சென்ற வருடம் [ Feb 2014 ] விஷ்ணுவின் மார்ப்பைப் பிளந்து என்று கோயில்களினுள் நாம் இன்றும் (என்றும்?) காணும் உதாசீனங்கள் அக்கறையின்மை பற்றிப் புலம்பியிருந்தேன். உதாரணங்களாக அவ்வருடப் பயணங்களில் கண்ட சில காட்சிகளைப் பகிர்ந்திருந்தேன். அவற்றில் ஒன்றான ஸ்ரீரங்கம் கோயில் தாயார் சந்நிதியின் பிரகாரத்தில் ராமானுஜர் கூடத்தின் முகப்பில் தென்பட்ட காட்சியே என் கட்டுரைத் தலைப்பாகியிருந்தது.
‘விஷ்ணுவின் மேல் சிமெண்ட்’ செயல் அந்த வெள்ளி மண்டபம் செப்பனிட உதவிய உபயதாரர் (ஆத்திகர்) பெயர் பலகை வைப்பதற்கான பக்கவிளைவு.
எழுதிய சில தினங்களில் சார்பான ஒரு பதிவை [ http://www.jeyamohan.in/47180 ] ஜெயமோகன் தன் தளத்தில் எழுதியிருந்தார். ஓரிருவர் மின்னஞ்சலில் ‘உங்கள் அறியாமையை கண்டிக்கிறேன் (உதாசீனங்களுக்கு பக்தர்கள்தான் காரணம் என்று நான் எழுதிவிட்டிருந்ததால்). ஆனால், இவ்விஷயத்தை குறிப்பிட்டதற்கு நன்றி. கேஸ் போடப்போகிறோம்…’ என்று எழுதியிருந்தனர்.
ஒன்றரை வருடம் கடந்து, இருதினங்கள் முன்னர் (செப்டம்பர் 2015) ஸ்ரீரங்கம் கோயிலின் அதே இடத்தில் இருந்தேன். கண்டது இதை.
ஆமாம். விஷ்ணுவின் மார்பின் மீதிருந்து அந்த சிமெண்ட் விளம்பர உதாசீனம் களையப்பட்டுவிட்டது.
கலியுக ஆச்சர்யமே.
உப்புக்காகிதத்தால் தேய்க்கப்பட்டு மார்பும் மார்ப்பு சார்ந்த கல் தூண் பகுதிகளும் சுத்தமாய் உள்ளது. தரையின் சிறுகுழிப் பள்ளங்களில் தங்கிவிட்ட சிமெண்ட் மிச்சங்கள் மட்டுமே நடந்தேறியிருந்த உதாசீனத்தின் எச்சங்கள்.
விஷ்ணு பொறுப்பார்.
இனி?
One down, several more to care… அவற்றில் சில உதாசீன உதாரணங்கள் மேற்படிக் கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.
நம் மரபையும் அதன் சின்னங்களையும் பேணுவது நம் கடமை, உரிமை என்கிற அடிப்படை உணர்வு தொடர்ந்து நம்மிடம் ஆக்கபூர்வமாய் செயல்பட்டால்…
சரி, சரி, நிறுத்திக்கொள்கிறேன். இணையத்தில் நான்கு பத்தி எழுதுவதற்குள் நான் மட்டுமே எழுத்தாளன் என்று நிலை மயங்கி எழுத்து அறிவுஜீவனத்துவத்திற்குள் சென்றுவிடுகின்றது.
ஏற்கெனவே எழுதியதை வாசித்தோ கேள்விப்பட்டோ அவரவ தமதம தறிவறி வகைகளில் அக்கறையுடன் செயல்பட்ட அனைவருக்கும் நன்றி என்று இங்கு எழுதிவைத்து நிறுத்திக்கொண்டால் போதும் என்றே தோன்றுகிறது. என்வழி இயல்வது எண்ணும் எழுத்துமே…