அமெரிக்க தேசி பற்றி எழுத்தாளர் இராஜேந்திரசோழன்

Standard

இராஜேந்திரசோழன் தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த கதாசிரியர்களில் ஒருவர் என்பதை நான் சொல்லித்தான் தெரிந்துகொள்ளுமாறு ஆகியுள்ளது என்றால், நீங்கள் இப்பதிவை தொடர்ந்து வாசிக்க அவசியமில்லை என்பதையும் நான் சொல்லாமலேயே தெரிந்துகொண்டிருப்பீர்கள்.

சில தினங்கள் முன்னர் அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு வார காலமாய் சென்னையில் ரகசியமாக நடத்தப்பட்ட புத்தகக்காட்சியில்.

உடன் அருகில் அமர்த்தி ‘படிச்சுட்டேங்க…’ என்றுதான் உரையாடலை தொடங்கினார்.

‘நெஜமாவா சார்? நான் எதிர்பார்க்கலை… நீங்க மொத்தமும் படிப்பீங்கன்னு… நன்றி…’ சிரித்தார்.

‘அப்டியில்லைங்க… எதயுமே நான் படிக்கனும்னு ஆரம்பிச்சேன்னா… அது என்ன தொட்ருச்சுன்னா அப்டியே உள்ள போய்டுவேன்… படிச்சுடுவேன்… இல்லன்னா… அப்டியே பொரட்டிட்டு வெச்சுறது…

நீங்க மொதல்ல சொன்னப்ப (ஐம்பது சொச்சம் தாள்களுடனான ஒரு புத்தகத்தைச் சுட்டியபடி) இது மாதிரி ஏதோ ஒண்ண எழுதிருப்பீங்கனு நெனச்சுட்டேன். அப்றம் சைஸ பாத்ததும்… மொத நாவலை இத்தனை பெரிசா எழுதிருப்பீங்கனு நெனைக்கலை…

போன புக்ஃபேருக்குள்ளயே முடிச்சுடனும்னு இருந்தேன். அடுத்த அடுத்தா வேற வேலைகள். அப்பவே படிச்சுனிருந்தேன், ஒங்களச் சந்திச்சேன். போய் ஒடனேயே படிச்சு முடிச்சுட்டேன். இப்பத்தான் ஒங்கள மீண்டும் சந்திக்கிறேன். படிக்கும்போது எனக்கு இருந்த உணர்வு என்னன்னா, படிப்பதோடு இல்லாம அப்டியே ஒரு சின்ன ரெவ்யூவாது எழுதனும்னு… இரண்டு பக்கம் ஏதாது பத்திரிகைக்கு எழுதி அனுப்பனும்னு இருந்தேன். பார்ப்போம். படிக்கும்போது நான் ரசிச்ச இடங்கள இப்ப மார்க் பண்ணினு வேற வரலை…’

மெட்ராஸ் மொழி வாசம் தூக்கலான இவ்வாறான உரையாடலில் இராஜேந்திரச்சோழன் பகிர்ந்ததின் சாரம் பின்வருமாறு (நினைவில் இருந்துதான் எழுதுகிறேன் | வாசிக்கும் வகையில் உரையாடலை எழுத்துவகைச் சொற்களாய் மாற்றியுள்ளேன்).

*

rajendracholan-nanjil-nadan-2014

அமெரிக்க தேசி (நாவல்) ஒரு முக்கியமான படைப்பு. சிறப்பு என்றால், எழுத்துநடை. ஒவ்வொரு வாக்கியமும் வேகமாய் படித்துக்கொண்டு போக முடியாமல் திரும்பவும் வந்து வாசிக்க வைக்கும் எழுத்து. உள்ளுக்குள் சொல்லும் விஷயங்கள் ஏராளம். பல இடங்கள் அற்புதம். திரும்ப வாசிக்கவைப்பதாலேயே படித்து முடிக்க தாமதமானது.

அதுவும் அந்தக் கூடல் சம்பந்தமான இடங்களிலெல்லாம் மொழியே ஒரு அலாதியான இடத்திற்கு, வேறு இடத்திற்கு இட்டுக்கொண்டு போய்விடுகிறது. அதனுடைய எழுத்தென்ன பொருளென்ன என்றெல்லாம் இல்லாமல், மொழியே ஒரு அசாதாரண லெவலுக்கு இருக்கு. அதையெல்லாம் விவரிக்க முடியாது.

(ஒங்களுக்கு ஃபிக்ஷன் இதுதான் மொதலா? மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்கிறார்.)

அந்த பெப்ஸி கோலா பற்றி நாங்க பல மீட்டுங்குல கூட்டம் போட்டு பல தடவை சொன்னதையெல்லாம், நீங்கள் நாலு வரிகளில் சொல்லி விட்டுப் போய்விடுகிறீர்கள். நிச்சயம் படைப்பாளியால்தான் மனித மனங்களில் விஷயங்களை ஆழச் சொல்லமுடியும் என்று தோன்றுகிறது. மேடையில் முழங்கிச் செய்ய முடியாத பல விஷயங்களை இந்த நாவல் மிகவும் நுட்பமாய்ச் செய்துவிட்டுப் போகிறது. (நாவலின்) பல விஷயங்களிலும் அவற்றின் அரசியல் முகமென்னவென்று பார்த்தால் தான் தெரியும். அது தெரியாதவர்கள் இயல்பாய் படித்துவிட்டுப் போய்விடுவார்கள். அந்த முகத்துடன் பார்த்தால் தான் தெரியும், அதனுடைய கூர்மையும் அது எவ்வாறு வெளிப்பட்டுள்ளது என்றும்.

ஒரு தொப்பி, ஒரு சுட்கேஸ்… ஒரு குச்சி… என்றதுமே எனக்கு உடனே எம்ஜிஆர் வந்து நின்று விட்டார் அங்கே. இதையெல்லாம் மிகவும் ஈடுபாட்டுடன் ரசிக்க முடிந்தது. இப்படிப் பல விவரணைகள். சிக்கனமா கச்சிதமா பல காட்சிகள். ஆனால் ஒரு கேள்வி வந்து நின்றது. என்னவென்றால், இதில் பலதும் படிக்கறவனுக்கும் முன்னாடியே தெரிந்தால்தான் அத்தனை ரசிக்க முடியும். எம்ஜிஆரையே இப்படியான இந்தக் காட்சியையே இப்போது எத்தனைப் பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

ஒரு பையன் இங்கேந்து அமெரிக்க போய் படிக்கச் செய்யவேண்டிய அத்தனை விஷயங்களும், அனுபவங்களும் சரியா, டீடெய்லா வந்துருக்கு. அத்தனை விவரணைகளும் தேவைதான்னு சொல்வேன். முதல் நாள் எனக்கு அத்தனை நீளமாகத் தெரியவில்லை. புதிதாக ஒரு தேசத்தை பார்க்கையில் முதல் காட்சிகள் விவரமாகத்தான் மனத்தில் இருக்கும்.

கார் ஓட்டிக்கொண்டு வருகையில் போலீஸ்காரன் நிறுத்தி செக் செய்கிறான். கையை எடுக்கப்போனாலே ஏதோ ரிவால்வர், பிஸ்டல் எடுக்கப் போறானோ என்று கருதலாம் என்பதால், கைகளை ஸ்டியரிங் மேல் வைத்துக்கொண்டு இருக்கவேண்டும்னு எழுதினதைப் படிக்கும்போது ஒரு மனப்பதிவு, இப்டிலாமும் இருக்கா அங்கன்னு. பத்துப் பதினைந்து நாள் பொறுத்து லண்டனில் நடந்த நிகழ்ச்சி பத்தி செய்தி வாசித்தேன். ஒரு பெரியவர் வாக்கிங் போகையில் ஏதோ சந்தேகத்தில் நிறுத்தின காவல்துறையினரில் ஒருவன், அதைச் சரியாய் டீல் செய்யவில்லை போலிருக்கு. பேசிக்கொண்டு இருக்கையிலேயே கேஷுவலாய் இவர் பாக்கெட்டில் கையை விட, ஆயுதம் எடுக்கப்போறாரோன்னு மிருக்கத்தனமா அடித்து, அது ஒரு பெரிய இஷ்யூவாவே ஆகிவிட்டது. அந்தப் பெரியவருக்கு ட்ரீட்மெண்டுக்காக உலகில் பல இடங்களிலிருந்தும் நன்கொடை வந்ததாம். படித்ததும் அப்படி ஒரு வாழ்க்கை இருக்குதா என்றுதான் எனக்குப் பட்டது. நீங்கள் (நாவலில்) சொல்வது அமெரிக்காவில், இது நடந்தது இங்கிலாந்தில். வயதானவன் நடந்து போகையில், இங்லீஷும் தெரியாதுபோல. ஏதோ சொதப்பல் நடந்திருக்கலாம். இவர் செல்போன எடுக்க கையை விட்டிருக்கலாம்…

அமெரிக்கா என்பது உறவுகளை எல்லாம் தாண்டி காசு பணத்தை பெரிசா பார்க்கும் இடம் தாங்கறது (நாவலில்) பல இடங்களில் நன்றாக வெளிப்பட்டிருக்கு.

சக ஊழியரை மாட்டிவிடுவதற்கான ப்ளான் இருக்கே… அந்தக் கல்லூரி பேராசிரியரை… அதைப் படிக்கும்போது படைப்பாளி மேலேயே ஒரு பயம் வருது. இவ்வளவு பெரிய கிரிமினலான மைண்டான்னு. இப்டிலாம் கற்பனை பண்ணி எழுதிடலாம். ஆனாலும் ரொம்பவே அதிர்ச்சியா இருந்துது. கேஷுவலாய் நடப்பதை பயன்படுத்திக்கறதுங்கறது ஒண்ணு, ப்ளான் பண்ணியே ஒருவனை மாட்டிவைப்பது என்பது… (சில அரசியல் உதாரணங்களுக்குப் பிறகு)… எனக்கு இங்க இந்த கேரக்டரையெல்லாம் தாண்டி படைப்பாளி மேல்தான் பயமாய் இருக்கு. அது எழுதறவங்களோட இயல்பு.

ஒரு குறைன்னா… நான் அமெரிக்க மக்களோட வாழ்க்கைச் சித்திரம் ஒண்ணு கிடைக்கும்னு நினைத்தே படித்துக்கொண்டு போனேன். அது எனக்குக் கிடைக்கவேயில்லை. அந்த குடியிருப்புகள் இருக்கே, அங்கு கொஞ்சம் வருகிறது. அங்கே உள்ள கிரிமினல்கள், வேறு என்ன செயல்களில் ஈடுபடறாங்கன்னு. அங்கு கொஞ்சம் வருகிறது. தூரத்து வாசனை மாதிரி. அந்த (அமெரிக்க) லைஃப் கிடைக்கவில்லை. ஏக்கமாத்தான் இருக்கு. ஆனா இது என் எதிர்பார்ப்புதான். (‘நீங்க அங்க உள்ள லைஃப் ஸ்டைல எழுதிடுங்க.’)

(இந்த) நாவல் படிப்பதற்கு முன் என் எதிர்பார்ப்பு என்னன்னா, நீங்கள் இந்தக் கலாச்சார சூழலில் உருவாக்கப்பட்ட மனிதர். அங்கே (அமெரிக்கா) போய், அங்கே உள்ள கலாச்சாரத்துடனும், பின்னணியோடும் உங்களால் ஒன்றுபட முடியாமல் அதை விட்டு வெளிவந்து விட்டதால்… இது என்னுடைய அனுமானம்… அங்கே என்ன கோளாறுகள்னு நெறைய வரும்னு எதிர்பார்த்தேன்.

இந்த வெளிநாடு போறவங்களோட அனுபவங்கள் என்பதிலெல்லாம் பொதுவாய் எனக்கு நம்பிக்கை இல்ல. ஒரு படைப்பாளியோட கோணத்தில் தான் அதனுடைய ஆத்மாவைச் சொல்ல முடியும்னு நம்பறேன்.

இந்த நாவலில் ஒரு தனிமனிதனுடைய அனுபவங்கள் ரொம்ப அற்புதமா வெளிப்பட்டிருக்கு. அதில் சந்தேகமில்லை.

*

‘நீங்க வாட்ஸப்பில் இருக்கிங்களா?’ என்று தொடர்ந்த உரையாடலில் (நாவல் பற்றி) ‘உங்கள் நட்பு வட்டாரம் என்ன சொல்கிறது’ என்றார்.

‘பொதுவா ஒருவித ஒவ்வாமை கூடிருக்கு சார்; இவன் போய் இதையெல்லாம் செய்வதா என்று’ என்றேன்.

சிரித்துக்கொண்டார். ‘மனித இயல்பு ஒருவன் ஒன்றைச் செய்தால் அதை மட்டுமே செய்யவேண்டும். நாம் ஒரு மனிதரை என்னவாகக் கருதுகிறோமோ அவர் அதற்குள்ளேயே இருக்கவேண்டும். வேறு மாதிரி எதுவும் செய்யக்கூடாது. அடுத்தத தொடங்கிட்டீங்கள்ல. உயிர்ப்பாய் எழுத்து கூடிவருகையில் தொடர்ந்து எழுதுங்க’ என்றார்.

உடன்வந்து தேனாம்பேட்டை சிக்னலில் இறங்கிக்கொண்டு ‘சாப்ட்டு, நடந்துகினே போய்டுவேன்’ (நண்பர் வீடு எல்டாம்ஸ் ரோட்டிலாம்) என்று எடுத்துக்கொடுத்த புத்தகப்பையை இடுக்கியபடி, ஜிப்பா கை குலுக்கலுடன் ‘சந்திப்போம்’ என்றவாறு இரவின் இரைச்சலில் கலந்தார்.