அச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்

Standard

arunn-novel-2-tவணக்கம்

உங்கள் அச்சுவை பெறினும் நூலை சில நிமிடங்களுக்கு முன் படித்து முடித்தேன். சிறு மதிப்புரை கீழே. இதனை goodreads போன்ற தளங்களில் என் பெயரில் பதிய மனம் ஒப்பவில்லை. தனி மதிப்புரையாக இருக்கட்டும் என்று உங்களுக்கு அஞ்சலில் அனுப்புகிறேன். இதனை எங்காவது வெளியிடுவது என்றால் என் பெயரை நீக்கி விட்டு வெளியிடவும். நன்றி.

=====

என் இருபத்தோராம் வயதில், எனக்கு மிகவும் பிடித்த வலைப்பதிவர், “முதல் மரியாதை” திரைப்படம் குறித்து மிகவும் சிலாகித்து எழுதி இருந்தார். தன்னுடைய முப்பதாவது வயதுக்கு மேல் அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்ததால் தனக்கு அது மிகவும் பிடித்திருந்ததாகத் தெரிவித்தார். அது போலவே இந்நூலும் முப்பது வயதைத் தாண்டிய ஆணால் (பெண்ணாலும் ?) தான் புரிந்து கொள்ள முடியும்.

இந்நூலின் தலைவனை அமெரிக்க தேசி (50 பக்கங்கள் படித்திருக்கிறேன். இப்போதைக்கு கொஞ்சம் ஒத்தி வைத்திருக்கிறேன்) நூலின் தலைவனின் நீட்சியாகத்தான் பார்க்கிறேன். அமெரிக்கா கிளம்பிச் சென்ற தேசிகன், கிளம்புவதற்கு முன் கொண்ட காதலிதான் Reshma என்று மனத்தில் வைத்திருக்கிறேன்.

நான், திருமணத்துக்கு முன், எந்தப் பெண்ணையும் இவ்வுலகில் காதலிக்கவில்லை. மனத்தால் வருங்கால மனைவிக்கு கற்புடையவனாக இருந்தேன். அப்படி இல்லாதவர்கள் தாழ்ந்தவர்கள் என்று சொல்லவில்லை, ஆனால் நான் காதலிக்கவில்லை என்பதால் இந்நூலின் தலைவன் செய்யும் பல செயல்களில் என்னால் relate செய்ய முடியவில்லை. அதிலும், திருமணத்துக்கு முன் முத்தமிடுதல் தவறு என்ற பழமைவாதியாகவே நான் என் கல்லூரிக் காலங்களிலும் (இப்போதும் கூட) இருந்தேன். அதிலும் பெண் புனிதமானவள், உடல் இச்சை இல்லாமல் இருக்க வேண்டும் என்று அடிமனத்தில் (இன்னமும் கூட) எண்ணும் பழமைவாதியாகவே என் கல்லூரிக் காலங்களில் இருந்தேன். அதனால் என்னால் Reshma வை அழகி என்று நினைக்க முடிந்தால் கூட தவறு செய்தவள் என்றே பார்க்க முடிந்தது. அதிலும்: புகை பிடிப்பவள், revenge kiss/love, காதலனை நினைத்து உச்சம் அடைதல், எல்லாம் செய்யும் அளவு ஒரு கதையின் தலைவி இருப்பாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் பத்தாம்பசலி மனம்: தமிழ்ப்பெண் என்றால் ஒழுக்கமானவளாக இருக்க வேண்டும், இவை எல்லாம் ஒழுக்கக் கேடுகள் என்று கற்பிதம் செய்திருக்கிறது. அதிலும் சிறு நகரத்தில் இருந்து வந்தவள் என்றால் இன்னும் ஒழுக்கம் அதிகமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அதே நேரம், பெண் வட இந்தியப் பெண் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும் என்று தண்ணீர் தெளித்து விடுகிறது, வெளிநாட்டுப் பெண் என்றால் இதெல்லாம் தப்பே இல்லை அவர்கள் வாழ்க்கை முறை அது என்று நினைக்கிறது. இந்தியர்கள் யாருக்கேனும் மணமுறிவு நடக்கிறது என்றால் இன்னமும் கூட நான் வருந்துகிறேன். பள்ளி மாணவிகள் காதல் கொள்வது போல படம் எடுப்பவர்களை உதைக்கலாம் என்று கூடத் தோன்றுகிறது. “தொட்டு தொட்டு என்னை, வெற்றுக் களிமண்ணை; ஒவ்வொன்றாய் திருடுகிறாய்” போன்ற பாடல்கள் கேட்க அவ்வளவு பிடித்தாலும், எப்போதும் பார்க்க மாட்டேன், தொலைக்காட்சியில் வந்தால் உடனே அலைவரிசையை மாற்றி விடுவேன்.

என்னால் Reshma வை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவள் அழகி என்றே மனத்தில் பதிந்து இருக்கிறது. அவளும், அவள் கணவனும் வாழும் பெங்களூர் வாழ்வு பற்றி புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் குழந்தை வளர்ப்பு பற்றி புரிந்து கொள்ள முடிகிறது. பெங்களூர் ஆண்கள் குழந்தை வளர்ப்பில் பொறுப்பு எடுத்துக் கொள்ளாமல் காட்டும் சோம்பேறித்தனம் தெளிவாக வருகிறது. இதெல்லாம் அப்பட்டமாக எழுத்தில் கொண்டு வந்ததில் உங்களின் எழுத்தாளுமை ஒளிவீசுகிறது. Reshma வின் தாய் பாத்திரம் கூட அவ்வளவு கவனமாகச் செதுக்கப் பட்டுள்ளது.

தேசிகனின் தாய், அண்ணி பாத்திரங்கள் அருமை. தேசிகனின் தகப்பனைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேசி இருக்கலாம் என்று பட்டது. ஏனோ தேசிகனின் வீட்டுப் பெண்கள் மனத்தில் பதிந்த அளவு ஆண்கள் பதியவில்லை. (உங்களுக்கு ஒரு அண்ணி இருந்திருந்தால் இப்படி எழுதி இருப்பீர்களா என்று யோசிக்க வைத்தது; வெளிப்படையாக நீங்கள் எழுதவில்லை என்றாலும் ஓரிடத்தில் நீங்கள் கொடுத்த பொருளார்ந்த அமைதி).

“அச்சுவை பெறினும்” வேண்டுவானா வேண்ட மாட்டானா என்பதுதான் கேள்வியே. வேண்ட மாட்டான் என்று மனத்தில் பட்டாலும், கதை எப்படிப் போகிறது என்று பார்ப்பதுதான் சுவாரசியம். அதில் இந்நூல் நன்றாகவே உள்ளது. மிகவும் நல்ல நடை.

இந்நூல் முழுதுமே பல்வேறு நல்ல வரிகள் உள்ளன. ஆழமான வரிகள். அழகான வரிகள். ஒருசோறுபதம் என்ற வகையில்: ச்சேய் என்ன வாழ்க்கை இது. நமக்கு வேண்டியதைப் பிறரை நினைக்க வைப்பதற்காகவே நாம் நினைத்தவற்றை அவர்கள் அறியாமல் மறைத்து வைத்து (நூலில் அறியாமால் என்று அச்சாகி இருக்கிறது. பக்கம் 196)

தமிழில் பல்வேறு காதல் நூல்கள் வந்திருக்கலாம். ஆனால் காதல் பற்றி அதிகம் வந்ததில்லை (அல்லது நான் படித்ததில்லை). இந்நூல் அப்படிப் பட்ட ஒரு நூல். நான் ஒரு நூல் எழுத வேண்டும் என்று நெடுநாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்நூலை எப்படியும் இன்னும் நான்கைந்து முறையாவது படிப்பேன், நான் என் நூலை எழுதும் முன்னர்.

வேதவல்லியின் உரை ஏனோ என்னால் அதிகம் விரும்ப முடியவில்லை. உலக இலக்கியம் எல்லாம் தெரியாது, அதனால் அதன் கருத்தை ஆழமாக உணர முடியவில்லை. அந்தப் பக்கங்களை மட்டும் அதிகம் விரும்பாமல் மேலோட்டமாக மட்டும் படித்துத் தள்ளி விட்டேன். அடுத்த முறை ஆழமாகப் படிக்க முயல்வேன்.

அதிகம் குறை சொல்வது போலத் தெரியலாம், ஆனால் மிகவும் விரும்பியே படித்தேன். பல்வேறு வரிகள், தனித்தனி டுவீட்டுகளாக எழுதினால் ஒவ்வொன்றும் 100 RT ஆகும். (என்ன ஒரு சோதனை, இலக்கியத்தைக் கூட அறுத்து டுவீட்டாக்க முனையும் சமூகத்தில் வாழ்கிறோமே ;) )

நூலைப் பற்றி பேசாமல் என்னைப் பற்றியும், என் perspective பற்றியும் அதிகம் பேசி இருக்கிறேன். ஆனால் எப்படிப் பட்டவனுக்கு இந்நூல் பிடித்திருக்கிறது என்று புரிய வேண்டும் என்றால் அந்த நீண்ட விளக்கமும் வேண்டும் அன்றோ. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் “Last man standing” என்று ஒரு அமெரிக்கத் தொடர் வருகிறது. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். அந்த கதையின் நாயகன் ஒரு அப்பன். என் எண்ணங்கள் பெரும்பாலும் அவரோடு ஒத்துப் போகும். இந்நூலை இன்னும் இரண்டு நபர்கள் வாங்குவார்கள். நான் பரிந்துரை செய்வேன். அவர்களின் எண்ண ஓட்டம் அறிந்தவன் நான்.

மேலும் எழுதுங்கள். நன்றி :-)

***