அலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை

Standard

ஜன்னல் வெளியே காண்பது நிஜப் பகலா அனல்வெளியின் கானல் காட்சியா என உறுதிப்படுத்த முடியாத சென்னை வனப் பெருமதியம். எதிரிலிருக்கும் மின்திரையில் ஓடிக்கொண்டிருந்த எழுத்தினோடு ஏதோ சிந்தனை வயப்பட்டிருக்கையில் காதில் மாட்டியிருந்த சென்ஹெய்ஸரில்… அட இது என்ன பூபாளம் மாதிரி இருக்கே… ஏதோ மேற்கத்திய செவ்வியல் இசை அல்லவா ஓடவிட்டிருந்தோம்… அதில் போய் பூபாள ஸ்வரக் கோர்வைகளா…

பொதுவாக மேஜர் (மற்றும் மூன்று) மைனர் ஸ்கேல்களில் இயற்றப்பட்டிருக்கும் மேற்கத்திய செவ்வியல் இசை வடிவங்களில் நம்ம ஊர் (கர்நாடக/இந்துஸ்தான இசை வடிவ) ரிஷபங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்காது. யார் இது இத்தனை துல்லியமாக கர்நாடக ராகத்தை மேற்கத்திய செவ்வியல் இசையில் கொண்டுபோய் விட்டது? இளையராஜா எப்போதோ ஏதோ சிம்பொனி என்றாரே, வெளியிட்டுவிட்டாரா? வேறு பெயரில் உலவுகிறதா?

மேலும் கவனித்ததில், இருபதாம் நூற்றாண்டு இசை வகை உறுதிப்பட்டது. சிம்பொனி எண் 66. ஹிம் டு கிளேசியர் பார்க். இசை அலன் ஹொவ்ஹனஸ். அமெரிக்கர். 1992இல் இந்த சிம்பொனி எண் 66ஐ வடிவமைத்துள்ளார்.

நிச்சயம் இவர் இந்தியா வந்திருக்க வேண்டும் எனக் கருதி இணையத்தில் தேடத் தொடங்கியதுமே, விக்கியிருந்தார்கள். [https://en.wikipedia.org/wiki/Alan\_Hovhaness]

1960 இந்தியாவில் தமிழ்நாட்டில் நாகூர் வரை வந்து கர்நாடக இசையை முறைப்படி பயின்றிருக்கிறார். இவர் வடிவமைத்த இசை ஆக்கம் ஒன்றை ஆலிந்தியா ரேடியோவில் அன்றே ஒலிபரப்பியுள்ளனர். மேலும் தகவல் விக்கிப்பீடியாவில்.

[https://www.youtube.com/watch?v=wQ3Wm5HiTrE]

இந்த விடியோவில் 2:00 நிமிடத்தில் தொடங்கும் நான் குறிப்பிடும் கர்நாடக ராக ஸ்வரக் கோர்வைகள். கர்நாடக இசை ரசிகர்களுக்குக் கேட்டதும் புலப்படும் பழக்கமான எளிமையான ஸ்வரக் கோர்வைகளே. தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளில் காலையைக் குறிப்பிட சூரியக் கிரணங்கள் தளும்பும் நீர்பரப்பின் உடன் கீபோர்ட்டில் ஒற்றை வாத்தியதில் எழுத்துக்கூட்டி வாசிக்கப்படும் ஸ்வரக் கோர்வை.

கேட்டுக்கொண்டிருந்தது சிம்பொனியின் முதல் பகுதி. மெதுவான கதியில் செல்லும் அந்தாந்தே. சிம்பொனியை இவ்வாறு மந்த கதியில் அறிமுகப்படுத்தும் வகை பீத்தோவன் காலத்திற்குப் பிறகான (அதாவது ரொமாண்டிக் காலகட்டத்திற்கு அடுத்ததான) அந்துவான் ப்ரூக்னர், குஸ்டாவ் மாலர் போன்றோர் கோலோச்சிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி – இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவனது எனலாம். ரொமாண்டிக் காலகட்டத்திற்கும் முந்தைய கிளாசிக்கல் (ஹெய்டன் மோசார்ட் போன்றோர் இருந்த காலம்), பராக் (பாஹ்க் இருந்த காலம்) காலகட்ட சிம்பொனிகள் வழக்கமாக வேகமான (அலெக்ரோ) கதியிலேயே தொடங்கப்பட்டு வந்தது.

அடுத்து வந்தது ஒரு அலெக்ரோ. (மேலுள்ள வீடியோவில் 10 நிமிடம் கழித்து இடம்பெறும்) வேகமான கதியில், ஜப்பானிய ஒலிகளுடன். ஹினாகோவிற்கு காதல் பாட்டு எனும் தலைப்பில். அலன் ஹொவ்ஹெனஸ் இந்தியாவிற்குப் பிறகு ஜப்பான் சென்று அந்நாட்டின் இசையிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த அலெக்ரோ பகுதி கேட்டதும் இளையராஜா பாட்டு மெட்டு நினைவில் எழும்பி… மெல்ல மெல்ல என்னைத் தொட்டு தென்றல் வந்து… ஏதோ ஒரு டப்பா படத்திற்கான ‘செமை’ பாடலின் முதல் இசைவரியைப் போலவே ஒலித்தது. யார் எவரது இசையால் எப்போது கவரப்பட்டு மரியாதை செய்தனர் என்றோ, அவ்வாறுதானா அல்லது என் இசைக் காதுகளின் வழக்கமான கோளாறா என்றோ தெரியவில்லை.

ஆனால் இது நிச்சயம் இளையராஜா கேட்டு ரசித்து மரியாதை செய்ததுதான்…

[https://www.youtube.com/watch?v=Wb9mYgkPcCs]

1979இல் ஸ்கை இசைக்குழுவில் எலக்ட்ரிக் கிடாரில் வடிவமைத்த ‘டான்ஸா’ எனும் தலைப்பிட்ட ஆக்கம். நம்ம ஊரில் எந்தப் பாட்டு என்று உங்களால் கண்டுகொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் இளையராஜா போற்றி (அல்லது தூற்றி) இல்லை.

(இப்படி ஒரு யாருக்கு யார் மரியாதை குவிஸ் நடத்தும் அளவு இசையிலும் இலக்கியத்திலும் தாக்கங்களைச் சேகரித்து வைத்துள்ளேன்…)

கடந்த மூன்று வருடங்களாகக் கர்நாடக இசை கேட்பதைத் தவிர்த்துத் (அதனாலேயே அதைப்பற்றி எழுதுவதையும் முடிந்தவரை தவிர்த்து — அப்படியும் ‘நண்பர்களே’ எழுத வைத்து விடுவார்கள்), தொடர்ந்து மேற்கத்திய செவ்வியல் இசை வடிவை ஆதி முதல் (14 நூற்றாண்டு மெடிவல் காலத்து இசையில் தொடங்கி) இன்றைய சமகாலம் வரை இயன்ற அளவு கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒரு கர்நாடக-மேற்கத்திய மரபிசை அறிமுக ஒப்பீட்டு புத்தகம் எழுதவே.

பழக்கமான இடத்தை விட்டு முயன்று விரும்பி முழுவதுமாய் விலகிச் சென்று புதிய பரிமாணங்கள் பழகிய புரிதல்கள் எனச் சில கண்டு தெளிந்து வருடங்களாய் மேலும் மேலும் ஏதேதோ புதிய திறப்புகள் உள்ளன என்றிருந்து இன்று ஒரு ஸ்வரக்கோர்வை ஒலித்த விநாடிகளுள் மீண்டும் இருந்த இடத்திற்கே வந்துவிட்ட உணர்வு பூபாளத்தை அலன் ஹெவ்ஹேனஸின் மேற்கத்திய செவ்வியல் வடிவில் கேட்டதும் ஏற்படுகிறது. கால இட உடல் கடல் கடந்த ஒற்றை நாத உறவின் உணர்வுப் பரிமாற்றம்.

*