ஜல்லிக்கட்டு – என் மத்யமர் பார்வையில்

Standard

பின்வரும் எண்ணங்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் ஏன் உருவானது எவ்வாறு இத்தனை விசுவரூபம் எடுத்தது போன்றவற்றை விளக்காது. அதெல்லாம் கெடக்கட்டுமய்யா மொதல்ல நீர் என்ன சொல்லும் அப்பால மேல படிக்கலாமா வாணாமானு முடிவெடுத்துகறேன் என்றால் நான் ஜல்லிக்கட்டு ஆதரவாளன்.

ஆனால் ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளன் என்றானாலும் என் மதிபேசி தழுவிய மங்காத மத்யமர் வாழ்க்கையின் எத்தருணத்திலுமே எச்செயல்பாட்டிலுமே எவ்வித இழப்புமில்லை என்பதை அறிந்தவன்.
*

நான் சிறுவனாய் ஜல்லிக்கட்டை ஓரிரு முறை வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். தஞ்சை ஜில்லாவில் நான் பிறந்து வளர்ந்த மூன்று அக்ரகார கிராமத்திற்கு அருகில். மாட்டின் கொம்புகளுக்கு எட்டாத ஆசாரமான உயரத்தில் நண்பன் ‘நாணி’யுடன் திடமான புளியமரக்கிளையில் மீதமர்ந்து.

காளை அணியும் நவ வர்ணக் காகிதப்பூ மாலைகளும், வாலைத் திருகி நெடுக்குத் தெருவில் ஓட விடுகையில் கூட்டம் எழும்பும் ‘டுர்…’ சப்தங்களும், காளையைத் தழுவச் சென்றவன் அதன் சீற்றத்தில் தடுமாறித் தடுக்கி விழுந்து மடித்துக் கட்டியிருந்த கருநீலக் கட்டம் போட்ட லுங்கி (கைலி) கொம்பில் சிக்கிக் கிழிந்து அவிழ்ந்து அம்மணமாய்த் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் எனப் புழுதி பறக்கக் குறுக்குச் சந்தில் ஓடுவதைக் கண்டுத் திகிலுடன் மரக்கிளையினின்று விழுந்து விடாமல் ‘விழுந்து விழுந்து’ கண்களில் நீர்வரச் சிரித்ததுமே இன்றைய எஞ்சும் ஞாபகங்கள். நினைவேக்கங்கள் என்று கூறுவதற்கில்லை. பொறுக்கி வந்த காகிதப்பூ மாலையைத் தாத்தாவிற்குத் தெரியாமல் கூடத்து ஓரமாய்க் கிடக்கும் அரக்கு மேஜையின் எப்போதுமே கோணலாய் மூடிக்கொள்ளும் டிராயரை எம்பித் திறந்து கரப்புப் புழுக்கைகளுடன் சேகரித்துவைத்திருந்தேன்.

பின்னர் பெரும்பாலான பிராமண மத்யமர்கள் அன்றைய காலகட்டத்தில் செய்ததைப் போலவே என் பெற்றோரும் கிராமம் வீடு விவசாயம் துறந்து நகரம் கல்வி நல்வாழ்வு என்று நகர்ந்துவிட, நானும் நகரருகே ஶ்ரீரங்கவாசியாகி கிரிக்கெட்டிற்கு மாறிவிட்டேன்.

பிறந்து வளர்ந்த கிராமத்திலும் அருகே மூலங்குடி மைதானத்தில் கட்டைப் பந்து வைத்து அன்றே என் மாமா ‘டீம் கிரிக்கெட்’ விளையாடியுள்ளார். படாத இடத்தில் பந்து பட்டு இன்றுவரை காலை சற்று விந்தியே நடப்பார். இன்னொரு ஒன்றுவிட்ட அண்ணன் விக்கட் கீப்பராய் வீசிய மட்டையை டபாய்த்துத் துள்ளிவந்த கட்டைப் பந்தைத் தன் முகத்தால் தடுத்துத் திருமணமாகும் முன்பே பொக்கைப் பல்லவராயனாய்ப் பெயர் பெற்றிருக்கிறார். பின்னாளில் குடும்பஸ்தர்களாய் ஆனாலும் அவ்வப்போது தலைதூக்கும் கிரிக்கெட் மோகம் இவர்கள் இருவரையும் டென்னிஸ் பந்தில் ஆட்டத்தைத் தொடர வைத்துள்ளது. மத்யமர் இல்லங்களில் கிரிக்கெட்டை வன்முறையான ஆட்டமாய் பாவிப்பதில்லை.

ஆனால் பெரும்பாலான மத்யமர் இல்லங்கள் ஜல்லிக்கட்டை நோக்கும் பார்வை வேறு வகையானது.

ஜல்லிக்கட்டைப் பற்றிய ஊடகச் செய்திகள் பல வருடங்களாய் அதன் வன்முறை ரத்தம் சாவு போன்றவற்றையே பெரும்பாலும் முன்னிறுத்தியுள்ளன. செத்தால்தானே செய்தி. இதனால் இவற்றை வாசிக்கும் மத்யமர்ப் பெருங்குடியின் மனத்தில் அசூயை விலகல் அருவருப்பு போன்ற உணர்வுகளே பல வருடங்களாய் இவ்விளையாட்டின் மீது கூடியுள்ளது, அடிமனத்தில் படிந்துள்ளது.

கிரிக்கெட் பற்றிய ஊடகச் செய்திகள் இவ்வகையினது இல்லை. அந்த ஆட்டத்தினன் ஆடி கார் அன்றைய அரிதார அழகி முதல் பார்லிமெண்ட் பதவி பாரத ரத்னா வரை பெறுகிறான். விட்டால் நாட்டின் முதலமைச்சராகிவிடுவான். மக்களின் சினிமா மோகம் இன்றுவரை முட்டுக்கட்டையாய் உள்ளது. (மக்களின் சினிமா மோகத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களே சினிமா நாயகர்கள் சொன்னால்தான் ஆர்பாட்டத்தை நிறுத்திவிட்டு கலைந்து செல்கிறார்களாம்.)

ஊடகங்கள் — பெரும்பாலும் ஆங்கில ஊடகங்கள் — வாயிலாக ஜல்லிக்கட்டைப் பற்றி இதுவரை இந்நாட்டில் கட்டியெழுப்பட்டுள்ள மனப்பிம்பம் மத்யமர் சமூக விள்ளலிடம் இவ்விளையாட்டைத் தடைசெய்வதற்கான ஆமோதிப்பை வசதியாகப் பெற்றுத் தந்துவிடுகிறது. ராமச்சந்திர குஹா போன்ற அறிவுசீவிகள் ஆதியோடு அந்தமாய் ஒருபக்கச் சார்பான (முடக்கு)வாதங்களை அறியாமையுடன் இரைப்பதும் பலவருட முன்முடிபுகளாளேயே.

பீட்டர் பிலிப் ஹியூக்ஸ் போல ஓரிருவர் பந்தடிபட்டு ரத்தகசிவினால் மண்டையைப் போட்டாலும் கிரிக்கெட் வன்முறையான விளையாட்டாய்க் கருதப்படுவதில்லை. மரண ஆபத்து உள்ளது என்றாலும் தற்காப்புச் சாதனங்களும், விளையாடும் ஒழுங்கும் சட்ட திட்டங்களும் பெரும்பாலான ஆபத்துகளை வருமுன் காத்துவிடுகின்றன, அல்லது குறைத்துவிடுகின்றன. ஊடக வெளிச்சங்களாலும் இவ்வகைச் சாவுகளைத் தவிர்த்து விளையாட்டின் களிப்பையே பிரதானப்படுத்தப் பழக்கப்பட்டுள்ளாது மத்யமர் மனது.

ஜல்லிக்கட்டிலும் இதைப் போல மரண ஆபத்தைக் குறைக்கும் விதங்களைச் சிந்திக்கலாம். வீர விளையாட்டில் இவ்வாறு செய்தால் பிறகேது அதில் வீரம் என்று கேட்பது நியாயமா, மனித உயிர்ச் சேதத்தைக் குறைப்பதே விவேகம் என்று கருதுவது நியாயமா என்பதை நாம்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

முன்னாளின் வாளேற்றம் இன்று ஃபென்சிங் என்ற பெயரில் மார்பில் இரும்பு வலைக் கவசம் அணிவது, வாள் வீசுவதில் கட்டுப்பாடுகள், வீரரையே கட்டுப்படுத்தக் கயிறால் பிணைப்பு என்று மரண ஆபத்துக் குறைந்து மென்மையாகி ஒலிம்பிக்ஸ் வரைச் சென்றுவிட்டது.

ஜல்லிக்கட்டில் காளையை ஏகத்திற்கு கட்டுப்படுத்த முடியாது, கூடாது. அதைத் தழுவுபவர்கள் புல்லட் ப்ரூஃப் வெஸ்ட் போல கவசம் அணியலாமா, அல்லது காளையின் கொம்புகளை விளையாட்டின் போது மட்டும் மொண்ணையாக வைக்கலாமா என்று யோசிக்கலாம்.

ஜல்லிக்கட்டின் காயங்களைப் பெரிதுபடுத்தாமல் களிப்பான ஆபத்தற்ற சவாலான அங்கங்களை ஊடகங்கள் முன்னிறுத்தப் பழக வேண்டும். ஐநூறு இடங்களில் நடப்பதில் ஐந்தில் மட்டும்தான் சாவுகள் என்பதை விளம்பரப்படுத்த வேண்டும் (கிரிக்கெட்டிலும் இவ்வாறான விகிதங்களிலேயே ஆபத்து என்பது நிதர்சனம்). தமிழ் ஊடகங்களாவது இதை இனியாவது தொடர்ந்து செய்ய வேண்டும்.

*

ஜல்லிக்கட்டு அடிப்படையாகவே மிருகவதை. பீட்டா (PETA) போன்ற இயக்கங்கள் கானொளி ஆதாரங்களுடன் முன்வைக்கும் வாதம் இது. முழுவதும் ஏற்புடையதன்று.

‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ். அமுதன் தன் ஜல்லிக்கட்டு அனுபவ விவரணையில் எழுதியிருப்பதைப் போல ஜல்லிக்கட்டில் காளையைத் துன்புறுத்தத் துணிந்தால் கொல்லப்படுவாய், ஒன்று அந்தக் காளையினாலேயே, அல்லது அதன் எசமானனால். காளையைத் தழுவுதல் தான் விளையாட்டு, துன்புறுத்துவதல்ல.

வேண்டுமென்றே சாராயம் கொடுப்பது, வெறிகொள்வதற்கு உடல் உபாதைகளை உருவாக்குவது போன்றவை ஜல்லிக்கட்டில் இருக்கக்கூடாது. செய்வதை நிறுத்தவேண்டும், மறுப்பதற்கில்லை. பணம் பெனல்டி, ஆயுட்கால தடை என்று (விளையாட்டு நடைபெறும் ஊர் மக்கள் கூடியே) இதற்கான வழிமுறைகளை விவாதித்து முடிவெடுக்கலாம். அல்லது தமிழ்நாடு அரசாங்கம் பரிந்துரைகள் வழங்கலாம், செயல்பாட்டைச் சில வருடங்களாவது மக்கள் பழகிக்கொள்ளும் வரையில் கண்காணிக்கலாம்.

ஆனால் இவ்விளையாட்டே மிருகவதை அதனால் தடை செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதே நியதிப்படி மிருகங்களோடு மனிதன் (சாட்டை சவுக்கு மூக்கணாங்கயிறு ஆரோகணித்தல் என்று) உறவாடும் விளையாட்டுக்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். ஒலிம்பிக்ஸ் ஈக்குவஸ்டேரியன் குதிரையேற்றத்தைத் தடை செய்து இங்கிலாந்து வழக்கமாய்ப் பெறும் பத்து பதினைந்து தங்க மெடல்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். குதிரைப் பந்தய டெர்பிக்களை உலகெங்கிலும் தடை செய்ய வேண்டும். டெர்பிஷைர் என்ற ஊர்ப் பெயரையே மாற்றவும் பரிந்துரைக்கலாம். கொசுறாய் நாய்ப் பந்தயம், சேவல் சண்டை இத்யாதிகளை ஏறுகட்ட வேண்டும். மெஹிகோ எஸ்பான்யோலா எஸ்பான்யா தேசங்களின் மடாடர்களும் டொரெரோக்களும் மொட்டை மாடியில் வெயிலில் நின்றபடி பக்கவாட்டில் பிடித்துத் துணி காயவைக்கும் தொழிலுக்கு மாறிக்கொள்ள வேண்டும்.

மெஹிகோ எஸ்பான்யோலா எஸ்பான்யா நாடுகளின் சட்டங்களே காளையேற்ற விளையாட்டுகளில் மிருகவதை இல்லை என்று சொல்லிவிடுவதால் பீட்டா இயக்கங்களால் அங்கு அவ்விளையாட்டுகளுக்குத் தடையை அணலாக்க முடியவில்லை என்கிறார்கள். இவ்வாறுதான் ஜல்லிக்கட்டிற்குத் தடை என்கிற நமது உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் புரிந்துகொள்ள வேண்டும். நீதிமன்றம் மக்களின் உணர்வுகளையும் பாரம்பர்யங்களையும் அனைத்துத் தருணங்களிலும் புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்கும் இடமில்லை. அங்கு முன்வைக்கப்படும் வாதங்களையும் வழங்கப்படும் ஆதாரங்களையும் வைத்தே தீர்ப்பு வழங்கும். ஜல்லிக்கட்டில் நடந்த அவலங்களை சாவுகளை மட்டுமே அங்கு வழங்கினால் இவ்வகைத் தடையே தீர்ப்பு என்று வரும். முன்னர் குறிப்பிட்ட பீட்டர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் கட்டைப் பந்தினால் அடிபடும் கானொளியை வைத்து ஒரு நீதிமன்றம் கிரிக்கெட்டையும் அபாயமான ஆட்டம் எனத் தடை செய்ய சட்டம் நீதிமன்ரம் இயங்கும் விதங்களில் வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு நாட்டின் குடிமகனும் அவனைச் சார்ந்த மிருகங்களும் அந்நாட்டின் சட்ட திட்டங்களை ஒழுக வேண்டியதே. இது சரிதானென்றால் நாமும் இந்தியாவில் நம் பண்பாடு சார்ந்த காப்பான சட்டதிட்டங்களை உருவாக்கிக் கொள்ளவே வேண்டும்.

கிரேக்கத்தில் கிளேடியேட்டர்கள் இருந்தார்கள். அவர்கள் விளையாட்டிற்கு எனச் செய்தது மிருகவதை இல்லையா, அதைப்போலத்தானே ஜல்லிக்கட்டும் என்கிறது ஒரு வாதம். கிளேடியேட்டிங் விளையாட்டில் கொல் அல்லது கொல்லப்படு என்பது நியதி. அந்த மிருகங்கள் வன விலங்குகள். மனித மாமிச ருசி கண்ட, பசியோடு அடிமை ரத்தம் குடித்து சீசரை மகிழ்விக்கக் காத்திருப்பவை. கிளேடியேட்டர் என்பவன் கிட்டத்தட்ட அடிமை. தன் விடுதலைக்கு மிருகங்களைக் கொன்றே ஆக வேண்டும். அல்லது அவற்றினால் கொல்லப்பட்டு உயிர் துறக்க வேண்டும். உப்பரிகையிலிருந்து காண்பவர்களுக்கு மட்டும் கேளிக்கை தரும் அக்கொடூர விளையாட்டு சமுதாயச் சீர்கேடு எனக் கண்டறியப்பட்டு சட்டங்களால் தடை செய்யப்படவேண்டியதே. ஜல்லிக்கட்டை அதனுடன் ஒப்பிடுவது அறிவுசீவி அறியாமை.

அமெரிக்காவிலும் பூனை வளர்த்தல் உண்டு. ஆனால் வீட்டில் வளர்க்கும் பூனைகளின் நகங்களைப் பிடுங்கி வைத்திருக்க வேண்டும் (சில மாநிலங்கள் இன்றைக்கு இதற்குத் தடை விதித்துள்ளது என்றாலும், என் பத்து வருடப் பழங்கால அனுபவத்தில் டெக்சஸ் மாநிலத்தில் இது அடுக்ககங்களில் நிலுவையில் இருந்தது). வெளியாள் உன் வீட்டிற்கு வந்து உன் பூனை அவனைக் கீறி விட்டால் தொலைந்தாய். லா ஸூட்டில் ஆஸ்தி போய்விடும். வளர்ப்புப் பூனையின் நகங்களைப் பிடுங்கி வைத்திருக்க வேண்டும் என்பது அந்நாட்டின் (பல மாநிலங்களின் அடுக்கக) விதி. இதனால் பூனையின் ஆதார தற்காப்புச் சாதனத்தையே, வேட்டையாடும் இயல்பை மெய்ப்படுத்தும் சாதனத்தையே அதற்குப் பயன்படாது அடித்துவிடுகிறோம் என்பதை ‘பெட்’ மேல் பாசம் பீறிட்டடித்துவிட்ட அமெரிக்கர்கள் ஏற்கமாட்டார்கள். அதேபோல அந்நாட்டில் வளர்ப்பு நாயை உலாப் போகையிலும் கட்டியே அழைத்துச் செல்ல வேண்டும். பிரயாணம் போனால் தனியே வீட்டில் விட்டுச் செல்லக் கூடாது. குழந்தைகள் டே-கேர் போல நாய்-கேர் இல்லங்கள் உண்டு. குழந்தைகள் பராமரிப்பைவிட மணிக்கு மூன்று மடங்கு அதிக ரேட். (அதன் உணவையும் நீயே கொடுத்துவிட வேண்டும். அவன் கண்டதையும் கொடுத்து நாய் இறந்தால் பிறகு நீ காப்பகத்தின் மீது லா-ஸூட் போட்டுவிடுவாயே…)

இங்கே இந்தியாவில் பூனை கீறினாலோ நாய் கடித்தாலோ நாம்தான் (அதுவும் நம்மில் சிலரே) ஊசி போட்டுக்கொள்கிறோம். வேண்டிய வகையில் சட்டங்களை நாம்தான் உருவாக்கிக்கொள்ள மாற்றிக்கொள்ள வேண்டும். அனைத்தையுமே மிருகவதை என்று ஒற்றைப்படையாய் நோக்கினால் கொசு கடித்தால் கூட அடிக்க முடியாது.

உணவிற்கும் தற்காப்பிற்கும் மட்டுமே மிருகங்களை இனி மனிதன் கொல்வான் மற்ற வகை உறவாடல்கள் அனைத்துமே மிருகவதை என்பதே (பீட்டா வகையினர் பரிந்துரைக்கும்) புரிதல் என்றால் மனிதன் ‘வளர்ப்புப் பிராணிகள்’ எனும் சிந்தனையையே மாற்றிக்கொள்ள வேண்டும். படித்த மனிதனை மட்டுமே ஏய்க்க முடிந்த விளம்பர உத்திகளினால் பல வருடங்களாய் அரும்பாடுபட்டு எழுப்பப்பட்டுள்ள அமெரிக்க மால்களின் பெட்-ஃபுட் பிரிவுகளையே மிகப்பெரிய வர்த்தக இழப்பைப் பொருட்படுத்தாது அலேக்காய்த் தூக்க வேண்டும்.

கிராமத்தவர்களின் சிந்தையில் மிருகங்களை வதைப்பது என்பது பொதுவாக எழும்புவது இல்லை. அன்றாடங்களில் பெரும்பாலான நேரம் பல மிருகங்களுடன் வாழும் அவர்களின் சிந்தையில் மிருகங்களும் மனிதனுக்கான இடத்தையே வகிக்கின்றன. மனிதனின் பற்றாக்குறைகளுடனே அவையும் வாழ்கின்றன, அல்லது வாழுமாறு பழக்கப்படுத்தப்படுகின்றன. கிராம வீடுகளில் ஆட்டையோ மாட்டையோ கட்டி வைப்பதே அடுத்த மனிதன் ஓட்டிக்கொண்டு செல்லாதிருக்கவே தவிர அவற்றை வதைப்பதற்கில்லை. மனிதனுக்கு மூக்கு காது குத்துவது போலத்தான் மாட்டிற்கும் மூக்கணாங்கயிறு இன்னபிற.

மேற்கத்திய நகரத்து ‘பீட்டா’ இயக்கங்கள் விட்டால் நம் கிராமங்களில் நூற்றாண்டுகளாய் ஆட்டிற்கும் மாட்டிற்கும் பிரசவம் பார்க்கும் வைத்தியனின் முறைகளையே மிருகவைதை என்று தடை செய்துவிடுவார்கள். மிருகவதை எதிர்ப்புச் சட்டங்கள் இருக்க வேண்டியதுதான். எங்கு எவ்வகையில் அமலாக்க வேண்டும் என்பதில் கட்டுப்பாடு வேண்டும் என்பதை ஏற்கமாட்டார்கள். அவர்கள் வீடு பாதிக்காத வரையில். இவர்களில் எவருமே தமிழ்நாட்டின் ஒரு வேணுவின் (சு. வேணுகோபால்) ‘குதிரை மசால் தாத்தா’வையோ நிலமெனும் நல்லாளையோ, நுண்வெளி கிரகணங்களையோ வாசிக்கப்போவதில்லை. மிருக-மனித உறவாடல்கள் பற்றி ஆங்கிலத்தில் புழங்கும் தொல்ஸ்தோயின் கருத்துகளையாவது வாசித்துப் பார்க்கலாம்.

இன்னும் எழுதலாம். இது தனி டாபிக்.

ஜல்லிக்கட்டை மிருகவதை என்று ஏற்றுக்கொள்வதற்கில்லை. பண்பாட்டின் ஓர் அங்கமான நிகழ்வாய் தொடர்ந்து செயல்படுத்துவதற்குச் சட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

*

ஜல்லிக்கட்டு மஞ்சு விரட்டு என்கிற முறையில் தமிழர் பண்பாட்டின் அங்கமாய்ப் பல நூறு வருடங்கள் இருந்து வருவதை மறுக்க இயலாது. காலையின் கொம்புகளில் பணமுடிப்பைக் கட்டி மைதானத்தில் ஓடவிட்டு காளையை அடக்கி அம்முடிப்பைப் பறிப்பவனை வெற்றி வீரனாய்க் கொண்டாடியுள்ளோம். மணப் பெண்ணைப் பெறும் வழக்கமும் இருந்துள்ளது. கிருஷ்ணர் ஏழு காளைகளை அடக்கிய பிறகே நப்பின்னையை மணந்ததாகப் புராணம் உண்டு. இவை ஒருபுறம்.

சமுதாயத்தில் கலாச்சாரம் பண்பாடு என்று அறியாமல் தீமைகள் ஒழுங்கீனங்கள் அவலங்கள் பழகிவிடுகையில் அவை சுட்டிக்காட்டப்பட்டு எதிர்ப்பிருந்தாலும் சட்டதிட்டங்களால் களையப்பட வேண்டியதே. இதுவே மனிதனின் வளர்ச்சி, நாகரீகம். ஒரு காலத்தில் சதி, உடன்கட்டை ஏறுதல் என்பது நமது பண்பாடாய்க் கருதப்பட்டது. பின்னர் ராஜா ராம் மோகன் ராய் முன்னிருத்திய சீர்திருத்தங்களில் இது களையப்படவில்லையா. இது போலத்தான் ஜல்லிக்கட்டும். பண்பாடு என்கிற பெயரில் இந்தக் குரூரத்தை எதற்குத் தொடர வேண்டும், எதிர்ப்பிருந்தாலும் நாமே சட்டம் விதித்துத் திருத்திக்கொள்ள வேண்டியதுதான். இப்படிப் போகிறது மிருகவதை மனிதச் சாவுகள் இவற்றின் உப பிரிவு வாதம். கிரன் பேடி போன்றவர்கள் இவ்வகை வாதங்களை ஆதரிக்கிறார்கள் என்பது என் அறிதல்.

சதியும் ஜல்லிக்கட்டும் ஒன்றல்ல. சதி அடிமைமுறை போல ஒரு சமுதாயச் சீர்கேடு. தேவையான சட்டங்கள் கொண்டு களையப்பட்டு விட்டது. ஜல்லிக்கட்டு உலகின் ஒரு பகுதியனரின் மிருக-மனித விளையாட்டு. இதன் சீர்கேடுகள் தேவையான சட்டங்கள் கொண்டு களையப்படலாம். ஆனால் தடை செய்வது அதிகம். ஒரு காலத்தில் ஐரோப்பிய கிராமங்கள் இடையே மனித மண்டையோட்டை ஊரே எத்தி விளையாடியதுதான் இன்றைய கால்பந்தாட்டம்.

(ஜல்லிக்கட்டில் விளையாடலாமா கூடாதா என்பதை முடிவு செய்யும் உரிமை தன் உயிருக்கு அபாயம் உண்டு என்று தெரிந்தே களமிறங்கும் அவ்வீரனுக்கு இன்றும் உண்டு. சதியில் பெண்ணுக்கு உயிர்துறக்க மறுப்பதற்கு உரிமை இருக்கவில்லை. அதனால்தானே அது சமுதாயச் சீர்கேடு. மனைவி இறந்தால் கணவனையும் இவ்வகையிலேயே அவன் வாழும் உரிமையை இல்லையென்றாக்கி உடன் கொளுத்தவேண்டும் என்று அன்றே சட்டம் இயற்றி இருக்கலாம். இறந்தவர்களை எரிக்கும் பண்பாட்டை கைவிட்டு அனைவருமே புதைக்கும் பண்பாட்டிற்கு மாறியிருப்பார்கள். அல்லது திருமணம் என்பதே இல்லாமலாகி இன்றைய லிவ்-இன் வசதி அன்றைக்கே தழைத்திருக்கும்.)

*

போராட்டம் சரி. ஆனால் இந்த ‘தம்மாத்தூண்டு’ விஷயத்திற்குப் போய் இளைஞர் பட்டாளமே திரண்டு தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்கவைக்குமளவு போராடவேண்டுமா? இதையே வேறு நல்ல உபயோகமான முக்கியமான விஷயங்களுக்காகச் செய்யக்கூடாதா? அவ்வாறு செய்திருந்தால் நான் என் ஆதரவை வழங்கியிருப்பேனே… இப்படி ஒரு வாதம் ஓடுகிறது.

இந்த மத்திய அரசாங்கம் வருவதற்கு சில வருடங்களுக்கு முன்னர் அன்னா ஹசாரே என்று ஒருவர் வந்து போனாரே நினைவிருக்கிறதா? அவர் எதற்காகப் போராடினார் என்றாவது இன்று நினைவிருக்கிறதா? அவர் உண்ணாவிரதம் இருக்கையில் மக்கள் அவருக்குப் பின்னால் திரண்டபோதும் இதே வகை வாதத்தை தானே முன்வைத்தோம். ஆமாம், இவர் ஒண்டியாள் எதிர்த்து நாட்டில் ஊழல் மறைந்துவிடப்போகிறதா என்ன… ஊழலற்ற அரசியல் கட்சி உருவாக்கி, தேர்தலில் நின்று ஜெயித்து நாட்டில் நல்லாட்சியைக் கொண்டுவருவதை விட்டுவிட்டு இப்படி உண்ணாவிரதப் போராட்டமாம்… இப்படித்தானே அன்று சொன்னோம், நம் வீட்டு உள் அறையில் தொலைக்காட்சி முன்னால் காலாட்டிக்கொண்டு…

அன்று கிழவரை எள்ளினோம், இன்று இளைஞர்களை.

இளைஞர்கள் அவர்களாய்த் திரண்டு ஒருங்கிணைந்து தங்களுக்கு சரியில்லை என்று தோன்றுவதை எதிர்த்து ஜனநாயக முறைப்படி அமைதியாகப் போராடுவதில் ஒரு தவறுமில்லை. ஆதரிக்கத் தோன்றாவிடில், கண்டுகொள்ளாமல் விடுங்கள். நாளை உங்களுக்கு அவசியமான காரணங்களுக்கு நீங்கள் போராடியாகவேண்டிய கட்டாயம் ஏற்படுகையில் உங்களால் எவரைத் திரட்ட முடியும் என்று யோசித்துப்பாருங்கள்.

நாம் கையாலாகாத மத்யமர்ப் பெருங்குடி. என்றைக்குமே எதற்குமே போராடாத, நமக்குத் தேவையான உணவிருக்கும் இடத்தில் நமது வாயை (மட்டும்) வைத்துக்கொள்ளத் தெரிந்த, சரியான சமயத்தில் அதைத் திறந்து கொள்ளவும் தெரிந்தவர்கள். இனியாவது அதை மற்ற சமயங்களில் மூடி வைத்துக்கொள்ளவும் பழகிக் கொள்ள வேண்டியதே.

எந்த அறிவியல் புனைவும் ஊகித்திராத வகையில் நம்காலத்திலேயே சும்மா குடித்துக்கொண்டிருந்ததை இன்று காசு கொடுத்து வாங்கிக் குடிக்க வேண்டியுள்ளது. பருவ மழை பொய்த்துவிட்ட மற்றுமொரு வருடத்தின் தொடக்கத்தில் உள்ளோம். காவிரி நதி நீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று போராடலாம். நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று போராடலாம். நாட்டைச் சுத்தமாக வைப்போம் என்று திரளலாம். பசிப் பஞ்சத்தையும் சேர்த்து இந்நாட்டில் பிரச்சனைகளுக்குப் பஞ்சமில்லை.

ஒருங்கிணைந்த சக்தியின் மதிப்பை இன்று ஜல்லிக்கட்டு ஆதரவு போன்ற ‘சாதாரணப்’ பிரச்சனைக்காகப் போராடியதில் இளைஞர்களில் சிலரேனும் உணர்ந்திருப்பார்கள். நாளை நாட்டின் அடுத்த முக்கியமான பிரச்சனைகளின் தீர்வுகளுக்கும் ஒருங்கிணைவார்கள் என்றே நம்பிக்கை வைக்க வேண்டும். போராட்டத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் சிலவற்றையேனும் — மரினாவில் கலவரம் என்று திடுதிப்பென்று முற்பகல் பள்ளி கல்லூரிகளை மூடிவிட்டுப் போக்குவரத்தையும் திசைதிருப்பி விட்டால், நகரத்தில் பெற்றோர் பிள்ளைகளை எவ்வாறு வீட்டிற்குக் கூட்டி வருவதாம்? — பொறுத்துக்கொள்ளவே வேண்டும்.

*

லேபில் காணவில்லை. லித்தியம் பாட்டரிக்கள் ஆய்வு 1 வாரமாய் உடப்பில். #jallikattu மரினா ஸாரி சார் தயக்கமாய் என் ஆய்வுமாணவர். வீடு கிளம்பினேன்.

*

[நன்றி ராஜேஷ் @elavasam சில தகவல்/எழுத்துப் பிழைகளைக் களைந்ததற்கு]