பாலக்காடு மணி ஐயர், பழநி சுப்ரமணியப் பிள்ளை இருவருடன் இணைந்து இராமநாதபுரம் முருகபூபதி கர்நாடக இசையின் மிருதங்க மும்மூர்திகளில் ஒருவர். இவரது நூறாவது பிறந்த வருட விழாவையொட்டி 16, பிப்ரவரி, 2014 அன்று ‘பரிவாதினி’ அமைப்பு சென்னை லஸ் ‘ராக சுதா’ அரங்கில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மதுரை சேஷகோபாலன் உரை கேட்கப்பெற்றேன்.
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் சிஷ்யர் இராமநாதபுரம் சங்கரசிவ பாகவதர் அவரது சிஷ்யர் சேஷகோபாலன். சங்கரசிவத்தின் தம்பி முருகபூபதி (சகோதரர்கள் நால்வர்). இதுவரை இவரைப் பற்றி எதுவுமே அறிந்திராத வாசகர்கள், முருகபூபதியின் வாழ்க்கை, வாசிப்பை அறிமுகம் செய்து ராம் எழுதியுள்ள கட்டுரையை வாசித்துக்கொள்ளுங்கள் [ http://solvanam.com/?p=16433 ].
நிகழ்ச்சியில் சேஷகோபாலனுக்கு முன்னர் மிருதங்க வித்வான் கே. எஸ். காளிதாஸ், குழல் வித்வான் ரமணி பேசினார்கள். இறுதியில் சேஷகோபாலன் கச்சேரியும் இருந்தது. அனைத்தும் பரிவாதினியின் யுடியூப் சேனலில் ஐந்துமணிநேரக் கானொளியாய் உள்ளது. சுட்டி இங்கே [ http://www.youtube.com/watch?v=T5F2fOPQbB0 ]. நான் பதிவு செய்த சேஷகோபாலனின் நாற்பத்தியைந்து நிமிட உரையின் ஒலித்தொகுப்பை மட்டும் கீழே அளித்துள்ளேன்.
http://www.youtube.com/watch?v=c4SYncKqXfU
அறிமுகம் வேறு, எளிமை வேறு. இவ்விரண்டையும் நமக்குள்ளே தெளிவுபடுத்திக்கொள்ளாமல் ஒரு அறிவுத்துறையைப் பற்றி எழுத, பேச முயல்கையில்தான் ’எளிமையாக அறிமுகப்படுத்துகிறேன்’ என்று ‘படுத்த’ மட்டும் செய்துவிடுகிறோம். பல விஷயங்களை அறிமுகப்படுத்த ஒரு நிலைக்கு மேல் எளிமையாக்கமுடியாது. கூடாது. மீறிச்செய்தால், ‘எளிமையாக்கிய’ அவ்வகை அறிமுகம் விஷயத்தை நீர்க்கடித்துவிடும். தவறான புரிதல்கள், குழப்பங்கள் என்று போய், அறிவுத்துறை விஷயத்தையே விஷமாக்கிவிடும். Everything should be made as simple as possible but not simpler இது இசை சார்ந்த ஐன்ஸ்டைனின் வாக்கு (எனக் கருதப்படுகிறது).
சேஷகோபாலனின் பேச்சில் அறிமுகப்படுத்தும் மிருதங்க வாசிப்பின் விஷயங்கள் எளிமையானவை அல்ல. ஆனால், இதைவிட எளிமையாக அவரைத் தவிர எவராலும் சொல்லமுடியாது. அவர் சங்கீத வித்வான் மட்டுமல்ல; திறமையான சங்கீத ஆசார்யர். குரு. அவர் விளக்குகையில்தான் முருகபூபதியின் மேதமை நம்மைப்போன்ற சாதாரணர்களுக்கு ஓரளவேனும் அறிமுகமாகிறது. அம்மேதமை புரிவதற்கு, நாமும் அதை நோக்கி மேலெழுந்து போகவேண்டும். கொடுப்பினை இருந்தால் கைகூடலாம்.
நிகழ்ச்சியில் முன்னர் காளிதாஸ் வழங்கிய முருகபூபதி வாசித்த சில ஒலித்துண்டுகளை கேட்டமாத்திரத்தில் பிரமிப்பு என்றால், சேஷகோபாலன் அவற்றில் ஓரிரண்டை, கொன்னக்கோல் போல மிருதங்கச் சொற்கட்டுக்களாய் வாயினாலேயே ஃபரன் தெறிக்க ‘வாசித்து’ அறிமுகப்படுத்துகையில் பிரமிப்பு கூடித்தான் போனது. கூட்டத்தில் ரமேஷ், அருண் பிரகாஷ், எம். எஸ். வரதன், பி. எஸ். புருஷோத்தமன், கே. வி. கோபாலகிருஷ்ணன், ஸ்ரீசுந்தர் குமார் என்று பல பக்கவாத்தியக்காரர்கள், லயத்தில் லயித்திருந்தனர்.
சீட்டுக் கச்சேரிக்கிடையிலும் மேதை மனங்களில் சங்கீதம் சரியாக ஓடிக்கொண்டிருந்ததை குறிப்பிடும் சேஷகோபாலனின் உரை நமக்கு உணர்த்துவது மேதைகளின் வாழ்க்கையில் எவற்றை கவனித்துக் கடைபிடிக்க முயலவேண்டும் என்பதை.
மேதைகளைப் பற்றி யோக்கியமாக பேசுவதற்கும் ஒரு யோக்யதை வேண்டும். முருகபூபதியைப் பற்றி பேச சேஷகோபாலனால்தான் முடியும்.
ஒரே ஆவர்த்தனத்தில் பஞ்ச நடைகளும் வரவேணும் ஆனால் எதையுமே சமத்தில் தொடங்கக்கூடாது. “எப்படிச் செய்வீஙக தம்பி சொல்லுங்க பாப்பம்” சேர்ந்து வழங்கிய கச்சேரி முடிந்த பின்னிரவு ஒன்றில் முருகபூபதி சேஷகோபாலனிடம் கேட்கிறார்.
பதிலை அடுத்த சந்தர்ப்பத்தில் சேஷகோபாலன் தன் உரையில் தெரிவிப்பார் என்பது அருண் பிரகாஷையும் சேர்த்து சபையோர் பலரது எதிர்பார்ப்பு.
*
சேஷகோபாலன் கச்சேரியை அவருக்கே உரிய சாமர்த்தியத்துடன் நாகஸ்வராளியில், ‘ஸ்ரீசங்கரகுருவரம்’ என்று தொடங்கினார். ஏன் என்று புரிந்திருக்குமே. ஆனந்தபைரவி, மாஞ்சி, ஷண்முகப்பிரியா என்று விரிந்துகொண்டிருந்த கச்சேரியின் இடையில் அரங்கிற்கு வெளியே ‘தினமணி’ சிவகுமார் ‘சொல்வனம்’ ரவிசங்கர் இருவரின் சில இலக்கியக் கருத்துகளைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. பதில் கருத்துகளை வழங்கும் அளவிற்கு எனக்கு இலக்கிய வயதாகவில்லை. நன்று.
*
இப்போதெல்லாம் கச்சேரிகளில் ஒவ்வொரு உருப்படியையும் பாடும் முன்னர் ஒரு உதாரண சினிமா பாட்டை பாடிவைத்துத் தொடங்கினால் போதுமாம், அதுவரை அக்கிருதிகளைப் பற்றி எதுவும் அறிந்திராத ரசிகர்கள் உள்ளொளி கிட்டி, அறியாமை அகன்று, பரவசத்தில் மரபிசை மயக்கம் கண்டுவிடுகிறார்களாம். உதாரணமாக, பச்சிமீரியம் ஆதியப்பர் (மும்மூர்த்திகளுக்கு முந்தைய காலத்தவர்) இயற்றிய தச (பத்து) வித கமகங்கள் கொண்ட ‘விரிபோணி’ அட தாள வர்ணத்தை மேடையில் பாடும் முன்னர் அந்த ராகத்தில் உள்ள சினிமா பாட்டை பாடிவிட்டால் போதும். ரசிகர்கள் இந்த வர்ணத்தை ரசிக்கத்தொடங்கிவிடுகின்றனர். என்ன, இனிமேல்தான் இவ்வகையில் யாராவது பைரவி ராகத்தில் சிறப்பாக சினிமா பாட்டு இயற்றவேண்டும். அதனாலென்ன, அதுவரை கச்சேரியில் எவரும் ‘விரிபோணி’ பாடாமல் இருத்தால் போயிற்று.
ஒவ்வொரு இலக்கிய ஆக்கத்துடனும் ஒரு கேளிக்கை ‘ஒரு பக்கக்’ கதையை அளித்தால், அதிலுள்ள ‘எளிமையான அறிமுகப்படுத்தும்’ எழுத்துவகையின் மூலம் இலக்கிய வாசிப்பனுபவத்திற்கேற்ற ரசனை மனநிலையை எளிய வாசகர்களிடம் உடனடியாகக் கொண்டு சேர்த்துவிட முடியும்தான். யாராவது யாரிடமாவது சொன்னால் தேவலை.
சினிமா பாடல்கள் மேடை நிகழ்ச்சிகளிலும் ஒவ்வொரு திரைப்பாடலையும் கடினமாக்கி மறக்கடிக்க அதற்கு முன்னர் கிட்டத்தட்ட அதே ராகத்தில் அமைந்த மரபிசைக் கிருதிகளைப் பாடிக்காட்டலாம். யாராவது இளையராஜாவிடம் சொல்லிப்பார்க்கலாம்.
இந்தச் சஞ்சாரங்கள் இங்கெதற்கு என்கிறீர்களா?
மேலே ஒலிக்கோப்பில் சேஷகோபாலன் பேச்சில் மிருதங்க வாசிப்பு பற்றி கூறப்படும் விஷயங்கள் புரியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். கட்டாயம் சேஷகோபாலன் அடுத்ததாக ஆற்றும் இவ்வகை உரையையும் கேட்டுப்பாருங்கள். அதற்குள் ‘எளிமையாக அறிமுகப்படுத்துவது’ எப்படி என்று கற்றுக்கொண்டுவிடுவார். உங்களுக்கும் புரிந்துவிடும்.
கர்நாடக இசையை எப்படியாவது உலகிலுள்ளோர் அனைவருக்கும் புரியவைத்தே தீருவது என்று கங்கனம் கட்டிக்கொண்டு அதற்கான “கிருதிகளுக்கு முன்னர் சினிமா பாடல்கள்” யோசனைகளை வாக்கியத்துக்கு இரண்டு வீதம் கலைஞர்களுக்கு வழங்கி வருபவர்கள் இணையத்தில் உள்ளனர். சேஷகோபாலன் அடுத்த உரை நிகழ்த்தும் முன்னர் ஓரிரு ‘சினிமா பாட்டு’ பாடியே மக்களிடம் மிருதங்க வாசிப்பின் கடினமான பகுதிகளை ‘எளிமையாக அறிமுகப்படுத்திவிடுவது’ எப்படி என்று அவருக்கு யோசனைகளை இணையத்தில் நிச்சயம் எழுதிவைத்திருப்பார்கள். சேஷகோபாலனும் கிட்டத்தட்ட அறுபது வருட முதிர்ச்சியுடைய தன் இசையறிவிற்கு இதுவரைப் புலப்பட்டிராத இவ்வகை யோசனைகளை உடனே செயலாக்கிவிடும் ஞானஸ்தரே. அதனால்தான் சொல்கிறேன், முருகபூபதியின் வாசிப்பைப் பற்றிய சேஷகோபாலனின் மேற்படி உரை புரியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். குறை உங்களிடம் இல்லை. நிறை உள்ளவர்கள் திருத்திக்கொள்வார்கள்.