம். அதை உருவாக்கும் சிலந்திக் கலைஞனின் வாழ்வாதாரக் கலைவடிவம். இயற்கையில் தோன்றும் பலவகை நேனோ அளவிலான உயிரி-பொருள் (bio-material).

140 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த சிலந்தியையும் அதன் வலையையும் தொல்-எச்சமாய், புதைவடிவமாய் (fossil) இங்கிலாந்தில் சஸக்ஸ் மாகாணத்தில் கடற்கரையில் கண்டெடுத்துள்ளனர். இவ்வலையிலுள்ள பட்டும் கோந்தும் இன்று நெய்யப்படும் நவயுக சிலந்திப் பட்டு, கோந்துடன் ஒன்றுபடுகிறது.

சிலந்தி உமிழ்ந்து நெய்யும் வலைப் பட்டு அதன் ஜீவாதாரம். அதைச் உருவாக்கும் பொறியியளாலர் சிலந்தியை காக்கும் உயிரி-பொருள்.

வலை கிழியாமல் இருக்க, அதில் அகப்படும் பூச்சிகள் எவ்வளவு கனம் இருக்கலாம்? எவ்வாறு அளக்கிறோம் என்பதைப் பொறுத்து சிலந்தி வலைக்கு, அதே கனம் உள்ள எஃக்கினால் ஆன வலையைவிட ஐந்து மடங்கு சக்தி அதிகமாம். கவனிக்கவேண்டியது, ‘அதே கனம்’ என்பதை. 450 கிராம் சிலந்தி வலையை நீட்டமாக நூல் போல இழுத்து உலகை ஒருமுறை சுற்றிவிடலாம்.
சிலந்தி வலைப் பட்டு சிலந்தியிடம் உமிழ்நீராய் சுரப்பது.

இந்நீரில், உள்ள புரதச்சத்து (proteins) வேதிப்பொருளுக்கு ஸ்பைட்ரான் (spidron) என்று பெயரிட்டுள்ளனர். எப்புரதப் பொருளிலும் அமினோ அமிலங்கள் இருக்கும். அலனைன் என்னும் அமினோ அமிலம் இந்த ஸ்பைட்ரானில் சில இடங்களில் அதிகமாக உள்ளது. இவை நேனோ-படிகங்கள் (nano-crystals). இந்த நேனோ-படிகங்களை இணைப்பது நார்களால் ஆன க்ளைசீன் போன்ற மீதி அமினோ அமிலங்கள். ஒரு இழையை கவனித்தால், முத்துமாலை போலப் படிகங்களும் இணைப்புகளும் தெரியும். இந்தக் கூழ்போன்ற எச்சிலை சிலந்தி உமிழ்கையில், உருவாகும் வலைப்பின்னலில் ஒவ்வொரு நேனோ-மாலையும் அருகில் உள்ள மற்றொரு நேனோ-மாலையுடன் குறுக்குவாட்டில் ஹைட்ரஜன் மூலக்கூறுப் பிணைப்பினால் இணைக்கப்படுகிறது. இவ்வகைப் பிணைப்பு இளகியது. தேவையானபோது நெகிழ்ந்துகொள்ளும்.

நார்கள் போன்ற வடிவங்கள் சிலந்தி வலைக்கு நெகிழும் குணத்தைக் கொடுக்கின்றன. அலனைன் படிகங்கள் நேனோ கொழுக்கட்டைகளாய் வேண்டிய உறுதியை அளிக்கின்றன. மேலும், ஹைட்ரஜன் பிணைப்புகள் பரவலாய் இருப்பதால், வலை மேல் விழும் பூச்சி போன்ற கனத்தை வலை முழுவதும் பரவிடச்செய்கிறது. வலையும் ஓரிடத்திலும் கிழியாதிருக்கிறது.

சிலந்தி வலை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான உறுதிகொண்டது. ஓரங்களில்தான் அதிக உறுதி. உள்ளே சற்று உறுதி குறைவு. ஒரே எச்சில்தான். உறுதிகள் வேறு. ஓரங்களில் படிகங்களின் அளவு குறைவாகவும், பின்னல்கள் அதிகமாகவும் இருக்கும். நடுப்பகுதியில் விகிதம் மாறிக்கொள்ளும். நெய்யும் வாயிலிருந்து உமிழ்நீர் எவ்வளவு வேகமாக வெளியேறுகிறது என்பதைக் கட்டுப்படுத்தியே சிலந்தி வலையில் உறுதி மாற்றங்களை உருவாக்கிவிடுகிறது.

இதுவரை நமக்கும் புரிகிறது. நேனோ-அளவில் இன்று அதி-நுண்ணோக்கிகள் கொண்டு படம்பிடிக்க முடிவதால். நேனோ-நெசவு இராட்டை ஒன்றை வடிவமைத்து சிலந்திபோலவே வேகமாய் சிந்தெடிக் வலை பின்ன முயல்கிறோம். சிந்தெடிக் வடிவாய் சிலந்தி வலையைப் பிரதி எடுத்தால் ஏராளமான பயன்கள் உள்ளன.

ஸ்பைடர்மேன், சிலந்திமனிதன், காமிக்ஸ் புத்தகங்களில் சிலந்தி கடித்ததும் ஏதோ வேதியியல் மாற்றத்தினால் மனிதன் சிலந்திபோல் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும் பண்பைப் பெறுவதாக உருவாக்கியிருப்பார்கள். மனிதன் ஸ்பைட்ரான் போன்ற ஒரு நேனோ-வேதிப்பொருளை சோதனைச்சாலையில் உருவாக்கி, அதைக் கைக்குள் அடக்கி, வேண்டியபோது விசையுடன் வெளியேற்றி சுவர்களில் பீய்ச்சி தொங்கிச் செல்வதாய்க் கதை சொல்வார்கள். அறிவியல் புனைவுகள் வாசிப்பதற்கு ஜாலியாய் இருக்கும்.

சிக்கலான வேதிப்பொருள்களைக் கொண்டு உமிழ்நீரால் சிலந்தி அரைமணியில் செய்துவிடுவதை, பரிசோதனைகளில் நேனோ-விஞ்ஞானிகளால் இன்றுவரை பிரதி எடுக்கமுடியவில்லை.