அச்சுவை பெறினும்… வாசகி கடிதம்

Standard

arunn-novel-2-tதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்றத் தீ

என்று எங்கோ தமிழ்ப் பால் ஊட்டி வளர்த்திட்டதால், தமிழ்  தாய்மொழியாய் ஆனதில் பெருமையும் பெருமிதமும் கொண்ட “ழ”கரத்தை “ல” என்றும் “ள” என்றும் யாரேனும் கொல்லும் போது நியாயச் சீற்றம் அடையும் சாதாரணத் தமிழச்சி நான். விமர்சனம் செய்யும் தகுதி இல்லையென அறிந்து (அச்சுவை பெறினும்… நாவலைப் பற்றிய) சில கருத்துகளையும் எண்ணங்களையும் மட்டுமே பகிர்கிறேன் இங்கே.

நன்றியும் வாழ்த்துகளும்:

தமிழிலே எண்ணங்கள் தோன்றுவது அரிது. அவற்றைத் தமிழிலே எழுத்து வடிவமாக்கிப் படிப்பவர்களின் நெஞ்சைத் தமிழிலே தமிழால் தொடும்படியாகச் சிறப்பிப்பது அதனினும் அரிது. இதை அழகாகத் தருவித்த ஆசிரியர் அருணுக்கு இது கடவுள் (அருண் வகையில் திருவரங்கன் :)) தந்த வரப்பிரசாதம். தமிழில் ஒரு நல்ல எழுத்தினைப் படைத்திட்ட அருணுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.

பிடித்தவை:

நடைமுறையில் மிகுதியாக இருந்தாலும் சமுதாயக் கோட்பாட்டிற்கு எதிராக இருப்பதால் வெளிப்படையாகப் பேச அஞ்சி இருட்டிலேயே வசிக்கும் இல்புறக் காதலெனும் சர்ச்சையானத் தலைப்பைக் கதையின் கருவாக எடுத்துக்கொண்ட தைரியம்.

நடுவயது நெருக்கடியினால் (midlife crisis) ஏற்படும் மனக்குழப்பங்கள், விரக்திகள், பரிச்சயத்தால் ஏற்படும் அலுப்பு மற்றும் அவமதிப்பினை அழகாகக் கையாண்டது.

நம் தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் ஏற்ப நம் மனம் எவ்வளவு சாதுர்யமாகக் காரணங்களையும் காரியங்களையும் பின்னுகின்றது என்பதை அழகாக வெளிக்கொணர்ந்தது.

திருச்சி, ஶ்ரீரங்கம் ஊர்களை வருணணை மூலம் கண்முன்னே நிறுத்திய அழகு.

காதலில்லாத திருமணமும், திருமணத்தில் முடியாத காதலும், இரண்டுமே வீண். திருமண உடன்படிக்கைக்குள் காதல் அடங்கும். திருமண உடன்படிக்கை என்றும் காதல் உடன்படிக்கை என்றும் ஒருவனால் இரண்டு குதிரைகளை ஓட்ட இயலாது. இதை நியாயப்படுத்துவதற்கான ரங்காவின் சுவை மிக்க வாதங்களும் தர்க்கங்களும்.

பிடித்ததில் மிகவும் பிடித்தவை:

சின்னதாய் வந்தாலும் தன் வசதிக்கேற்ப நேர்மை விளம்பலை (convenience-based honesty) மிக யதார்த்தமாகவும், தெள்ளத் தெளிவாகவும் கோடிட்டுக் காட்டிய ரங்காவின் அண்ணியின் வாதம்.

ரங்காவின் எண்ணங்கள், உணர்ச்சிகள், வாதம் (ஆண் வாதம்) ஒரு ஆணாக ஆசிரியருக்குப் பரிச்சயமானவை. ஆனால் ரேஷ்மாவின் எண்ணங்கள், உணர்ச்சிகள், வாதம் (பெண் வாதம்) – அவற்றை மிகவும் நுணுக்கமாகவும், நிதர்சனமாகவும் வெளிப்படுத்தியது ஆசிரியரின் வெற்றி.

சில கேள்விகள்/நெருடல்கள்:

ரங்கா மணமுடித்தது ஒரு “வேதவல்லி”யாகத்தான் இருந்திருக்க வேண்டுமா?  ஏன் அவள் ஒரு ப்ரியாவாகவோ, ஒரு டயானாவாகவோ இருந்திருக்கலாமோ? ரங்காவிடம் ஒரு தன்னுணர்வற்ற பிறழ்ச்சி (unconscious bias) இருந்ததா? ரங்கா ரேஷ்மாவை விடுவதற்கு இது ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடுமோ?

காதல் காதல் காதல், காதல் இல்லையேல் சாதல் சாதல் சாதல் என்ற உண்மையானக் காதலாக இருப்பின் அது எல்லா எதிர்ப்புகளையும் தகர்த்தெறிந்து வெல்லும் சக்தி கொண்டது. ரங்காவால் பதினைந்து வருடங்கள் ரேஷ்மாவின் நினைவே இல்லாமல் எவ்வாறு காலம் தள்ள இயன்றது? அக்காதலை மறுபடியும் உயிர்ப்பித்தெடுக்க ஒரு நண்பியின் மரணம் தேவைப்பட்டதோ?

இவை எனக்குப்பட்ட நியாயமான கேள்விகள் என்றாலும் ரங்காவிற்கும் ரேஷ்மாவிற்கும் தத்தம் நியாயமே அவர்களின் உண்மை – அவர்களின் உண்மையே அவர்களின் நியாயம் என்பதையும் உணர்வேன்.

இல்புறக் காதல் பற்றி ரங்காவின் வாதங்கள், ரேஷ்மா பக்க நியாயங்கள், டால்ஸ்தாயின் ‘ஆணா காரனின்’ மூலம் அவருடைய கருத்துகள் என்பவற்றை விரிவாக விவரித்திருக்கிறார் ஆசிரியர். இல்புறக் காதலைப் பற்றிய அவரின் சொந்தக் கருத்தை அறிய அவா.

அருண் மேன்மேலும் படிப்போரைச் சிந்திக்க வைக்கும், அதே சமயத்தில் இனிமைத் தமிழின் சுவையுண்டு மகிழவைக்கும் நாவல்களை எழுதித் தன்வகையில் தமிழ்த்தொண்டாற்ற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இப்படிக்கு
சங்கீதா.