ஒவ்வொரு கலை இலக்கியப் படைப்பிற்கும் ஒரு வயது உள்ளது எனத் தோன்றுகிறது. அப்படைப்பு தன்னியல்பாய் ஒருமித்து வெளிப்படுத்தும் வயது. அவ்வயதோடு நாம் அதை அணுகுகையிலேயே அனைத்துப் பரிமாணங்களோடும் அப்படைப்பு முழுவதுமாய்த் திறந்துகொள்கிறது எனலாம். சமவயதினரோடான நட்பிலன்றோ ஆளுமையை உரித்து உளமாற உறவாடும் வாய்ப்பு அதிகமாகிறது.
இலக்கியப் படைப்பின் வயது நமக்குக் காலத்தால் ஆகியிருக்கும் வயதால் ஆவதன்று. அனுபவங்களினால் வருவது எனலாம். ஆன்னா கரனீன்-னில் இருந்து அதிகம் பெருவதற்கான வயது ஒரு டப்ளினர்ஸ்- வழங்கும் அனைத்தையும் பெருவதற்கான வயதைவிடப் பல வருடங்கள் அதிகம் என்றே தோன்றுகிறது.
இலக்கியப் படைப்பின் இந்த ஒருமித்த வயதைக்காட்டிலும் குறைவான வயதோடு அதை அணுகுகையில், நம்மைவிட வயதான அப்படைப்பின் முழுத் திறவாமையை ஏற்க இயலாமல், குறைவயது நமக்களித்துவிடும் இயல்பான அனுபவ முதிர்ச்சியின்மையில் படைப்பைத் தூக்கியடிக்கவே, ஓரங்கட்டவே, நிராகரிக்கவே முயல்வோம். பெற்றோர் பெரியோர் பேச்சை எண்ணங்களை குணநலன்களை சக வயது நண்பர்களுடன் விமர்சித்து ஏற்காதிருப்பதைப் போல. புரியாதவை தேவையற்றவை, ஏற்கமுடியாதவை பயனற்றவை, அனுபவிக்க இயலாதவை உணர்வுகளற்ற கற்பனை… இவ்வாறான வயது வீழ்ந்து, காலப்போக்கில் நாமும் பெற்றோர் ஆவோம். மீண்டும் அனுகினால் படைப்பின் பலனைப் பெற்றோர் ஆவோம்.
படைப்பின் ஒருமித்த வயதைவிட முதுமையோடு நாமிருக்கையில் (இவ்வேற்றுமையை இயல்பாய் நாம் கண்டுகொள்ளத் தொடங்குவதே இந்நிலையின் இருத்தலின் ஆதாரம்), நம்மை இளமையாக்கி அப்படைப்பின் வயதோடு ஒருமித்து அணுகுவதே நன்று. முதுமையில் முதிர்ச்சி பெருகியிருக்கும் என்றாலும், இளவயதினரை அணுகுகையில் சேர்ந்துகொள்ளும் அவநம்பிக்கை மனநிலையை முயன்று களைய வேண்டியிருக்கும். நம் வயதைக் குறைத்துக்கொண்டு படைப்பை அணுகுவது அவசியம். மன ஆரோக்கியத்திற்கு இப்பயிற்சி தேவையும் கூட.
இளமையிலேயே பற்பல முதிர்வான அனுபவங்களைப் பெற்றவரும் நம்மில் உண்டு. ஒரு சிங்கரின் ‘ஆனந்தம்’ (ஜாய்) இறுதி வரியில் இவர்களை இயல்பாய் கண்ணீர்மல்கிட வைத்திருக்கும். மாறாக, உடல் முதிர்விலும் அனுபவ முதிர்வற்ற முடக்குவாதங்களும் நம்மில் ஏராளமே. தங்கள் ஊர், மத, ஜாதிக் கதைசொல்லிகளைக் கடந்து எவரது எழுத்தையுமே வாசிக்க மனதற்ற இவர்களுக்கு மானுடக் கலைகள் இலக்கியங்கள் வெளித்தோற்றம் கடந்து எதையும் திறவா.
அவரவர் கற்கும் மனநிலைக்கேற்ப இளமையிலேயே பல முதிர்ந்த படைப்புகளை அணுகும் மன உயர்வைக் கைவரப் பெறலாம். படைப்பை முழுவதுமாய் அனுபவிக்கும் வரையிலாவது இந்த ‘இளமையில் முதுமை’ மனோநிலையைத் தக்க வைப்பது அவசியம். அறிவைப் பெருக்கும் உழைப்பும், அவ்வாக்கம் நம்மை வந்தடையும் வேகத்தினை ஏற்கும் பொறுமையும், சில கொட்டாவிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் மனோதிடமும் வளரவேண்டும். ஒவ்வொரு படைப்பை அணுகுகையிலும், அதைப் பாராட்டும் (அல்லது எள்ளளுடன் தூக்கியடிக்கும்) வயதைவிட அதிகமாகவும் அதை அங்கீகரிக்கும் வயதைவிடக் குறைவாகவும் நமது வயதை வைத்துக்கொள்கையில், படைப்பிலிருந்து முழுமையானப் பலன்களைப் பெறுவதற்கு வாய்ப்பதிகம்.
கலாரசிகர்கள் வாசகர்கள் சிலருக்கு எப்படைப்பையும் அதன் இயல்பான வயதோடு அணுகும் அகவயதை நெகிழ்த்தும் திறன் இளவயதில் கைகூடியிருக்கலாம். ஆனால் எக்கலைத்துறையிலும் இந்த மனவேற்றம் இளவயது விமர்சகர்களுக்கு ஒருபோதும் கைகூடியதில்லை. கலைகளில் அறிவுத்துறைகளில் சிறந்த ஆக்கங்களை உருவாக்கி அளிப்பவர்கள் எவ்வயதிலும் இருந்துவிடலாம்; ஆனால் சிறந்த விமர்சகர்கள் முதிர்வானவர்களே, முதியவர்களே — கவனித்துப் பார்த்தால் புரியும்.
வயது ஏறுகையிலேயே நாம் ஒரு படைப்பிலிருந்து பெறாதவற்றைக் கவனித்துக்கொண்டிருப்பதை விடுத்துப் பெற்றவற்றைக் கண்டுகொள்ளும் மனவிசாலத்தைப் பெறுகிறோம். எத்துறையிலும் நிறைகளைக் கண்டு சொன்னவர்களே — அவை எத்தனைக்கெத்தனை காண்பதற்கரியனவையானவையோ அத்தனைக்கத்தனை — அத்துறையின் வளர்ச்சியில் பொறுப்பான பங்குவகித்திருக்கிறார்கள். குறைகளை மட்டுமே சொன்னவர்கள் — அவை எத்தனைக்கெத்தனை சரியானவை என்றாலுமே அத்தனைக்கத்தனை — மிஞ்சினால் அத்துறையில் இருப்பதை எடுத்துச் சொல்லும் ஆசிரியர்களாகியிருக்கலாம்.
எக்கலையிலும் வயது ஆக ஆக நல்ல பல படைப்புகள் முழுமையாகத் திறந்துகொள்ளும் வாய்ப்பும் கூடுகிறது. இலக்கியத்தில் இது உறுதி. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கலையன்றோ; வாழ்வின் முதிர்ச்சி பெருகப் பெருக அக்கலைக்கான ரசனையும் விரிந்து உயரவே வாய்ப்பதிகம்.
கலா ரசிகனுக்கு வயோதிகம் வரவேற்கப்படவேண்டிய அம்சமே.
மற்றொரு கவனமாய், சிறந்த படைப்புகள் யாவையும் அவற்றின் ஒருமித்த வயதுகள் எவ்வெத்தனையென்றாலும், அணுகுபவரின் வயதிற்கேற்ப — அவ்வயது, படைப்பினதோடு பொருந்தா வயதென்றாலும் — அவர்களுக்கு அந்நேரத்தில் சிலவற்றையாவது வழங்கிவிட்டிருக்கும். மகத்தான படைப்புகள் வயது வரம்பற்றவை. முழுமையாக அவை வழங்கும் அனைத்தையும் பெறுவதற்கு ஒரு மனிதப் பிறவியைக் கடந்த வயோதிகம் அவசியப்படுகிறது.
வயோதிகத்திலும் முயன்று முதிர்வின்மையோடுத் திரிதல் மனித உரிமையே. சிறந்த படைப்பிலிருந்தும் எதையுமே எவ்வயதிலுமே பெறமுடியாதவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அல்லது விமர்சகர்கள்.
படைப்பவன் கோணத்தில் மேலுள்ள கருத்துகளை வகுக்கலாம். எவ்வயதிலும் ஒருவன் கலைப் படைப்பை உருவாக்க முனையலாம். அது பெரும்பாலும் படைப்பவனின் அகவயதைச் சார்ந்தே உருவாகியிருக்கும். வயதைக் களைந்த காலவெளியில் முதிர்ந்த மனநிலையில் படைப்பை உருவாக்க முயல்வது அதன் ஒருமித்த வயதை ஏற்றியளிக்க உதவும். இம்மனநிலையைப் பெறுவதற்கென்று தனிப்பயிற்சி ஏதுமில்லை. மனித குலத்தின் நற்பண்புகள் மீதான நம்பிக்கையும், அதனை எத்தருணத்திலும் மன்னித்துவிடும் அன்பையும் சமநிலையையும் மனத்தில் வளர்த்துகொள்வது மட்டுமே வயதைத் துறக்கவல்ல படைக்கருவிகள் எனத் தோன்றுகிறது. காலங்களைக் கடந்த மனோநிலையிலேயே தனியொருவனால் மகத்தான படைப்பினை ஆக்கிட முடியும். அல்லது பல பிறவிகள் (சமுதாயச் சந்ததிகள்) கொண்டுகூட்டிச் சேர்த்து ஆக்கிய படைப்பே இத்தகுதியைப் பெற்றிட இயலும். இதிகாசங்கள் போல.
கலை வயதற்றது. மனிதன் வயதுடையவன். கலை உலகளாவியது. உலகம் கலையில் அடங்கா வரம்புகளற்றது. ஆனால் வயதுடையது. வயதாலானதினில் வயதற்றவை பிறப்பது சாத்தியமே. பிறந்து, வயதாலானதில் வயதற்றவையை உயர்த்துவதும் சாத்தியமே.