தேசிய அளவு அங்கீகாரம்

Standard

பூர்வ பீடிகையைப் பொறுத்துக்கொள்ளுங்கள். சொல்ல வரும் விஷயம் ஒரு வரி தான்.

இந்தியாவில் பல அகடெமிக்கள் உள்ளன. அவற்றில் அறிவியல் பொறியியல் துறை சார்ந்தவை ஆறு. அவற்றில் பொறியியலில் முதன்மையானது இந்திய தேசிய பொறியியல் அகடெமி (Indian National Academy of Engineers – INAE).

இவ்வகை அகடெமிக்களில் பொதுவாகத் தங்கள் துறையில் தொடர்ந்து சிறந்து பணியாற்றும் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் போன்றோர் அங்கத்தினராய் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அங்கத்தினர் ஆவது இந்த அகடெமிக்களின் அழைப்பின் பேரில் மட்டுமே சாத்தியம். அதாவது ஏற்கெனவே அங்கத்தினராய் உள்ளவர்கள் உங்கள் (ஆராய்ச்சிப் பணிகள், இன்னபிற தேசிய அளவில் உபயோகமான) செயல்பாடுகளை கவனித்து ஒவ்வொரு வருடமும் செயற்குழு கூடுகையில் பரிந்துரைந்து, உருவாகும் பட்டியலில் இருந்து பரிசீலனைக்குப் பிறகு துறைக்கு ஓரிருவரை அவ்வருடத்திற்கென அங்கத்தினராய்த் தேர்ந்தெடுக்கையில் உங்கள் பெயர் மேலெழுந்தால் நீங்கள் அங்கத்தினர். ஒருவகையில் பார்த்தால் தெரு-டீமிற்கு ‘இவங்கிட்ட விக்கெட் கீபிங் க்ளைஸ் இருக்குடா சேத்துக்கலாமா?’ என்று புதிய ஆள் சேர்ப்பதற்கான முயற்சி போலத் தோன்றலாம். ஆனால் அகடெமி விஷயத்தில் சற்று புறவயமான மதிப்பீடுகள் இருக்கும் என்பதை ஏற்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

இந்த அகடெமிக்களில் அங்கத்தினர் ஆவதென்பது தேசிய விருதல்ல, தேசிய அளவிலான அங்கீகாரம் எனலாம். ஏனெனில் சக அங்கத்தினர்கள் அனைவருமே இந்தியாவிலேயே (அல்லது எதையுமே எதிர்மறையாகவே பேசிவிடுவதாலேயே அறிவுஜீவியாகிவிடுவோரின் பரிபாஷையில், இந்தியாவிலாவது!) தங்கள் துறைகளில் குறிப்பிட்ட காலவரையறையில் எதையோ காத்திரமாய்ச் சாதித்தவர்கள்.

அகடெமிக்களின் அங்கத்தினர்கள் தேசிய அளவிலான பொறியியல் உருவாக்கங்களில் முக்கியமான பங்களிக்க முடியும். உதாரணமாக, சந்திரயானோ மங்கள்யானோ உருவாகுகையில் அடிக்கடிக் கூடும் பரிசீலனைக் குழுக்களில் இவ்வுறுப்பினர்கள் ஆலோசகர்களாய்ப் பணியாற்றுவார்கள் (பைசா ஒன்றும் கிடையாது; தேவையுமில்லை). ஒரு அறிவியல் துறையின் போக்கு, முதலீடு போன்றவற்றிற்கான இந்திய அரசாங்கம் கோரும் பரிந்துரைகளை தேசிய அகடெமிக்கள் (உறுப்பினர்களின் உப கமிட்டிக்கள் மூலம்) அவ்வப்போது வழங்க இயலும். உதாரணமாக, மரபணு மாற்றங்கள் ஏதுவான காய்கறிகள் பாதுகாப்பானவையா என்று ஒரு கமிட்டி சில வருடங்கள் முன்னர் பரிசீலித்து ரிப்போர்ட் கொடுத்திருந்தது. அன்றைய சுற்றுச் சூழல் அமைச்சருக்கு திருப்தியளிக்காத ரிப்போர்ட். உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். இப்படி தேசிய அளவில் சில பல செயல்பாடுகளில் இந்த அகடெமிக்களின் அங்கத்தினர்களால் பங்குகொள்ள முடியும்.

பீடிகை முடிந்தது. விஷயம் இதுதான்.

இந்த வருடத்திற்கான (2015) இந்திய தேசிய பொறியியல் அகடெமியின் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் துறையில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு அங்கத்தினரில் அடியேனும் ஒருவன்.

*

பி.கு. 1 ஓரிரு மாதங்கள் முன்னர் மின்னஞ்சல், தபால் மூலமெல்லாம் அறிவிப்பு வந்தாலும், நானும் நம்பவில்லைதான். அகடெமியின் இணையப் பக்கத்திலும் பட்டியலில் என் பெயர் உள்ளதைத் தற்போதுதான் கவனித்தேன். இணையமே சொல்லிவிட்டதே, இனி நம்பிவிட வேண்டியதுதான்.

பி.கு. 2. எதற்கு என்னைப் பரிந்துரைத்தார்கள் என்றால் முக்கியமாக கண் தொடர்பான என் வெப்பவியல் ஆய்வுகளுக்கும், பொறியியலின் ஒரு உபதுறையில் (போரஸ் மீடியா) உலக அளவில் வல்லுநர் என்று அறியப்பட்டதற்காகவும், என்று அறிகிறேன். [கடந்த பத்து வருடங்களில், சார்ந்த ஆய்வுகளை தங்கள் (மேற்)படிப்பிற்காக என்னை நம்பி என்னுடன் வந்து மேற்கொண்ட அனைத்து இந்திய மாணவர்களுக்கும் நன்றி]

பி.கு. 3. ஆர்வமிருப்பவர்களுக்கு: என் ஆய்வுகளின் சில விளக்கப் பக்கங்களை இப்பக்கத்தில் உள்ள சுட்டிகளில் அணுகலாம்.