கட்டடங்களும் கோபுரங்களும் – கடிதம்

Standard

வணக்கம்

பெரிய எழுத்தாளர் ஆகி விட்டதால் பதில் அனுப்புவீர்களா என்று தெரியாது. இருந்தாலும், உங்கள் பதிவில் பின்னூட்டப்பெட்டி இல்லாததால், அஞ்சலிலேயே அனுப்புகிறேன்.


உங்களின் இந்த பதிவை மிகவும் இரசித்தேன். ஆனால் ஒரு குறிப்பு எழுத வேண்டும் என்று தோன்றியது. Function over Form என்ற கட்சியை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும், Function என்று சொல்லிக் கட்டும் தற்கால கட்டடங்களில் Function ம் இல்லை Form ம் இல்லை (இந்தியாவில், குறிப்பாக பெங்களூரில்). கருப்பு கண்ணாடி போட்டு வெளிச்சத்தை அடைத்து விட்டு, உள்ளே மின்சார விளக்கு எரிய விடுகிறார்கள். மருத்துவமனைகளில் centralized AC நிறுவி, ஒருவருக்கு வந்த வைரசையும் பாக்டீரியாவையும் எல்லோருக்கும் பரப்புகிறார்கள். ஒருவேளை தொழில் வளர்ச்சிக்காக வேண்டுமென்றே செய்கிறார்களோ ?!

என் பாட்டி வீட்டில், அடுப்பு அழகாக கீழே இருந்தது. பலகையில் உட்கார்ந்து கொண்டு சமைத்தார் காலை நீட்டிக் கொண்டு. பக்கத்திலேயே அரிவாள்மனை. உட்கார்ந்த இடத்தில் இருந்தே, காயும் வெட்டலாம், தாளிக்கவும் செய்யலாம்.

இன்றைய modular kitchen இல் நின்று கொண்டு சமைக்க வேண்டும். கத்தி கொண்டு வெட்ட வேண்டும். பாத்திரம் வைக்க மரத்தில் பெட்டிகள் செய்து, ஒவ்வொரு முறையும் திறந்து திறந்து மூட வேண்டும். கழுவிய பாத்திரங்களை ஈரம் துடைக்காமல் வைத்து விட்டால், மரம் உளுத்துப் போய் இரண்டு வருடங்களிலேயே பல் இளித்து விடுகிறது. என்ன modular kitchen கருமமோ !?

பழங்காலத்தில் (வெறும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், சங்க காலம் எல்லாம் இல்லை), கழிப்பறையும் குளியலறையும் தனித் தனியாக இருக்கும். யாராவது குளித்துக் கொண்டிருந்தால், வேறொருவருக்கு அவசரமாக சிறுநீர் வந்தால் கவலைப்படாமல் போகலாம். இப்போது எல்லா கருமத்தையும் ஒரே அறைக்குள் அடக்கி வைத்திருக்கிறோம்.

அதனால் இன்றைய உலகில், சரி இன்றைய இந்தியாவில், சரி வேண்டாம் விடுங்கள், இன்றைய பெங்களூரில், Function ம் இல்லை, Form ம் இல்லை, ஆட்டுமந்தை போல அடுத்தவன் என்ன செய்கிறானோ அதையேதான் எல்லாரும் செய்கிறார்கள். கட்டடத்தில் மட்டும் அல்ல, smartphone, international school, jeans pant (நம்மூர் வெயிலுக்கு), pant shirt என்று எல்லா நிலைகளிலும், peer copy தான் நடக்கிறது.

நீங்கள் கோபுரம், mall என்று பெரிய அளவில் பேசும் போது, கழிப்பறை, சமையற்கட்டு என்று சிறிய அளவில் நான் பேசுவதை, சிறியார் செய்கையாக பெரியார் நீங்கள் எடுத்துக் கொண்டு சாய்சில் (choice) விடவும்.

உங்களின் பதிவைப் படிக்கும்போது dilbert (படித்திருக்கிறீர்களா ?) காமிக் ஒன்று நினைவு வந்தது. அதனை இணைத்திருக்கிறேன். முடிந்தால் பார்க்கவும்.

asok nose job

பிறகென்ன ? நன்றி :)

சங்கர்
http://psankar.blogspot.com
———–

சங்கர்,

உங்கள் அஞ்சலுக்கு நன்றி. அதற்குப் பதில் அளித்தால் நான் பெரிய எழுத்தாளர் ஆகிவிடவில்லை என்றாகிவிடுமே என்பதால் உங்கள் அஞ்சலை மட்டும் இங்கு தனிப் பதிவாக வெளியிடுகிறேன்.

அமெரிக்க தேசி நாவலில் குளியலறை, அடுக்ககங்கள் பற்றியும் ஃபார்ம்/ஃபங்ஷன் குறிப்புகள் உள்ளன என்பதை, உங்களுக்கான பதிலாக இன்றி, இங்கு பதிவு மட்டும் செய்கிறேன்.

[இப்படித் தனி அஞ்சல்களில் அன்பின் வாசகர்கள் ஃபுல்-டாஸ் போடுகையில் மட்டும் சிக்ஸ் அடிக்க உதவும் என்பதும் என்னைப் போன்ற ‘பெரிய எழுத்தாளர்கள்’ பின்னூட்டப் பெட்டியை மூடிவைத்திருப்பதன் ஒரு நோக்கமே…]

அருண்