அறிவியலை உளறல் செய்தியாக்குவது எப்படி?

Standard

சாதாரண அறிவியல் கூற்றை உளரல் செய்தியாக்குவது எப்படி? இன்றைக்கான உதாரணம் ஒன்றை மட்டும் வழங்குகிறேன்.

இயற்பியலாளர்கள் பின்வரும் தலைப்பு, சுருக்கம், உள்ளடக்கம் கொண்ட ஒரு கட்டுரையை எழுதுகிறார்கள்.

Screen Shot 2016-07-10 at 10.11.36 AM

(கட்டுரையின் சுட்டி:  http://dx.doi.org/10.1088/0143-0807/37/5/055001)

அதைப் பற்றிய நாளிதழ் செய்தியை வழங்க, இவ்வாறான தலைப்பைத் தேர்வு செய்யவேண்டும்.

Mumbai physicists uncover link between Lord Shiva, Mona Lisa

‘மும்பாய் இயற்பியலாளர்கள் மோனலிஸாவிற்கும் இறைவன் சிவபெருமானுக்கும் உள்ளத் தொடர்பைத் திறக்கிறார்கள்.’

வாசித்ததுமே மகிழ்ச்சியை வெளிப்படுத்த இந்தியன் என்று காட்டிக்கொள்ளவேண்டிய அனைவரும் இந்நேரம் பிராந்திய பாரம்பர்யங்களைக் களைந்து தேசியமயமாக்கப்பட்ட பாரம்பர்ய நாட்டியமான பாலிவுட் டான்ஸ் ஆடத்தொடங்கியிருப்பார்கள். (1. பாலிவுட் டான்ஸ் என்பது ஆங்காங்கே ஆடைக்குள் எஞ்சும் உடல் பாகங்களை இந்தியக் கொசு விட்டு விட்டுக் கடிக்கையில், ஆடைக்கு வெளியே இருக்கும் அதே உடலின் அநேக பாகங்களுக்கு நேர்வது. 2. தமிழர்கள் கோடம்பாக்கம் கொசுக்கடி கோலிவுட் டான்ஸ்தான் ஆடுவார்கள் என்று இங்கு உளவியல் கருத்தை சைக்கிள்கேப்பில் சொருகக்கூடாது. உண்மையான தமிழனுக்கு ஆங்கிலம் வாசிக்க மனம் வராது. செய்தியையே வாசித்திருக்க மாட்டான். இல்லாவிட்டால், இந்நேரம் முகநூல் டுவிட்டர் தொடங்கித் தமிழனின் பாரம்பர்ய வாசிப்புலகமே செய்திகேட்டதும் ‘சும்மா அதிருதில்ல’ என்றாகியிருக்காதோ…)

அடுத்து, உள்ளடக்கத்தில் மேற்படி கட்டுரையை ஒருமுறையும் சுட்டக் கூடாது; யாராவது சென்று வாசித்துவிட்டால் நீங்கள் உளறுவதை யார் வாசிப்பது? மேற்படி கட்டுரை ஆசிரியர்கள் அதைப் பற்றி நேரடியாகக் கூறியது எவை என்பதை வெளியேவிடக் கூடாது. உண்மை சப்பையான வலிமைகொண்டது. சுவாரஸ்யமான செய்தியாக்க முடியாததாயிற்றே. நீங்களும் அந்தக் கட்டுரையைப் படித்தோ, புரிந்துகொள்ள முயன்றோ மேலதிகமாக உங்கள் வயிற்றுப்போக்கான எழுத்தில் எதையும் விளக்க முயலக்கூடாது. அதற்கு உழைப்பும் சிந்தனையும் தேவைப்படுமே. இருந்தால் இந்த வேலையில் நீடிப்பது எவ்வாறு?

அடுத்ததாக, முன்னூறு காத தூரம் தொடர்புடையதாகக் கருதலாம் எனும் ஒன்றை அந்த இயற்பியல் கட்டுரையின் உள்ளடக்கத்துடன் அர்தநாரீஸ்வரத் தொடர்புகொண்டது போல நீங்களே பாவித்துக்கொண்டு, அதை முக்கியப்படுத்தி அதைப் பற்றி அந்த இயற்பியல் கட்டுரைக்குச் சம்பந்தமே இல்லாத நான்கு பேர்களிடம் எதையாவது ஒலித்துண்டங்களாய் பெற்று உங்கள் வயிற்றுப்போக்கில் வழங்க வேண்டும். செரித்திராத பண்டங்கள் போல.

பிறகு அந்த வெளிக்கியை முகரும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

ஏற்கெனவே அறிவியல்பால் பேரார்வம் அவர்களுக்கு. உலகச் சிந்தனைகள் அனைத்துமே இந்தியாவில் தோன்றியவை என்று பொருள்படுமாறு காலையில் காபியுடன் வழங்கிவிட்டால் வேறு என்ன வேண்டும்? சர்வம் இந்திய உருவாக்கம். வரம்பற்ற உளறல்களையும் சேர்த்து.

(தப்புதான். வருடங்களாக வீட்டில் தினசரி வாங்குவதையே நிறுத்திவைத்திருப்பவன் அவ்வப்போது இணையத்தில் அவற்றை மேய்வது தப்புதான். செய்ய மாட்டேன். குற்றுயிரோடிருக்கும் அறிவியலையும் தினசரி செய்திகளில் சாவடிப்பதை உட்டுடுங்களேன், ப்ளீஸ்…)

*

கிரேக்கர்கள் கி.மு.வில் கண்டுசொல்லிய தங்க விகிதம் (https://en.wikipedia.org/wiki/Golden_ratio) பிறகு பல பொருட்களில், இயற்கையில், கலைகளில், கட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது. கிரேக்கர்களுக்கு முன்னரே இந்தியப் பிரதேச மக்கள் இதைக் கண்டறிந்திருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் இன்றுவரை ஏதுமில்லை. நாளை கண்டுபிடிக்கப்படும் என்பதற்காக இன்றே நாம் கொண்டாடிக்கொள்ளலாம். புராண காலங்களிலிருந்தே நாம் பகுத்தறிவாளர்களாயிற்றே. தங்க விகிதம் இன்று உங்கள் தொலைக்காட்சி, கணினி, மதிபேசி திரைகளின் அளவுகளில் உள்ளது (நீளம் / உயரம் அல்லது உயர/அகலம் ~ 1.6). மனிதக் கண்களின் பார்வை ஓட்டத்திற்கு ஏற்றவாறு அமையும் என்பதால்.

இதைப் பற்றியெல்லாம் புத்தகங்களும் ஆய்வு, விளக்கக் கட்டுரைகளும் ஏராளம் உள்ளன. கல்வியை இன்றும் நம்பும் மாணவர் தங்கள் இந்தியப் பள்ளிப் பாடத்தில் படிக்கும் விஷயமே. என் சிந்தனை முன்னேற்றத்திற்குக் கல்வியை மட்டும் நம்பித் தொலைத்ததால், நானே என் பள்ளிப்பருவத்தில் வாசித்துள்ளேன்…

இந்தத் தங்க விகிதம் தெளியும் இன்னொரு விஷயத்தையே மேற்படி கட்டுரையின் ஆசிரியர்கள் கண்டெடுத்துள்ளார்கள். இயற்பியலாலர்களுக்கு மேலதிகமான வீட்டுக்கணக்கு போன்றது இந்தக் கட்டுரையில் உள்ள ஆய்வு. அவர்களின் கட்டுரைத் தலைப்பில் வரும் Yet another ஐ கவனித்தால் புரியும்.

சிலிர்த்துப் போய் சில்லறையை விட்டெறியும் அளவிற்கு நமது சிவனுக்கு எதுவும் நேர்ந்துவிடவில்லை.

*

மருந்தீஸ்வரர் கோயிலில் போரோமியன் வளையங்கள் — இந்தியர்கள் பெருமைகொள்ள என்பதற்கில்லை, நமது சுற்றத்தை பெருமைகளை அன்றாட சிந்தனையில் வைப்பதற்கான கருத்துகளை எழுதுகையில் பகுத்தறிய முயல்பவர் எவ்வாறு செய்வார் என்பதற்கு உடனடி உதாரணம் இந்தச் சுட்டியின் கட்டுரையில் உள்ளது. (பாராட்டுமுகமாக அந்தத் தொடர்பை கண்டடைந்த இயற்பியலாளரைத் தான் குறிப்பிடுகிறேன். கட்டுரையை எழுதிய என்னை அல்ல.)