அமெரிக்க தேசி – பாராட்டுக் கடிதம்

Standard

அஷோக் லேலண்ட் நிர்வாக இயக்குநர் திரு. ஆர். சேஷசாயி நேற்று கைப்பட எழுதி அனுப்பியிருந்ததின் சாரம்.

*

அன்புள்ள அருண்,

பிரமித்து விட்டேன்.

அபிஷேக் ரகுராமனின் கச்சேரியை முதன் முதலில் கேட்டபோது இருந்த பிரமிப்பு… ரனக்பூர் ஜைனர் கோயிலை முதலில் பார்த்தபோது இருந்த பிரமிப்பு… பிரமிப்பு ஏனென்றால், அணுவும் அபார அழகு; அகண்டமும் அபார அழகு.

அமெரிக்க தேசியைப் பற்றிய பாராட்டுப் பத்திரம் படிப்பதற்கு முன்பாக, இரண்டு disclosures:

1. பிள்ளைத் தமிழாய், கல்கியையும், தேவனையும், அகிலனையும் கற்றபின், விடலையில், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, ஏனைய அறிவு ஜீவிகளிடம் சில காலம் காமுற்றிருந்தாலும், நாற்பத்தைந்து வருடங்களாக, managemenat, technology என்று வலுக்கட்டாயமாக வாழ்க்கைப் பட்டு விட்டதால், கொஞ்ச நஞ்சம் எஞ்சியிருந்த இலக்கிய உணர்வும் முழுவதுமாய் காலாவதியாகி விட்டது.

ஆக, நான் கவிஞனுமில்லை, நல்ல ரசிகனும் இல்லை.

2. சமீபத்தில் ஸ்ரீரங்கம் கோயில் டிரஸ்ட் போர்டு தலைவனாக பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு கிடைத்ததன் விளைவாக, ஸ்ரீரங்கத்தின் இதிஹாஸம் கலந்த சரித்திரக் கலவை, உன்னதமான கலாச்சாரம், ரம்மியமான பொய்கள் – இப்படி எல்லாவற்றாலும் முழுவதுமகக் கவரப்பட்டுள்ளேன்.

I am biased.

அமெரிக்க தேசி கனமானதொரு காவியம்.

பாட்டியின் ‘மொகப்பு’ வச்ச ஒட்டியானம் மாதிரி, ‘அழிச்சா, காதுக்கு ஒரு ஜோடி தோடு, மூக்குக்கு பேசரி, இரண்டு வடம் செயின், கைக்கு ரெண்டு ஜோடி வளை எல்லாம் பண்ணலாம்.’

இந்தப் புதினத்தை உலுக்கினால், ஐந்தாறு சிறுகதைகள், இயல்பியல், கணிதம், கட்டிட வடிவமைப்பு, இத்தியாதி பொருள்கொண்ட கட்டுரைகள் ஏழெட்டு – எல்லாம் தேறும். பிறகும், நாவல் உருக்குலையாமல்.

உன்னுடைய அகலமான அறிவு, ஆழமான, இல்லை, தெளிவான சிந்தனை, photo booth app. மாதிரி, ஒரே பொருளை பல கோணத்திலும், பரிமாணத்திலும் ஒருங்கே பார்த்து அநுபவிக்கக் கூடிய திறன், ஸ்ரீரங்கம் copyright எடுத்த நக்கல் – எல்லாம் இந்தக் கதையின் ஊடு பாவு.

சித்திரைத் தேர் மாதிரி, பெரிய கதையை, 600 சொச்சம் பக்கங்களில், நான்கு வீதிகளிலும், நிற்காமல் இழுத்து வந்து, நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தக் கூடிய அபார நிர்வாகம் அசத்துகிறது.

இந்தப் புத்தகத்தின் கருத்து என்ன?

அதையெல்லாம் ஆராயக்கூடிய அறிவு எனக்கில்லை.

நான் நனைவது எழுத்தில். கருத்து இருந்தால் சிலாக்கியம். குளிர் காயலாம். அழகிய பெண்ணிற்கு அறிவும் வாய்த்தாற்போல்.

எல்லா கேள்விகளுக்கும் விடை தேவையில்லை. சொல்லப் போனால் சமுதாயம் சித்தாந்தங்களாக அளித்துவிட்ட விடைகளுக்குத்தான் கேள்வி தேவை (Tao). அதைத்தான் தேசிகன் சொல்கிறான் என்று நினைக்கிறேன். அ.ந. சாரி, டிமிட்ரி, ஜென்ஸி, தேசிகன், அனைவருமே அவரவர் பயணத்தில் சமூகம் அமைத்துவிட்ட பாதையில் சென்றாலும், அங்கங்கே, சில கேள்விகளைக் கொண்டு, சில வரம்புகளை உடைத்து, பயணத்தைத் தொடர்கிறார்கள். அல்லது, மற்றவர்கள் உடைத்த வரம்பினால், தாக்கப் படுகிறார்கள். அந்த வரம்பு உடைப்பிலே தான் சுவாரசியமே…

இன்றைய தமிழ் இலக்கியம் எந்த அளவு துகிலுரித்திருக்கிறது என்று எனக்குத் தெரியாது. தேசிகன், அவனுடைய காமக் களியாட்டங்களைத் தத்துவப் போர்வைக்குள், கவிதைக் காண்டம் அணிந்து, நிகழ்த்துவதால், இலக்கிய அங்கீகரிப்பு பற்றி கவலை இல்லை. என்ன நாச்சியார் திருமொழி சேவித்தாலும், பண்பாட்டு முகமூடி அணிந்த ஒரு சில குழுவிடமிருந்து எதிர்ப்பை எதிர்ப்பார்க்கலாம். அதுவும் ஒருவிதமான அங்கீகாரமே.

மொத்தத்தில் மிக மிக அருமையான படைப்பு, உன்னுடைய இலக்கியப் பணி தொடரட்டும். சிறக்கட்டும்.

அன்புடன்
சேஷசாயி.