எய்ன் ராண்ட் புத்தகங்கள், கருத்துகள் எதையுமே இதுவரை வாசித்திராத புத்திசாலி வாசகர்கள் அடுத்த மூன்று பத்திகள் தவிர்த்து வழக்கமான அவரவர் கவனம் அவகாசம் அவசரம் பொறுத்து கட்டுரையை நேரடியாக வாசிக்கலாம்.
*
அவர்களின் ரத்தக்கொதிப்பை அதிகரிக்க இக்கலிகால உலகில் அமெரிக்காவில் கூட பல அரைகுறைத்தனங்கள் பொதுநலச் சேவையாய் அறிவுஜீவியல்லாதவர்களால் அன்றாடம் நடந்தேறுவதால் இக்கட்டுரையையும் வாசிக்கவைப்பானேன் என்கிற சுயநலமற்ற altruist மனநிலையில் ‘எய்ன் ராண்ட் பக்தர்கள் வாசிக்க வேண்டாம்’ என்ற எச்சரிக்கை வாக்கியத்துடந்தான் கட்டுரையைத் தொடங்கவேண்டும் என்றிருந்தேன். ஆனால், உண்மையான எய்ன் ராண்ட் பக்தர்கள் எப்படியும் வேறு எவர் எழுதும் எதையுமே (அன்றும், இன்றும், என்றும்…) வாசிக்க மாட்டார்கள் என்பதால், எச்சரிக்கை விடுக்க வேண்டிய அவசியமில்லை என்றாகிவிடுகிறது.
அதனால், மற்ற எய்ன் ராண்ட் அபக்த அரைகுறை வாசகர்களுக்கு மட்டும் ஒரு முன்விளக்கம் அளிக்கிறேன். எய்ன் ராண்ட் தன் Fountain Head புத்தகத்தில் அதன் நாயகன் வாயிலாகக் கட்டடக் கலையைப் பற்றி சில கருத்துகளை முன்வைத்திருப்பார். இக்கட்டுரையின் நீளம் கருதி, ஒற்றை வாக்கியச் சுருக்கமாய் அக்கருத்துகளின் பிரதான வாதம் இதுதான்: கட்டடங்கள் அவற்றின் வடிவம் மனிதன் காண்பதற்கு ’அழகாய்’ உள்ளதோ இல்லையோ, மனிதனுக்கான அவற்றின் ‘செயல்பாட்டு உபயோகம்’ எவை என்பதை முன்னிருத்தியே வடிவமைக்கப்படவேண்டும்.
இக்கருத்தாக்கம் கட்டடக்கலை அதைச்சார்ந்த பல (மெக்கானிகல், சிவில் போன்ற) பொறியியல் துறைகளின் வல்லுனர்கள் மத்தியில் புதிதல்ல என்றாலும், இதைப் பற்றி அறிமுகம் இருந்தால் உங்களுக்கு இக்கட்டுரை வேறு திறவுகளையும் அளிக்கலாம்.
*
ஸ்கை-ஸ்க்ரேப்பர்ஸ் எனப்படும் வானை முட்டும் அடுக்குமாடிக் கட்டடங்கள் இருபதாம் நூற்றாண்டில் இருந்து உலகில் பிரபலம். இந்தியாவிலும் இன்றைய மென்பொருள் வளாகங்களில் தொடங்கி அடுக்ககங்கள் வரை இந்த மல்டை-ஸ்டோரி கட்டட வடிவமைப்பே கையாளப்படுகிறது.
கட்டடங்களை பொறியியல் ஆக்கங்கள் எனலாம். எக்கட்டடமும் பார்ப்பதற்கு ‘அழகு’ள்ளதாகவும் அதன் உபயோகத்திற்கேற்ப ‘செயல்பாடு’ உடையதாகவும் அமைந்திருப்பது அவசியம் எனலாம். இந்த இரண்டு முக்கியமான தேவைகளில் ஒன்றைத் துறந்து மற்றதை மேம்படுத்துதல் அவசியமா? உதாரணமாக, அழகு பற்றி கவனிக்கவேண்டியதில்லை, செயல்பட்டால் போதும் என்கிற வகையில் பல குடியிருப்புகளை இந்தியத் திருநாட்டிலும் அன்றாடம் உருவாவதை பார்க்கவே செய்கிறோம். புறாக் கூண்டுகளில் மனிதன் எவ்வாறு வாழ இயலும் என்கிற கேள்விக்கு பதிலாய்.
கட்டடக் கலையின் பிரதான அங்கமான பொறியியல் வடிவமைப்பு வழியே கட்டடங்களை (மட்டுமல்ல, எப்பொருளையுமே) இவ்வின்ன வகைகளில் ‘டிஸைன்’ செய்வது எதற்கு? வடிவமா, செயல்பாடா, எதை ஒரு பொறியியல் ஆக்கம் பெற்றிருக்கவேண்டும்? எப்பொருளையும் வடிவமைப்பதில் இது ஆதாரக் கேள்வி. இக்கேள்விக்கான வடிவமைப்பவரின் பதிலாகவே அப்பொருள் உயிர்த்தெழும்.
இயற்கையை கவனித்து மனிதன் நூற்றாண்டுகளாய் செம்மைப்படுத்தி பல ஆக்கங்களை உருவாக்கிக்கொண்டான் என்று வைத்துக்கொள்ளலாம். இதற்குப் பல உதாரணங்கள் உடனடியாக உண்டு. குகை வடிவிலிருந்து இக்ளூ செய்தான் எனலாம். அதிலிருந்தே டாபர்னக்கிள் செய்தான் எனலாம். மரப் பொந்துகள், இயற்கை நிலவறைகள் என்று பலவற்றையும் கண்டு தன் வீடுகளின் ‘டிஸைன்களை’ சீராக்கித் திருத்திக்கொண்டான் எனலாம். பறவையிலிருந்து விமானம், திமிங்கலத்திலிருந்து சப்மரைன், ஸ்டான்லி குப்ரிக்கின் ‘2001 யெ ஸ்பேஸ் ஒடிஸி’ (மூலம்: ஆர்தர் க்ளெர்க் புத்தகம்) திரைப்படத்தின் முதற்காட்சியினால் பிரபலமான ஆதிமனிதக்குரங்கின் கையிலிருந்த எலும்புத்துண்டிலிருந்து மனிதனின் முதல் கொலைக்கருவியான கோடாலி, 1940இல் ஸ்விட்ஸர்லாண்ட் ஜுரா மலைகளில் உலவிக்கொண்டிருந்த ஜியார்ஸ் டி மாஸ்ட்ரெலின் ஜீன்ஸில் ஒட்டிய காக்கிள்-பர்களிலிருந்து வெல்க்ரோ… இப்படியே பல வடிவங்கள். பொருட்களின் வடிவமைப்பு (டிஸைன்) செயற்கையானவை என்பதால், இயற்கையை ஒத்தப் பிரதியெடுக்க முடியாதென்றாலும் அடிப்படை ‘ஐடியா’க்கள் பலதும் இயற்கையிலிருந்து பெறமுடிந்துள்ளது.
இயற்கை மனிதனை ஒருவாராகவும், மரங்களையும் மலைகளையும் வெவ்வேறு வாராகவும் உருவாக்குவது அவ்வவற்றின் நேர்த்தியான செயல்பாட்டிற்கு எனலாம். இக்கூற்றை நிறுவவதற்கே மனிதனுக்கு பல ஆய்வுகளும் புரிதல்களும் தேவைப்பட்டது. இயற்கையின் ‘டிஸைன்’ ரகசியங்களில் ஆர்வமிருப்பவர்கள் 1917இல் Darcy Wentworth Thompson ஆய்ந்து எழுதிய மகாத்தடிமனான Of Growth and Form என்ற கிளாஸிக் புத்தகத்தில் தொடங்கலாம். இன்றைய தேதியில் மற்றொரு புத்தகம் Steven Vogel எழுதிய Cats’ Paws & Catapults – Mechanical Worlds of Nature & People.
இயற்கை செயல்பாட்டிற்குதான் தன் பொருட்களை வடிவமைப்பதாய் கருதுகிறோம். அதாவது, மனிதன் காண்பதற்கு அழகாய் இருக்க வேண்டும் என்பதற்கு (மட்டும்) இல்லை. செயல்பாட்டினாலேயே பெற்ற வடிவம், நாம் பார்க்க அழகானதாய் அமைவது, வடிவாய் அமைவது தற்செயல். போனஸ். இப்படித்தான் இன்று கருதுகிறோம் (இது ஏன் என்பதற்கும் மேற்படி புத்தகங்களிலும், சார்ந்த தலைப்புகளில் ஆய்வு முடிவுகளிலும் விளக்கங்கள் உள்ளன. கட்டுரை அவற்றை விவரித்து அல்ல என்பதால், இங்கு தவிர்ப்போம்).
வடிவமா செயல்பாடா என்பதில் செயல்பாட்டிற்கே முக்கியத்துவம் என்பது தற்கால கட்டடங்களுக்குப் பொருந்தலாம். ஆனால் தொன்மையான நம் இந்தியக் கோயில் கோபுரங்களுக்குப் பொருந்திவரும் என்று தோன்றவில்லை.
கோயில் கோபுரங்களின் வடிவமைப்பு, உருவாக்கம், செயல்பாடு அனைத்துமே தற்கால கட்டடக் கலையின் டிஸைன் தாத்பர்யத்திலிருந்து மாறுபடுபவை என்றே கருதுகிறேன்.
இங்குதான் எய்ன் ராண்ட் நாயகன் ஹொவார்ட் ரோர்க் பரிந்துரைக்கும் கட்டடங்கள் அவற்றின் வடிவம் ‘அழகாய்’ உள்ளதோ இல்லையோ, அவற்றின் ‘செயல்பாட்டு உபயோகம்’ என்பதை முன்னிருத்தியே வடிவமைக்கப்படவேண்டும் என்கிற கருத்தாக்கத்திலிருந்தும் கோயில் கோபுரங்கள் வேறுபடுகின்றன என்று கருதுகிறேன்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பிரபலமான கட்டடக் கலைஞர் ஃப்ராங் ல்லாயிட் ரைட்-டை வைத்து மாடல் செய்த அவள் நாயகன் ஹொவார்ட் ரோர்க் சொல்லும் ‘வடிவமா செயல்பாடா’விற்கான கருத்துகள் முழுவதும் ஒருபக்கச் சார்புடையவை. எய்ன் ராண்டிற்கு இந்தியாவைப் பற்றி அதிகம் தெரியாது. தெரிந்துகொள்ளவே முனையவில்லை. அது ஒரு இருண்ட பிரதேசம். பொருட்படுத்தத் தேவையற்ற ஆசிய விரயம்.
*
பல்துலக்கும் ப்ரஷ் பார்பதற்கு வடிவாய் அழகாய் இருக்கவேண்டியது முக்கியமா அல்லது கடைவாய் பற்களின் உள் ஈறுவரைச் சென்று துலக்கும் அதன் செயல்பாட்டை, வேலையை செய்யுமாறு வளைந்து நீண்டு, பார்ப்பதற்கு ஒல்லி ஈர்க்குச்சியாய் அழகற்றும் இருந்தால் பரவாயில்லையா?
செயல்பாடுதான் முக்கியம் என்றால், ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ அவற்றை உபயோகித்து தேய்த்தால் பல் உறுதியாக இருக்கும் என்று கூறுவதிலேயே ப்ரஷ்ஷின் ‘வடிவமைப்பு’ அடங்கிவிடுகிறதே. கடைவாய் வரை உள்ளேசெல்லும் வளையும் குச்சி. கடித்தால் முனையில் தன்னிசையாய் நார்களாய் பிரிந்து ‘ப்ரஷ்’ செய்ய ஏதுவாய். எதற்கு அதை தனியாக பிளாஸ்டிக்கில் ஒரே வடிவில் செய்து அங்காடி ஷெல்ஃபுகளில் அரங்கேற்றவேண்டும்? வீட்டுக்கு ஒரு ஆலும் வேலும் வளர்த்தெடுக்க இயலாது என்பதாலா? கடையில் விற்கலாமே. ஒவ்வொருவருக்கும் ஒரு குச்சி. தினமும் வாழை இலை விற்றோமே ஒரு காலத்தில். வாழை இலையில் இட்டுத்தான் நாங்கள் உண்போம். கைகளால். ஸ்பூன் கிடையாது. பொருட்களின் மறுசுழற்சி பற்றி பிரத்யேகமாய் பேசுவதற்கு இன்று கல்வித்துறையே உள்ளது. ‘ரீசைகிளபிள் மேனுஃபேக்சரிங்’ என்று புதிய விஷயம் போல பேசுகிறோம். ஆலும் வேலும் வாழையும் பாளையும் அதைத்தானே செய்தது. இயற்கையுடன் ஒருமித்த இயல்பான உபயோகங்கள். வடிவமைப்பில், வடிவில் சிறு குறைகள் இருந்தாலும், செயல்பாட்டில் சீராகவே இருந்ததில்லையா?
கட்டடக்கலையிலும் தொன்மையிலிருந்து இது இயங்கிவந்துள்ளது. வடிவமா செயல்பாடா விஷயம். எகிப்திய பிரமிடுகள் ஏன் அவ்வடிவம் பெற்றன? அழகிற்கா, உள்ளே அரசர்கள் ‘இறந்தபின்னும்’ மறு வாழ்வில் உஜ்ஜீவிக்க ஏற்றவாறு அமைக்கவேண்டிய வடிவமே அதுதான் என்பதாலா? இயற்பியலில் நியூட்டனின் ஒரு கண்டுபிப்பான வெண்ணொளியின் ’ரெயின்போ’ நிறமாலை, அதைக் கண்டுபிடிக்க அவர் உபயோகித்தது கண்ணாடி ‘ப்ரிஸம்’. பிரமிடு வடிவம். எகிப்திய பிரமிடுகளுக்குள் சூரிய ஒளி கூம்பில் தொடங்கி, வெவ்வேறு கோணங்களில் பொருத்தியிருக்கும் பல கண்ணாடிகளில் பிரதிபலித்து, எங்கு வேண்டுமானாலும் பாயுமாறு அமைந்துள்ளதாம். இது உள் வடிவம். வெளியே நைல் நதிக்கரையில் அருகருகே கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய மூன்று பிரமிடுகள் தவிர சிறியதாய் சில பிரமிடுகள், அனைத்தையும் ஒன்றாக வானிலிருந்து நோக்கினால், அவை ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது. வானில் இருக்கும் ‘ஓரையன்’ நட்சத்திரக்கூட்டத்தின் வடிவம். அருகே ஆகாச கங்கை என நைல் நதி. மூவாயிரம் வருடங்களுக்கு முன்னால் எகிப்தியர்கள் அண்ணாந்து தங்கள் வானவெளியில் கண்ட ஒரு வானியல் காட்சியை, கீழே பல்லாயிரக்கணக்கான அடிமைகளைக் கொண்டு கட்டியெழுப்பினார்களா? அரசர்களுக்கான இறந்தபிறகு போகவேண்டிய அவர்களுடைய ‘சொர்க்கம்’. அவர்களின் ‘நெட்’ வானில் மட்டுமில்லை, ‘கெப்’ பூமியிலும் சொர்க்கம், பிரமிடுகளாய்.
வடிவமைப்பதன் தாத்பர்யம், வடிவத்திற்கா செயல்பாட்டிற்கா? பிரமிடுகளில் இரண்டும் உண்மைதானே.
*
கிரேக்க-ரோமானிய கட்டடக்கலையில் மிகை இருக்கலாம். தேவையற்றவை இருக்கலாம். எய்ன் ராண்ட் நாயகன் ஹௌவார்ட் ரோர்க் விமர்சிக்கும் வீண் பகட்டு வெளிப்படலாம். ஆனால் அனைத்துமே தேவையற்றவை என்றாகிவிடாது. கட்டடக்கலையில் ‘உபயோகம் தரும் வடிவமே அழகு’ என்பது ஒரு பக்கமே. ‘அழகு தரும் வடிவமும் உபயோகமே’ என்பதிலும் உண்மை உள்ளது.
கோயில் கோபுரத்தின் வடிவம் தொலைவில், அருகில் இரண்டிலும் பார்பதற்கு விஷயபூர்த்தி ஏராளம். காலை அகட்டி வாளேந்தி நிற்கும் ஆணின் இடை விறைப்புடன் சரேலென்று இறங்கும் கோணம். கையில் தாமரை எந்தி, முகத்தில் நாணம் ததும்ப நிற்கும் பெண்ணின் வளைவுடன், துவளும் கோணம். உலகை ஆச்சர்யத்துடன் எதிர்கொள்ளும் குழந்தையின் தள்ளாட்டத்துடன் முழங்கால் மடங்கித் தத்தும் நளினம். அனைத்துமே இந்திய நாட்டுக் கோபுரங்களின் கோணங்களில் உண்டு. தொலைவில் இருந்தே காணலாம்.
நிச்சயம் நம் இந்திய நாட்டில் பல உள்ளன. அருகில் சென்றால் கலை, கட்டடக்கலை, சிற்பக்கலை. அதன் நுண்மைகள் அள்ளக் குறையாதவை. கோயில் கோபுரம் அழகிற்குக் கட்டுவதே. அதன் செயல்பாடு அழகாய் இருப்பதே. ரம்மியமாய் இருப்பதே. பிரும்மாண்டமாய், பொலிவாய், கம்பீரமாய், கலையாய் இருப்பதே. பொறியியல் செயல்பாடாய் அக்கட்டடத்தை நோக்கினால், ஒவ்வொரு கல்லும் அதன் மீதுள்ள கோபுர மீதியைத் தாங்கவேண்டும். அவ்வளவே. இது எக்கட்டடத்திற்கும் உண்மையே.
கோபுரங்களின் செயல்பாடு இத்துடன் முடிவுறவில்லை. அருகில் சென்றால், உள்ளே சுவர்களில், விளக்கேற்றும் புரைகளில் ஓவியர்கள் தங்கள் படைப்பூக்கத்தை மகத்தான காட்சிக் கொடையாக்கி அளித்திருப்பர். கோபுர தரிசனம் கோடி புண்யம் என்றோர் வசனம் உண்டு. காணும் மனிதனுக்கு மனதில் நிகழும் ஆன்மீகம் கோபுர வடிவின் செயல்பாடே.
ஸ்கை ஸ்க்ரேப்பர்ஸ் எனப்படும் நவீன நகரத்துக் ‘கோபுரங்கள்’ புதியவை. அங்க லக்ஷண லாவண்யங்கள் ஏதுமற்ற மொழுக் என்று நெடிந்துயர்ந்துள்ள கண்ணாடிக் கட்டடங்கள் வெளித்தோற்றங்கள் ரசிப்பதிற்கில்லை. உள்ளே, செயல்பாட்டளவில், தேவைகளை பூர்த்திசெய்யப்பட்டிருக்கலாம். மிடுக்கான ஆஃபிஸ் கூண்டுகளாய், நெடுக்கான அங்காடித் தெருக்களாய், தடுக்காத கார்பெட்டுகளாய், தகிக்காத மித மின்வெளிச்சங்களாய். ஆனால் அவை கோயில் கோபுரங்களில்லை. மனிதன் அதனருகே குறுகி, அதனால் உருகி மனதுள் நிமிர்வதில்லை.
நவீன ‘கோபுரக்’ கட்டடங்கள் வடிவமைப்பு செயல்பாட்டை மட்டுமே கருதுவதால் விளையும் வெறிச் கட்டடங்கள். இருட்டில் ஒளிரும் ‘பளபள’ உறை அணிந்த வானைப் புணரும் காண்க்ரிட் ஆண்குறிகள். ஒரு ‘டௌண்டவுனி’லிருந்து மற்றொரு ‘டௌண்டவுனி’ற்கு வித்தியாசம் அவற்றின் நீளங்களில்தான். உன்னுடையதைவிட என்னுடையது நீளம் பார்.
வடிவமா செயல்பாடா என்று கோபுரங்களிடம் கேட்பதே பொருளற்றது. வடிவமே செயல்பாடுதான். ஒரு பெண் அழகான வடிவில் இருப்பதே அவளது செயல்பாடுதானே. ஆணுக்கான செயல்பாடு. தாய்மை வழியே மனிதகுலம் செழிப்பதற்கான செயல்பாடு. ஒரு எய்ன் ராண்டிற்கு இது புரிய மற்றொரு பிறவி வேண்டும். இந்தியாவில்.
*
பின் குறிப்பு: அமெரிக்க தேசி நாவலில் மேற்படி கருத்துகளில் சிலவற்றை உரையாடல் ஒன்றில் வைத்துள்ளேன்.