பொறுப்பற்ற அறிவுஜீவி

Aside

இவை என் இன்றைய கருத்துகள். நாளையே மாறிவிடலாம். மாற்றிக்கொண்டதை நான் இங்கே தெரிவிக்காமலும் இருக்கலாம். மேலும், இன்றைய என் கருத்துகளும் தீர விசாரித்துச் சோதித்துச் சரிபார்த்து நான் கண்டடைந்த முடிவுகள் என்றும் கொள்ள இயலாது.

இன்றைக்குச் சரிபார்க்காமல் கூறியதால்தான் நாளையே அக்கருத்துகளை மாற்றிக்கொள்கிறாயா என்று நீங்கள் கேட்பதற்கு என்னிடம் பதில் இல்லை. அதற்குள் அடுத்த கருத்தைச் சொல்லவேண்டிய அவசியத்தில் அரும்பாடுபட்டு என்னை உருவாக்கி வைத்துள்ளேன். பொதுவாகவே என்னுள்ளே நிறைய கருத்துகள் மட்டுமே உள்ளது. என் கருத்துகளைப் பற்றி உங்களுக்குள் உருவாகும் கேள்விகளுக்கான பதில்கள் என்னுள்ளே என்றுமே உருவாவதேயில்லை என்று சொன்னபிறகும் நீங்கள் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பதற்கு நான் பொறுப்பல்ல.

உங்கள் சிந்தனைப்போக்கையும், செயல்களையும், வாழ்வின் முக்கியமான முடிவுகளையும் இக்கருத்துகளைக் கொண்டே தீர்மானிப்பீர்கள் என்று நான் கருதுவதை என் மனப்பிறழ்வு என்று நீங்கள் கொள்ளலாகாது என்பதும் என் கருத்தே என்பதை ஏற்காத அளவிலேயே நீங்கள் இருப்பதற்கும் நான் பொறுப்பல்ல.

மேலுள்ள வாக்கியத்தை வாசிக்கும் பயிற்சி பொறுமை வாசித்துப் புரிந்துகொள்ளும் பக்குவம் இவற்றை உங்களிடம் வளர்த்துக்கொள்ளாமல் போனதற்கும் நான் பொறுப்பல்ல.

நான் இங்கு எழுதிவைக்கும் யாவற்றையும் பொறுப்பானவை என்று நீங்கள் கருதிக்கொள்வதற்கு நான் பொறுப்பல்ல.

இப்படி பொதுவெளியில் எழுதிவைத்துள்ள என் கருத்துகள் எதற்குமே நான் பொறுப்பேற்க மறுப்பதை வெளிப்படையாக எழுதிவைத்தப் பின்னரும் தொடர்ந்து என் கருத்துகளை நீங்கள் வாசிப்பதற்கும் நான் பொறுப்பல்ல.

— மேலே உள்ளவை, தாமாகவே ஒருநாள் தன்னை இன்னார் என்று அறிந்துகொண்டுவிட்ட ஒருவரின் வலைதள முகப்பில் வாசித்தவை. பிறகு அத்தளத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.