அறிவியல் விளக்கங்கள் – உரை, காணொளி

Standard

சில வாரங்கள் முன்னர் பத்து முதல் பன்னிரண்டாவது வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்காக ஐஐடி மெட்ராஸ் நடத்திய முகாம் ஒன்றில் தமிழில் வெளியாகியுள்ள என் அறிவியல் புத்தகங்களின் உள்ளடக்கத்தை முன்வைத்து உரையாற்றினேன்.

சென்னையைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் இருந்து என்றாலும் மதுரை போன்று ஓரிரு தென் மாவட்டங்களில் இருந்தும் சிலர் வந்திருந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட என்று மூன்று நாட்கள் நிகழ்ச்சியின் வருகைப் பதிவேடு சொன்னாலும் கடைசி தின என் உரையில் அதில் பாதிக்கும் குறைவாகவே வந்திருந்தனர். தொடங்குவதற்கு முன்னரே நம் பேச்சு அத்தனைப் பிரசித்தம்.

எதிர்பார்த்ததைப் போலவே பள்ளி மாணவர்கள் அசட்டையின்றி அமைதியாகக் கவனித்தபடி, நிறைய ஆர்வக் கேள்விகளுடன், நிறைய புதுக் கேள்விகள் பிறக்கும் சுவாரஸ்யமான பதில்களுடன், முக்கால் மணி உரையை ஒன்றரை மணி நேரம் நீட்டித்து PET பாட்டிலில் என்னை நிறைய தண்ணீர் குடிக்க வைத்தனர்.

அறிவியல் என்றவுடன் ‘இதெல்லாம் படிச்சா தல வலிக்குது சார்…’ என்று காலேஜ் சென்றவர்கள போல ஈன ஸ்வரத்தில் முனகாமல், எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் படத்தை திரையில் கண்டவுடன் (விடையைக்) கூவினர்.

தமிழாங்கில உரையின் முதல் சில நிமிடங்களை இங்கு காணொளியாய் வழங்கியுள்ளேன். வரவேற்பிருந்தால் அவகாசம் விட்டு மிச்சப் பகுதிகளையும் வலையேற்றுகிறேன்.

முகாமில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற சில மாணவர்களுக்கு என் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டதாம். புரட்டிப் பார்த்ததால் வந்த கடுப்போ என்னவோ, முகாமில் அவர்கள் மிகவும் ரசித்த உரை என்று என்னுடைய பேச்சிற்கு ஏகோபத்திய பின்னூட்டம் வழங்கிச் சென்றுள்ளனர், அனுகூல சத்ருகள். ‘அடுத்த ரவுண்டில் சென்னையைச் சுற்றியுள்ள காலேஜ் ஆசிரியர்களுக்கு என்று இதைப்போலவே…’ ஓரிரு வாரங்கள் தொடர் அன்புத்தொல்லை வழங்கிய ஆர்கனைஸரிடமிருந்து தலைமறைவாகியுள்ளேன்.