காதல் கணங்கள்

Standard

அலறும் மலரைப் போல
அலர்ந்த அருணனைப் போல
நீலவண்ணக் குளிரைப் போல
நீந்திவரும் நெருப்பைப் போல
நேற்று ஒலித்த கனவைப் போல
நைச்சிய நிழலைப் போல
காதல் கணங்கள்.

காத்திருந்த கன்னிவெடி போல
கால்மாறிய நாட்டியம் போல
பொங்கிவிட்ட பொழுதைப் போல
புன்னகைத்த புலியைப் போல
பகலிற் புகுந்த கள்வனைப் போல
புத்தம்புதிய பாக்குவெட்டிப் போல
காதல் கணங்கள்.

சிக்கிமுக்கிச் சிறகைப் போல
சிலந்திவலை சீற்றம் போல
பரமபத சோபனம் போல
பங்குசந்தைப் பதாகை போல
பாய்ந்துவரும் பட்டொளி போல
பாதி நமுத்தப் பழங்கதை போல
காதல் கணங்கள்.

நலுங்கிவிட்ட நளினம் போல
மழுங்கிவிட்ட மௌனம் போல
நாற்பதைக் கண்ட நாய் போல
நாலும் தெரிந்த குழந்தை போல
மேகதூத மேட்டிமைப் போல
மேலைக்காற்றின் மௌட்டீகம் போல
காதல் கணங்கள்.

பயமிலா கவிதை போல
முகமிலா மோட்சம் போல
பொருள்படா புதினம் போல
போன சென்ம புத்தன் போல
மரத்தில் மறைந்த மாமதம் போல
மனத்துள் மணந்த மன மதனைப் போல
காதல் கணங்கள்.

*