கையெழுத்து வேணுங்களா?

Standard

எந்த ஒரே இடத்தில் எவருக்கும் எவர்களுக்கும் இடையே இவ்வகை உரையாடல்கள் நிகழ்ந்திருக்கும் என்றேப் புரியாதவர்களும் கதை என்று தயக்கமில்லாமல் கீழுள்ளதை வாசிக்கலாம். எங்கு எப்படி நிகழக்கூடியவை என்றெல்லாம் அத்துப்படியான அனுபவசாலிகள், உரையாடல்கள் முழுக் கற்பனையல்ல என்பதை அறிந்திருந்தாலும், அடுத்தவனுக்கு நிகழ்வதால் ரசிக்கலாம். அதனால்தான் சொல்கிறேன் வாசகர்களே, ஒருபோதும் இது உண்மை கதையா? என்று கேட்டு உண்மை, கதை இரண்டையும் அவமதிக்காதீர்கள். அனுபவியுங்கள்.

தொடங்கும் முன்னர் கீழே * குறி வரும் இடங்களில் ‘சற்று நேரங் கழித்து’ என்று நீங்களாகவே வாசித்துக்கொள்ளவேண்டியதை ஞாபகத்தில் வையுங்கள்.

*

கையெழுத்து வேணுங்களா?

எதுக்கு?

இல்லங்க, இது நான் எழுதின பொஸ்தங்தாங்க…

அதுனால…

அதுனால ஒண்ணுலங்க… சும்மா, மிச்சத்துக்கு பதிலா…

மிச்சத்தயே கொடுப்பா…

*

கையெழுத்து வேணுங்களா?

எதுக்குயா?

இது என்னோட பொஸ்தகன்தாங்…

அப்ப என்னோடதில்லையா?

இல்லங்க, அதான் வாங்கிட்டீங்களே, ஒங்களோடதுதான்…

அப்றம் எதுக்குய்யா அதுல ஒன் கையெழுத்து கிறுக்கல்லாம்? கல்லால ஒக்காந்த அத்த மட்டும் கவனி…

சார், சார், மிச்சம் வாங்காம போறீங்களே…

(கல்லா சக இருக்கையில் பதிப்பாசிரியர்): போறான் வுடு, வந்து கேட்டா மிச்சப் பணத் தாள்ல கையெழுத்துப் போட்டுக் கொடுத்துரு…

*

கையெழுத்து வேணுங்களா?

வை?

(ஓவ் இங்லீஷ்…) நோ… ஐ ரோட் திஸ் யு நோ… ஐ, தி ஆத்… ஐம் தி ஆத்… டிட் யு ஸீ தட் பீக்சர்… தட்ஸ் மீ…

ஓவ்… யூ லுக் ஸோ யங்…

ஆமா, போட்டோ எடுத்தப்ப வயசாய்ருந்தது… இப்ப அப்டி இல்ல..

ஹி… ஃபன்னி…

(பதிப்பாசிரியர் கிசுகிசுவாய்): பணத்த வாங்குறா மொதல்ல.

(கிசுகிசு வாய்): அண்டரெஸ்டிம் பண்றீங்ளே அண்ணாச்சி… ஏற்கென்வே வாங்கிட்டேன்… எத்னின் ரவுண்டுனாலும் கார்யத்துல ஸ்டெடிதேன்…

ஸோ… வுட் யு லைக் டு…

ஓவ், ஆட்டோகிராஃப்ட் காப்பி? ஷூர்… ஐம் லக்கி…

நோ, நோ… ஐம் தி லக்கி ஒன்…

ஒஹ்…

பை தி வே, அதுக்கு தனி சார்ஜ், யு நொ…

ஓவ்… வாட்ஸ் தட்? டோண்ட் டெல் மீ…

நோ நோ… அழகாச் சிரிக்கறவங்களுக்கு ஃப்ரீதான்…

ஒவ்… ஸ்மார்ட்…

கை குலுக்காம போறீங்களே, மிஸ்… பேரு என்ன ‘நோ-கை’யாவா?

(பதிப்பாசிரியர்): டேய், போறும். வேலயக் கவனி…

அடுத்த நாவலுக்கு மேட்டர் தேத்தினா, பொறுக்காதே…

*

கையெழுத்து வேணுங்களா?

ஓவ்… ஆட்டோகிராஃப்ட் காப்பி… வை நாட்.

என்னயே கேக்கறீங்களா?

வாட்… நோ நோ… ஷூர், கோ ஹெட்…

அதுக்கு தனி சார்ஜ், யு நோ…

ஓவ்… வாட்ஸ் தட்? டோண்ட் டெல் மீ…

இந்தாங்க போட்டாச்சு, புக்கப் புடிங்க… முழுக்க வாசிக்கனும், அது தான் சார்ஜ் ஓகேவா…

ஓவ்… ஸ்மார்ட்…

(பதிப்பாசிரியர்): ஜீன்ஸ் பேண்ட்டுனா ஒரு சார்ஜ், பொடவ கட்டினா வேற சார்ஜா… வெவரந்தா…

லேசா வைஃபோட ஃப்ரெண்ட் சாயல் அடிச்சுது அண்ணாச்சி… அதான்… ஆனாலும், கெடச்ச கேப்ல ஹேண்ட் ஷேக்கிட்டோம்ல…

*

கையெழுத்து வேணுங்களா?

(பதிப்பாசிரியர்): அவருதான் ஆத்தர்.

ஓ… சரி போடுங்க.

(இடைமறிக்கும் புதிய குரல்): சார் இந்தக் ‘காடு’ (ஜெயமோகன் நாவல்) என்ன மாரி புக்? சுற்றுச் சூழல் பத்திதானே…

(கையெழுத்திட ஆயத்தமாகியபடி) ஆமாங்க… கரெக்ட்டுதான்… முன்னூத்தி அறுவது வரும்… சீக்கிரம் கொடுங்க…

கழிவு…

கழிவு போகத்தாங்க… நானூறு, நாப்பது, முன்னூத்தியறுவது… வெலைல பத்து பர்ஸெண்ட் கழிக்றது பெரிய மில்லினியம் ப்ராப்ளமா… கரெக்ட் சேஞ்தானே… கொடுங்க… சார், ஸாரி வெய்ட் பன்றீங்களே, கேட்டீங்களே கையெழுத்து, வாங்கின புக்கக் கொடுங்க…

(காடு வாங்கியவர்): எனக்கில்லீங்களா?

அவர் கையெழுத்தலாம் நான் போடறதில்லீங்க… வேணுன்னா…

(பதிப்பாசிரியர்): டேய் போதும், அனுப்பு.

சொல்டார்ல போய்டுவாங்க. சார், ஒங்களுக்கு இந்தாங்க… கையெழுத்து போட்ருக்கேன்… ரொம்ப தேங்ஸ்ங்க…

என்னங்க இது? ‘அன்புடன்’ அப்படீன்னு எழுதிப் போட்ருக்கீங்க…

ஏங்க, நெசந்தாங்க… வாசகன் மேல எழுத்தாளன் அன்பு வெக்கக்…

அதில்லீங்க, ‘அன்புடன்’ போட்டீங்கன்னா அன்பளிப்பா கொடுக்றதுன்னு அர்த்தம்.

(பதிப்பாசிரியர் கிசுகிசுக்கிறார்): பணப்பை ஜிப்ப மூடுறா.

ஓ அப்டியா, தெரில ஸார்… மொத வாட்டியாப் போடறேனா… நடுக்கத்துல… இப்டிக் கொண்டாங்க… இந்தாங்க…

ஐயோ, என்னங்க இது அடிச்சுட்டீங்க… இப்ப அன்பில்லைன்னு ஆயிடுதே…

சே சே.. அப்டீலாம் இல்லங்க… ஆலகாலந்தொட்டே எழுத்தாளன் வாசகன் உறவென்பது…

பச்…

சரி சரி, அது மாதிரி பேசலை… கோவப்படாதீங்க… புக் உள்ள எல்லாந் நல்லாத்தான் இருக்கும்…

அதெல்லாம் படிச்சவன் சொல்லோனும்… இப்பப் பாருங்க மொதோப் பக்கத்துலயே ஒங்க பேர் மட்டுந்தான் இருக்கு… ஏதோ ஒங்கச் சொந்த புக் மாதிரி…

அடடா, சரிதான். ஸாரி… கொண்டாங்க…

சார் சார்… வெய்ட்… என்னங்க இது ஒங்க பேரையும் அடிச்சுட்டீங்களே…

இந்தாங்க… இப்ப திருப்திதானே… என்ஜாய்…

யோவ்… கிண்டலா… என்ன ஐநூறுவா கொடுத்து வாங்கவெச்சிட்டு நீ பொக்க வாங்கி வாங்கிக் கவரப் பிரிச்சு மொதப் பக்கத்துலயே கிறுக்கி அடிச்சுகிடிச்சு புள்ளி வெச்சுக் கோடு கிழிச்சு, இப்பத் திருப்தியாங்கறயா…

(பதிப்பாசிரியர்): சார்… வேணும்னா மொதப்பக்கத்த கிழிச்டு படிங்க சார்… சண்டைலாம் அங்க வெள்ல மைக்கோட கொட்டக போட்ருப்பாங்க, அங்கன போய் வெச்சுக்கோங்க… கஸ்டமருக்கு வழிவுடுங்க…

(மொணமொணப்பு விலகுகிறது): ஆத்தராம் ஆத்தர், பெரிய ஸாத்தர்னு நெனப்பு…

*

கையெழுத்து வேணுங்களா?

அய அதெல்லா வொண்ணு வாணா தம்பி. நானே மவனுக்குன்னுதேங் பொஸ்தவமெல்லாம் எடுக்கறேன்…

இல்லங்க… இது நான் எழுதின…

அறிஞ்சுட்டேனுங்க… பையன் சொல்லிரிச்சி… அதோ போஸ்டர்ல ஷோக்கா போட்டொ கூட போட்ருக்காவளே…

அப்பறம் என்னம்மா? ஏன் தயங்கறீங்க? சும்மாக் கொடுங்க…

அன்புடன்னு கையெலுத்தோட வூட்டுக்கார்ரு பாத்தாருனா… வேணாஞ்சாமி… செவிளு பிஞ்சுரும்.

இதுகல்லாம் போயா… அதும், ஒங்களப் போயி…

அய, நா ஒங்களுக்குச் சொன்னேன்…

(பதிப்பாசிரியர்): ஒன் லெவலுக்கு பீட்டர், மேரியம்மாக்களோட நிறுத்திக்கனும். காச வாங்கிட்டு மாரியம்மாவ கை குலுக்க முயலாம அனுப்பி வை. இதோ வந்துட்டேன்…

*

கையெழுத்து போடணுங்களா?

எதுக்கு? ஓ… ஆமாம். காடு எடுப்பீங்களா?

காடு எடுக்றதா… ஓ, ரிட்டனா, ஷூர். மொதலாளி வெள்ல போயிருக்கார்…

இல்ல, நான் இப்பவே வாங்கணுமே…

ஓ, வாங்கனுமா. ஐம் சாரி… தம்பி, அந்தக் ‘காடு’ ஒண்ணு எடுத்துக் கொடுப்பா.

(இடைமறிக்கும் புதிய குரல்): இந்த ‘இராஜேந்திரச்சோழன் கதைகள்’ தடிப் பொஸ்தகம் யாரு எழுதினதுங்க?

அவருதாங்க… மேடம், கொஞ்சம் எக்ஸ்கியூஸ்.

ஷூர்… டேக் யொர் டைம்.

வெளாடாதீங்க ப்ரதர். ஆத்தர் யாருங்கறேன். ஒத்தங்கதானே எழுதிருப்பாங்க…

அட, அதுதாங்க அவரு. எழுநூறு ரூவா வரும். பில் போட்றவா?

இராஜேந்திரச் சோழனே எழுதினதா? பெண்பிள்ள படத்த போட்டு அவரு எளுதினதுங்றீங்க… அதெப்டி ஒங்களுக்கு கெடச்சுதாம்?

பதிப்பாசிரியர் எடுத்த படங்க.

படமில்லீங்க… கதயச் சொல்றேன்… சோழன் எழுதினதுன்னீங்களே…

அது அவரே வந்து கொடுத்தாருங்க… வியாழக்கெழம வந்தீங்கன்னா நேரவேச் சந்திக்கலாம்…

இராஜேந்திரச் சோழனயா? கடைல வெவரமான ஆளுங்க இல்லீங்ளா தம்பி…

அது சரி… விவரம் இருக்கறவ இந்த வியாவாரத்த செய்வாங்றீங்க? சொல்லுங்க, பில் போட்றவா?

வியாழக்கெழம வருவாருல்ல?

கண்டிப்பா.

அவருகிட்டயே வாயிங்கறேன்… இப்ப கேட்லாக் ஒண்ணு கொடுங்க போறும்… அட, அப்டியே கொடுங்க தம்பி… அதுல என்னத்தங்க கிறுக்குறீங்க?

ஆங்… விலைப் பட்டியல சும்மா கொடுக்கூடாதுன்னு மொதலாளி உத்தரவு. அதான் அச்சா கையெழுத்துப் போட்டுத் தாரேன்… புடிங்க. மேடம், நீங்க வாங்க. ஸாரி, தேங்ஸ் ஃபார் வெயிட்டிங். காடு வாங்கிட்டீங்களா? பில் போட்றவா?

(காடு புத்தகத்தைச் சுழற்றியபடி) இல்ல, இது முந்தியே எங்ட இருக்கு.

காடு இருக்கான்னீங்களே மேடம்… அதானே…

காடுதான். இது வேணாம். இதோ இந்தப் புக்ஸ்லாம் வாங்கனும். கையெழுத்து போடலாம்னீங்களே… எல்லாத்தையும் போட்ருங்க…

போட்டுத் தரேன் மேடம், ஆனா எல்லாத்துக்கும் எப்டி… என் புக்ல நிச்சயம் போட்டுத் தரேன். அதயும் எடுத்துருக்கீங்களா?

(கண்ணாடிக்குள் நெறித்த புருவங்கள்) பட்… பட்… யு டேக் கார்ட் டோண்ட் யூ? பின்ன சொன்னீங்ளே… நீங்க எதுக்கு கையெழுத்து, நா இல்ல போடனும்?

ஓ… கிரெடிட் கார்ட்டா? யெஸ் யெஸ். அஃப் கோர்ஸ்… அதுக்கு நீங்கதான் கையெழுத்து போடனும்… தம்பீ… இந்தக் ‘காட’ உள்ள வை… மேடத்த கார்டு தேய்க்க கூட்டிப் போ…

(கவனித்தபடி வந்தமர்ந்த பதிப்பாசிரியர், ஆதுரமாய் முதுகைத் தடவியபடி): ஒங்டயும் ஒரு ‘ஷக்தி’ இருக்கவே செய்யுது. லிங்கா-க்கு மிச்சமாய்ட்ட பால் அனைத்தயும் ஒன் போஸ்டருக்குதான் கொணாந்து உடச் சொல்லிருக்கேன்.

வெறுப்பேத்தாதீங்க… இதுக்குன்னு கண்ணாடில தேச்ச வழுவழு பேணாலாம் எடுத்துட்டு வந்து…

இப்ப என்ன போச்சு? புக்கு வித்துகிட்டுதான இருக்கு. வியாபாரம் எப்டிக் கள கட்டுது பாரு… எதுக்கும் தினம் வந்து கல்லால ஒக்காந்துரு. நம்ம கடப் பக்கமும் நாலு இங்கிலீஷ் பேச்சு மொதவாட்டியா கேக்குது பாரு…