[31 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]
வசுந்த்ரா ராஜகோபால் தன் மியூசிக் அகடெமி கச்சேரியை மூலைவீட்டு ரங்கஸ்வாமி நட்டுவனார் இயற்றிய ‘சலமேலரா’ என்னும் நாட்டகுறிஞ்சி ராக வர்ணத்தில் விறுவிறுப்பாய் துவங்கினார். வயலினில் பாலு ரகுராம், மிருதங்கத்தில் தஞ்சாவூர் சுப்ரமணியம், கடத்தில் டி.வி.வெங்கட சுப்ரமணியம் உடன் வாசித்தனர்.
தொடர்ந்து தர்பார் ராகத்தில் மிஸ்ரசாபு தாளத்தில் ராமாபிராம என்னும் தியாகையர் கிருதியை பாடினார். தாளத்துடன் ‘தியாக’ என உடையும் சரண வரியை, ‘ராகேந்து முக தியாகராஜ ரக்ஷக’ என்று உடைக்காமல் நேர்த்தியாக பாடியது சிறப்பு.
அடுத்த பந்துவராளி ராக ஆலாபனையை, பூர்விகல்யாணி வாடையே இல்லாமல் வழங்கியது அருமை. ஸ்வரங்களாய் மட்டுமே ராகத்தை அணுகுகையில் நிகழும் சறுக்கல்கள் இன்றி ஆலாபனை அமைந்தது வசுந்த்ராவின் வித்தையின் சான்று. வயலின் கவனித்திருக்க வேண்டிய விஷயம்.
‘ராமநாதம் பஜேஹம்’ என்னும் தீக்ஷதரின் கிருதியை ரூபக தாளம் இரண்டு களையில் அமைத்துப் பாடினார். ‘குமார குருகுக மஹிதம்’ என்னும் வரியில் நிரவல், தொடர்ந்து ஸ்வரங்கள்.
சஹானாவில் அடுத்ததாய் “வைதேஹி தவப்பத பக்திம்” என்னும் தியாகையரின் அரிதான சமஸ்கிருத கிருதியை பாடினார். பிரதானமாய் பைரவி ராகம். ஆலாபனையில் இழைத்து இழைத்து இலைவடாம் பிழிவதைப்போல நிதானமாய் வளர்த்தெடுக்கப்பட்டது பைரவி. தரஸ்தாயியில் அதிகம் சஞ்சரிக்காமலும் செவ்வியல் கனம் சற்றும் குறையாமல் பைரவியை வழங்கமுடியும் என்பதை உணர்த்தினார். முகாரி, உசேனி என்று அருகிலுள்ளவைகளில் படாமல் வயலினில் பாலு ரகுராம் வாசித்து ராகத்திற்கு நீதி செய்தார்.
“தனயுனிப்ரோவ” என்னும் தியாகையரின் கிருதி. “வத்ஸமு வெண்ட” என்னும் வரியில் விரிவான நிரவல்.
நிரவல்கள், ஸ்வரங்களில் நிகழ்ந்ததைப்போலவே, தனி ஆவர்த்தனத்திலும் கடம் வாசிப்பின் தரம் ஓங்கியிருந்தது.
அடுத்து சியாமா சாஸ்திரியின் “நன்னு புரோவு லலிதா” என்று லலிதா ராகத்தில் உருக்கமாக இறைஞ்சிவிட்டு, தமிழில் பாபநாசம் சிவனின் “சரவணபவகுஹனே” என்னும் கன்னடா ராக கிருதியை விறுவிறுப்பிற்கு பாடினார்.
ராகம் தானம் பல்லவியில் எடுத்த மோஹன ராகம் மிகத் தொன்மையானது. “வற்றாத செல்வமே வாழ்க நீ வாழ்க” என்று இசைவடிவாய் அளிப்பதற்கு ஏராளம். வசுந்த்ராவின் சுத்தமான ஆலாபனையில் குரலின் தன்மைக்கேற்ப நாம் வழங்கப்பெற்றதும் அதிரசமே. தானம் பகுதியும் சுருக்கமாக சிறப்பாக அமைந்தது.
பல்லவி “ராஜகோபாலம் பஜேஹம் தேஜோமய மோஹனகரம் ஸ்ரீ” என்னும் வரியை திஸ்ர திரிபுடை தாளத்தில் சமத்தில் துவங்கி, கண்ட நடையில் அமைத்துப் பாடினார். த்ரிகாலத்தில் மூன்று வேகங்களிலும் பல்லவி மிகச்சரியாக தாளத்தில் பொருந்திவந்தது.
பல்லவியின் சொல் “ராஜகோபாலம்” என்பதில் துவங்கும் மோஹன ராக கிருதி உள்ளது. ராகமாலிகையில் சாவேரியில் பல்லவியை “ஸ்ரீராஜகோபாலம்” என்று இணைத்து பாடி, அந்த ராகத்தில் உள்ள தீக்ஷதரின் கிருதியை நினைவுறுத்தினார். ரஞ்சனியை “பஜேஹம்” என்று துவங்கினார். நீதிமதி ராக ஸ்வரங்களை முடித்து ‘மோஹனகரம்’ சொல்லில் துவங்கி அந்தராகத்தில் உள்ள கிருதியை நினைவுறுத்தினார். மரபிசையில் புனையப்பட்டுள்ள பல்லவிகளில் மேலோட்டமாய் வெளிப்படாத கேள்விச்சுவைகள் பலவகை.
மேடை வன்முறைகள் அற்ற, நளினமான கச்சேரிகள் வசுந்த்ராவின் சிறப்பு. பிசிறு தட்டாத கரகர-பிரியா விடுத்த கணீர் குரல் இன்றைக்கு சற்றே கெட்டியாகிவிட்டது. ராக ஆலாபனைகளில் படைப்பூக்கமும், லய வின்யாசங்கள், ஸ்வரங்களில் குரு டி ஆர். சுப்ரமணியனின் கற்பனா விலாசம் கைகூடியிருப்பதும் வசுந்த்ராவின் பலம். இவர்போன்ற பாட்டுகளிலாவது தன் செவ்வியல் வடிவிற்கு பங்கமில்லாமல் கர்நாடக இசை இன்றும் பயமின்றி உலவட்டுமே.